31 ஆகஸ்ட் 2009

இணங்குதல்

அடம் பிடித்த மகனைத் தூங்க வைக்க
சொல்லி வைத்தேன்
குட்டி கேரம்போர்ட் ஒன்று
வாங்கித் தருவதாக.
இணங்கினால் ஒன்று கிடைக்குமென்ற
அவன் உலகத்திலும்
இணங்க வைக்கலாம் ஒன்று கொடுத்தால்
என்ற என் உலகத்திலுமாக
அப்படியே உறங்கிப் போனோம்
அடுத்த சில நிமிடங்களில்.o

27 ஆகஸ்ட் 2009

விட்டுச்சென்ற

பத்து பதினைந்து பேர்
கொண்ட குழுவோடு
உணவு விடுதியில்
உண்டு முடித்து
பெரிய தொகை ஒன்றை
பில்லாகக் கொடுத்து
வெளியேறிப் போனவன்
விட்டுச்சென்ற
மாத்திரை உறைகள்
விளையாடிக் கொண்டிருந்தன
மின்விசிறிக் காற்றில்
மேஜையெங்கும்.

0

25 ஆகஸ்ட் 2009

பார்வைகள்

நண்பன் ஒருவனைப்
பார்த்துவிட்டு
காரில் திரும்புகையில்
கைபேசியில் அழைத்த
இன்னொரு நண்பனிடம்
'அப்படியே இருக்கான் மச்சி' என்று
சொல்லிக்கொண்டிருந்தான் நண்பன்.
முந்தைய தினம்
நான் இல்லாத நேரம்
வந்திருந்த இவன் குறித்து
என் அம்மா சொன்ன
'அப்படியே இருக்கான்டா'
சற்று நேரம்
நினைவில் வந்து போனது.


o

24 ஆகஸ்ட் 2009

கண்ணோடு காண்பதெல்லாம்

நகைச்சுவையும் உடல்நலமும்
என்றொரு புத்தகம் வெளியிட்ட
புகைப்படமொன்று இருந்தது
நீள் மேஜையில்.
காதைக் கிழிக்கும் சத்தத்துடன்
ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த
தொலைக்காட்சித் தொடரின்
அன்றைய எபிசோடில்
அடுத்தடுத்த
மாரடைப்பு சம்பவங்கள்.
அவ்வப்போது
திறந்து மூடிக்கொண்டிருந்த
அறைக்கதவு வழியே
கசிந்துகொண்டிருந்தது
அந்த இதய நோய் மருத்துவரின்
ஆர்ப்பாட்டமில்லாத
அமைதியான பேச்சு.

0

23 ஆகஸ்ட் 2009

தவிர்க்க விரும்பும் தருணங்கள்

எப்பொழுதும் வீட்டில் வைத்து
வெகுநேரம் பேசுபவன்
சமீப காலங்களில் சந்திப்பதெல்லாமே
வெளிவாசல்களில் என்பதை
நண்பனும் கவனித்திருக்கக் கூடும்.

சமீபத்தில் தவறிய அவன் அம்மாவை
போட்டோவில் மாலையோடு பார்க்கும்
தருணங்களை தவிர்க்க முயலும்
என் மனநிலையையும் சேர்த்து.

0