18 ஜூன் 2011

இரண்டு கவிதைகள்

01

பள்ளிப் பேருந்துக்கு
வழியனுப்ப
யாரும் வராத
இன்னொருவனைக் காட்டி
எப்போதிருந்து நானும்
அப்படிப் போவேனென்று
கேட்ட மகனுக்கு
எப்படி சொல்ல
எனக்கு மட்டும் தெரியும்
அவன் கண்களின்
ஏக்கத்தை.

O

02

தவறுதலாய்
நான் அழுத்திய
தளத்தின் எண்
தனக்கானது என்று
புன்சிரிப்போடு
ஒருவருடன்
போக நேர்ந்த
லிப்ட் பயணம் போல
தானாய் இப்படி
எல்லாமே
தவறுகளின்றி
நேருமானால்...

o

01 ஜூன் 2011

சாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது


பாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் பதினைந்து கட்டுரைத்தொகுதிகளும் இரண்டு குழந்தைப்பாடல் தொகுதிகளும் இவருடைய சொந்தப் படைப்புகள். வேலையின் காரணமாக தனது இருபத்து நான்காவது வயதில் கர்நாடக மாநிலம் சென்றார். சென்ற ஆரம்ப காலத்திலேயே சுயமாக கன்னட மொழியைக் கற்றுக்கொண்டார்.

ஆச்சரியிக்கத்தக்க வகையில் நான்கு நாவல்கள், நான்கு நாடகங்கள், இரண்டு தலித் சுயசரிதைகள், ஒரு சிறுகதைத் தொகுதி, கன்னட தலித் எழுத்துகளைப் பற்றிய ஓர் அறிமுக நூல், நவீன கன்னட இலக்கிய முயற்சிகளை அடையாளப்படுத்தும் இரண்டு தொகைநூல்கள் என எண்ணற்ற படைப்புகளை கன்னட மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1995இல் வெளிவந்த ‘பாய்மரக்கப்பல்’ என்னும் நாவலுக்கு இலக்கியச்சிந்தனைப் பரிசும், ‘பயணம்’ என்னும் சிறுகதைக்கு 1996இல் கதா விருதும், ‘பருவம்’ என்னும் கன்னட நாவலை மொழிபெயர்த்தமைக்காக 2005இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதும் பெற்றவர். இவருடைய மனைவி அமுதா. மகன் அம்ரிதா மயன் கார்க்கி.

கர்நாடகத்தில் இருபத்தொன்பது ஆண்டுகள் பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு, தற்சமயம் பணி இடமாற்றம் பெற்று சென்னைக்கு வந்திருக்கிறார்.ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் தங்கியிருக்கும் மேற்கு மாம்பலம் வீட்டில் தீராநதிக்காக சந்தித்தபோது...

தீராநதி: தீராநதி இதழில் தொடராக வெளிவந்த ‘அருகில் ஒளிரும் சுடர்’ கட்டுரைகள் சமீபத்தில் புத்தக வடிவத்தில் அகரம் வெளியீடாக வந்திருப்பதைப் படித்தேன். தொடராக மாதத்துக்கொருமுறை ஒவ்வொரு கட்டுரையாகப் படித்ததைவிட எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படித்தது நல்ல அனுபவமாக இருந்தது. சுடர் நம் அருகிலேயே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. தினசரி வாழ்வின் ஓட்டத்தில் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை. மொத்த வாசிப்பில் அந்த உண்மையைச் சட்டென்று மனம் கண்டடைந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. பல கட்டுரைகள் வாழ்வின் துயரமான பக்கங்களைக் காட்டுவதாக இருந்தன. உங்கள் படைப்புகளில் தொடர்ச்சியாக துயரம் ஒரு பேசுபொருளாக இருந்துகொண்டே இருக்கிறதே?

பாவண்ணன்: திட்டமிட்டு எந்த ஒரு படைப்பையும் அப்படி ஒரு நோக்கத்தோடு உருவாக்குவதில்லை. ஏதோ ஒரு காட்சி அல்லது ஒரு சொல் அல்லது ஓர் ஓசை வழங்கக்கூடிய மனஎழுச்சிதான் எழுத்தை நோக்கித் தள்ளுகிறது. அந்த எழுச்சியின் வேகமும் திசையும்தான் ஒரு படைப்பின் மையத்தைத் தீர்மானிக்கிறது. அந்த மையம் சிற்சில சமயங்களில் வாழ்வின் துயரமான பக்கங்களைக் காட்டுவதாக அமைந்துவிடுகின்றன. யாரும் துயரத்தை வரமாகப் பெற்றுக்கொண்டு வாழ விரும்புகிறவர்கள் இல்லை. துயரத்திலிருந்து மீண்டு நிம்மதியின் கரையில் ஒதுங்கி வாழவே விரும்புகிறோம். ஆனால் கரையின் சுவடே தெரியாமல் காலம் முழுக்க நீந்திக்கொண்டும் தத்தளித்துக்கொண்டும் இருக்கிறோம். வறுமை மட்டும் துயரமல்ல. மனவறுமைகூட ஒருவிதத்தில் துயரம்தான். அன்பின்மை ஒரு துயரம். கருணையில்லாமல் இருப்பதுவும் ஒருவகையில் துயரம்தான். அறிவில்லாமல் ஒருவன் இருப்பதுகூட துயரம்தான். துயரம் ஒரு கடல்போலப் பொங்கிவந்து எல்லோரையும் இழுத்துக்கொண்டு போகிறது. இந்த வாழ்க்கை ஏன் இப்படி சீர்குலைந்துபோனது, இதை ஏன் இன்னும் நம்மால் அழகுடன் வாழமுடியாமல் போனது என்று நினைக்கிற நேரத்தில், இந்தத் துயரத்தைப்பற்றிய நினைவுகளும் முன்னால் வந்து நிற்கின்றன.

தீராநதி: இலக்கியத்தில் துயரத்தை முன்னிலைப்படுத்தவேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் உண்டா?

பாவண்ணன்: கண்டிப்பாக உண்டு. சீதையின் துயரம்தானே ராமாயணம்? குந்தி, துரோபதை, சுபத்திரை என மூன்று தலைமுறைப் பெண்களின் துயரம்தானே மகாபாரதம்? கண்ணகியின் துயரமல்லவா சிலப்பதிகாரம்? யோசித்துப் பாருங்கள். அவர்களாகவா அந்தத் துயரத்தை வேண்டிப் பெற்றார்கள்? மற்றவர்கள் அல்லவா அவர்களை துயரத்தை நோக்கித் தள்ளினார்கள்? ராமனின் வில்லுக்கிருந்த திறமைதான், விசுவாமித்திர முனிவர் அவனைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக இருந்தது. அவனுடைய அதே வில்லாற்றலுக்குக் கிடைத்த வெற்றிதான் சீதை. ஆனால் புற உலகை வில்லால் வெற்றி கண்ட ராமனால் சொந்த வீட்டில் வெற்றியோடு இருக்கமுடியவில்லை. காட்டுக்கு வெளியேற வேண்டியிருக்கிறது. காட்டிலும் நிம்மதி இல்லை. மனைவியைத் தொலைப்பது எவ்வளவு பெரிய துயரம். மனைவியும் கணவனும் ஒருவரை ஒருவர் பார்க்கமுடியாமல், பேசிக்கொள்ள முடியாமல் ஆண்டுக்கணக்கில் பிரிந்திருப்பது அதுவும் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற உண்மைகூடத் தெரியாமல் இருப்பது என்பது எவ்வளவு பெரிய துயரம். ராமனின் வெற்றியைப் பாடுகிற காவியம் என்பது ராமனின் துயரத்தையும் அல்லவா சேர்த்துப் பாடுகிறது? ராமனின் துயரத்தையோ அல்லது சீதையின் துயரத்தையோ முன்னிலைப் படுத்தாமல் ராமனின் வெற்றியைமட்டும் பாடி ராமாயணத்தை முழுமை செய்யமுடியுமா, சொல்லுங்கள். மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, நளவெண்பா என இலக்கியத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் இது பொருந்தும். இலக்கியத்தை மட்டுமல்ல, வரலாற்றையும் எடுத்துப் பாருங்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதும்போது, அதற்காக ரத்தம் சிந்தியவர்களின் குறிப்பில்லாமல் எழுதிவிடமுடியுமா? ஜாலியன் வாலாபாக் படுகொலையின் துயரத்தைப் பற்றி எழுதாமல் சுதந்திர வரலாற்றை முன்வைத்துவிட முடியுமா? இலக்கியமாக இருந்தாலும் சரி, வரலாறாக இருந்தாலும் சரி, துயரத்தை முன்வைக்கப்படுவதைத் தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது.

தீராநதி: சமீபகாலத்தில் உங்கள் சிறுகதைகளைவிட கட்டுரைகளே அதிக எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன. சற்றே கதைத்தன்மை படிந்த அனுபவக் கட்டுரைகள் என்பதால் வாசகர்களை அவை எளிதில் உள்ளிழுத்துவிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. கொஞ்சம் முயற்சி செய்தால் அவற்றைச் சிறுகதைகளாக ஆக்கிவிடமுடியுமோ என்றுகூட சில சமயங்களில் தோன்றியதுண்டு. இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

பாவண்ணன்: இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதைகளின் வடிவத்துக்கும் இப்போது எழுதப்படுகிற கதைகளின் வடிவத்துக்கும் இடையே சின்ன வேறுபாடு இருக்கிறது. இன்றைய கதைவடிவம் சற்றே சிக்கல்தன்மை உள்ள வடிவம். ஊடுபாவாகப் பல சரடுகள் உள்ள வடிவம். இருபதாண்டுகளுக்கு முன்னால் ஒரு வாழ்வனுபவத்தை கச்சிதமான சொற்களால் நேர்த்தியாக சொல்லமுடிந்தாலே போதும். ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியும். இன்று, அந்த வடிவத்தின் தன்மை புரியப்புரிய, அதன் சவால்கள் என்ன என்பது புரியப்புரிய, அதை அடையவேண்டும் என்கிற வேகம் மனத்தில் எழுகிறது. அந்த இலக்கை நோக்கிய பயணத்துக்கு, அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. அது ஒரு கட்டுச்சோற்று மூட்டை. அவ்வளவுதான். இன்னும் தண்ணீர்ப்புட்டி, துணிமூட்டை, குடை, பெட்டி, மிதியடி, கைப்பை என பல விஷயங்கள் தேவைப்பட்டியலில் உண்டு. கதையாக முன்வைக்க முடியாத இந்த அனுபவங்களை என்ன செய்வது என்கிற எண்ணங்களின் விளைவாகத்தான் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். அதற்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கம் கொடுப்பதாக இருக்கிறது.

