கவிதை/உயிரோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை/உயிரோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 பிப்ரவரி 2012

அகத்தின் அழகு



இன்னொரு நாளின்
தொடக்கம்.

எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.

மகனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில்
அத்தனை இறுக்கம்.

உற்றுப் பார்க்கையில்
சற்று முன் இறக்கி வைத்த
என் முகம்.

o

19 டிசம்பர் 2011

இரண்டு கவிதைகள்

(19-12 -2011) தேதியிட்ட உயிரோசையில் வெளியானது.



இந்த நாள்

மூன்று முகங்களுமே எதிர்ப்படவில்லை.
இரண்டாவது வந்திருக்கலாம்.
ஒன்று கூட
இல்லாமல் போகுமளவுக்கு
என்னதான் செய்ததிந்த
ஒரு நாள்.

o

புகைப்படத்தில்

என்னையும் உன்னையும் அழைத்தவன்
அவனை அழைக்கவில்லை.
என்னையும் அவனையும் அழைத்த நீ
இவனை அழைக்கவில்லை.
உன்னையும் இவனையும் அழைத்த நான்
அவனை அழைக்கவில்லை.
நான் நீ அவன் இவன்
எல்லோரும் சேர்ந்திருக்கும்
இந்தப் புகைப்படத்தை
என்ன செய்வதிப்போது
என் இனிய நண்பனே.

o

21 செப்டம்பர் 2011

இறைவன் வகுத்த நியதி



நான்கு படிக்கட்டுகளுக்கு ஒரு முறை
தேம்பிய அழுகையும் அதைத் தொடர்ந்த அமைதியுமென
நர்சரி படிக்கட்டுகளில் தாவித் தாவி ஓடின மகனின்
தளிர் நடையைப் பற்றி சொல்லிச் சொல்லி
சிரித்துக் கொண்டிருந்தாள் மனைவி.
நினைத்து நினைத்து நகைத்துக் கொண்டிருந்தேன்
நானும் இங்கு அலுவலகத்தில்.

மகிழ்ச்சியில் முழுப் பிரபஞ்சமும் ஆன பொழுதில்
முத்தாய்ப்பாய் வந்து சேர்ந்த தொலைபேசித் தகவல்
பெரும்கூச்சல் போட்டுக் கொண்டிருப்பவனை
பட்டென்று வந்து கூட்டிப் போ என்றது.
அழைத்து வரப் போன இடத்தில் அறிய நேர்ந்தது
அழுதது அவனல்ல வென்று.

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இந்த சிறிய இன்பத்திலுமா?

o

12 செப்டம்பர் 2011

திரும்பத் திரும்ப



ஒட்டி நின்றிருந்த லாரியின்
சக்கரத்தை விட
ஓரடி உயரம் குறைவான

பள்ளி சீருடை
பாதி கசங்கிய நிலையில்
காலணிகள் ஏதுமின்றி

சாலையைக் கடக்க
காத்திருந்த சிறுவன்

கடந்து கொண்டிருக்கிறான்
ஒவ்வொரு சிக்னலிலும்.

o

06 செப்டம்பர் 2011

அந்தக் கணம்



விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு
சுற்றுலா சென்ற இடத்தில்
வைத்து நிகழ்ந்த அந்தக் கணத்தை

காலைச் சிற்றுண்டிக்கான
பில் பணத்தைக் கொடுத்துவிட்டு
கல்லாவை விட்டுத் திரும்புவதற்குள்

நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த என்
இளைய மகன் ஒரு காரின் பின்னும்
தலைதெறிக்க அவனைப் பிடிக்க ஓடிய
என்னைத் தொட்டு நின்ற ஒரு காரின் முன் நானும்
என இடைப்பட்டு நின்ற அந்தக் கணத்தை

சுற்றியிருந்த எல்லாமும் ஸ்தம்பித்துப் போன
அந்த ஒரு கணத்தை
சில சொற்களில் எப்படி சொல்லிவிட முடியும்?

o

03 செப்டம்பர் 2011

பாய்



“பாய்” என்றொரு புதிய வார்த்தையைக் கற்றுக்கொண்ட
மூன்று வயது மகனிடமிருந்து
“பாய்” தான் எல்லாவற்றுக்கும் இப்போது.
காலையில் கண்விழிக்கும்போது
கவனமாய் உயிர்பெறும் “பாய்”
நான் அலுவலகம் போய் வரும் பொழுதுகளில்
நண்பர்கள் பார்க்க வரும் விருந்தினர்
உடன் பயணிக்கும் பேருந்துப் பயணிகள்
கடைகளில் கடைத் தெருக்களில்
எங்கும் எவருக்கும் ஒரே “பாய்” மயம் தான்.
பெரும்பாலும் ஒலியளவு
ஒரேயளவுதான் இருக்கும் என்றாலும்
தனக்கு தடுப்பூசி போடப்பட்ட சமயம்
ஆஸ்பத்திரியில் ஒலித்த “பாயே”
அதுவரைக்கும்
மிக அதிக சத்தத்தோடு ஒலித்த “பாய்”.
அங்காடியொன்றில் காணாமல் போன தினம்
அவனது இருப்பிடத்தை அறிவித்ததும்
அந்த “பாய்” தான்.

o

22 ஆகஸ்ட் 2011

தேவிகா சுப்ரமணியம்



தேவிகா சுப்ரமணியத்தை
தெரியாதவர்கள் குறைவு எங்களூரில்.
தெரிந்தவர்களில் பலருக்கும்
தெரியாத ஒன்று அவரின் பெயர்க்காரணம்.
ஆண்டவன் கட்டளை திரைப்படத்தை
அறுபத்தேழு முறை பார்த்ததினால்
ஆகி வந்த பெயராம்.
சுப்பிரமணி என்னும் அழைப்புக்கு
செவி சாய்க்க மறக்கும் காதுகள்
தேவிகா என்னும் அழைப்புக்கு
திரும்பாமல் இருக்க மாட்டா.
தேவிகாவைப் பற்றிய பேச்சுக்களைத்
தெரிந்த சிலருடன் மட்டுமே பேசுவார்.
எத்தனை படங்கள் நடித்தார் தேவிகா
யார் யாருடன் எத்தனை அதில்
எல்லாமே எப்போதும் அவர் விரல் நுனியில்.
சிவாஜியை எப்போதும் கணேசன் என்றே அழைப்பார்
என்பது ஒரு கூடுதல் தகவல்.
நரை கூடி கிழப் பருவம் எய்தி எல்லோரையும் போலவே
தேவிகா சுப்ரமணியமும் இறந்து போன நாளொன்றில்
இத்தனையும் அசை போட்டுக்கொண்டிருந்த ஊரார் நடுவே
அடுத்த ஊரிலிருந்து வந்து அழுது புலம்பிப் போன
தெய்வானைப் பாட்டிக்கு தேவிகா என்றொரு பெயருண்டு
என்பது எவருக்கும் அங்கு தெரிந்திருக்கவில்லை.

o

15 மார்ச் 2011

சுப்ரமணியின் கேள்விகள்



ஒரு குளிர் மாலைப் பொழுதில்
அலுவலக சகா சுப்ரமணியிடமிருந்து
எதிர்கொள்ள நேர்ந்த கேள்விகள்.

இதைப் பற்றி என்றாவது
யோசித்திருக்கிறீர்களா?
எதையோ நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறோம் எப்போதும்.
அடுத்தடுத்த கமிட்மென்ட்
எப்போதும் வேலையில்.
பக்கத்தில் இருப்பவரோடு
பேசிச் சிரிக்கவும்
பெரும்பாலும் நேரமில்லை.
மனைவி மக்களுக்கான நேரம்
வாரக் கடைசியில்.
வாங்கிய நிலமோ
அடுக்கக குடியிருப்போ
வேறெவரோ ஒருவரிடம்
வாடகை என்ற பெயரில்.
வாரத்திற்கொருமுறை நிகழும்
பெற்றோருக்கான அழைப்பும்
வெறும் குசல விசாரிப்புகளோடு.
ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்
இந்த அயலக வாழ்வில்
என்னவென்றே தெரியாமல்.

எல்லாக் கேள்விகளிலும்
என்னைப் பொருத்தியபடி
கேட்டுக் கொண்டிருந்தேன்.

o
(14-03-2011 உயிரோசை மின்னிதழில் வெளியானது)

28 பிப்ரவரி 2011

இழை பிரிதல்

இழை பிரிதல்



நீலம் சிவப்பு மஞ்சள் சரி
நிச்சயமாய் பச்சை வேண்டாம்

அன்றைய கட்டளை
உடைந்துபோன ஹெலிகாப்டர் பொம்மைபோல்
இன்னொன்று வாங்கி வரவேண்டுமென்பது.

அலுவல் களைப்போடு நுழைந்த
மறதி முகத்தை நோக்கிய
எதிர்பார்ப்பின் கண்களிடம்
பச்சை மட்டுமே இருந்ததாய்
அன்போடு கட்டிப் பிடித்தேன்.

அவ்வளவு தூரம் போனதுக்கு
அதையே வாங்கி இருக்கலாமே
என்றவனின் சொல்லிலிருந்து
எது எதுவோ இழை பிரிந்தபடி.

o

எவ்வளவு தூரத்தையும்

அது நீங்கள்தானென
அறுதியிட முடிந்தது.

அழைத்துப் பேசும் தூரத்தை
அவ்வளவு நீளம் போல்
காட்டிக்கொண்டிருந்தது
அடுத்த ஐந்து நிமிடங்களில்
அப்பாயின்மென்ட்டோடு
காத்திருந்த மருத்துவரின் இருப்பு.

அதனாலென்ன?

இன்னுமதிக தூரத்தையும் கடக்கக்கூடிய
விஷயங்களோடு
இன்னோர் பொழுதில் சந்திப்போம்.

o

(28 -02 -2011 உயிரோசை மின்னிதழில் வெளியானது)

31 ஜனவரி 2011

சிலருக்காவது



சிதறிக் கிடந்த
தானியங்களை விடுத்து
சற்றுத் தள்ளி
கொத்திக் கொண்டிருந்த
புறாவிடம்
இதோ இதோவென்று
சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த
முதியவர் போல்
சிலருக்காவது வாய்க்க வேண்டும்
பறவைகள்
புரிந்து கொள்ளக்கூடிய
பாஷை.

o

24 ஜனவரி 2011

இன்றென் இருப்பென



அங்கு நீர்
வராமல் இருந்திருந்தால்
தச்சன் கவிதைகள்
சர் ரியலிசம்
படிமக் குறியீடுகள்
பற்றியெல்லாம் கதைக்காமல்
இருந்திருந்தால்
அக்குள் இடுக்கில்
அடுக்கியிருந்த
உங்கள் புத்தகமும்
இன்றென் இருப்பென
இருந்திருக்கும்.

o

அதை உங்களிடம்
சொல்லலாமா என்று
தெரியவில்லை.
அதுவரையான
பிம்பமொன்றை
அது எத்தனை தூரம்
கலைத்துப்போடுமென்று
கணிக்கவும் முடியவில்லை.
இத்தனைக்கும் அது
என் பிம்பமும் இல்லை.
இன்னொரு சமயம் கருதி
இன்றும் என்னோடு
எடுத்துப் போகிறேன்.
வேறோர் பொழுதில்
அதை நான் உங்களுக்கு
சொல்லக்கூடும்.
இப்போதைக்கு சுபம்.
பார்ப்போம்.
இன்றே அதை நான்
உங்களிடம்
சொல்லி விடுவதற்கு முன்.

o

பிறந்த நாள் கொண்டாட்டம்
தினமும் ரத்தாகி
திரும்பத் திரும்ப
அமலாக்கப்படுகிறது
மகனின்
அடம் பிடிக்கும் நடவடிக்கைகளை
அவ்வப்போது சரியாக்க.
சரியான பிறந்த நாளன்று
அவன் சமத்தாய்
இருந்து விடும் பொழுதில்
சவால்தான் எங்களுக்கு.
சரியான இன்னொரு
ஆயுதத்தை
சானேற்றும் வரை.

o

(நன்றி: உயிரோசை)

19 ஜனவரி 2011

இரண்டு கவிதைகள்



ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு பறவை
இன்னொரு சந்தர்ப்பம்
தரப்படுமெனில்
இப்போதைப் போலவே
இருக்கும்
இன்னொரு வாழ்வும்.

o

இவன் முறை வருவதற்கு
இன்னும் இரண்டு பேர் இருக்கையில்
வரிசையை விட்டு விலகி
நடக்கத் தொடங்கினான்
நின்று கொண்டிருப்பதைவிட
சென்று கொண்டிருக்கலாம்
கல்யாண்ஜியின் கவிதை வரிகளை
அசை போட்டவாறே.

o

(நன்றி: உயிரோசை.காம் & திண்ணை.காம்)

06 டிசம்பர் 2010

இன்னுமொரு முறை



இந்தக் கவிதை வரிகள்
உங்களுக்கானதாய் இல்லாமல் இருக்கலாம்.

அடுத்த வாரத்திலேயே
அதன் கோரப் பிடிகளுக்குள்
அகப்பட்டுக் கொண்டாலும்
அந்த ஏழு நாட்களில்
அங்கங்கு எதிர்ப்பட்ட
அத்தனை விதமான வாசனைகளையும்
அதன்பொருட்டு கொண்ட
கைவிரல்களின் ஆட்டத்தையும்
வெற்றி கொண்ட பொழுதுகள்
வெறும் வெற்றுச் சாதனை என்று
சொல்பவர் நீங்களென்றால்

இந்தக் கவிதையின் முதல் இரண்டு வரிகளை
இன்னுமொரு முறை படியுங்கள்.

o

29 நவம்பர் 2010

உயிரோசை கவிதைகள்

29-11-2010 தேதியிட்ட உயிரோசை மின்னிதழில் வெளியான கவிதைகள்.

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்



வரும் வரை
வரிசையாய் வந்து
விசாரிக்கும்
உன் அலைபேசி விசாரிப்புகளோடு
வந்தபின் விழிகளால்
நீ எதிர்கொள்ளும் உன்
வினாக்களுக்காகவே
வந்து கொண்டிருக்கிறேன்
உன்னை நோக்கி.

O
என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை
எப்போதும்
பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா
பிரிதல்கள்.


O
வாழ்க்கை
சில நேரங்களில்
இப்படி இருக்கிறது.
இப்படியான
சில நேரங்களிலேயே
இருந்து விடுமோ
இந்த வாழ்க்கை?

O
வீழ்த்தி விட்டோம்
வேறோர் அணியை என்று
வீறு கொள்கிறோம்
விளையாட்டில்.

இன்னொரு மனதை
வெற்றி கொள்வதை
விழுந்து விட்டோமென்கிறோம்
காதலில்.

O

20 செப்டம்பர் 2010

இதுவும் கடந்து போகும்




சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்க்
கடந்து போனதில்லை.

o

(20-09-2010 உயிரோசையில் வெளியானது)