26 அக்டோபர் 2009

விமான நிலைய வரவேற்பொன்றில்

பயணக் களைப்பாய்
இருக்கலாம்.

போய்வரும் இடத்தில்
நேர்ந்த உறவைப்
பிரிந்ததால் இருக்கலாம்.

எதிர்கொண்டழைக்க
எவருமற்று காணும்
புது இடம் குறித்த
மிரட்சியாய் இருக்கலாம்.

ஏக்கமும் சோகமும்
கொண்டு எதிர்பட்டவனை
நோக்கி இதழ்க்கோடியில்
தவழ விட்டேன்
புன்னைகையொன்றை.

சற்றே சலனம் காட்டி
பின் சமாளித்து
போய்க்கொண்டிருந்தவன்
நினைத்திருக்கக்கூடும்
ஏதும் என்னைப் பற்றி.

இறுக்கிப் பிடிக்கும்
வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க
முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு.

o

இயல்பாய் இருப்பதில்

ஆண்களேதுமின்றி
அழகிய பெண்ணொருத்தியோடு
ஆறேழு மாடி வரை
பயணிக்க நேர்ந்திருக்கிறது.

இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த
இரண்டு பெண்களுக்கிடையிலும்
இருக்க நேர்ந்திருக்கிறது
எத்தனையோ முறை.

முழுக்கவும் பெண்கள் சூழ
மேற்கொண்ட பயணங்களுமுண்டு.

ஆகக்கூடி வாய்த்த
அத்தனை லிப்ட் பயணங்களிலும்
அடியேன் கண்டெடுத்தது
நண்பர்களே!

இயல்பாய் இருப்பதில்
இருக்கும் அத்தனை
சிரமங்களையும்.

o

13 அக்டோபர் 2009

நிரப்புதல்

காலி அட்டைப்பெட்டியை
சுமந்தபடி
கடைவீதி வழியே
போய்க்கொண்டிருந்தேன்.
காண்போர் அனைவரும்
அதில்
இட்டு நிரப்பிக்கொண்டிருந்தனர்
தமக்கானவற்றை.


o

இப்போது

முன்பெல்லாம்
பயண ஏற்பாடுகளில்
முருகர் படமிருக்கும்.
மொபைல் சார்ஜர்
முந்துகிறது
இப்போது.

o

சம்பவம்

பேச்சு
சுற்றி
சுழன்றதொரு
சம்பவத்தைப் பற்றி.

அக்கம் பக்கம்
குறித்தெந்த
அக்கறையுமில்லை
அவர்களிடம்.

சம்பவ இடம்
பற்றியும்
சரியான
தகவலில்லை.

பேச்சின்
சாரத்தை வைத்து
சம்பவத்தை அறிதலும்
சாத்தியப்படவில்லை.

உயிரிழப்பு ஏதுமில்லை
என்றொலித்த
வாக்கியமொன்றோடு
அங்கிருந்து கிளம்புகையில்
சற்று
ஆசுவாசமாயிருந்தது.

o

08 அக்டோபர் 2009

பதட்டம்

சகபயணி ஒருவன்
சட்டைப் பாக்கெட்டிலிருந்து
எடுத்த
மூக்குக்கண்ணாடியோடு
மாட்டிக்கொண்டபடி
வந்த பேனாவை மீண்டும்
சரியாகப் பொருத்தவில்லை - தன்
சட்டைப் பாக்கெட்டில்.

பதட்டம் கூடிக் கொண்டிருந்தது
பார்த்துக்கொண்டிருந்த என்னுள்.

o

05 அக்டோபர் 2009

எதிரொலி

பேசும் கிளி பொம்மையொன்று
வந்திறங்கியது வீட்டில்.
'சீக்கிரம் வா படி
சாப்பிடு சீக்கிரம்'
என்ற மனைவியின்
எல்லா அழைப்புகளையும்
எதிரொலித்துக் கொண்டிருந்தது கிளி.
தற்போது வேலை
தனக்கு சற்று குறைந்ததென
குதூகலித்துக் கொண்டிருந்தாள்
மனைவி.
எங்களுக்குத்தான்
எல்லாமும்
இரண்டு மூன்று முறை
எதிரொலித்தபடி.

o

என் வரையில்

உங்களைப் போல்தான்
நானும்
போகும் பாதை வழியே
திரும்பிக்கொண்டிருக்கிறேன்
தினமும்.
சுமந்து திரும்பும்
விஷயங்களில்தான்
சிறிது வித்தியாசம்
என் வரையில் அவைகள்
எண்ணிக்கையில்
சற்று குறைவு.

o

அப்படியொன்றும்

இரவின் அமைதியில்
மகனிடமிருந்து
வந்து விழுந்தன
வரிசையாக கேள்விகள்.
'பெரியவன் ஆயிட்டதால
சீனியர் கேஜி போய்ட்டனா' என்றான்.
ஆமாமென்றேன்.
'ஜூனியர் கேஜிக்கு பின்னே
சீனியர் கேஜியா' என்றான்.
ஆமாமென்றேன்.
'பெரியவனானப் பின்
சின்னவனாக முடியாதில்லை?' என்றான்
அப்படியொன்றும்
சொல்வதற்கில்லை என்றேன்.

o