தீராநதி: வாழ்வனுபவங்களின் அடிப்படையில் புதுவகையிலான இக்கட்டுரைகளில் முதல் கட்டுரை எப்போது வெளிவந்தது?

பாவண்ணன்: சரியாக நினைவில்லை, பத்தாண்டுகளுக்கு முன்னால் இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். ’மருதம்’ என்கிற இணைய இதழில் நண்பர் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தார். அவ்விதழில் நானும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொன்னார். தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால், அதை ஒரு கட்டுரைத் தொடராக அமைத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டுக் கொடுத்தார். ”தீராத பசிகொண்ட விலங்கு’ என்னும் கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் பல கட்டுரைகளை அத்தொடரில்தான் எழுதினேன். சில காரணங்களால் அந்த இதழ் தொடர்ந்து இயங்காமல் போய்விட்டது. தொடர் நின்றுபோனாலும், ஒரு புதிய வடிகாலைக் கண்டுபிடித்த வேகத்தில் தொடர்ச்சியாக அப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலுமாக அவை தொடர்ந்து வெளிவந்தன.

தீராநதி: வாழ்வனுபவங்களையும் படைப்பனுபவங்களையும் இணைத்துக் காட்டுகிற கட்டுரைகளையும் எழுதினீர்கள் அல்லவா?

பாவண்ணன்: மொத்தம் நூறு கட்டுரைகள். திண்ணை இணைய இதழில் ”எனக்குப் பிடித்த கதைகள்’’ என்னும் தலைப்பில் இரண்டாண்டுகள் அவற்றை எழுதினேன். இலக்கியத்துக்குள் நுழைகிற ஒரு புதிய வாசகனுக்குப் பயன்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் அவற்றை எழுதும் ஆசை வந்தது. தினமும் பல சிறுகதைகளை நாம் படிக்கிறோம். சில நமக்குப் பிடிக்கின்றன. நம் நெஞ்சில் நீண்டகாலம் தங்கி நம்மை அசைபோட வைக்கின்றன. சில நமக்குப் பிடிப்பதில்லை. முதலில் இந்த வேறுபாடு ஏன் தோன்றுகிறது? ஒரு படைப்பை ஏன் நாம் விரும்புகிறோம்? அதிலிருந்து நாம் பெறுவது என்ன? இதையெல்லாம் என் வாழ்வனுபவத்தை முன்வைத்து எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே சமயத்தில், ஒரு படைப்பில் உள்ள அழகியல் கூறுகளை எப்படிப் பிரித்துப் பார்த்து அணுகுவது, கதையின் மையங்களையும் அவற்றையும் எப்படி இணைத்துப் புரிந்துகொள்வது என்பதையும் கலையும் வாழ்வும் எந்தப் புள்ளியில் இணைகின்றன என்பதையும் சுவையுணர்வின் அடிப்படையில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதும் என் விருப்பம். அந்த நோக்கத்தோடு தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதைகள், இலங்கைத் தமிழ்ச் சிறுகதைகள், பிற இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகள், உலக மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் என வகைப்படுத்திக்கொண்டு அவற்றை எழுதினேன். இந்தக் கட்டுரைகளின் வாசிப்பனுபவம் தம் சுவையுணர்வை வளப்படுத்திக்கொள்ள உதவியதாகப் பல வாசகர்கள் அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இன்றும் ஏதாவது ஒரு புதிய ஊரில் சந்திக்க நேர்கிற ஒரு புதிய வாசகர் இந்தக் கட்டுரைத் தொகுப்பைப்பற்றிச் சொல்வதுண்டு. அது எனக்கு நிறைவாக இருக்கிறது.

தீராநதி: உங்கள் வாசிப்பனுவம் ஆச்சரியமளிக்கும் அளவுக்கு மகத்தானதாக இருக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் உங்களுக்கு இளமையில் எப்படி வந்தது? அதை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

பாவண்ணன்: நான் படித்த ஆரம்பப் பள்ளிகளுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும்தான் உண்மையில் நன்றி சொல்ல வேண்டும். வளவனூர் என்னும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியப்பள்ளியிலும் கோவிந்தையர் பள்ளியிலும் தொடக்க வகுப்புகளில் படித்தேன். பிறகு அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிவரையில் படித்தேன். தொடக்கப்பள்ளியிலும் சரி, உயர்நிலைப் பள்ளியிலும் சரி அக்காலத்தில் நூலக வகுப்புகள் உண்டு. சிறுவர்களாகிய எங்களுக்கு அந்த வகுப்பு மிகவும் பிடிக்கும். அப்போதுதான் எங்கள் ஆசிரியர் எங்களுக்குக் கதைகள் சொல்வார். பாட்டுப் பாடவைப்பார். பேசுவதற்குக் கற்றுக்கொடுப்பார். பள்ளி நூலகத்திலிருந்து கொண்டுவந்த புத்தகங்களை ஆளுக்கொன்று கொடுத்துவிட்டு, அரைமணி நேரம் அமைதியாகப் படிக்கச் சொல்வார். ஒருவர் படித்த கதையை இன்னொருவருக்குச் சொல்லச்சொல்வார். அந்த வகுப்பு எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி மருந்துபோல. அந்த ஆசிரியர்களை நாங்கள் மிகவும் விரும்பினோம். எனக்கு பழனி என்றொரு நண்பன் இருந்தான். அவனும் என்னைப்போலவே புத்தகங்களை விரும்பிப் படிக்கக்கூடியவன். ஒருவர் மாற்றி ஒருவராக நாங்கள் இருவரும் ஒரே புத்தகத்தைப் படித்தோம். படித்த கதையைப் பற்றிப் பேசுவதற்கும் அதையொட்டி கற்பனையை வளர்த்துக்கொள்வதற்கும் அந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருந்தது. எங்கள் புத்தக ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, எங்கள் ஆசிரியர் ஓய்வு நேரங்களில் ஊர் நூலகத்துக்குச் சென்று படிக்கச் சொன்னார். என் அப்பாவுடைய நண்பரின் மகன்தான் அங்கே நூலகராக இருந்தார். வயதில் சிறியவர்களான நாங்கள் நூலகத்துக்குள் வருவதை ஆச்சரியமாகப் பார்த்தார். நாங்கள் விரும்பிக் கேட்கும் நூல்களைப் படிக்க எடுத்துக் கொடுத்தார். அங்கேயே படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அதுதான் நிபந்தனை. ஓய்வு நாட்களில் நூலகமே எங்கள் புகலிடமாக இருந்தது. மறக்க முடியாத நாட்கள் அவை. பெரிய விடுப்பில் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டுக்குச் செல்வதுண்டு. வீட்டுக்குப் பக்கத்திலேயே அங்கும் ஒரு நூலகம் இருந்தது. அந்த நூலகரும் என்மீது மிகவும் அன்பாக இருந்தார். பைபிள் கதைகள், ஈசாப் கதைகள், அரேபிய இரவுக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் எல்லாம் அவர் கொடுத்துத்தான் படித்தேன். தற்செயலாக எனக்குக் காட்டப்பட்ட இந்தத் திசையில் தொடர்ந்து சென்றேன். புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி நூலகமும் ரோமண்ட் ரோலண்ட் நூலகமும் என்னைப் புதுமனிதனாக்கியவை. எங்கள் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த ம.இலெ.தங்கப்பா கல்விப்பாடத்தோடு வாழ்க்கைப்பாடத்தையும் இணைத்து நடத்தியவர். எங்கள் சிற்றூரில் திருக்குறள் கழகம் என்னும் அமைப்பை நடத்திவந்த அண்ணன்மார்கள் தொடர்பால் இலக்கிய வாசிப்பு இன்னும் ஆழமானது. பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்களில் தொடங்கி, பிறகு பின்முகமாக சங்க இலக்கியங்களையும் இதிகாசங்களையும் காப்பியங்களையும் தொடர்ந்து தேடிப் படித்து விவாதிக்க இந்த உறவு துணையாக இருந்தது. படிப்பதும் அதைப்பற்றிப் பேசுவதும் மனத்துக்குப் பிடித்திருந்தது. இரவு நேரங்களில் தூக்கத்தை மறந்து நானும் என் நண்பன் பழனியும் பல கதைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். ஒரு கதையைப்பற்றி பேசும்போது, நாங்கள் பார்த்திருந்த வாழ்க்கைச் சம்பவம் நினைவுக்கு வந்துவிடும். அவர்கள் வாழ்வில்கூட இப்படித்தானே நடந்தது என்று இணைத்துப் பார்த்துப் பேசிக் கொள்வோம். அப்போதுதான் ருஷ்ய இலக்கியங்களின் அறிமுகம் கிடைத்தது. ஸ்டெப்பிப் புல்வெளிகளும் கோதுமை வயல்களும் பனியால் சூழப்பட்ட அஞ்சல் நிலையங்களும் எங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே உள்ளவைபோன்ற நெருக்கத்தை அந்தப் புத்தகங்கள் கொடுத்தன. எங்கள் பார்வையையும் மன உலகத்தையும் அவை விரிவாக்கின. தற்செயலாக, நூலகத்தில் அப்போது க.நா.சு எழுதிய ’உலகின் சிறந்த நாவல்கள்’ என்னும் அறிமுகப் புத்தகத்தைப் படித்தோம். அவர் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களையெல்லாம் எப்படியாவது தேடிப் படித்துவிட வேண்டும் என்னும் வைராக்கியம் எங்கள் மனத்தில் விழுந்தது. அந்தத் தேடல் எங்களுக்கு மிகவும் நல்ல பயனைக் கொடுத்தது. டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, குப்ரின், துர்கனேவ், ஷோலகோவ் எல்லோரையும் இப்படித்தான் படித்தோம். அதன் தொடர்ச்சியாக நேஷனல் புக் டிரஸ்ட்டும் சாகித்திய அகாதெமியும் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்களும் எங்களை மிகவும் கவர்ந்தன. இடைவிடாத எங்கள் வாசிப்பும் விவாதமும் எங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட சுவையுணர்வை உருவாக்கிக்கொள்ள உதவின. சம்பாதித்து மிச்சப்படுத்தி புத்தகம் வாங்குகிற வாய்ப்பு உருவானபோது, இந்தச் சுவையுணர்வின் அடிப்படையில் புத்தகங்களை வாங்கிப் படிப்பதை பழக்கமாக வைத்துக்கொண்டோம்.

