23 ஜூன் 2013

ரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள்


[செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’நூலை முன்வைத்து]

- ப.தியாகு



இன்னும் சற்று மேம்பட்டதாக
இன்னும் சிறிது சுரத்துள்ளதாக
இன்னும் கொஞ்சம் உவப்பானதாக
இன்னும் எப்படியெல்லாமோ
இருந்திருக்கலாம் என்கிறீர்கள்

இந்த ஒரு சிறு வாழ்வில்
இந்தளவாவது இயன்றதே என்கிறேன்

இதையும் எப்படியாவது புரிந்துகொள்ளுங்கள்
ஏனைய பிற யாவற்றையும் போல.

செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளில் ஒன்று ’இதையும்’ என்னும் தலைப்பின்கீழ் வரும் இக்கவிதை. தொகுப்பின் இரண்டாவது கவிதையான இக்கவிதையை வாசிப்பில் கடந்து சென்று, கடைசி கவிதையையும் வாசித்து முடித்து, அடுத்து நாம் அவர்முன் வைக்கவிருக்கும் தொகுப்பின் மீதான விமர்சனங்களுக்கான அவரின் மொத்த பதிலாக முன்கூட்டியே அமைந்துவிடுவதில் தனிச்சிறப்பு பெறும் கவிதை இது.

சரிதான், இனி பேச ஒன்றுமில்லை என்று அமைதி காத்திடவும், ரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள் விட்டு விடுவதில்லை.


நிச்சலன முகமோடு
நின்று அசைபோடும்
யாதொரு மந்தையை விட்டும்
எளிதில் பிரிந்து செல்லாத
கட்டி இழுத்து வரும்போதும்
கம்பீரமாய் நடந்துவரும்
ஏனிந்த கழுத்தறுப்பு என்று
எதிர்கேள்வி கேட்காத
கிடை ஆடுகள்
அத்தனை
ருசியானவையும் கூட.


இக்கவிதையின் கடைசி வரி தரும் அதிர்ச்சியிலிருந்து மீளவும் சிறிது நேரமாகிறது. முந்தைய வரிகளில் இழையோடும் கிடை ஆடுகள் மீதான ஜீவகாருண்யம், பரிவு, கருணை எல்லாவற்றையும் ’அத்தனை ருசியானவையும் கூட’ என்னும் கடைசி வரி கலைத்துப்போடுகிறது. முந்தைய வரிகள்வரை அன்பு, வாஞ்சையின் பாற்பட்டிருந்தவரை ஓரிரு கணம் தடுமாறச்செய்கிறது.

அடுத்து ’ரயில் கவிதைக’ளில் முக்கியமானதும் முகத்திலறைவதுமான கவிதை ஒன்று,


வழித்து உட்கார ஏலாமல்
வழியில் நின்ற ரயிலை
வசைபாடியபடி நின்றுகொண்டிருக்கிறாள்
வயக்காட்டு ஓரம்


இன்னும் அடிப்படை வசதிகள் காணாத புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களின், கிராமப்புற வாசிகளின், குறிப்பாக பெண்களின் பயன்பாட்டிலிருக்கும் மலங்கழிக்கும் காடுகளை, குறுக்கிடும் பாதையில் ரயில் எதிர்பாராதவிதமாக நின்றுவிடுகையில் ஒரு பெண் அடையும் குற்றவுணர்ச்சியை, சங்கடத்தை துல்லியமான காட்சியாக்கித் தரும் சிறந்த கவிதை. இதுமட்டுமின்றி அவர்களின் இந்த பரிதாப நிலை, வரும் போகும் நேரங்களை கருத்தில் கொண்டு தாம் மலங்கழிக்கும் நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளும் அவர்களின் அவஸ்தை என்று பலவாறாக சிந்தனையில் ஆழ்த்துகிறது இக்கவிதை.


ஆண்களேதுமின்றி
அழகிய பெண்ணொருத்தியோடு
ஆறேழு மாடி வரை
பயணிக்க நேர்ந்திருக்கிறது

இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த
இரண்டு பெண்களுக்கிடையிலும்
இருக்க நேர்ந்திருக்கிறது
எத்தனையோ முறை

முழுக்கவும் பெண்கள் சூழ
மேற்கொண்ட பயணங்களுமுண்டு

ஆகக்கூடி வாய்த்த
அத்தனை லிப்ட் பயணங்களிலும்
அடியேன் கண்டெடுத்தது
நண்பர்களே

இயல்பாய் இருப்பதில்
இருக்கும் அத்தனை
சிரமங்களையும்.

