கையில இருக்கிற கல்யாண அழைப்பிதழ பாக்கறச்ச, கண்ல ஜலம் முட்டிண்டு வர்றது. இப்பதான் ஜானு மாமி, தன் பொண்ணுக்கு கல்யாணம் கட்டாயம் வந்துடுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறா. அதைப் பார்த்ததும் ஏனோ எனக்கு அழுகை வந்துடுத்து. பசங்கல்லாம் ஒரு மாதிரிப் பார்க்கறதப் பார்த்துட்டு, கண்ணைத் தொடைச்சுட்டு பாடத்தை ஆரம்பிக்கிறேன்.
இந்த டீச்சர் உத்தியோகத்தை ஏத்துண்டு, இன்னியோட பதினஞ்சு வருசமாறது. அதே பாடத்தைத் திருப்பி திருப்பி சொல்லித் தரதுல ஆரம்பத்துல கொஞ்சம் வெறுப்பா கூடத் தோணித்து. பின் நானே ஒரு மாதிரி சமாளிச்சுண்டேன். சுறுசுறுப்பான பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறச்ச சந்தோசமா இருக்கும். ஏழாம் வகுப்புதான். இருந்தாலும் இந்த பசங்களுக்கு இண்டரஸ்ட் ஜாஸ்தி போலருக்கு. ஏதாவது சந்தேகம் கேட்டுண்டே இருப்பா. நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சுண்டு வர்றேன்.
ஸ்கூல் பெல் அடிக்கறது. நான் என் தோல் பைய எடுத்துண்டு கிளம்பறேன். ஒரு கிலோமீட்டர் நடந்தாதான் வீடு போய்ச் சேர முடியும். வேலைல சேர்ந்த புதுசில நடக்கறது கஷ்டமா தோணித்து. போகப்போக பழகிடுத்து. எதிரே ஒரு ஜோடி உரசிண்டே, சந்தோசமா பேசி சிரிச்சிண்டே போறா. எதிரே இருக்கிறவாள்ளாம் என்ன நினைப்பான்னு ஒரு நினைப்பே இல்லாம, எப்படித்தான் இவாளால இப்படி இருக்க முடியுதோ? ஒருவேளை கல்யாணம் ஆயிருந்தா நானும் இப்படித்தான் நடந்துண்டு இருப்போனோ?. அதெல்லாம் இனிமே எங்கே நடக்கப் போறது? பின்னே இந்த முப்பத்தெட்டு வயசுலே யாராவது கட்டிக்குவாளா என்ன? முப்பத்தெட்டு எல்லாம் ஒரு வயசே இல்லேங்கறேளா? அப்படீனா ஏன் வரவாள்ளாம் ஏதாவது சொல்லி நிராகரிச்சுண்டு இருக்கா?. ஒருவேளை நான் அழகாப் படலையோ அவாளுக்கு?
நான் அழகா இல்லைனா, ஏன் அந்த டீக்கடைக்காரர் அப்படி முறைச்சுப் பாக்கறார்?. ஒருவேளை அவருக்கு மாத்திரம் நான் அழகாப் படற னோ என்னெவோ?. வரவர இந்த பெண் பார்க்க வரவாள்ளாம் வேற வேலையே இல்லாம, இதே ஒரு வேலையா வச்சுண்டு இருப்பளோன்னு தோணுது. சந்தைல மாட்டைப் பாக்கறா மாதிரி பாத்துண்டு, சொஜ்ஜி பஜ்ஜில்லாம் திண்ணுண்டு, என்ன ஜென்மம் இவாள்ளாம்? இன்னக்கி கூட அக்கா யாரோ பெண் பார்க்க வர்றதா சொல்லி சீக்கிரம் வரச் சொல்லி இருக்கா. அஞ்சு மணிக்கு வர்றாளாம். வாட்ச்சை பார்க்கிறேன். மணி நாலரை. போய்ச் சேர்ந்திடலாம். இனிமே கல்யாணம்லாம் நடக்குமான்னு எனக்குள்ளே கேட்டுண்டாலும் மனசுல ஒரு மூலைல சின்னதா ஒரு நம்பிக்கை எட்டிப் பார்க்கத்தான் செய்யுது. இந்த வரனாச்சும் கனிஞ்சுதுன்னா அப்புறம் நானும் எல்லார் மாதிரி "அவரோட" இடிச்சுண்டே சினிமா போலாம். "அவர்" ஆபீஸ் போறச்சே, வாசல்ல நின்னு டாட்டா காட்டலாம். அவர் ஆபீஸ் விட்டு வரச்சே, சிரிச்ச முகத்தோட வரவேற்கலாம். ஹும்... நடக்குமா இதெல்லாம்? பார்க்கலாம்.