தீராநதி: எழுதத் தொடங்கியதும் அப்போதுதானா?

பாவண்ணன்: ஆமாம். வாசிப்பின் தொடர்ச்சியாக ஒரு கட்டத்தில் நான் மரபுக்கவிதைகளை எழுதத் தொடங்கினேன். பெரிய பெரிய கனவுகளால் என் மனம் அப்போது நிறைந்திருந்தது. நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் வெகுவிரைவிலேயே மரபுக்கவிதையின் திசையிலிருந்து புதுக்கவிதையின் திசைக்கு வந்துவிட்டேன். அந்த ஏமாற்றத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏறத்தாழ முப்பத்தாறு முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று என்னை ஊரில் பார்க்கும்போதுகூட, அந்த அங்கலாய்ப்பை அவர்கள் வெளிப்படுத்திப் பேசும்போது, என் மனம் நெகிழ்ந்துபோகும். புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் நான் வேலை செய்துவந்தபோது, பிரபஞ்சன், அஸ்வகோஷ் என்கிற ராஜேந்திர சோழன் இருவரோடும் உரையாடிய அனுபவத்தை மறக்கமுடியாது. அவர்கள் அப்போதே பேர்வாங்கிய படைப்பாளிகளாக இருந்தார்கள். அவர்கள் கதைகளை நான் விரும்பிப் படித்தேன்.

அக்கட்டத்தில் இளம்பொறியாளர் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பதவிக்கான பயிற்சிக்காக ஐதராபாத் நகரத்துக்குச் செல்லும்படி நேர்ந்தது. இந்தத் திடீர்மாற்றம் என்னை மிகவும் பாதித்தது. எங்கள் அப்பா உடல்நிலை குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குடும்பப் பொறுப்புகளை என் அம்மா தன்னந்தனியாக ஏற்றுச் சமாளித்து வந்தார். அம்மாவின் சகிப்புத்தன்மையும் வற்றாத அன்பும்தான் நாங்கள் வளரத் துணையாக இருந்தன. தம்பிகள், தங்கைகள் எல்லோரும் அப்போது சிறுவர்கள். நான்தான் மூத்த பிள்ளை. குடும்பத்துக்கு ஆதரவாகவும் துணையாகவும் இருக்கவேண்டிய ஒரு தருணத்தில், எங்கேயோ தொலைவான இடத்தில் இப்படித் தனியாக வாழும்படி நேர்ந்துவிட்டதே என்று மனக்குமுறலாக இருந்தது. குற்ற உணர்ச்சியால் மனம் சோர்ந்துவிடாமல் இருப்பதற்காக, மனத்துக்கு ஓய்வே இல்லாமல் எழுதிக்கொண்டே இருப்பதை ஒரு வழியாக வைத்துக்கொண்டேன். என்னை நானே மீட்டெடுத்துக்கொள்ள அது ஒரு சிறந்த வழியாக இருந்தது. அப்போதுதான் சிறுகதை என் ஊடகமானது.

தீராநதி: அது எந்த ஆண்டு?

பாவண்ணன்: 1981-82 கட்டம்என் வேலைக்கான நேர்காணல் அனுபவத்தையொட்டி ஒரு சிறுகதையை முதலில் எழுதினேன். பெங்களூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘படிகள்’ என்னும் இதழுக்கு அதை அனுப்பிவைத்தேன். ’படிகள்’ படைப்பிலக்கியத்துக்கான இதழல்ல, படைப்பிலக்கியம் சார்ந்த விவாதங்களுக்காகவும் சமூக விவாதங்களுக்காகவும் நடைபெற்ற இதழ். அதெல்லாம் அப்போது தெரியவில்லை. ஒரு வேகத்தில் அனுப்பிவைத்துவிட்டேன். கதை வரவில்லை. ஆனால் படிகள் சார்பாக தமிழவன் ஒரு அஞ்சலட்டை எழுதியிருந்தார். அது எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. ஓர் எழுத்தாளரிடமிருந்து நான் பெற்ற முதல் கடிதம் அது. அந்த வாரத்திலேயே வேறொரு சிறுகதை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பிவைத்தேன். அது அடுத்த மாதத்திலேயே வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘கணையாழி’, ‘தாமரை’, ‘மனஓசை’ இதழ்களுக்கும் கதைகளை அனுப்பி வைத்தேன். அசோகமித்திரன் என் கதையைப் பாராட்டி அஞ்சலட்டை எழுதியிருந்தார். தி.ஜானகிராமன் மறைவையொட்டி அப்போது ஒரு குறுநாவல் திட்டமொன்றை கணையாழி அறிவித்திருந்தது. அப்போட்டியில் என் குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆறுமுறையோ, ஏழுமுறையோ தொடர்ச்சியாக என் படைப்புகள் தேர்வாகின. மூத்த வரிசை எழுத்தாளர்களும் நண்பர்களும் என்னை நம்பிக்கைக்குரிய இளம்படைப்பாளியாக அடையாளப்படுத்தினார்கள். கணையாழியில் வெளிவந்த ’முள்’ என்னும் சிறுகதை அந்த ஆண்டின் இலக்கியச்சிந்தனையின் விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுத்தவர் மூத்த எழுத்தாளர் ஆ.மாதவன். அந்த விழா மேடையில்தான் அவரை முதன்முதலாகப் பார்த்தேன். எழுத வந்த தொடக்கத்திலேயே எனக்கென ஒரு இலக்கிய முகம் உருவாக இந்தத் தேர்வு துணையாக இருந்தது.

தீராநதி: உங்கள் முதல் தொகுப்பு எப்போது வெளிவந்தது?

பாவண்ணன்: 1987 ஆம் ஆண்டு. ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்னும் முதல் சிறுகதைத்தொகுப்பு, ’வாழ்க்கை: ஒரு விசாரணை’ என்னும் முதல் நாவல் இரண்டுமே அந்த ஆண்டில்தான் வெளிவந்தன. முதல் தொகுப்பு என்பதால் மூத்த படைப்பாளி ஒருவருடைய முன்னுரையோடு சேர்ந்துவந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. தயக்கத்தோடுதான் பிரபஞ்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டு என் கோரிக்கையை முன்வைத்தேன். அப்போது அவர் குமுதம் குடியிருப்பில் இருந்தார். எழுதுவதாகச் சொன்னதோடு, கையெழுத்துப் பிரதிகளோடு உடனே கிளம்பி வரச்சொன்னார். நான் அப்போது திருப்பதியில் வேலை செய்துவந்தேன். சென்னைக்கு வருவது எளிதாக இருந்தது. அவருடைய வீட்டிலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். இரவு நெடுநேரம் விழித்திருந்து கதைகளைப் படித்துவிட்டு, முன்னுரையை எழுதிக் கொடுத்தார். அந்த அன்பையும் நெருக்கத்தையும் என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. எழுத்தாளர் சங்கரநாராயணன் முயற்சியால் நாவலுக்கு வல்லிக்கண்ணன் அவர்களின் முன்னுரை கிடைத்தது. நூல்கள் வெளிவந்து சிறிது காலத்துக்குப் பிறகு, சிறுகதைத் தொகுப்பைப்பற்றி கணையாழி இதழில் ஒரு சிறிய குறிப்பை அசோகமித்திரனும் நாவலைப்பற்றிய ஒரு மதிப்புரையை காலச்சுவடு முதல் இதழில் அச்சுதன் அடுக்காவும் எழுதியிருந்தார்கள். தொகுதியைப்பற்றி படைப்பாளிகள் எண்ணங்களை அறிவதற்காக பலருக்கும் அனுப்பிவைத்திருந்தேன். நூல் கிடைத்த விவரத்தோடு சிலர் நிறுத்திக்கொண்டார்கள். சிலர் மட்டுமே தொகுதியைப் படித்துவிட்டு உடனே பதில் எழுதியிருந்தார்கள். நான் மிகவும் மதிக்கிற வண்ணதாசனிடமிருந்தும் பூமணியிடமிருந்தும் வந்த மடல்களை என்னால் மறக்கவே முடியாது. தொடர்ந்து வந்த ஒரு மாதத்தில் வேர்கள் என்னும் அமைப்பின் சார்பாக சென்னையில் நடைபெற்ற இலக்கியக் கூட்டமொன்றில் பூமணி என்னைப் பேசுவதற்கு அழைத்திருந்தார். என் முதல் இலக்கிய மேடை. அன்றுதான் பல எழுத்தாளர்களை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கோவை.ஞானியின் நட்பு அந்தக் கூட்டத்தில்தான் எனக்குக் கிடைத்தது. நிறையும் குறையுமாக, என் கதைகளைப்பற்றி உள்ளார்ந்த அன்போடு அவர் பகிர்ந்துகொண்டார். என்னை நான் பரிசீலனை செய்துகொள்ள இவையனைத்தும் உதவின.

தீராநதி: கோவை. ஞானிதானே உங்கள் சிதறல்கள் நாவலுக்கு முன்னுரை எழுதியிருந்தார்?

பாவண்ணன்: ஆமாம். தொழிலாளர் உலகத்தைப் பற்றிய ஒரு நாவல் அது. போராட்டத்தில் தோல்வியடைந்து, வாழ்வைத் தொலைத்துவிட்டு, நெருக்கடிகளால் சிதறிப்போன தொழிலாளர்கள் அவலத்தை அடையாளப்படுத்தி செய்யப்பட்ட முயற்சி அது. அதற்கு முன்னுரை எழுத அவரே பொருத்தமானவர் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கடிதம் எழுதிக் கேட்டதுமே ஒப்புக்கொண்டார். குறுகிய இடைவெளியில் எழுதி அனுப்பவும் செய்தார்.

தீராநதி: அந்த நாவல் எனக்கும் பிடித்திருந்தது. அந்த நூலுக்கு உங்கள் படத்தையெல்லாம் போட்டு கட்டம் கட்டி சுபமங்களா இதழில் நல்லதொரு மதிப்புரைகூட வந்திருந்தது. ரவீந்திரதாஸ் எழுதியிருந்தார். சிதறல்கள் நாவலைத் தொடர்ந்து வந்த நாவல் பாய்மரக்கப்பல் அல்லவா?

பாவண்ணன்: ஆமாம்.

தீராநதி: படித்திருக்கிறேன். மூன்று தலைமுறை நாவல். பிரெஞ்சு ஆட்சியின் பின்னணியில் ஒரு தலைமுறை, தியாகத்தை ஒரு பண்பாகக் கொண்ட காங்கிரஸ் எழுச்சியின் பின்னணியில் ஒரு தலைமுறை, அரசியலை ஒரு மூலதனமாகப் பார்க்கிற இன்னொரு தலைமுறை என கச்சிதமான வடிவத்துக்குள் அந்தக் கதை மிகச்சிறப்பாகவே வந்திருந்தது. அது எந்த ஆண்டில் வெளிவந்தது?

பாவண்ணன்: 1995.

தீராநதி: அதற்குப் பிறகு நீங்கள் எந்த நாவல் முயற்சியையும் மேற்கொள்ளவில்லையே? அதற்குப் பிறகல்லவா தமிழில் நாவல்களின் பொற்காலம் தொடங்குகிறது? உங்கள் பங்களிப்பு இருந்திருக்கவேண்டிய ஒரு கட்டத்தில் நீங்கள் ஒதுங்கிவிட்டீர்களே. அது ஏன்?

பாவண்ணன்: அது எனக்கும் ஒரு வேதனையான விஷயம்தான். புதிய நாவல் முயற்சியில் இறங்கவில்லை என்று சொல்லமுடியாது. ஆர்வத்தின் காரணமாக ஒரு பெரிய களத்தை அமைத்து எழுதத் தொடங்கினேன். கர்நாடகத்தில் குடியேறிய தமிழர்களின் வாழ்க்கைப் பின்னணியில் என் நாவலை அமைத்திருந்தேன். ஏறத்தாழ ஐந்நூறு பக்கங்கள் எழுதிய பிறகு, ஏதோ ஒரு காரணத்தால் அதை நிறுத்தினேன். என் வாழ்வில் மிகப்பெரிய துரதிருஷ்டமான தருணம் அது. அந்தக் கதையை அதற்கப்புறம் தொடங்கவே முடியாமல் போனது. ஏதேதோ சின்னச்சின்ன முயற்சிகளில் எல்லாம் ஈடுபடுகிறேன். அதையெல்லாம் செய்து முடிக்கிறேன். ஆனால் நடுவில் நிறுத்தியதை மட்டும் மறுபடியும் தொடர முடியாமல் போய்விட்டது. சரி, போனது போகட்டும், இன்னொன்றைப் புதிதாகத் தொடங்கலாம் என்றால் அதற்கும் மனம் இடம் தரவில்லை. குழப்பத்துக்கும் தடுமாற்றத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறேன்.

தீராநதி: கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள். பெரிய இடைவெளி அல்லவா? ஒருவேளை, இந்த நாவலை நிறைவு செய்யமுடியாத வேகமும் தவிப்பும்தான், உங்களை மொழிபெயர்ப்புத்துறை நோக்கியும் கட்டுரைகளை நோக்கியும் செலுத்தியிருக்கக்கூடுமோ?.

பாவண்ணன்: இருக்கலாம். சரியாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

தீராநதி: உங்கள் படைப்புகளைப்பற்றித் தெரிந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கை சார்ந்த பின்னணியைப் பற்றித் தெரியாது. உங்கள் ஆளுமையைப் பற்றிய முழுச்சித்திரத்தை அறிந்துகொள்ள அந்தத் தகவல்கள் நிச்சயமாக உதவும். உங்கள் ஊர் வளவனூர் என்று குறிப்பிட்டீர்கள். அது எங்கே இருக்கிறது, எப்படி இருக்கும், அது உங்களுக்குத் தந்த உத்வேகம் என்ன, உங்கள் பெற்றோர், குடும்பம், நண்பர்கள், கனவுகள் பற்றிச் சொல்லுங்கள்.

பாவண்ணன்: விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் உள்ள கிராமம் எங்கள் வளவனூர். பழைய நிலஅமைப்பில் அது தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தது, இப்போதைய அமைப்பில் அது விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகிறது. அந்த ஊரில் நான் 1958 ஆம் ஆண்டில் பிறந்தேன். என் அம்மா பெயர் சகுந்தலா. அப்பா பெயர் பலராமன். தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய அப்பா காலத்தில் மாடு, கன்று, தோட்டம், வயல் என்று எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பங்காளித் தகராறில் எல்லாம் அழிந்துபோய்விட்டன. கோயில் நிலத்தில் கூரைவீடு கட்டிக்கொண்டு வாழும்படி நேர்ந்துவிட்டது. அது அவருடைய நெஞ்சில் அழுத்தமான வடுவாகப் பதிந்துவிட்டது. ஒரு விவசாயியாக மறுபடியும் வாழத் தொடங்கவேண்டும் என்று கனவுகளோடு இருந்தார். கொஞ்சம்கொஞ்சமாகப் பணம்சேர்த்து ஏரிக்கரைப்பாசனத்தில் கால்காணி நிலம் வாங்கினார். ஆனால் இரண்டுமூன்று ஆண்டுகள் கூட அதில் விவசாயம் செய்யமுடியவில்லை. அவருக்கான மருத்துவம், குடும்பச்செலவுகள், கடன்கள் எல்லாவற்றையும் சமாளிக்க விற்றுவிடவேண்டியதாக இருந்தது. குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை. எனக்கு இரண்டு சகோதரிகள். இரண்டு தம்பிகள். வறுமை ஒரு கரிய நிழலாக எங்கள் குடும்பத்தின்மீது படிந்திருந்தது. ஆனால் அதன் வலியை நாங்கள் உணராதபடி அம்மா எங்களை அன்போடும் ஆதரவோடும் பார்த்துக்கொண்டார். கடைத்தெருவில்தான் அப்பா கடை வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நான்தான் கடைக்குச் சென்று வீட்டுச் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு, அப்படியே அரிசி, பருப்பு, காய்கறி எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு திரும்புவேன். வருமானம் இருக்கும் சமயங்களில் அப்பா பணம் தருவார். இல்லாத சமயங்களில் ஒன்றும் செய்ய முடியாது. அன்று கேழ்வரகுமாவையும் முருங்கைக்கீரையும் பிசைந்து எல்லாருக்கும் அடை செய்து கொடுப்பார் அம்மா. சுடச்சுட நாங்கள் அதை வாங்கி, மண்ணெண்ணெய் விளக்கில் சுற்றி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். எங்களுக்குக் கதை சொல்லி தூங்கவைத்துவிட்டு, அப்பா வரும்வரை காத்திருப்பார் அம்மா. வறுமையின் துன்பத்தைத் தன் அன்பாலும் சகிப்புத்தன்மையாலும் வென்று குடும்பம் நொடிந்துபோகாமல் காப்பாற்றியது அம்மாதான். எப்படியாவது நான் படித்துப் பட்டம் வாங்கவேண்டும் என்பது அவருடைய கனவு. அப்போதுதான் நல்ல வேலையைப் பெறமுடியும், குடும்பத்தைத் தாங்கமுடியும் என்பது அவர் நம்பிக்கை. ஆனால் அப்பா தன் இயலாமையின் காரணமாக, பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடலாமா என்று பல முறை சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வற்புறுத்தல் அதிகமானது. தற்செயலாக ஒரு கோயில் திருவிழாவுக்கு புதுச்சேரியிலிருந்து எங்கள் மாமா ஊருக்கு வந்திருந்தார். தங்கிப் படிப்பதற்கு அவரிடம் பேசி அனுமதி பெற்றார் அம்மா. புதுச்சேரியில் உள்ள தாகூர் கல்லூரியில் கடைசிநாளன்று சென்று விண்ணப்பம் வாங்கி முழுமை செய்து கொடுத்தேன். கணிதப்பிரிவில் எனக்கு இடம் கிடைத்தது. அம்மாவிடம் நகைகள் என்று சொல்லும்படியாக அப்போது ஒரு ஜோடி கம்மல், மூக்குத்தி, ஒரு வங்கி மோதிரம் மட்டுமே இருந்தன. அவை அனைத்தையும் விற்றதில் நானூற்றிசொச்சம் ரூபாய் கிடைத்தது. நானூறு ரூபாயை அம்மா என்னிடம் கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தார். கல்லூரிக் கட்டணத்துக்கு முந்றூற்றுத் தொண்ணூறு ரூபாயும் என் செலவுக்குப் பத்து ரூபாயும் வைத்துக்கொள்ளச் சொன்னார். வளவனூரைவிட்டுப் பிரிந்த பிறகுதான் அதை நான் எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதை உணர்ந்தேன். என் கனவுமுழுக்க என் ஊரின் சித்திரங்களாலேயே நிறைந்திருந்தன. அக்கம்பக்கம் எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு அழகான ஏரி ஒன்று எங்கள் ஊரில் உண்டு. பக்கத்திலிருந்த எல்லாப் பாளையங்களுக்கும் பாசனத்துக்கு ஏரித்தண்ணீர் மதகுகள் வழியாகப் போகும். உயர்ந்த கரைகள். கரைநெடுகப் புளிய மரங்கள், ஆலமரங்கள், பனைமரங்கள், வேப்ப மரங்கள் என வரிசைவரிசையாக நிழல் தந்தபடி இருக்கும். எல்லா நேரங்களிலும் சிலுசிலுவென்று காற்றடித்தபடி இருக்கும். அந்த நிழலில் நானும் என் நண்பனும் பேசிக்கொண்டே நடப்போம். கல்கியின் நாவல்களில் திளைத்திருக்கும்போது, அந்த ஏரி எங்கள் கண்களுக்கு தளும்பும் காவேரியாகத் தெரியும். வந்தியத்தேவனாக எங்களை நினைத்துக்கொள்வோம். ருஷ்ய நாவல்களில் மிதந்திருக்கும்போது, அதே ஏரி பனிபடர்ந்த மிசிசிபி நதியாக மாறிவிடும். எங்கள் கற்பனைக்கு அளவே இருந்ததில்லை. ஏரிக்கரையை ஒட்டி ரயில்வே நிலையமும் தோப்பும் இருந்தன. படிப்பதற்கு அங்கேதான் செல்வோம். பெரிய புத்தகங்கள் என்றால் ஒரு புத்தகம், பக்கங்கள் குறைந்த புத்தகங்கள் என்றால் இரண்டு புத்தகங்கள் என ஒரே மூச்சில் உட்கார்ந்த வேகத்தில் படித்து முடிப்போம். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை, அந்த அமைதியான சூழலில் பேசிப்பேசித்தான் வளர்த்துக்கொண்டோம்.