ஆண், பெண் எனக் கலந்து அன்னியர்களோடு லிஃப்ட்-ல் மேற்கொள்ளும், ஒரு நிமிடமே காணும், மூன்று மாடிகள் வரையிலான பயணமே சிலபேரான நம்மை நெளியவிடும், வெட்கம் போலவொன்று பிடுங்கித்தின்னும். தன்னைத்தவிர வேறு ஆண்களின்றி பெண்ணோடு / பெண்களோடு அதுவும் ஆறேழு மாடிகள் வரை பிரயாணம் பண்ணுவதின் சிரமத்தை சொல்லும் இக்கவிதை, நம்மில் பலரின் / சிலரின் அனுபவத்தொடு பொருந்தி ரொம்பவும் ரசிக்கவைக்கிறது.

மேலும் சொல்லத்தகுந்த கவிதைகள் பல இருக்கின்றன தொகுப்பில், பின்னும், சமரசம் செய்துகொள்ளமுடியாத சில கவிதைகளை மட்டும் ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் வைக்கவே விரும்புகிறேன்.



ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதைகள்)
செல்வராஜ் ஜெகதீசன்



விலை : ரூ.50

வெளியீடு:
அகநாழிகை பதிப்பகம்
தொடர்பு எண்: 9994541010



நன்றி : Thiyagu Panneer

09 ஜனவரி 2013

அனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்" - மதிப்புரை

அனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா
("நான்காவது சிங்கம்" கவிதைத் தொகுதி - மதிப்புரை)
காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது
(நன்றி: அம்சப்ரியா)




03 அக்டோபர் 2012

நான்காவது சிங்கம் ஒரு பார்வை - வித்யாஷங்கர்


(நன்றி: திரு. வித்யாஷங்கர்)




மொழியின் உச்சம் கவிதை

தமிழில் கவிஞன், கவிதை என்பதே கேலிக்குரியதாக இருப்பதற்கு காரணம் திராவிட,
இடதுசாரி இயக்கங்கள்.

மொழியின் பரிசோதனை கூடமாகவும், ஆன்மாவாகவும்
இருப்பது கவிதை!

காதலை பொய் என்றாயே
கவிதையை கள்ளச் சொல் என்றாயே
அன்று பிரியும் வேளையில்
உண் கண்கள் கலங்கியதென்ன
காதல் அல்லாமல்
வார்த்தையின் வனப்புதான்
என்ன கவிதையல்லாமல்

என்ற கு.பா.ராவின் கவிதைகளிலிருந்து எளிய நேரடித் தண்மை கைவரப்பெற்று எனது அனுபவங்களை
கவிதை என்று எழுதி வருகிறேன்.

தினமும் எழுத வேண்டிய நிர்பந்தத்தில் வாழும் எனக்கு கவிதை எழுதுவது - ஆசுவாசுமானதளம்.

எந்த கட்டுப்பாடோ ஒழுங்கோ அற்று எனது உள்தெறிப்பை, கவிதையாக எழுதுகிறேன். அதை பத்திரிகைகளுக்கு
அனுப்புவதோ, புத்தகமாக வெளியிடுவதோ கூட எனக்கு ஆர்வமற்றது. விக்ரமாதித்யன் கேட்டுக் கொண்டதற்காக
எழுதியது, அவருக்கு அனுப்பியது என்பதுதான் எனது வெளியீட்டுத்தளம். யுகபாரதி பலமுறை போனில்
கேட்டு வெளியானதும் உண்டு. சமீபகாலமாக அம்ரா பாண்டியன் அதை செய்கிறார். பேஸ்புக் வந்த பின்
அவ்வப்போது நானே அதில் எழுதிவிடுகிறேன்.

கவிதை எழுதுவது என்பது எனக்கான தனித்த மது அருந்தும் அறை.
அதில் உலகமில்லை; அப்போது நான் உலகில் இல்லை.

சமீபத்தில் எழுதி வரும் உவப்பான கவிஞர்களுள் ஒருவராக செல்வராஜ் ஜெகதீசன் படுகிறார்.

அவரது நான்காவது சிங்கம் அவரை இன்னும் நெருக்கமாக்கியிருக்கிறது.

சுற்றியிருந்த எல்லாமும் ஸ்தம்பித்துப்போன
அந்தக் கணத்தைச் சொற்களில்
எப்படிச் சொல்லி விட முடியும்?

அங்காடியொன்றில் காணாமல் போன தினம்
அவனது இருப்பை அறிவித்ததும் அந்த பாய் தான்.

உண்மையில் இருந்ததா
உனக்கு
அசலாய் ஒரு முகம்
அன்றைக்கு

தேவிகா சுப்ரமணியம் கவிதை, ஏற்புடையதாய், எல்லாமே இப்படி, சுப்ரமணியின் கேள்விகள்,
எதிர் விளையாட்டு, ஆசைமுகம், உயிரோசை, சிலருக்காவது, கவிசாம்ராட்,

இப்படி பல தலைப்பு கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.

பெற்றோரைப் பேணாத
பிள்ளையென்ன பிள்ளை?
பேரீரைச்சல் இல்லாத
அருவியென்ன அருவி?
பேரின்பம் காணாத
பிறவியென்ன பிறவி?
சிற்றின்பம் துறக்காத
துறவியென்ன துறவி?
மனைவியர் நோகப் பண்ணும்
கணவனென்ன கணவன்?
மனதில் கல்மிஷம் கொண்டவையும்
பிறப்பென்ன பிறப்பு?
விமர்சனங்களைத் தாங்காத
கலைஞன் என்ன கலைஞன்?

பழைய வடிவுக்குள் அடக்கி விடக்கூடியதாயினும் இதுவே உங்களது வெளிப்பாடான
பூரண கவிதையாக எனக்குப்படுகிறது.

குழந்தையை பிரிந்து தொலைதூரத்தில் வாழும் தந்தையின் பதற்றமாக, பல கவிதைகளில்
பையன்களை பதிவு செய்திருப்பது தங்களது பாசத்தின் ஆழத்தை காட்டுகிறது.

நீங்கள் கண்டடைந்து வீட்டீர்கள்;

தொடர்ந்து எழுதுங்கள்;

சோர்வுறாதீர்கள்.

அவை இன்னும் கூர்மையுறும் போது, கவிதை உங்களை வந்தடையும்

உங்கள்
வித்யாஷங்கர்.

15 ஆகஸ்ட் 2012

திரு. செல்வராஜ் ஜெகதீசன் கவிதை நூலுக்கான முன்னுரை - கலாப்ரியா

(நன்றி : திரு கலாப்ரியா)

நான்காவது சிங்கம்....

கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதென்பதில் விக்ரமாதித்ய நம்பிதான் என்னை ஈடுபடுத்தினார் என்று சொல்ல வேண்டும்.கவிதைகள் பற்றி”நல்லா இருக்கு, நல்லா இல்லை” என்று ஒற்றை வரி அபிப்ராயமே சொல்லி வந்த என்னை,மேட்டுப்பாளையம் ‘நிஷா ’ எழுதிய “முகங்கள் கவனம்”என்ற தொகுப்பிற்கு முன்னுரை எழுதுமாறு என்னிடம் சொன்னார்.நான் முயற்சிப்பதாய்ச் சொன்னேன்.கவிதைகளைப் படித்த போது அவை நன்றாகவே இருந்தன.நிஷா நல்ல வாசகர்.நிறைய நூலகளை வாசிப்பார். நாங்கள் இருவரும் நிறைய புத்தகங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

முன்னுரை எழுதுவதில், பெரும்பாலானவர்களைப் போல்ப் பெரிதும் நல்ல விதமாகவும், சிறு சிறு குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மறு பரிசீலனை செய்யலாம், அல்லது தவிர்த்திருக்கலாம் என்று சொல்லும் வழக்கமான முறையையே தேர்ந்தெடுத்தேன். தமிழின் சில முக்கியமான ஆளுமைகள் எழுதியுள்ள முன்னுரைகளில், பிரஸ்தாபக் கவிஞரின் காலத்திய மூன்று பேருடன்.... சம்பந்தப்பட்ட கவிதைகளையும் ஒரு ஒப்பு நோக்கில் பார்த்து இவரை விட இவர் கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று எழுதியிருக்கிறார்கள்.அத்தோடு அந்தக்காலத்திய கவிதைகளைப் பற்றியும் எழுத அதை ஒரு களமாகப் பயன் படுத்தியிருக்கிறார்கள். இதன் சாதக பாதகங்கள் பற்றி நான் சொல்லப் போவதில்லை.எனக்கு அது உவப்பானதாக இருந்ததில்லை.

மரபுக் கவிதைகளைப் பொறுத்து அவற்றின் யாப்பமைதியை அதன் ஒரு கூறாக எடுத்துக் கொண்டு அதை வைத்தே அதனைப் பற்றிய கருத்துக்களைக் கூற முடியும். நவீன கவிதைகளைப் பொறுத்து அந்தச் சாத்தியமும் கிடையாது.இதன் பன்முகத்தன்மையோடு கூடிய உள்ளடக்கம் வாசிப்பவனுக்கு ஒரு பெரிய சவாலை முன் வைக்கின்றன. மன்னர்கள் காலத்தில், ஒரு தனி மனிதனின் வாழ்வு என்பதும் மன்னனின் வாழ்வாகவே இருந்தது’ காமத்துப்பாலில் ஒரு குறள் வருகிறது. “வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து மாலை அயர்கம் விருந்து.” “ராசா சீக்கிரமாச் செயிக்கட்டும், நீயும் சீக்கிரமா வா, நாம சந்தோஷமா வீட்டில ‘கூடு’வோம்....’என்று ‘தலைவி’ கூறுகிறாள். இன்றையக் கால மனிதனின் வாழ்வும் அரசியலும் பொது, சமூக நிகழ்வுகளிலிருந்து மிகவும் தனித்து இருக்கிறது. ஆனாலும் அதன் ‘அரசை’ விட்டு அவனால் வெகுவாகவும் விலகி நிற்க முடியவில்லை.முடியாது.

இன்றைய நவீன (இந்திய) மனிதனுக்கு, உலகின் எந்த மூலையில் நடக்கும் எந்த நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாக்வோ தங்கள் பாதிப்பைச் செலுத்துகின்றன. சத்யஜித்ரேயின் “ஆஷானி சங்கேத்” (தூரத்து இடி) சொல்லும் சங்கேதமும் இதுதான். எங்கேயோ நடக்கும் போர் ஒரு வங்காளக் கிராமத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது.என்பதுதான் அதன் கதை. இன்றைய மனிதனை உலக அரசியலோடு, பொருளாதாரச்சிக்கலோடு அவனறியறியாத ஒரு சங்கிலிக்கட்டு பிணைத்தே இருக்கிறது. ஆனாலும் அவனளவில் அவன் ஒரு சின்ன ‘இருப்பு’க்குள்ளேயே இருக்கிறான்.அதனாலேயே அவனது கவிதை மொழி சிக்கலானதாகவும் மையமற்றும் இருக்கிறது.

செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் சிக்கலானதாக இல்லை. ஆனால் நவீன மனிதனுக்குள்ள எல்லாச் சிக்கல்களும் அதில்வெளிப்படுகின்றன.

“எல்லாமே இப்படி”

தவறுதலாய் நான் அழுத்திய
தளத்தின் எண் தனக்கானது என்று
புன்சிரிப்போடு ஒருவருடன்
போக நேர்ந்த
லிஃப்ட் பயணம் போல
தானாய் இப்படி எல்லாமே
தவறுகளின்றி நேருமானால்........

சந்தோஷமாக இருக்குமா, கஷ்டமாக இருக்குமா,என்ன விதமாக இருக்கும் என்று தான் சொல்லாமல் அதை வாசகனின் அபிப்ராயத்திற்கு விட்டு விடுகிறார்.கவிதை அங்கேதான் சிறக்கிறது. (இதில் என்ன இருக்கிறது ? என்று கேட்பாரும் இருக்கக் கூடும்) ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், லிஃப்ட்டில், ஆண்கள் எங்கள் ஐவருடன், ஒரு பெண்ணும் இருந்தார்.நான்கு பேரிடமிருந்து ஆல்கஹால் வாடை நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது.அவர்கள் நான்கு பேரும் மறுபடி பாருக்கு மேல் மாடிக்குப் போகிறார்கள்.நான் மூன்றாவது மாடியில், அந்தப் பெண்ண்ணுடன் வெளிப்போந்தேன். அவள் நான்காவது தளத்திற்குப் போக வேண்டும் போலிருக்கிறது.வாசனை பொறுக்காமல்தான் இறங்கி விட்டீர்களா என்றேன். “ இல்லையே என் கணவரும் அதில்தானே போகிறார், எல்லோரும் அவரது நண்பர்கள்தான்” என்றார். எனக்கு இந்தக் கவிதை அந்த அனுபவத்தை நினைவுபடுத்தியது.

என்ன சொல்ல

இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த
இடுங்கிச்சிரிக்கும் அந்தக் கண்களை
இனம் மொழி தேசம் கடந்து
இன்னொரு இடத்தில் காணச் செய்யும்
இந்த இயற்கையை என்ன சொல்ல?

எனக்கு இந்தக் கவிதையில் வரும் ’அந்தக்கண்கள்’ யாருடையவை என்று கூறாதது சிறப்பாகப் படுகிறது. அது ஆணாகவும் இருக்கலாமில்லையா என்று எண்ணும் போது கவிதையின் ஆழம் எனக்கு வேறு படுகிறது. பொதுவாகவே, கவிதையைத் தானே வாசித்து அனுபவிப்பது என்பது வேறு’. ஒருவர் விளக்கி அனுபவிப்பது என்பது வேறு.அதனால் ஜெகதீசனின் கவிதைகளை நான் வாசிக்கும் போது அவை எனக்கு ஒருபேரனுபவத்தைத் தந்தது’

கோலாகலம்

சுற்றி விடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்த்து
ஒவ்வோர் முறையும்
ஒரோர் மாதிரி

குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.

இது,தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று.ஒரு தட்டு சுழன்று விழும் நிகழ் தகவு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் கோலாகலத்தின் ஜாடை எப்போதும் எங்கேயும் யாரிடமும் ஒன்றுதான்.மாறாக துயரின் ஜாடைகள் வெவ்வேறு விதமாக இருக்கும். “இன்னொரு சந்தர்ப்பம்“ என்றொரு கவிதை எத்தனை முறை நமக்கு வாழ்வதற்குச் சந்தர்ப்பம் தந்தாலும் நாம் அதை முற்றிலும் சரியாக வாழ்ந்து விட முடியாது. அல்லது ஒன்றில் தவறவிட்ட கொண்டாட்டங்களை இன்னொன்றில் கொண்டாடியோ, அபத்தங்களை திருத்தியோ வாழ்ந்து விடமுடியாது. இப்படி நிறைய யோசிக்க வைக்கிற கவிதை இது.


“பால்க் கிண்ணத்தின்
விளிம்பில்
ஓர் எறும்பு
பால் குடிக்குமோ
உயிர் முடிக்குமோ”

இது நாற்பது வருடமாக என் நோட்டைக் காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஒரு கவிதை. இதை வாசித்தது வண்ணதாசனும் கணபதியண்ணனும் மட்டுமாகத்தான் இருக்க முடியும். ‘பால் குடிக்குமோ’ என்கிற வரிக்குப் பதில் ‘பசி முடிக்குமோ’ என்று எழுதவே எனக்குச் சம்மதம். அப்படி எழுதினால் உயிர் முடிக்குமோ, வுடன் அது ஒத்துப் போக மறுக்கிறது. அல்லது பால்க்கிண்ணத்தில் வருகிற ’பால்’ முட்டுகிறது. கூறியது கூறல் என்பதல்ல தடங்கல். வேண்டுமானால் அது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கலாம்.”தளை தட்டுதல்’’ போல ஏதோ தட்டுகிறது. பசி வெறுக்குமோ உயிர் துறக்குமோ…”என்றும் எழுதிப் பார்த்தேன்.அது எறும்பின் பாஷையாயில்லை. மொத்தத்திலும் இதில் கவிதாம்சம் குறைவு என்று பால குமாரனோ யாரோ சொன்ன நினைவு.. அதனாலும் பிரசுரிக்க மனமில்லை.

