25 ஜூன் 2009

உயிர்த்தெழுதல்

போய்ச்சேருமிடத்தில்
புதிதாய் ஒன்று
இருக்குமென்று
ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள்
அம்மா.

புறப்படும்போது
வாகனமொன்றில்
அடிபட்டு இறந்த
வீட்டுப் பூனைக்காக
விட்டுவிட்டு அழுதுகொண்டிருந்தான்
குட்டிப்பையன்.


பயணம் முழுதும்
அநேகர் மனதில்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழந்து
மரித்துக் கொண்டிருந்தது
அந்தப் பூனை.

o

02 ஜூன் 2009

அறிதல்

தொலைதூரத்
தொலைபேசி அழைப்புகளிலும்
அம்மாக்கள் எப்படியோ
அறிந்து கொள்கிறார்கள்
இயல்பாய்ப் பேசுவதையும்
இட்டுக்கட்டி பேசுவதையும்.

o