08 ஜூலை 2009

நடைப்பயிற்சிக் குறிப்புகள்

குறிப்பு - 1

கையில் புகையும் சிகரட்டும்
கல்தூண் சிவாஜி தொந்தியோடும்
கடந்து போகும் முதியவர்
செய்திருப்பாரா பயிற்சியென்று
ஏதாவது என்ற நினைவோடு
எட்டி நடை போடுகையில்
ஒலித்தது என் கைபேசி.

நாளை முதல் கண்டிப்பாய்
நானும் வருவேன் என்று
நெடுநாளாய்
சொல்லிக் கொண்டிருக்கும்
நாற்பதைக் கடந்த நண்பன்
இம்முறை விளித்தது
எங்கே கிடைக்கும்
தஞ்சாவூர் பொன்னி அரிசி
என்ற
தகவல் அறிய.

0

குறிப்பு - 2

யார் யாரோ அழைத்தது
இரண்டொரு முறை.

நானே எடுத்துப் பார்த்தது
நான்கைந்து முறை.

பாக்கட்டில் இருக்கிறதா என்று
பிடித்துப் பார்த்தது பல முறை.

பக்கத்தில் ஒலித்த சத்தத்தில்
பிழையாய் எடுத்தது சிலமுறை.

நாளை நடைப் பயிற்சிக்காவது
வர வேண்டும் - இந்த
நச்சுப் பிடித்த கைபேசியின்றி.

o

குறிப்பு - 3

இன்றுவரை ஏதும்
பேசியதில்லை.
இதழ்விரித்து மெலிதாய்
நகைத்ததுமில்லை.
இயல்பிலேயே
இப்படித்தானா? - இல்லை
இயல்பில்லா ஒன்றைச்
செய்வதன் பொருட்டா?
எப்படிக் கேட்க என்
சக நடைப்பயணியிடம்?
ஆரோக்கியத்திற்கான
நடைப்பயிற்சியில் ஏன்
அத்தனை கர்ண
கொடூரமாய் முகம் .

o

குறிப்பு - 4

சக
நடைப்பயணியின்
தொலைந்த
சாவியொன்றைக்
கண்டெடுத்த
சந்தோசததோடு
நிறைவுற்றது
இன்றைய
நடைப்பயிற்சி.

0

குறிப்பு - 5

இன்றைய
நடைபயிற்சியில்
இசை கேட்டபடி
ஒருவன்
இணையோடு
இடைவிடாமல்
பேசியபடி ஒருவன்
தண்ணீர் பாட்டிலோடு
வேக வேகமாய் ஒரு
வெள்ளைக்காரன்
எல்லோரோடும்
ஆனந்த கூத்தாடியாய்
அவனாகவே பாடியபடி
அதி வேகத்தில்
போய்க்கொண்டிருந்தான்
ஒருவனும்.

o

குறிப்பு - 6

அரை இருட்டான
பகுதியில்
அமர்ந்திருந்த
இருவரின் நெருக்கத்தை
சுமந்தபடி
போய்க்கொண்டிருந்த
நடைப் பயிற்சியின்
அடுத்த சுற்று
முடிந்து திரும்புவதற்குள்
முத்தமிட்டும்
முடித்திருக்கலாம்
அவர்கள்.

0

6 கருத்துகள்:

  1. அனைத்துமே மிக எளிமையானதும், நன்றானதுமான கவிதைகள். உங்களின் வழக்கம்போல். அன்றாடங்களின் உலகங்களிலிருந்தே இப்படி நல்ல கவிதைகளை எழுதும் கலை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது.

    பதிலளிநீக்கு
  2. பூங்காவில் ஒரு நடை​நடந்து வந்தாற் போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. எங்கே கிடைக்கும்
    தஞ்சாவூர் பொன்னி அரிசி

    கொஞ்சம் புன்னகைத்தேன்.


    பூங்காவில் ஒரு நடை​நடந்து வந்தாற் போல் இருக்கிறது. உண்மை

    பதிலளிநீக்கு