18 ஜூலை 2009

இடைவெளி

நீண்ட
இடைவெளிக்குப்
பின்
எழுதிய
கடித
மொன்றில்
பெரிதும்
மாறிப்
போயிருந்தது
கையெழுத்து
இவனைப்
போலவே.

o

ஏதும்

இத்தனை
புரியாமை
கொண்ட
வாழ்வில்
இருக்கட்டும்
எளிமையாய்
என்றிருப்பவன்
கவிதைகளை
ஏதும்
செய்யக் கூடும்
காலம்.

o

13 ஜூலை 2009

ஆரோக்கியத்தின் பாடல்

விருந்தொன்றிற்காக
கூடியிருந்த நண்பரின்
வீட்டில் வைத்து
கருவியொன்று காட்டிய
உயர் ரத்த அழுத்தத்தில்
உறைந்து போயிருந்தது
ஓர் அரை மணி நேரம்.
மீதமின்றி தீர்ந்துபோன
உணவுப்பண்டங்கள
உள்ளிருந்து சன்னமாய்
இசைத்துக் கொண்டிருந்தது
ஆரோக்கியத்திற்கான
பாடலொன்றின்
அவரோகணத்தை.


0

08 ஜூலை 2009

நடைப்பயிற்சிக் குறிப்புகள்

குறிப்பு - 1

கையில் புகையும் சிகரட்டும்
கல்தூண் சிவாஜி தொந்தியோடும்
கடந்து போகும் முதியவர்
செய்திருப்பாரா பயிற்சியென்று
ஏதாவது என்ற நினைவோடு
எட்டி நடை போடுகையில்
ஒலித்தது என் கைபேசி.

நாளை முதல் கண்டிப்பாய்
நானும் வருவேன் என்று
நெடுநாளாய்
சொல்லிக் கொண்டிருக்கும்
நாற்பதைக் கடந்த நண்பன்
இம்முறை விளித்தது
எங்கே கிடைக்கும்
தஞ்சாவூர் பொன்னி அரிசி
என்ற
தகவல் அறிய.

0

குறிப்பு - 2

யார் யாரோ அழைத்தது
இரண்டொரு முறை.

நானே எடுத்துப் பார்த்தது
நான்கைந்து முறை.

பாக்கட்டில் இருக்கிறதா என்று
பிடித்துப் பார்த்தது பல முறை.

பக்கத்தில் ஒலித்த சத்தத்தில்
பிழையாய் எடுத்தது சிலமுறை.

நாளை நடைப் பயிற்சிக்காவது
வர வேண்டும் - இந்த
நச்சுப் பிடித்த கைபேசியின்றி.

o

குறிப்பு - 3

இன்றுவரை ஏதும்
பேசியதில்லை.
இதழ்விரித்து மெலிதாய்
நகைத்ததுமில்லை.
இயல்பிலேயே
இப்படித்தானா? - இல்லை
இயல்பில்லா ஒன்றைச்
செய்வதன் பொருட்டா?
எப்படிக் கேட்க என்
சக நடைப்பயணியிடம்?
ஆரோக்கியத்திற்கான
நடைப்பயிற்சியில் ஏன்
அத்தனை கர்ண
கொடூரமாய் முகம் .

o

குறிப்பு - 4

சக
நடைப்பயணியின்
தொலைந்த
சாவியொன்றைக்
கண்டெடுத்த
சந்தோசததோடு
நிறைவுற்றது
இன்றைய
நடைப்பயிற்சி.

0

குறிப்பு - 5

இன்றைய
நடைபயிற்சியில்
இசை கேட்டபடி
ஒருவன்
இணையோடு
இடைவிடாமல்
பேசியபடி ஒருவன்
தண்ணீர் பாட்டிலோடு
வேக வேகமாய் ஒரு
வெள்ளைக்காரன்
எல்லோரோடும்
ஆனந்த கூத்தாடியாய்
அவனாகவே பாடியபடி
அதி வேகத்தில்
போய்க்கொண்டிருந்தான்
ஒருவனும்.

o

குறிப்பு - 6

அரை இருட்டான
பகுதியில்
அமர்ந்திருந்த
இருவரின் நெருக்கத்தை
சுமந்தபடி
போய்க்கொண்டிருந்த
நடைப் பயிற்சியின்
அடுத்த சுற்று
முடிந்து திரும்புவதற்குள்
முத்தமிட்டும்
முடித்திருக்கலாம்
அவர்கள்.

0

04 ஜூலை 2009

இயக்கம்

உண்ண
உழைக்க
உடைமாற்ற
உடல் தேய்த்து
குளிக்கக் கொள்ள
சபை நடுவே
கைகட்டி
கம்பீரம் காட்ட
குழுவில்
கைதட்டி
குதூகலிக்க
முகவாயில்
முட்டுகொடுத்து
முறுவலிக்க
அரிப்பெடுத்தால்
அவ்வப்போது
சொரிந்து கொள்ள
உறங்கும்போதும்
தலையணையை
கட்டியணைக்க
என்று
என்னவும் எப்பவும்
இயங்கிக் கொண்டேயிருக்கும்
நம் கைகள்
ஓய்வெடுக்கும்
திருநாள் - நாம்
ஓய்கின்ற
ஒரு நாள் தானோ?

o

01 ஜூலை 2009

யாதொரு

அகத்தின் அழகு
முகத்தில் தெரிய
அடுத்தவர் மனமறிதல்
அத்தனை எளிதா?

நேற்றின் நிழல்
கவிழ்ந்து
இடம் வலம் மாறி
தோன்றும்
யாதொரு
நிலைக்கண்ணாடி
முகத்திலும்
தெரிவதில்லை
எதிர்வரும்
எவரின்
அகத்தழகும்.

o