கவிதை/நவீன விருட்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை/நவீன விருட்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 பிப்ரவரி 2012

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்



ஐயன்மீர்!
தொடக்கத்தில்
திரையில் காட்டப்பட்ட
பாதுகாப்பு அட்டைகள் பற்றி
எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு.
அடுத்து முன்வைக்கப்பட்ட
வரவு செலவு கணக்கு பற்றியோ
எதிர்கால திட்டங்கள் குறித்தோ
நாங்கள் சொல்ல விரும்புவதும்
ஏதுமில்லை.
விடைபெறுவதற்கு முன்
விருந்தோம்பல் சகிதம்
திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே
எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம்.
எங்களைப் போலவே உங்களின்
வாகனங்களின் வருகைக்கும்
காத்திருக்கும்
எதிர்பார்ப்பின் கண்களுக்கு
என்னவிதமான உத்திரவாதத்தை
தரப் போகிறோம்
நாம்.

o

19 நவம்பர் 2011

எதிர் விளையாட்டு



இடைவேளை நேரங்களில்
பள்ளியில் விளையாடும் ஒரு
விளையாட்டின் பெயர்
‘எதிர் விளையாட்டு’
என்றான் மகன்.

‘சிரி என்றால் அழ வேண்டும்
அழு என்றால் சிரிக்க வேண்டும்
உட்கார் என்றால் எழ வேண்டும்
எழுந்திரு என்றால் உட்கார வேண்டும்.’

அனேகமாய் எல்லா நேரங்களிலும்
அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு.
அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன்
அடியோடு அதை மறந்தே போனேன்.

அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில்
எழுதப்பட்டிருந்தது.
'பேசாதே என்றால் வகுப்பில்
பேசிக் கொண்டே இருக்கிறான்’
என்று.

o

13 செப்டம்பர் 2011

உயிரோசை



உண்மையை
உண்மையென்று உணர்த்த

இத்தனை விவரங்களை
ஈமெயிலில் நீ
அனுப்பித் தந்த போதும்

தொலைபேசியில்
தெரிவித்த உன்
குரல்வழி விளக்கமே
போதுமானது எனக்கு.

ஏனெனில்
தொலைபேசியில் ஒலித்தது
உன் உதடுகளின் ஓசையா?
ஒரு உயிரின் ஓசை அல்லவா?

o

23 ஆகஸ்ட் 2011

என்ன சொல்ல?

இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த
இடுங்கிச் சிரிக்கும் அந்த கண்களை
இனம் மொழி தேசம் கடந்து
இன்னொரு இடத்தில் காணச் செய்யும்
இந்த இயற்கையை என்ன சொல்ல?

o

17 ஆகஸ்ட் 2011

சூடாப் பூ

பள்ளி விட்டு வந்ததும்
தன் ஆஸ்தான இடத்தில்
அமர்ந்திருப்பாள் அம்மு.

எல்லோரும் வீட்டிற்குப் போக
தான் மட்டும்
அனுதினமும் அங்கு
வருவது பற்றிய
ஆரம்ப காலக் கேள்விகள்
அவளை விட்டுப் போய்விட்டன.

ஓலைக் குடிலின்
ஓர் மூலையில் அமர்ந்து
எல்.கே.ஜி பாடங்களை
படித்துக் கொண்டிருப்பதும்
அம்மாவிடமிருந்து
பூ வாங்கிப்போவோருக்கு
புன்னகை ஒன்றை
இனாமாய்க் கொடுப்பதும்
அவளின்
அன்றாடக் கடமைகள்.

மீதமிருக்கும் பூக்களுடன்
வீடு திரும்பிக் கொண்டிருக்கும்
அம்முவிற்கு
என்றைக்குமே புரிந்ததில்லை
அம்மா ஏன் சூடிக் கொள்வதில்லை
அவைகளில் ஏதொன்றையும் என்பது.

o

01 மார்ச் 2011

இரண்டு கவிதைகள் - நவீன விருட்சம்

01
கோலாகலம்

சுற்றிவிடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்தது
ஒவ்வொரு முறையும்
ஓரோர் மாதிரி.

குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.

O
02
கண்ணாமூச்சி

அதற்குள்ளாகவா என்று
அகல விரியும் விழிகளுக்கு
இதற்குள்தான் என்று
இதழ் விரியுமுன்னே
எதற்குள் என்றபடி
எட்டிப் போடும் கால்களுடன்

இப்படித்தானே இருந்து கொண்டிருக்கிறோம்

இரவைத் தொடும் கனவுடன்
இளித்துக் கொண்டிருக்கும் பகல் மாதிரி.

o

(நன்றி : நவீன விருட்சம்)

12 செப்டம்பர் 2010

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்...!

காலை வணக்கத்தில்
தனம் சங்கீதா
முற்பகல் பேட்டியொன்றில்
கேரளத்துப் பாவ்னா
பிற்பகல் பேட்டியில்
பேரிளம்பெண் நமீதா
மாலைத் திரைப்படத்தில்
மறுபடியும் நமீதா
கும்கும் குமரிகளின்
குளுகுளு பேட்டிகளும்
குத்தாட்டப் பாட்டுக்களும்
பிரம்மச்சாரி பிள்ளையார்க்கு
பெருங்குஷிதான்! பேரின்பம்தான்!

o
(நன்றி: நவீன விருட்சம்)