23 ஆகஸ்ட் 2010

மொழிதலில் புதுமை - சுகுமாரன் முன்னுரை



இன்னபிறவும்” என்ற தொகுப்புக்கு எழுதத் திட்டமிட்டிருந்த முன்னுரை இதுவல்ல. நண்பர் செல்வராஜ் ஜெகதீசன் தனது இந்த இரண்டாவது தொகுப்புக்கு எழுதக் கேட்டிருந்தது, நவீனத் தமிழ்க் கவிதைகள் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பை. அதற்கான நீண்ட கால அவகாசத்தையும் அளித்திருந்தார். எனினும் அது சாத்தியமாகவில்லை. தொடர்ந்த இடப் பெயர்ச்சிகளும் அவற்றின் மூலம் உண்டான சிக்கல்களும் தடையாக அமைந்தன.

நவீனத் தமிழ்க் கவிதை ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டின் வரலாற்றை உரித்தாக்கிக் கொண்டிருக்கிறது. பாரதியின் வசன கவிதை முயற்சிகளே அதன் தொடக்கம். இறுக்கமான செய்யுள் நடையில் இயன்று கொண்டிருந்த கவிதையை மெல்ல மெல்லப் புதுமையும் எளிமையுமான வடிவத்தை நோக்கி நகர்த்த முயன்றார் பாரதி. காலத்தின் உணர்வு மாற்றத்தைப் புதிய மொழியில் விளங்கிக் கொள்ள யத்தனித்தார். இந்த எத்தனிப்புதான் சில ஆண்டுகளுக்குப் பின்னர் புதுக்கவிதை என்ற வடிவத்துக்கு ஆதாரமாக இருந்தது. புதுக்கவிதையின் முதல் உதாரணமான ந.பிச்சமூர்த்தியின் "காதல்" (1934) கவிதை இதன் முளை. இதைத் தொடர்ந்து எழுந்த புதிய முளைகள்தாம் நவீன கவிதையில் பெருநிலமாக இன்று விரிந்திருக்கின்றன. செல்வராஜ் ஜெகதீசன் இந்த வரலாற்றுத் தொடர்ச்சியின் ஓர் இழை. இந்த இழை வலுவானதா, மெல்லியதா என்பது அதன் அழகியல் பயன்பாட்டையொட்டித் தீர்மானிக்கப்படும் என்று தோன்றுகிறது.

பிச்சமூர்த்தி முதல் ஜெகதீசன் வரையிலான எழுபத்தைந்து ஆண்டுகளில் நவீன கவிதை வெவ்வேறு கோலங்கள் புனைந்திருக்கிறது. வெவ்வேறு கருத்தாங்கங்களின் வாகனமாகச் செயல்பட்டிருக்கிறது. வெவ்வேறு அணிகளில் பயின்றிருக்கிறது. வெவ்வேறு நிலக்காட்சிகளை முன்வைத்திருக்கிறது. காலத்தின் உடனிகழ்வாக வாழ்வின் கணங்களைப் பதிவு செய்ய முனைந்திருக்கிறது. இவ்வளவு மாற்றங்களுக்குப் பின்னர் இன்று கவிதை அதன் நவீனம் பழமையாகக் கூடிய நிலையையும் அடைந்திருக்கிறது.
ஓர் இலக்கிய வடிவத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த வளர்ச்சியையும் சிதைவையும் சுட்டிக்காட்டுவதாக அமையும் ஒரு வரலாற்றை எழுதும் திராணி எனக்கில்லை என்று கருதுகிறேன். நவீனக் கவிதை மீதான என்னுடைய பார்வை ஒரு கவிதை பயிற்சியாளனின் பார்வை. வரலாற்றிலிருந்து விடுபட்டவை மீதுதான் ஒரு கவிஞனின் அக்கறை குவியும். அதன் இருப்புகளைப் பற்றியது விமர்சகனின் பார்வை. நவீன கவிதையின் துரதிருஷ்டம், அப்படியான விமர்சனங்கள் உருவாகவே இல்லை. இனி உருவாகலாம் என்பது ஒரு நம்பிக்கை; ஒரு கனவு.

இதுவரை எழுதப்பட்டு வந்த புதுக் கவிதைகளிலிருந்து இன்று எழுதப்படும் நவீனக் கவிதைகள் மாறுபடுகின்றன. உரைநடையின் அதிக பட்ச சாத்தியங்களை அவை கொண்டிருக்கின்றன. உரைநடை எங்கே கவிதைக்கான திறப்பைக் கண்டடைகிறது என்பது பற்றிய எச்சரிக்கையைப் பெரும்பாலான கவிதைகள் நழுவ விடுகின்றன. இன்றைய கவிதை படிமங்களை இயல்பாகத் துறக்க விரும்புகிறது. புதுக்கவிதை படிமங்கள் வாயிலாக காலத்துடன் நடத்திய பரிமாற்றத்தை நவீன கவிதை தானே படிமமாகி நிகழ்த்திக் கொள்ள முனைகிறது. விரிவான பொருளில் எல்லாக் காலத்திலும் கவிதை படிமமாக்கலையே முதன்மையாகச் செய்து வருகிறது. கவிதை நிகழ்வைப் படிமமாக்குகிறது. புனைகதை நிகழ்வை வரலாறாக்குகிறது. நவீன கவிதை இந்த நுட்பமான வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றே பெரும்பான்மைக் கவிதைகளை வாசிக்கும்போது தோன்றுகிறது. அதனாலேயே கவிதையாகத் திறக்காத கூற்றுகள் கவிதையாகத் தென்படுகின்றன.