இதே போல் ’குரலகள்’என்றொரு கவிதை- நாடக மேடையில், பார்வையாளருக்குத் தெரியாமல் ஓரமாக ஒளிந்திருந்து வசனத்தை மறக்கிற பாத்திரங்களுக்கு அதை ‘எடுத்துக் கொடுக்கிற‘ப்ராம்ப்ட்டர்’ (PROMPTER)பற்றிய கவிதையொன்று. அதுவும் சுத்த ‘உரைநடையாக’ இருக்கிறது என்று ராஜுவோ பாலகுமாரனோ சொன்னார்கள்.அப்போது எங்களுக்கிடையே கடித/ கவிதைப் பரிமாற்றங்கள் நடக்கும்...அதனால் அது எங்குமே பிரசுரமாகவில்லை.

இவற்றையெல்லாம் ஏன் சொல்ல வருகிறேனென்றால். ஒரு தொகுப்பு என்று வருகிற போது சில, கவிதைகள் போல் உள்ள கவிதையாய் இல்லாதவற்றை தவிர்க்க வேண்டும். இந்தத் தொகுப்பில் ’காதல் விளையாட்டு’ என்றொரு கவிதை.அது கவிதையாக மாற மறுக்கும் ஒரு கூற்று. அதை நிர்த்தாட்சண்யமாகத் தவிர்த்திருக்கலாம். ’சூடாப்பூ’ போன்ற கவிதைகள் நிறைய எழுதப் பட்டாயிற்று.அதே போல் “கவி சாம்ராட்”.

“எவ்வளவு தூரத்தையும்”,இழைபிரிதல்” ஆகிய அற்புதமான் கவிதைகளை மறு படி மறுபடி படிக்கத் தோன்றுகிறது. அவை உங்களுக்கே அதிகம் பிடித்த கவிதையாயிருக்கும். அப்படிக் கவிதைகளைத்தான் எழுத வேண்டும்.

முகம் திரும்பா பிரிதல்கள்

என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை
எப்போதும் பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா பிரிதலகள்’

ஐம்பது வருடமாக நான் அனுபவிக்கும் துயர். இந்தத் துயர சுருதியின்( Melancholic mood) ரீங்காரத்தில்த்தான் என் ஆதிக்கவிதைகள் தங்கள் ராக விந்நியாசத்தைக் கண்டன. இது பொதுமைப்படும் போதுதான் அற்புதமான கவிதைகள் உருவாகின்றன என்கிறார்கள்.”

வண்ணதாசன் “உங்கள் முந்திய ஒரு தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல உங்கள் அயலக வாழ்வின் சோகங்கள் உங்களுக்கு ஒரு கவி மனத்தை உண்டாக்கியிருக்கிறது. நீங்கள் அருவியாய்க் கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள், கவிதைகளையும் கவிதை சார்ந்தும்.இது ரொம்ப முக்கியமானது.

இரு தளப் பார்வைக்குப் புலப்படாத அசோக ஸ்தூபியின்,நான்காவது சிங்கமென உங்கள் முந்திய தொகுப்புகளில் நன்கு தெரியாமல் மறைந்திருந்த நான்காம் கவிச் சிங்கம் இந்தத் தொகுப்பில் துலாம்பரமாகத் தெரிகிறது.

இது உங்கள் தொடர் வாசிப்பு, மற்றும் கவிதா ஈடுபாட்டின் வெற்றி. கவிதைகளின்பால் உங்களது இந்த ஈடுபாடு மிக்க அன்பு,உங்கள் கவிதைப் பயணத்தில் உங்களை எவ்வளவு தூரமும், எவ்வளவு காலமும் அழைத்துச் செல்லும்.

இந்தப் பூமிப் பாத்திரத்தில் எந்த அவநம்பிக்கையுமின்றி தினமும் பூக்கிற ஆயிரமாயிரம் பூக்களைப் போல், நீங்கள் தொடர்ந்து கவிதைகள் தருவீர்கள். என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அன்புடன்
கலாப்ரியா
இடைகால்

27 ஜூன் 2012

நான்காவது கவிதைத் தொகுதி.

காலச்சுவடு வெளியீடாக வெளிவர உள்ள என் நான்காவது கவிதைத் தொகுதி.