இந்த வார கல்கி (02-10-2011) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)
27 செப்டம்பர் 2011
21 செப்டம்பர் 2011
இறைவன் வகுத்த நியதி
நான்கு படிக்கட்டுகளுக்கு ஒரு முறை
தேம்பிய அழுகையும் அதைத் தொடர்ந்த அமைதியுமென
நர்சரி படிக்கட்டுகளில் தாவித் தாவி ஓடின மகனின்
தளிர் நடையைப் பற்றி சொல்லிச் சொல்லி
சிரித்துக் கொண்டிருந்தாள் மனைவி.
நினைத்து நினைத்து நகைத்துக் கொண்டிருந்தேன்
நானும் இங்கு அலுவலகத்தில்.
மகிழ்ச்சியில் முழுப் பிரபஞ்சமும் ஆன பொழுதில்
முத்தாய்ப்பாய் வந்து சேர்ந்த தொலைபேசித் தகவல்
பெரும்கூச்சல் போட்டுக் கொண்டிருப்பவனை
பட்டென்று வந்து கூட்டிப் போ என்றது.
அழைத்து வரப் போன இடத்தில் அறிய நேர்ந்தது
அழுதது அவனல்ல வென்று.
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இந்த சிறிய இன்பத்திலுமா?
o
19 செப்டம்பர் 2011
ஒரு கவிதை என்ன செய்யும்? - (படித்ததில் பிடித்தது)
கவிதை இங்கே:
ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்
அ.வெண்ணிலா
பதினோரு மணிக்கு மட்டுமே
வெளியே வர வேண்டும்
காலையில் ஒரு முறை
மத்தியானம் ஒருமுறை
குழாயில் தண்ணீர் வரும்
வேளை தப்பி
வெளியே வருபவர்கள்
மைதானம் பெருக்க வேண்டும்
கடும் விதிகளை அறியாமல்
வயிறு பிசையும்
உள்ளாடை நனைந்து
ஈரம் பரவும்
உள்ள யாரு, வெளிய வா
உரத்து ஒலிக்கும்
அதிகாரக் குரலுக்குப் பயந்து
பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்
தண்ணீர் போகாமல்
வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன
நாப்கின்களால் நிறையும்
கழிப்பறை பீங்கான்கள்.
o
தினம் பத்து பேர்
அந்த நேரத்துக்குப்
போக மாட்டேன்றீங்க
என்ன சொன்னாலும்
உங்க இஷ்டத்துக்குத்தான்
போவீங்க
பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது
அதிகாரத்தின் குரல்
கூச்சம் தொலைக்கலாம்
நின்று மாற்றவாவது
இடம் வேண்டுமல்லவா
கழிப்பறையில்.
o
மாசத்துக்கு
மூணு, நாலு நாள்
லீவு எடுத்தா என்ன பண்றது?
பதில் எதிர்பார்க்காமல்
ஒலிக்கும் கேள்வி
அறை முழுதும் பரவும்
வெட்கம் பூசிய சிரிப்புகளும்
நமுட்டுப் புன்னகைகளும்
வலி தோய்ந்த மௌனங்களும்
ஆங்காங்கு எழும்
கொடுக்குள்ள விலங்கொன்று
விஷம் இறக்கிய மகிழ்வில்
இடம் நகரும்.
o
அங்க நின்னு பேசின
இங்க நின்னு பேசினன்னு
பேச்சு வந்தது
படிச்சது போதும்னு
சோறாக்க வேண்டியதுதான்
அங்க பார்த்தேன்
இங்க பார்த்தேன்
இப்படித் தொட்டேன்
அப்படித் தொட்டேன்னு
யார்கிட்டயாவது சொன்ன
பள்ளிக்கூடம் வர முடியாது
காலையில சீக்கிரம் வரணும்
சாயந்திரம் என் சைக்கிள்ல வரணும்
படிக்கிறேன்னு திமிரா
உங்கம்மாகிட்ட சொன்னா
வீட்டவிட்டு வெளிய வர முடியாது
சொல்றபடி நடந்துக்க
இதெல்லாம் படிக்க வரலன்னு
யார் அழுதா
ஏறிக்கிட்டு நின்ன இடத்துல
நிக்குது பாரு
எல்லாம் ஜோடி ஜோடியா
இந்த வயசுல
தவறாமல் படித்துத்
தொலைக்க வேண்டியிருக்கிறது
மாதராய்ப் பிறந்திடவே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா.
