28 பிப்ரவரி 2012

அகத்தின் அழகு



இன்னொரு நாளின்
தொடக்கம்.

எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.

மகனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில்
அத்தனை இறுக்கம்.

உற்றுப் பார்க்கையில்
சற்று முன் இறக்கி வைத்த
என் முகம்.

o

20 பிப்ரவரி 2012

'கல்கி'யில் பத்தாவது கவிதை

இந்த வார கல்கி (26-02-2012) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)

12 பிப்ரவரி 2012

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்



ஐயன்மீர்!
தொடக்கத்தில்
திரையில் காட்டப்பட்ட
பாதுகாப்பு அட்டைகள் பற்றி
எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு.
அடுத்து முன்வைக்கப்பட்ட
வரவு செலவு கணக்கு பற்றியோ
எதிர்கால திட்டங்கள் குறித்தோ
நாங்கள் சொல்ல விரும்புவதும்
ஏதுமில்லை.
விடைபெறுவதற்கு முன்
விருந்தோம்பல் சகிதம்
திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே
எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம்.
எங்களைப் போலவே உங்களின்
வாகனங்களின் வருகைக்கும்
காத்திருக்கும்
எதிர்பார்ப்பின் கண்களுக்கு
என்னவிதமான உத்திரவாதத்தை
தரப் போகிறோம்
நாம்.

o

02 பிப்ரவரி 2012

படித்ததில் பிடித்தது - மண்குதிரை கவிதை

நான்

கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்
என்னுடையதல்ல
இந்த வெற்றி

தேம்பியழுகிறேன்
எனக்குச் சம்பந்தமில்லாதது
இந்தத் தோல்வி

ஆடிக் களைத்த மைதானத்தை
நடந்தளந்ததைத் தவிர
சொல்வதற்கு எதுவுமில்லை.

o

(புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை - காலச்சுவடு வெளியீடு)