30 டிசம்பர் 2009

மறுமுறை

நன்றி தெரிவிக்கும் பொருட்டு
நீட்டப்படும் கைகளை
நன்றாகவே பற்றிக்
குலுக்கலாம் நீங்கள்.

மறுமுறை வாய்க்காமலே
மறுதலிக்கப்படலாம்
மலர்ந்த முகத்தோடு பிரியும்
மற்றொரு சந்திப்பு.

19 டிசம்பர் 2009

செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு


நண்பர்களே,

எதிர்வரும் புத்தக கண்காட்சியை யொட்டி, எனது இரண்டாவது கவிதைத் தொகுதி
"இன்ன பிறவும்" கவிஞர் சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளியாகிறது.

நூல் விபரம்:

நூல் பெயர்: இன்ன பிறவும்
பதிப்பகம்: அகரம், தஞ்சாவூர்கிடைக்குமிடம்:

டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில்
அகரம் பதிப்பக ஸ்டால் மற்றும் சென்னை தியாகராய நகர் புக்லாண்ட்ஸ்.


அன்புடன்,
செல்வராஜ் ஜெகதீசன்.

10 டிசம்பர் 2009

ஆட்சேபணை

அடுத்த இருக்கையில்
வந்தமரும்
உங்கள் வருகையில்
ஆட்சேபணையேதுமில்லை.

இடையிடையே
இடித்தபடி இருக்கும்
உங்கள் கைகளைக்
குறித்து நீங்கள்
கவனம்
கொள்ளும் வரை.

o

அனுகூலம்

ஆறேழு பேர் நிறைந்த
சந்திப்பொன்றில்
அதைப் பற்றி
நீயும் பேசவில்லை
நானும் கேட்கவில்லை

இருவர் மட்டுமே
அறிந்த விஷயமென்று
இருப்பதில் உண்டு
இப்படி ஓர் அனுகூலம்.

o

அடையாளங்களை அழித்தல்

அடையாளங்களை
அழித்தொழிப்பதில்
நீங்கள்
ஆகச் சிறந்தவராய்
இருக்கலாம்.

படிப்பதற்கென்று
பெற்றுப் போன
புத்தகத்தின்
பக்க மடிப்புகளை
மாற்றிப்போடுவதிலுமா
அதைப்
பரீட்சித்துப் பார்க்கவேண்டும்?

o

இன்று வரை

நிச்சயமாய்
தெரியுமென்றாலும்
நீண்டு
கொண்டுதான் இருக்கிறது
இன்று வரை.

ஏதாவதொரு
கையசைப்போ
எதிர்கொண்டழைக்கும்
முகமொன்றுக்கோ
ஆன ஏக்கங்கள்.

O

09 டிசம்பர் 2009

விளம்பரங்களில்

விளம்பரங்களுக்கிடையில்
வந்து போகின்றன
விளம்பரதாரர் வழங்கும்
நிகழ்ச்சிகள்

நல்லது பயக்குமெனில்
நல்லது கறையென்கின்றன

இன்னுமதிக வெளுப்புக்கு
இவையிவை என்ற
அறிவிப்புகளோடு

இலவசங்களுக்கான
சீசன்களை
எப்போதும்
நினைவுறுத்திக்கொண்டு

விளம்பரங்களில்
வகுபட்டு
பின்னமாகிக் கொண்டிருக்கிறது
பொழுதுகள்.

o