யோசிச்சிண்டே வந்ததுல வீடு வந்துடுத்து. வாசல்ல அக்கா பொண்ணு உஷா என்னைப் பார்த்து சிரிக்கிறா. ஆச்சு. இவளுக்கும் வயசு பதினெட்டு நடந்திண்டிருக்கு. இன்னும் மூணு நாலு வருசத்துல இவளும் என்னை மாதிரியே சிங்காரிச்சுண்டு, வர்றவா எதிர்ல நிக்கணும். ஆனா கடவுளே, இவளுக்கு என்னை மாதிரி நடக்கக்கூடாது. வயசுப் பொண்ணு வீட்ல இருக்கறப்போ, நான் இந்த மாதிரி பெண் பார்க்கற படலத்துல இருக்கறது, எனக்கே கஷ்டமாத்தான் தோன்றது. சில சமயம் விஷத்தைக் குடிச்சுட்டு செத்துரலாம்னு கூடத் தோணும். சே. அப்படி என்ன கோழைத்தனம்னு என்னை நானே சமாதானம் பண்ணிப்பேன். வாழ்க்கைனா கல்யாணம் ஒண்ணுதானா? வேற எதுவுமே இல்லையா? சின்ன குழந்தையோட சிரிப்பில்லையா? இயற்கைல இருக்கற அழகெல்லாம் ரசிக்கிறதுலேயே நம்ம வாழ்க்கைய கழிக்க முடியாதா? அப்படின்னு தோணும். ஆனா, அக்கம்பக்கத்தில இருக்கிறவா எல்லாம் நான் தெருவில நடந்து போறச்ச, ஒரு மாதிரியா பாக்கறச்ச, ஏன் என் காதுபடவே 'இவ பாவம்னு' பேசறச்ச மனசு உடைஞ்சிதான் போறது. இன்னக்கி வர்றவாளோட முடிவு சாதகமா இல்லன்னா இனிமே இந்தமாதிரி எதுவும் வேண்டாம்னு அக்காக்கிட்ட சொல்லிடணும். யோசிச்சுண்டே இருந்ததுலே நேரம் போனதே தெரியல. அவசர அவசரமா சிங்காரிச்சிக்கிறேன்.
ஆறு மணி போல அவாள்ளாம் வந்தா. நான் காபி எடுத்துண்டு போனேன். எல்லாம் முடிஞ்சு வழக்கம் போல 'போய் லெட்டர் போடறோம்னு' சொல்லிட்டு போனா. எனக்கு இதுவும் பழைய லிஸ்டுல சேர்ந்துடுமோனு ஏனோ தோணித்து. அப்படி எல்லாம் ஆகக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிண்டேன்.
இப்பெல்லாம் நான் ஸ்கூலுக்கு நடந்து போறச்ச, அக்கம் பக்கம் இருக்கறவா ஒரு மாதிரி பேசறது புரியறது. நான் யார் கூடவோ தொடர்பு வச்சுண்டிருக்கேனாம். அதான் எல்லா வரணும் தட்டிண்டே போறதாம். ஏன்தான் இவாள்ளாம் இப்படிப் பேசறாளோ, இந்த சமூகத்தில கல்யாணம் ஆகாதவா எல்லாரும் இப்படிப்பட்ட பேச்சுகளை எதிர்கொண்டுதான் ஆகணுமோ?
நான் இந்த புது ஆத்துக்கு குடி வந்து ரெண்டு மாசமாறது. அக்காகிட்ட கோவிச்சுண்டு எல்லாம் நான் தனியா வந்துடல. கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கிற வீட்ல கல்யாணமாகாத முதிர்கன்னியா நானுமிருந்தா என்னாகும்னு நினைச்சுப் பார்த்தேன். அப்புறம் என்னால உஷாவோட கல்யாணம் தள்ளிப்போச்சுன்னா, கடவுளே, வேண்டாமே. ஊராரெல்லாம் இப்படிப் பேச ஆரம்பிச்சது தெரிஞ்சதும்தான் நான் இப்படி முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல அக்கா அதிகமா கோவிச்சிண்டா. அப்புறம் எல்லாம் சரியாயிடுத்து. நான் சரியாக்கிட்டேன். நம்மால மத்தவாளுக்கு கெடுதி வரதுன்னா, அவாகிட்ட இருந்து தூர விலகி போறதுதானே நியாயம்…?
இப்பல்லாம் ஸ்கூல் முடிஞ்சதும், சாயந்திர நேரத்துல வயசான படிக்காதவாளுக்கு எல்லாம், நான் எழுதப் படிக்கச் சொல்லித் தரேன். நடுநடுவே, இந்த சுந்தர் பையன் வந்து குறுக்கிடுவான். ஆனா அதுவும் சந்தோசமாத்தான் இருக்கும். அட, சுந்தர் யாருன்னு சொல்லலியோ? சுந்தருக்கு ஒண்ணரை வயசாறது. குழந்தைகள் ஆசிரம் ஒண்ணுலேந்து தத்து எடுத்துண்டேன். சுந்தர் படு சுட்டி தெரியுமோ? சிரிக்கறச்ச கன்னத்துல விழற குழிய பார்த்துண்டே இருக்கலாம். இப்பல்லாம் ஸ்கூல் விட்டு நடந்து வர்றச்ச, எதிரே எந்த கல்யாண ஜோடி வந்தாலும் மனசு சஞ்சலப்படறதே இல்ல. ஏன்னா, இப்ப நான் ஒரு குழந்தையோட தாய் இல்லையா?
o
(வல்லினம்,மலேசியா - ஜூன் இணைய இதழில் வெளியானது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக