26 செப்டம்பர் 2010

முகம் நக

அழைத்துப் பேசும் தூரத்தில் இருந்தும்
நண்பனென்று உறுதி கேட்டு
முகப் புத்தகத்தில்
ஈமெயில் அனுப்பியிருந்தான்
நண்பனொருவன்.

அப்படியே அதை அனுப்பி வைத்தேன்
அடுத்தொரு நண்பனுக்கு
அவனும் நானும் சந்திப்பது
அவ்வப்போது என்றபோதும்.

o












நன்றி : திண்ணை.காம்

20 செப்டம்பர் 2010

இதுவும் கடந்து போகும்




சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்க்
கடந்து போனதில்லை.

o

(20-09-2010 உயிரோசையில் வெளியானது)

14 செப்டம்பர் 2010

கவிதையின் ரசவாதம் - வா. மணிகண்டன் ("அகநாழிகை"யில் "இன்னபிறவும்" மதிப்புரை

எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு "இன்னபிறவும்" குறித்து, அகநாழிகை (செப்டம்பர்-நவம்பர் 2010) இதழில் வெளியான வா. மணிகண்டனின் மதிப்புரை.






(நன்றி: வா. மணிகண்டன் & அகநாழிகை பொன்.வாசுதேவன்)

12 செப்டம்பர் 2010

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்...!

காலை வணக்கத்தில்
தனம் சங்கீதா
முற்பகல் பேட்டியொன்றில்
கேரளத்துப் பாவ்னா
பிற்பகல் பேட்டியில்
பேரிளம்பெண் நமீதா
மாலைத் திரைப்படத்தில்
மறுபடியும் நமீதா
கும்கும் குமரிகளின்
குளுகுளு பேட்டிகளும்
குத்தாட்டப் பாட்டுக்களும்
பிரம்மச்சாரி பிள்ளையார்க்கு
பெருங்குஷிதான்! பேரின்பம்தான்!

o
(நன்றி: நவீன விருட்சம்)

07 செப்டம்பர் 2010

நீர்க்கோல வாழ்வில்

நிறைய கேள்விகள்
இருந்தன அவனிடம்
பதிலில்லா அல்லது
பதில் வேண்டாக் கேள்விகள்
‘நல்லவனுக்கு கிடைக்கும் எல்லாமும்
கெட்டவனுக்கும் கிடைப்பதெப்படி?
சட்டம் ஏன் சரியான ஆளையும்
சகல விதிகளை மீறுபவனையும்
சரிநிகர் சமானமாய் வைத்துப் பேசுகிறது?’
நாளது வரையிலான சிரமங்களை
பார்க்கும் எவரிடமும்
அப்படியே இறக்கிவிடும்
எத்தனிப்புடன்
பேசிக்கொண்டே இருந்தான் அவன்.
சற்று முன் நடந்த
சாலை விபத்தொன்றில்
பைக்கின் பின் அமர்த்தி
கூட்டிப் போன தன் தந்தை
லாரியொன்றின் பின் சக்கரத்தில்
தலை நசுங்கி செத்துப்போனதை
கண்ணெதிரே கண்ட
மகனைப் பற்றிய
தகவல்களோடு வந்து சேர்ந்த
இன்னொருவனின் வருகை
எல்லாக் கேள்விகளையும்
கலைத்துப் போடும் வரை.

o

விடுமுறை வேண்டும் உடல் – சமயவேல் (படித்ததில் பிடித்தது)

விடுமுறை வேண்டும் உடல் – சமயவேல்


எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு
தன்னைப் பற்றியே
பெரும் கவலை கொள்கிற உடல்
முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு
நச்சரிக்கிறது
பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என
எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது
சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும்
முசுமுசுக்கைச் சாறுண்ணி போல் அல்லது
வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை
என எப்படியும் இருப்பேன் என்கிறது
விடுமுறை விடுமுறை எனும்
யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது
எதுவும் செய்யாமல் அக்கடா என்று
சும்மா கிடக்கும் ஆனந்தம்
பற்றிய அனேக நிறமிகளை
மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது
மிகுதியும் கனவு காணும் விருப்பத்துடன்
வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது

எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்
கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்.

(தமிழ் வீடு, நவீன இலக்கியக் காலண்டிதழ் - கவிதை சிறப்பிதழ்)