தீராநதி: உங்கள் நண்பரும் உங்களோடு சேர்ந்து படித்தாரா?

பாவண்ணன்: இல்லை. அவன் வீடும் நெருக்கடிகளில் தத்தளித்தபடிதான் இருந்தது. அவனால் புகுமுக வகுப்பைத் தொடர்ந்து படிக்கமுடியவில்லை. ஆனால் புதுச்சேரியிலிருந்து விடுப்பில் ஊருக்கு வரும்போதெல்லாம் நாங்கள் சேர்ந்தே இருந்தோம்.

தீராநதி: படித்துமுடித்ததும் உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா?

பாவண்ணன்: இல்லை. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஊரில்தான் இருந்தேன். வேலையின்மையை ஒட்டி என் அப்பா பொறுமை இழந்துகொண்டிருந்தார். என் அம்மாவுக்கோ மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைமை. பெரும்பாலான நேரங்களை நான் நூலகத்திலும் ஏரிக்கரையிலும் கழித்தேன். படிப்பதைத் தவிர வேறெதிலும் மனம் செல்லவில்லை. அப்போதுதான் இந்தியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டேன். அதற்காக நடந்த தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவனாகத் தேறினேன். பழனியைத் தவிர, எனக்கு மோகன் என்றொரு நண்பனும் உண்டு. தொலைபேசித் துறையில் தொலைபேசி இயக்குநராக அவன் வேலை செய்துவந்தான். அவனுடைய அண்ணன் அந்த சமயத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்று மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். அது எங்களுக்கு மிகவும் உத்வேகத்தைக் கொடுத்தது. அதன் விவரங்களைக் கேட்டறிந்து நானும் அவனும் திட்டமிட்டு அந்தத் தேர்வுக்குத் தயார் செய்யத் தொடங்கினோம். விருப்பப்பாடங்களாக இந்திய வரலாற்றையும் சமூகவியலையும் தேர்ந்தெடுத்தேன். இலக்கிய நூல்களை வாசிப்பதோடு, இது தொடர்பான நூல்களையும் வாசித்தேன். இந்த வாசிப்பின் தொடர்ச்சியாய்த்தான் விவேகானந்தர் நூல்கள்மீதும் காந்தியத்தின்மீதும் ஈர்ப்பு பிறந்தது. படிப்பதும் விவாதிப்பதுமாகவே நாட்கள் கடந்தன. அப்போது அஞ்சல் நிலையத்தில் எழுத்தராக எனக்கு வேலை கிடைத்தது. எங்கள் குடும்பம் ஓரளவு நிம்மதியான வாழ்வை நடத்த அந்த வேலை உதவியது. பகலில் வேலை, இரவில் வரலாற்றையும் இலக்கியத்தையும் படிப்பது எனத் திட்டமிட்டுப் படித்தேன். என்னால் அஞ்சலக வேலையில் நீடிக்கமுடியவில்லை. ஓராண்டுக்குப் பிறகு விலகிவிட்டேன். என் அம்மாவுக்கு அதில் வருத்தமிருந்தது. ஆனால், அதிகக் காத்திருப்புக்கு இடமில்லாதவகையில் உடனேயே, தொலைபேசித்துறையில் தொலைபேசி இயக்குநராக வேலை கிடைத்தது. இரவில் வேலை, பகலில் படிப்பு என மாற்றியமைத்துக்கொண்டேன். நானும் மோகனும் சென்னை வந்து ஐ.ஏ.எஸ்.க்கான முதனிலைத் தேர்வை எழுதிவிட்டுத் திரும்பினோம். தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தது. அடுத்த கட்டத் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினோம். இடையில் எங்கள் துறையிலேயே இளம்பொறியாளர் பணிக்காக கர்நாடக மாநிலத்துக்கு விண்ணப்பித்தேன். அந்த வேலை கிடைத்து, அதன் பயிற்சிக்காக நான் ஐதராபாத்துக்குச் சென்ற தருணத்தில் முதனிலைத் தேர்வில் நாங்கள் வென்ற செய்தி கிடைத்தது. என் பயிற்சியில் ஏகப்பட்ட புதுப்பாடங்கள். எல்லாம் பொறியியல் துறை சார்ந்தவை. எனக்குப் புதியவை. அவற்றை நான் ஆழ்ந்து பயில வேண்டியிருந்தது. அதனால் ஐ.ஏ.எஸ். தொடர்பான அடுத்த கட்டத் தேர்வை நான் கைவிட வேண்டியிருந்தது.

தீராநதி: உங்கள் நண்பர் எழுதினாரா?

பாவண்ணன்: எழுதினான். ஆனால் தேர்வடையவில்லை. பயிற்சி வகுப்புகளில் இணைந்து படிக்கிற அளவுக்கெல்லாம் அப்போது யாருடைய வீட்டிலும் வசதியில்லை. அது ஒரு முக்கியமான காரணம். ஆனால் வரலாற்றை முன்வைத்து, இந்தச் சமுதாய அமைப்பைப் புரிந்துகொள்ள எங்கள் வாசிப்பு பெருந்துணையாக இருந்தது.

தீராநதி: உங்கள் திருமணம்?

பாவண்ணன்: பயிற்சியைத் தொடர்ந்து பெல்லாரி மாவட்டத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். எஸ்.டி.டி. வசதிக்காக பெருநகரங்களிடையே கேபிள் இணைப்பை வழங்கும் வேலைப்பிரிவில் இருந்தேன். ஆற்றங்கரையோரமாகவும் தோப்பின் ஓரமாகவும் கூடாரங்களில் தங்கி வேலை பார்த்தேன். என் திருமணம் 1984 ஆம் ஆண்டில் நடந்தது. என் மாமாவின் மகளையே மணந்துகொண்டேன். பெயர் அமுதா. என் மனத்துக்கு இசைவானவர். என்னையும் என் கனவுகளையும் நன்றாகப் புரிந்துகொண்டவர். என் இலக்கியவாழ்வில் அவருடைய பங்களிப்பு மகத்தானது. குடும்பக்கடமைகள் அனைத்தையும் அவரே பொறுப்பெடுத்து நடத்தி, இலக்கியம்சார்ந்து இயங்குவதற்குத் தேவையான தனிமையை அன்போடு உருவாக்கித் தருவதால்தான் என்னால் தொடர்ந்து இயங்கமுடிகிறது. எங்கள் மகன் பெயர் அம்ரிதா மயன் கார்க்கி. கணிப்பொறித்துறையில் சமீபத்தில்தான் பொறியியல் பட்டம் பெற்றுள்ளான்.

தீராநதி: தினமணி நாளிதழில் நீங்கள் எழுதிய நடுப்பக்கக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. படைப்பிலக்கியத்தில் இயங்கியபடியே, வாழ்வியல் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியிருக்கிறீர்கள்? அவை குறித்த தங்களுடைய அனுபவங்களைச் சொல்லுங்கள்.