ஜெகதீசனின் இரண்டு கவிதைகளை – “கொஞ்சமும், என்றாலும்” - முன்வைத்து இதை விளங்கச் செய்யலாம். கொஞ்சமும் கவிதையில் ஒரு கவிதைப் புத்தகத்தை புத்தகக் கடைக்காரர் தேநீர் தம்பளருக்கு ஸ்டாண்டாகப் பயன்படுத்துவதிலுள்ள முரண் பேசப்படுகிறது. இது கவிஞனின் கண்ணோட்டத்தில் ஆற்றாமையை ஏற்படுத்துகிறது. ஆனால்,கவிஞனல்லாத ஒருவருக்கு இது எந்தப் பிரத்தியேக உணர்வையும் தருவதில்லை. படைப்பின் அடிப்படை இயல்பான தன்னைப் பிறனாக்குவது, பிறனைத் தன்னாக்குவதுமான பார்வை, இந்த வரிகளில் திரள்வதில்லை. அதே சமயம் ''என்றாலும்'' கவிதையில் இந்தப் பார்வை வெளிப்படுகிறது. வாசிக்கப் புத்தகங்கள், நீண்ட பொழுது, கவிதைக்குத் தூண்டும் காட்சிகள் எல்லாமிருந்தும் விமானப் பயணம் இனிமையானதாக இல்லை. காரணம் மரண பயம். கவிஞருக்கு உண்டாகும் இந்த உணர்வு எல்லாருக்குமானது. இந்தத் திறப்பைத் தொடும்போது கூற்று கவிதையாகிறது.

கவிதை, அது என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் சில இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இயல்புகள் என்பதை விடத் தேவைகள் என்பது பொருத்தமானது. வடிவத்தில் செறிவு, மொழிதலில் புதுமை, வாழ்வு சார்ந்த பார்வை - இவை மூன்றையும் கவிதை பிடிவாதமாகக் கோருகிறது. ஜெகதீசனிடம் வடிவம் பற்றிய பிரக்ஜை இருக்கிறது. சமயங்களில் அது அவர் அண்மையில் வாசித்த கவிதையின் சாயலில் வெளிப்பட்டு விடுகிறது. ''இன்ன பிறவும்'' ''எதைச் சொல்வீர்கள்" கவிதைகளை விக்ரமாதித்யனை வாசித்த சூட்டில் யோசித்திருக்கலாம். மொழிதலில் இயல்பான புதுமையை ஜெகதீசன் கையாள்கிறார். 'பூனைகள்' கவிதை ஓர் உதாரணம். இரு தொகுப்புகளிலுமாக ஜெகதீசன் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். எனினும் அவரது பார்வை என்னவென்பது பிடிபடாத ரகசியம். தன்னை சூழ உள்ள நிகழ்வின் கணங்களை அப்படியே வாசகனிடம் பகிர்ந்து கொள்ளுகிறார். இதுமட்டும் போதுமானதா என்பதை அவர்தான் தீர்மானிக்கவும் முடியும்.

இவற்றையெல்லாம் சொல்லும்போதே ஜெகதீசனிடம் நவீனக் கவிதைக்குரிய கூறுகளையும் காண்கிறேன். பெரும்பாலும் படிமங்களை துறந்த ஒரு திறந்த மொழி, காட்சிகளை சொல்லுக்குள் மாற்றும் விதம், அனுபவங்களைச் சார்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபடும் முனைப்பு, எண்ணிக்கைப் பெருக்கம் இவையெல்லாம் அவரைப் பொருட்படுத்திப் பேசத் தூண்டுபவை. இன்றைய அவரது கவிதைகளை பின்னுக்குத் தள்ளும் கவிதைகள் அவரிடம் இருக்கின்றன என்று நம்பச் செய்பவை. அதற்கான ஒருமுகப்பட்ட கவிதைமனம் அவரிடம் இருக்கிறது. இல்லையா ஜெகதீசன்?

o

5 கருத்துகள்:

  1. /பிச்சமூர்த்தி முதல் ஜெகதீசன் வரை/
    இது நல்லாயிருக்கே. சுகுமாரனின் எழுத்து பயனுள்ள வலையில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. உங்களின் இரண்டு புத்தங்களில் வந்த முன்னுரையும் மிக முக்கியமான கவிஞர்களின், முக்கியமான எழுத்தாக
    (முன்னுரையாக) நான் கருதுகிறேன். காரணம், உங்களின் கவிதை மட்டுமில்லாமல் பொதுவான ஒரு பார்வையாகவும் அதே சமயத்தில் ஆழமான அனுபவ பார்வையாகவும் அதை கருதுகிறேன். பகிர்வுக்கு நன்றி கவிஞரே

    பதிலளிநீக்கு