o
எங்க காலத்துல எல்லாம்
கட்டுன ஆளத் தவிர
ஏறெடுத்துப் பார்க்க முடியுமா
அப்ப ஏது இந்த கசமுசால்லாம்
எங்க காலத்துல எல்லாம்
காலேஜ் படிக்கும்போதுதான்
கண்ணயே நிமிரவிடுவோம்
எங்க காலத்துல எல்லாம்
2 படிக்கும்போதுதான்
அதுகூட ஒண்ணு ரெண்டுதான்
இப்ப காலம் கெட்டுப்போச்சு
எட்டாவது பத்தாவது படிக்கிறதெல்லாம்
ஆளுக்கொரு ஜோடி வெச்சிருக்கு
எல்லாக் காலத்திலும்
கைதாகிக்கொண்டிருக்கிறார்கள்
ஆறு வயதுக் குழந்தை
பலாத்கார வழக்கில்.
o
முதல் ரத்தம் பார்த்துக்
கலங்கி
பாதி வகுப்பில் வெளியேறும்
பெண்
ஒரு செவிலித் தாய்க்கான
பிரியத்தை விட்டுச் செல்கிறாள்
தன் வகுப்பறையிடம்!
o
18 செப்டம்பர் 2011
13 செப்டம்பர் 2011
உயிரோசை
12 செப்டம்பர் 2011
திரும்பத் திரும்ப
06 செப்டம்பர் 2011
அந்தக் கணம்
விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு
சுற்றுலா சென்ற இடத்தில்
வைத்து நிகழ்ந்த அந்தக் கணத்தை
காலைச் சிற்றுண்டிக்கான
பில் பணத்தைக் கொடுத்துவிட்டு
கல்லாவை விட்டுத் திரும்புவதற்குள்
நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த என்
இளைய மகன் ஒரு காரின் பின்னும்
தலைதெறிக்க அவனைப் பிடிக்க ஓடிய
என்னைத் தொட்டு நின்ற ஒரு காரின் முன் நானும்
என இடைப்பட்டு நின்ற அந்தக் கணத்தை
சுற்றியிருந்த எல்லாமும் ஸ்தம்பித்துப் போன
அந்த ஒரு கணத்தை
சில சொற்களில் எப்படி சொல்லிவிட முடியும்?
o
05 செப்டம்பர் 2011
03 செப்டம்பர் 2011
பாய்
“பாய்” என்றொரு புதிய வார்த்தையைக் கற்றுக்கொண்ட
மூன்று வயது மகனிடமிருந்து
“பாய்” தான் எல்லாவற்றுக்கும் இப்போது.
காலையில் கண்விழிக்கும்போது
கவனமாய் உயிர்பெறும் “பாய்”
நான் அலுவலகம் போய் வரும் பொழுதுகளில்
நண்பர்கள் பார்க்க வரும் விருந்தினர்
உடன் பயணிக்கும் பேருந்துப் பயணிகள்
கடைகளில் கடைத் தெருக்களில்
எங்கும் எவருக்கும் ஒரே “பாய்” மயம் தான்.
பெரும்பாலும் ஒலியளவு
ஒரேயளவுதான் இருக்கும் என்றாலும்
தனக்கு தடுப்பூசி போடப்பட்ட சமயம்
ஆஸ்பத்திரியில் ஒலித்த “பாயே”
அதுவரைக்கும்
மிக அதிக சத்தத்தோடு ஒலித்த “பாய்”.
அங்காடியொன்றில் காணாமல் போன தினம்
அவனது இருப்பிடத்தை அறிவித்ததும்
அந்த “பாய்” தான்.
o
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)