பாவண்ணன்: வாழ்வின் இயல்பு சார்ந்து நமக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. சமுதாயத்தின் சமனிலையைப் பற்றிய எதிர்பார்ப்பும் உண்டு. ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு, சமுதாயத்தின் சமனிலை குலைந்துபோகும்போது தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று சொல்கிறேன். பொதுவாழ்க்கை என்பது என்ன? பொதுமக்களின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்க்கைத்தரத்தின் உயர்வுக்காகவும் தனிப்பட்ட ஒரு மனிதர் தன் வாழ்வின் நலத்தைப் பெரிதாக எண்ணாமல் உழைப்பதுதான் பொதுவாழ்க்கை. தன் சொந்த வாழ்க்கையைத் துறந்து, பொதுமக்களை நோக்கி வந்ததால்தான் அந்தப் பெயர் அதற்கு வந்தது. காந்தி அப்படி வாழ்ந்தவர். அவர் தலைமுறையைச் சேர்ந்த பலரும் கட்சி வேறுபாடின்றி அப்படி வாழ்ந்தவர்கள்தான். திரிபுரா மாநிலத்துக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்துவிட்டு, தேர்தலில் தோல்வியுற்றதும் இரண்டு ஜோடி வேட்டி சட்டைகளைக் கொண்ட பெட்டியோடு கட்சி அலுவலகத்துக்கு வந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. கால் நூற்றாண்டு முன்புவரைக்கும்கூட இப்படிப்பட்ட மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள். தன்னலமின்மையும் தியாகமும்தான் பொதுவாழ்வின் அடிப்படைகள். ஆனால் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது? அப்பட்டமான தன்னலம் எல்லோருடைய நெஞ்சிலும் அடைந்துகிடக்கிறது. சிறுகச்சிறுக அது மதிப்பீடுகளின்மீதுள்ள நம்பிக்கையைக் குலைக்கிறது. தனிமனித வாழ்வின் போக்கைத் திசைதிருப்புகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது வருத்தமும் சீற்றமும் பொங்கிவருகிறது. தற்செயலாக, நண்பர் ராஜமார்த்தாண்டன் அவர்களைச் சந்திப்பதற்காக தினமணி அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது, அப்போது ஆசிரியராக இருந்த திரு.சம்பந்தம் அவர்களையும் பார்த்து உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உரையாடலின் விளைவாகத்தான் அக்கட்டுரைகளை எழுதும்படி நேர்ந்தது. ஒருவகையில் ஆற்றாமையின் பதிவுகள் அவை.

தீராநதி: இணைய இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் ஏராளமான புத்தக அறிமுகக்கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். புதிய படைப்பாளிகள் முதல் அழுத்தமாகத் தடம் பதித்த படைப்பாளிகள்வரை எழுதியுள்ள முக்கிய நூல்கள் அனைத்தையும்பற்றி அக்கறையோடு பதிவு செய்திருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் அந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

பாவண்ணன்: நல்ல புத்தகங்களைப்பற்றிய அறிமுகம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லை. வாரபலன் என்கிற தலைப்பில் மலையாளத்தின் எழுத்தாளர் ஒருவர் தொடர்ச்சியாக, புதுபுதுப் புத்தகங்கள்பற்றி தன் மரணம் வரைக்கும் எழுதிவந்தார். அந்த வழியில் பல துறைகள் சார்ந்து, தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்களைப்பற்றி ஒவ்வொரு வாரமும் எழுத வேண்டும் என்றொரு ஆசை எழுந்தது. “இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டீர்களா?’’ என்று தலைப்பிட்டு ஒரு தொடரை திண்ணை இணைய இதழில் தொடங்கினேன். புத்தகச்சந்தையிலும் கடைகளிலும் தேடி எனக்காக நான் வாங்கிவந்த புத்தகங்களைப் படித்து, அவற்றில் பகிர்ந்துகொள்ளத்தக்கவை என்று நினைப்பதைப்பற்றி அறிமுகக்கட்டுரைகளை எழுதினேன். அவர்களில் பலரை நான் பார்த்ததே இல்லை. நல்ல புத்தகங்கள் நல்லவிதமாக அறிமுகம் பெறவேண்டும் என்பதைத் தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி ஒவ்வொரு வாரமும் என்னால்தான் எழுத இயலாமல் போய்விட்டது. முடியும்போதுமட்டுமே எழுதிவருகிறேன். பல்வேறு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்போது சிலவற்றைமட்டுமே செய்யமுடிகிறது. சில வேலைகளைச் செய்யமுடியாமல் போய்விடுகிறது.

தீராநதி: படைப்பு முயற்சிகளில் தொடக்க காலத்தில் நீங்கள் சாதிக்க நினைத்ததென்ன? அவற்றைச் சாதித்துவிட்டோம் என்று தோன்றியதுண்டா?

பாவண்ணன்: ஆதரவில்லாத வாழ்வின் தத்தளிப்புகளை, அதன் வெப்பம் குறையாமல் முன்வைக்கவேண்டும் என்பதுதான் என் தொடக்ககால எண்ணமாக இருந்தது. இன்று அந்த எண்ணத்தோடு முன்னும் பின்னுமாக இன்னும் பல கூறுகள் சேர்ந்துவிட்டன. அதன் திசையில் என்னால் முடிந்த அளவில் முயற்சிகளைச் செய்துவருகிறேன். அவ்வளவுதான். சாதனை என்பதெல்லாம் பெரிய சொல்.

தீராநதி: உங்கள் படைப்புகளில் பிள்ளைப்பருவ வாழ்க்கையைப்பற்றிய நினைவுகள் நேர்த்தியான குறும்படங்களைப்போல மனம்கவரும்படி உள்ளன. சமீபத்தில் வேப்பம்பழங்களைப் பொறுக்கி, அதன் கொட்டைகளை உலரவைத்துப் பணம் சேர்ப்பதைப்பற்றி நீங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் படித்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. வயது கூடக்கூட பிள்ளைப்பருவ நினைவுகள் மிகவும் துல்லியமாக மனத்தில் மிதந்தலையும் என்பது ஒருவேளை உண்மைதானோ?

பாவண்ணன்: இரண்டு காரணங்களுக்காக ஒவ்வொருவரும் பிள்ளைப்பருவத்தை அசைபோடுகிறோம். ஒன்று, அந்த வயது நினைவுகள் வழங்குகிற மகிழ்ச்சிக்காக. இன்னொன்று, அந்த வயதுக்குரிய மனத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கத்துக்காக. உண்மையில் நாம் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் அந்த நினைவுகளை அல்ல, அந்த மனத்தை. களங்கமற்ற அந்த மனத்தை. எப்படி இருந்தோம் அப்போது? வறுமை இருந்தது. அவமானப்பட்டிருக்கிறோம். பலரால் வெளியேற்றப்பட்டிருக்கிறோம். வசைபாடப்பட்டிருக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும் கடந்து நாம் ஆனந்தமாகவும் இருந்தோம் அல்லவா? எப்படி முடிந்தது அது? பிள்ளைமனத்தில் நிரம்பிவழிந்த கள்ளமின்மைதானே அதற்குக் காரணம்? அப்போது இல்லாத எல்லாமே, இன்று நம்மிடையே இருக்கிறது. ஆனால் அந்த ஆனந்தம் மட்டுமில்லை. காரணம், அந்தக் குழந்தைமையைத் தொலைத்துவிட்டோம். கள்ளம் வந்து நுழைந்துவிட்டது. அதை விரட்ட வழி தெரியவில்லை. பிள்ளைப்பருவ நினைவுகளில் தோயும் கணங்களில் எங்கோ ஆழத்தில் புதைந்துவிட்ட அந்தக் களங்கமின்மையின் விரல்நுனியைச் சற்றே தீண்டிவிட்டுத் திரும்பிவிடுகிறோம். எழுதுகிறவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே இது பொது.

தீராநதி: இன்றைக்கு, எழுதப்படுகிற சிறுகதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? யாருடைய படைப்புகளை விரும்பிப் படிப்பீர்கள்?

பாவண்ணன்: எந்த இதழைப் படிக்கத் தொடங்கினாலும் முதலில் அதில் உள்ள சிறுகதைகளைப் படிப்பதுதான் என் வழக்கம். வாழ்வனுபவம் சார்ந்து எழுதப்படுகிற படைப்புகள் உடனடியாக என் மனத்தைத் தொடுகின்றன. சமத்காரத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக மொழியைத் திருகித்திருகி எழுதும் படைப்புகளோடு என்னால் ஒன்ற முடிவதில்லை. உயிர் எழுத்து, காலச்சுவடு, உயிர்மை மூன்றிலும் வரக்கூடிய சிறுகதைகள் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிற்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில், நவீனச் சிறுகதைகளின் பெருந்தொகுப்பை யாராவது தொகுக்க நேர்ந்தால், இவ்விதழ்களில் வெளிவரும் கதைகளே முக்கால் பங்குக்கும் மேல் இடம் பிடித்திருக்கும் என்று தோன்றுவதுண்டு. இந்த மூன்று இதழ்களில் உயிர் எழுத்து, சிறுகதைகளுக்குத் தாராளமாக இடம் தருகிறது. ஒரே இதழில் கிட்டத்தட்ட ஆறேழு கதைகள். ஒரு புதிய எழுத்தாளர், இவ்விதழ்களில் தன் கதை தேர்வாவதை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம். கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், என்.ஸ்ரீராம், காலபைரவன், எஸ்.செந்தில்குமார். என்.கே.செந்தில், சந்திரா, கவின்மலர், சொ.பிரபாகர், செழியன், புகழ், ஆங்கரை பைரவி என பலருடைய சிறுகதைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். சட்டென்று நினைவுக்கு வந்த பெயர்களைச் சொல்கிறேன். பெயர் சொல்லாத பலருடைய படைப்புகளும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

தீராநதி: கடந்த பத்தாண்டுகளில் தமிழில் எழுதப்பட்டுள்ள நாவல்களின் வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாவண்ணன்: மிகப்பெரிய வளர்ச்சி என்றே இதை நான் கருதுகிறேன். எந்த சந்தேகத்துக்கும் இதில் இடமில்லை. கடந்த நூற்றாண்டின் ஐம்பதாண்டுகால வளர்ச்சியைவிட இந்தப் பத்தாண்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. மழைக்குக் காத்திருந்த விதைகள் முளைவிட்டதுபோல, ஏராளமான படைப்புகள் இந்தப் பத்தாண்டில் வெளிவந்துவிட்டன. ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, யாமம், பெருமாள் முருகனின் மாதொருபாகன், கோபாலகிருஷ்ணனின் மணற்கடிகை, சோ.தருமனின் கூகை, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம், ஜோடிகுரூஸின் ஆழிசூழ் உலகு, உமாமகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை, கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை, எஸ்.செந்தில்குமாரின் முறிமருந்து, ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் ஆகிய படைப்புகள் உடனடியாக என் நினைவுக்கு வருகின்றன.

