26 செப்டம்பர் 2009

இந்நாட்களில்

வலிந்து நான் மேற்கொள்ளும்
இந்த வெஜிடேரியன்
பிம்பத்திற்குக் காரணம்
வள்ளலார் கதைகளோ
வேறெந்த வனிதையோ அல்ல.
வெள்ளையும் சிவப்புமாய்
வைத்தியன் கொடுத்து
வரும் மாத்திரைகள்.

o

முதலில்

முதலில்
யாரென்று
துயிலெழும்
மகனிடமிருந்து
தொடங்கும்
காலை.

உண்பது யார்
முதலில்
என்பதாக
காலை உணவு.

பள்ளிப்
பேருந்தில்
ஏறுவதும்
யார் முதல்
எனும்படியே.

(பள்ளியிலிருந்து)
தான் முதலில்
திரும்பிவிட்டதாக
தம்பட்டமும்
தொலைபேசியில்
தினம்.

நாளைய 'முதல்'களை
சுமந்து
நடுநிசி வரை
நடக்கும் போட்டியில்
நித்திரை கொள்வது
முதலில்.
நித்தமும்
நான்தான்


o

22 செப்டம்பர் 2009

பெயரிலென்ன இருக்கிறது?

இசையமைப்பாளராகும்
தன் மகளுக்கு
ராகத்தின் பெயர் வைத்த
நடிகர் ஒரு தீர்க்கதரிசி என்று
நடிகையொருத்தி சொல்லியிருந்த
பத்திரிக்கை துணுக்கை
படித்து சிரித்துக் கொண்டிருந்தேன்.
என்னவென்று கேட்ட மனைவியிடம்
எடுத்து நீட்டினேன் பத்திரிக்கையை.
இதிலென்ன சிரிக்க என்றவளிடம்
இதுவரை சொல்லவில்லை.
இனியும் ..........


0

05 செப்டம்பர் 2009

உல்டா

என் நண்பர்கள்
இருவர் குறித்து
மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்
ஒருவன் உஷாரென்றும்
மற்றொருவன் சற்றே மந்தமென்றும்.
நானறிந்த வரையில்
அவைகள் அப்படியே
உல்டா என்பதுதான்
அதிலுள்ள விஷேசம்.

o

பிறந்த நாள் வாழ்த்து

சொன்ன நண்பன்
இதுவரை இருந்ததிற்காக
இருக்கட்டுமே என்றான்.
இதழ்க்கோடியில் சிரிப்போடு
இறப்பை நோக்கி
இன்னொரு அடிவைப்பதற்கா
இப்படி ஒரு வாழ்த்து என்றேன்.
இம்முறை மெல்லச் சிரித்தது அவன்.

0

பெண் கவிதைகள் மூன்று

பெண் - 1

நகைப்புடைவைக் கடைகளில்
பெண்கள் என்ற வரிகளோடு
தொடங்கிய கவிதையை
தொடராமலே வைத்திருக்கிறேன்
இன்னமும்.

0

பெண் - 2

இயற்கை கூந்தல் மணம் என்ற
வரிகளுக்கான கவிதையும்
இன்னமும் அப்படியே
இருக்கிறது கிடப்பில்.

0

பெண் - 3

குளிர்மழை நாளொன்றின்
குவாலிஸ் பயணத்தில்
மனைவியின் தோளில்
உறங்கியபடி இருந்த
மகனின் தலைக்குமேல்
சாலையில்
பேருந்து நிறுத்தமொன்றில்
கணநேரம் காட்சி தந்து
மறைந்த முகம்
கண்டிப்பாய்
அவளுடையதில்லை.

0

(நன்றி: Keetru.com)