தீராநதி: சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் தவிர குழந்தை இலக்கியத்திலும் நீங்கள் ஆர்வத்துடன் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்கள் பாடல்கள் சிறுவர் மணியில் வெளிவரும்போதெல்லாம் அவற்றை ஆர்வத்துடன் படித்ததுண்டு. அந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

பாவண்ணன்: எங்கள் கிராமத்தில் இயங்கிவந்த இலக்கிய அமைப்பான திருக்குறள் கழகத்தைப்பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சிறுவர்களான நாங்கள் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்கச் செல்வோம். திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வழிசெய்து, அவர்கள் எங்களையும் அக்கழகத்தில் ஈடுபடுமாறு வைத்தார்கள். தவறில்லாமல் ஒப்பிக்கிறவர்களுக்கு தமிழ்ச்சிட்டு என்னும் சிறுவர் இதழைப் பரிசாகக் கொடுத்தார்கள். நான் பல இதழ்களைப் பரிசாக வாங்கியிருக்கிறேன். பெருஞ்சித்திரனார் அவர்களால் நடத்தப்பட்டு வந்த இதழ் அது.

துரை. மாணிக்கம் என்கிற பெயரில் அவர் அழகான குழந்தைப் பாடல்களைத் தொடர்ந்து எழுதி வந்தார். அதை நான் ஆர்வத்துடன் படித்தேன். குழந்தை இதழ்களுக்கு, இன்றளவும் அது மிகச்சிறந்த முன்மாதிரியான இதழ். கல்லூரிக்காலத்தில் தங்கப்பா எழுதிய விதவிதமான குழந்தைப்பாடல்கள் என்னைக் கவர்ந்தன. குழந்தைக்கு அறிவுரை சொல்வதல்ல, குழந்தை மனநிலையிலிருந்து, குழந்தைக்குப் பழகிய சொற்களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்ட குறைந்த அளவிலான சொற்களால் புனையப்படுவதே குழந்தைப்பாடல்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போது என் கடைசித் தம்பியும் தங்கையும் வயதில் மிகச்சிறியவர்கள். அவர்களோடு விளையாடுவதற்காக, அவர்கள் மொழியில் பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். என் நண்பன் மோகனைப்பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர்கள் வீட்டிலும் நிறைய குழந்தைகள். அவர்களுக்காகவும் சிலவற்றை எழுதினேன். இப்படி விளையாட்டாக எழுத ஆரம்பித்த பாடல்களைத்தான் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து தொகுப்பாகக் கொண்டுவந்தேன். இப்போதும் தம்பி, தங்கையின் குழந்தைகளுக்காகவும் நண்பர்களின் குழந்தைகளுக்காகவும் எழுதிக்கொண்டிருக்கிறேன். நம்மை மறந்து சிறிது நேரம் குழந்தைகள் உலகத்தில் பங்கெடுத்துவிட்டுத் திரும்புவது மனபாரத்தையெல்லாம் கரைத்து லேசாக்கிவிடுகிறது.

தீராநதி: படைப்பிலக்கியத்தைத்தாண்டி, கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதிலும் உங்கள் முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. சாகித்திய அகாதெமி விருதையும் இந்த மொழிபெயர்ப்பு தேடித் தந்திருக்கிறது. மொழிபெயர்ப்பதில் எப்படி ஆர்வம் பிறந்தது?

பாவண்ணன்: தொடக்கத்தில் அப்படி ஓர் எண்ணமே இல்லை. என் வாழிடம் கர்நாடகம்தான் என்பதை என் மனம் தீர்மானமாக உணர்ந்த கணத்தில் கன்னட மொழியை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். பள்ளிப்படிப்பு போலவே ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என அடுத்தடுத்த வகுப்பு நூல்களை வாங்கி நண்பர்கள் உதவியோடு படித்துத் தேர்ச்சியடைந்தேன். வாசிப்பு பழகியபிறகு நாளிதழ்கள், வார இதழ்கள் எனத் தொடங்கி, இலக்கியப்புத்தகங்களைப் படிப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டேன். கன்னடத்திலேயே நான் படித்த முதல் கன்னட நாவல் சோமனதுடி. என் மனத்தைக் கொள்ளைகொண்ட நாவல் அது. ஏறத்தாழ பத்தாண்டுகாலம் இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பதிலேயே கழித்தேன். பெங்களூருக்கு இடமாற்றம் பெற்று வந்த பிறகு, அங்கே வசித்துவந்த மூத்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாடகங்களை, மொழிக்கு ஒன்று வீதமாக தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துத் தொகுப்பது என்பது அவருடைய கனவாக இருந்தது. வடநாட்டு மொழிகளில் எழுதப்பட்ட நாடகங்களை இந்தி வழியாக மொழிபெயர்த்து அவர் தொகுத்துவிட்டார். தென்னிந்திய மொழிகளில் உள்ள நாடகங்களை நேரடி மொழிபெயர்ப்பில் தொகுக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். கன்னட மொழியில் எழுதப்பட்ட ஓரங்க நாடகமொன்றை மொழிபெயர்க்கவேண்டும் என்று அவர்தான் தூண்டினார். அவருடைய அன்புக்கு நான் கட்டுப்படவேண்டியதாக இருந்தது. நான் இயங்கும் களமாக அதுவும் ஒன்றாக இருக்கப்போகிறது என்பது அப்போது தெரியவே இல்லை. சந்திரசேகர் பாடீல் என்பவர் எழுதிய ஓர் ஓரங்க நாடகம் ஒன்றை அத்தொகுப்புக்காக மொழிபெயர்த்துக் கொடுத்தேன். சில வாரங்களின் இடைவெளியில் கிரீஷ் கார்னாடின் புதிய கன்னட நாடகமொன்று மேடையில் அரங்கேறியது. ஏற்கெனவே அவருடைய நாடகங்களை நான் பார்த்திருந்ததால் அவருடைய ஆக்கங்களின்மீது எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கச் சென்றேன். ‘தலெதண்ட’ என்னும் நாடகம். என் சிந்தனையைக் கவர்ந்த நாடகம் அது. அன்று நான் அடைந்த மனக்கிளர்ச்சிக்கு அளவே இல்லை. நமக்குத் தேவையான ஒன்று, தேவையான காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது என்கிற எண்ணமே முதலில் எனக்கெழுந்தது. சீர்திருத்தச் சிந்தனைகளைக்கொண்ட ஒரு சமூக அறிஞனுக்கும் சமூகத்துக்கும் இடையிலமைந்த உறவின் மேடுபள்ளங்களை, காட்சிகளாக முன்வைத்து அந்தப் படைப்பு அலசியது. நம் தமிழ் வாசகர்கள் இதை உடனே அறியவேண்டும் என்று விரும்பினேன். கிரீஷ் கார்னாடைச் சந்தித்து மொழிபெயர்க்க அனுமதி பெற்றேன். இப்படியாக, பார்க்கிற நாடகங்கள், படிக்கிற புத்தகங்கள் ஆகியவற்றில் முக்கியமானவற்றையும் சந்தித்த மனிதர்களில் முக்கியமானவர்களையும் தமிழுலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தின் தூண்டலால் தவிர்க்கமுடியாமல் மொழிபெயர்ப்பில் நான் இறங்கவேண்டியதானது.

தீராநதி: நாடகங்கள் மட்டுமல்ல, ஊரும் சேரியும், கவர்ன்மெண்ட் பிராமணன் போன்ற தலித் சுயசரிதைகள், பசித்தவர்கள், பருவம், ஓம்நமோ போன்ற நாவல்கள் என உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்த எல்லாமே ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருக்கின்றன. அது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. மொழிபெயர்ப்பதற்கான படைப்புகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்துக்கொள்கிறீர்கள்?

பதில்: ஒரு படைப்பின் புதுமையே முதலில் என்னை ஈர்க்கிறது. என் சுவையுணர்வை நம்பியே அவற்றை நான் தேர்ந்தெடுக்கிறேன். மனத்துக்குப் பிடிக்கிற எல்லாவற்றையும் மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்வதில்லை. என்னால் ஒதுக்கமுடிகிற நேரத்துக்குள், எதைச் செய்யமுடியுமோ, அதைமட்டுமே எடுத்துக்கொள்கிறேன். சமீபத்தில் அளவில் சிறிய ஒரு நாவலை மொழிபெயர்த்தேன். ராகவேந்திர பாட்டீல் என்னும் எழுத்தாளருடைய தேர் என்னும் நாவல். நல்ல வாசிப்பனுபவம் உள்ள நாவல். கிட்டத்தட்ட கால்பங்கு நாவல், ஒரு கதாகாலட்சேபம் நிகழ்த்தும் முறையில் ஒரு நூற்றாண்டுகால கதையைச் சொல்கிறது. ஒரு ஊர் உருவாகும் விதம், அந்த ஊருக்கு ஒரு கோவில் உருவாகும் விதம், அதன் வழிபாட்டின் ஒரு பகுதியாக தேர் உருவாகும் விதம், தேர் நகராமல் நின்றுபோவதால் எழும் பதற்றம், அதை நகரவைப்பதற்காக தரப்படும் பலி, பலியாகத் தரப்படும் அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழந்தை, அதனால் அக்குடும்பத்துக்குக் கிடைக்கிற கௌரவம் என முன்னும் பின்னுமாக சிக்கல் தன்மையோடு அந்தக் கதை செல்கிறது. தேர் ஒரு கோணத்தில், ஓர் ஊரின் கௌரவத்துக்கான அடையாளம். அடித்தட்டுப் பிரிவினரின் ரத்தக்கறை படிந்த சக்கரங்கள் பூட்டப்பட்டிருப்பதால் இன்னொரு கோணத்தில், அதே தேர் நசுக்குண்ட வரலாற்றின் அடையாளம். ஒரு நாட்டுப்புறக் கதையைப்போல சுவாரஸ்யமாகப் படிக்கத்தக்க நாவல். எதிர்பாராத ஒரு கணத்தில் அது மானுட குலத்தின் மறக்கமுடியாத துயரத்தை முன்வைக்கும் படைப்பாக மாறிவிடுகிறது. சாகித்திய அகாதெமியின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது.

தீராநதி: முக்கியமான உங்கள் சொந்தப் படைப்புகளும் மொழிபெயர்ப்புகளும் பல சமயங்களில் சரியான முறையில் கவனம் பெறாமலேயே போய்விட்டதை என்னால் உணர முடிகிறது. உங்களுடைய பல புத்தகங்களுக்கு ஒரு சின்ன மதிப்புரைகூட வந்ததில்லை. ஆனாலும், அதையெல்லாம் என்னமோ தொடர்பே இல்லாத ஒரு விஷயத்தைப்போல நினைத்துக்கொண்டு உங்களால் எப்படி இயங்க முடிகிறது? உங்களுக்கு வருத்தமே ஏற்பட்டதில்லையா?

பாவண்ணன்: வருத்தமெழாமல் இருக்காது. ஆனால் அதற்கு என் நெஞ்சில் தங்கிவிடும் அளவுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன். அப்படிப்பட்ட தருணங்களில் எல்லாம் அக்கமகாதேவியின் ஒரு பாடலை நினைத்துக்கொண்டு மனம் தேறிவிடுவேன். தமிழின் ஆண்டாள்போல கன்னடச்சூழலில் தெய்வத்தையே தனக்குரியவனாக எண்ணி வாழ்க்கையை நடத்தியவள் அக்கமகாதேவி. கன்னடத்தில் அவரை அக்கா என்று அன்போடு அழைப்பார்கள். அக்காவின் தெய்வம் சென்னமல்லிகார்ஜுனன். ”கோல் அசைவால் ஆட்டிவைக்கப்படுகிறகுரங்குபோல, கயிற்றின் அசைவால் ஆட்டிவைக்கப்படுகிற பொம்மையைப்போல, சென்னமல்லிகார்ஜுனனைப் பற்றிய நினைவு இயக்கும் விதத்தில் நான் இயங்குகிறேன்’’ என்று தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்கிறார் அக்கா. தினமும் நாம் கண்களால் பார்க்கிற ஒரு நடைமுறை உவமையை எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கிறார் பாருங்கள். குரங்கின் இயக்கத்துக்கு, சுற்றியிருப்பவர்களின் கைதட்டல்களும் ஆரவாரமும்தான் காரணமாக இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது நம் நம்பிக்கை. அவ்வளவுதான். உண்மையில் அதை இயக்குவது, குரங்காட்டியின் கையில் இருக்கிற கோல். நம்பிக்கைக்கும் எதார்த்தத்துக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி பாருங்கள். அக்காவின் இன்னொரு பாட்டும் மிகமுக்கியமான ஒன்று. இதுவும் சென்னமல்லிகார்ஜுனனைப் பார்த்துப் பாடும் பாட்டு. ”ஐயா, நீ கேட்டால் கேள், கேட்காவிட்டால் விட்டுவிடு, ஆனால் உனக்காகப் பாடுவதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது. ஐயா, என்னை விரும்பினால் விரும்பு, விரும்பாவிட்டால் விட்டுவிடு. ஆனால் உன்மேல் இருக்கிற விருப்பத்தைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, ஐயா, என்னைப் பார்க்க நினைத்தால் பார், பார்க்க விருப்பமில்லை என்றால் விட்டுவிடு, ஆனால் உன்னைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது’’ என்று செல்லும் அந்தப் பாட்டு. மனம் துவளும் ஒருசில தருணங்களில் இப்படி சில பாடல்களைத்தான் நினைத்துக்கொள்வேன். என்னை இயக்கும் சக்தி என் உள்ளார்ந்த விருப்பமே தவிர வேறெதுவும் இல்லை. என் படைப்புகள் உங்களுக்கானவைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒருபோதும் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி உங்களை நான் கட்டாயப்படுத்தமாட்டேன்.

தீராநதி: அக்கமகாதேவியின் வசனங்களை நீங்கள் மொழிபெயர்த்திருக்கிறீர்கள் அல்லவா?

பாவண்ணன்: அவருடைய வசனங்களை மட்டுமல்ல, பசவண்ணர், அல்லமப்பிரபு ஆகியோரின் முக்கியமான வசனங்களையும் மொழிபெயர்த்து அவற்றோடு அவர்களைப்பற்றிய குறிப்புகளோடு ”கடவுளும் கவிதையும்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளேன். ’சொல்புதிது’ இதழில் அது வெளிவந்தது. கன்னட வசனகாரர்களில் இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள்.

தீராநதி: தமிழிலக்கியச் சூழலில் எப்போதும் சில பூசல்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் இலக்கியவாதிகள் பலரோடும் நட்புடன் இருப்பவர் நீங்கள். ஆனால், எந்தப் பூசலிலும் உங்கள் பெயர் அடிபட்டதில்லை, அது எப்படி அமைந்தது?

பாவண்ணன்: மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம்படைப்பாளிகள்வரை பலரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள். கல்லூரிக்காலத்திலேயே எனக்கு அறிமுகமாகி ஓர் முன்னுதாரணப் படைப்பாளியாக இன்றுவரை விளங்குபவர் ம.இலெ.தங்கப்பா. என் பதின்ம வயதில் அவரைப் பார்த்துப் பழகினேன். எவ்வளவு பெரிய ஆளுமை அவர். ‘வாழ்வியலில் நம் கருத்துக்குச் சிறிதும் ஒவ்வாதவர்கள் பலரை நாம் எதிர்கொள்ளக்கூடும். எளிய ஓர் உண்மையைக்கூட இந்த மண்ணில் நிலைநிறுத்த முடியவில்லையே என்கிற ஆதங்கம் எழக்கூடும். சீற்றம்கூட எழலாம். ஆனால் அது ஒருபோதும் நம்மை வெறுப்பின் எல்லைவரை அழைத்துச் செல்லக்கூடாது. மனிதர்கள்மீதுள்ள நேசம் ஒருபோதும் குறையக்கூடாது. அறியாமையால் அவர்கள் செய்யும் பிழையையும் பாவத்தையும் மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்வதற்கு மகாத்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. எளிய மனிதர்களுக்கும் அது சாத்தியம்.’ அவரோடு பழகியும் அவருடைய நூல்களைப் படித்தும் உணர்ந்த உண்மைகள் நெஞ்சில் சுடர்விட்டபடி இருக்கின்றன. இந்த நிலையில் எனக்கு எவ்விதமான பூசலிலும் ஆர்வமில்லை. தங்கப்பாவைத் தொடர்ந்து முதன்முதலாக நான் பார்த்துப் பழகிய எழுத்தாளர்கள் பிரபஞ்சனும் இராஜேந்திரசோழனும். அன்றும் இன்றும் பெரிய ஆளுமைகள் அவர்கள். ஆனாலும் எல்லோருடைய மனத்திலும் மிக எளிதில் இடம் பிடித்துவிடக்கூடியவர்கள். ஒரு சிறுகதைப்பட்டறையின் வழியாக அசோகமித்திரனோடும் திலீப்குமாரோடும் அறிமுகம் கிடைத்தது. இரவும் பகலுமாக நீண்ட உரையாடல்களில் சிறுகதை நுட்பங்களை அவர்கள் மனமாரப் பகிர்ந்துகொண்டதெல்லாம் நேற்று நடந்ததுபோல உள்ளது. சுந்தர ராமசாமியோடு உரையாடுவது பெரிய அனுபவம். புதிரான விஷயங்களை நோக்கி கேள்விகளை முன்வைத்துவிட்டு உரையாடல்கள்வழியாகவே நம்மை விடையை நோக்கிச் செலுத்தும் கலையில் அவருக்கு ஈடுஇணையே கிடையாது. வண்ணதாசன், கலாப்ரியா, நாஞ்சில் நாடன் ஆகியோரோடு உரையாடும்போதெல்லாம் எங்கள் குடும்பத்தின் ஒரு மூத்த சகோதரரிடம் உரையாடுவதுபோலவே தோன்றும். என் தலைமுறையில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம் ஆகியோருடன் விரும்பி உரையாடியிருக்கிறேன். எனக்குக் கிட்டிய அற்புதமான நண்பர்கள் இவர்கள். புதிய திசைகளை நோக்கி நம்மைச் செலுத்தும் சக்தி இவர்களிடம் உண்டு. மூத்தவர்களானாலும் இளையவர்களானாலும் ஒருவரிடமிருந்து நாம் எதைப் பெற விரும்புகிறோமோ, அதையே பெறுகிறோம். நாம் ஏந்தியிருக்கும் பாத்திரத்தின் அளவிலேயே நாம் பெறுவதும் இருக்கும். இதில் பூசலுக்கு எங்கே இடமிருக்கிறது? வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் வடிக்க எண்ணுகிறவனே படைப்பாளி. அப்படி எழுதப்படுவதே இலக்கியம். அன்பும் கனிவும் நிறைந்தவனால்மட்டுமே அந்த உயிர்த்துடிப்பை உணர முடியும். சோதனைச்சாலை முடிவுகள்
போல மற்றவர்கள் தன் அவதானிப்புகளை முன்வைக்கும்போது, படைப்பாளிமட்டுமே துடிப்பின் சாரத்தையும் உண்மையையும் நோக்கித் தன் கவனத்தைச் செலுத்துகிறான். என்னைப் பொறுத்தவரை, இவ்வகையிலான படைப்பாளியாக இயங்கவே விரும்புகிறேன். அன்புணர்ச்சியோ, கனிவுணர்ச்சியோ சிறிதும் இல்லாமல் இருக்கும்போதுதான் ஒவ்வொருவருக்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வேகமும் பூசலும் எழுகின்றன. அந்த இடத்தில் எனக்கு ஆர்வம் இல்லை.

o