30 ஏப்ரல் 2009

சில சிந்தனைகள்

எல்லா௫ம்
எல்லாமும்
பெற வேண்டும்.

எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக.

o

தெய்வத்தால்
ஆகாதெனினும்
முயற்சி

மெய் வ௫த்திக்
கூலி த௫ம்.

o

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

நல்ல மனைவியுமா?

o

மாற்றான் தோட்டத்து
மல்லிகையும் மணக்கும்.

அயல் மகரந்த சேர்க்கையை
பூக்கள்
ஆதரிக்கும் வரை.

o

தெய்வம்
நின்று கொல்லும்.

ஏன்?

o

பட்டங்களும் பட்டமும்...!

மக்கள் திலகம்
நடிகர் திலகம்
மக்கள் கலைஞர்
நவரச நாயகன்
காதல் மன்னன்
காதல் இளவரசன்
ஆக்சன் கிங்
அல்டிமேட் ஸ்டார்
உலக நாயகன்
சூப்பர் ஸ்டார்
சுப்ரீம் ஸ்டார்

நடித்துப் பெற்ற பட்டங்களுடன்
நாயகர்கள் சுவரெங்கும்

சுவரெங்கும் சுவரொட்டி
சுவரொட்டி செல்லுமவன்

படித்துப்பெற்ற பட்டம் மட்டும்
பத்திரமாய் பெட்டிக்குள்.

o

தடங்கள்

எப்போதும் போல்தான்
இருக்கிறது.
என்னையும் உன்னையும்
பிரித்த நிலா.

இப்போதும் முத்தமிட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன.
எதிர்வரும் அலைகளோடு
உள் வாங்கும் அலைகள்.

நீ விட்டுப்போன
தடங்களோடு நான்.
இங்கேயும் அங்கேயும்.

இன்றும் நீ வராமலே
இருந்திருக்கலாம்.
ஏனைய நாட்களைப் போல.

பிரியமான என் வேட்டைக்காரன்...!

இடதுபக்கம் மூக்குத்தி அணிந்திருப்பாள் அமுதா.
எதற்கும் வாதிடுவாள் ராதா.
சிரிப்போடுதான் பேசத் தொடங்குவாள் சுசீலா.
சிறிது கூன்போட்டு நடப்பாள் கீதா.
கண்கள் பேசும் பானுமதிக்கு.
கடைசிவரை பேசாமல்
புன்சிரிப்போடு போனவள் மோகனா.
மையிட்ட கண்கள் மாலதிக்கு.
மல்லிகைச் சரமின்றி காண்பது கடினம் நிர்மலாவை.
அபூர்வமாய் சுடிதாரில் வருவாள் ஜெயந்தி.
அடிப்பதுபோல் பேசுவாள் வசந்தி.
கேள்விகளோடே வருவாள் புவனேஸ்வரி.
துருதுருவென்றிருப்பாள் சந்திரா.

தோழியர் எல்லோர்க்கும்
வாய்த்திருக்கும்
ஒன்றிரண்டு பிள்ளைகளுடன்
ஒளிமயமாய் ஒரு குடும்பம்.

எப்படியும் வரக்கூடும்...

நாளை வரும் நாயகனுக்காய் - இந்த
நாற்பதிலும் காத்திருக்கும்
பெண்மான் எனைக் கொண்டு செல்லும்
பிரியமான என் வேட்டைக்காரன்.

தேநீர்ப் பேச்சுக்கள்...

வாராவாரம்
வாடிக்கைதான்.

நடைபாதைத் தேநீர்க்கடையில்
நண்பர்கள் கூடிப் பேசுவது.

அதிக பட்சம் உறுப்பினர்கள்
ஐந்தாறைத் தாண்டாது.

உறுப்பினர்கள் எண்ணிக்கை
ஒன்றிரண்டு கூடிக் குறையும்.

இரண்டு மணி நேரமென்று
எழுதப்படாத ஒரு கணக்கு.

வடை போண்டா தேநீரென்று
வாகாய்த் துவங்கும் பேச்சுக்கள்.

பேச்சுகளின் திசையை
பேச்சுக்களே தீர்மானிக்கும்.

அண்டம் பேரண்டம் முதல்
அரசியல் ஆன்மிகம் வரை.

பொருளாதார சிக்கல் முதல்
பெண் பொருள் தேடும் வாழ்க்கை வரை.

இவன் கவிஞன் என்றானபின்
இப்போது கவிதைகளும்.

அனல் பறக்கும் வாதங்களும்
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

பெரிதாய் ஏதும் தீர்வின்றி
பேச்சை வளர்க்கும் பேச்சுகள்.

வாராவாரம்
வா(வே)டிக்கைதான்.

நடைபாதைத் தேநீர்க்கடையில்
நண்பர்கள் கூடிப் பேசுவது.

o

சிறு கவிதைகள்

01

வந்த போதெதுவும்

சூது வாதில்லை.


போவதற்குள் எத்தனை

பொய்ப்பித்தலாட்டங்கள்?.


O

02

இன்றென்ன

கிழித்துவிட்டோம்.


நாளை மீது

நம்பிக்கை வைக்க.


O

03

இன்னொரு காதலென்றால்

இனிக்கத்தான் செய்கிறது.


இருபதிலும்

அறுபதிலும்.


O

04

நெடுநேரம் பறப்பதில்லை

நைந்த நூலில்

நாள்பட்ட காற்றாடி.


o

05

கவியெழுதி பிழைத்தல்

கடினம்.

காதலின்றி சாதல்

போல.

O

06

காதல் போயின்

இன்னொரு காதல்.


O

07

இருந்தவரைக்கும்

ஏறெடுத்துப் பார்க்கவில்லை.


போனபிறகென்ன

பொன்னாடையும்

பூமாலையும்.


O

விட்டுவிடுங்கள்...!

விட்டுவிடுங்கள்
என்னை.

உங்களின்
விளையாட்டுகளிலிருந்து.

உங்கள் விளையாட்டு விதிகளோடு ஏதும்
உடன்பாடில்லை எனக்கு.

அதிகமும் ஆசையுடன் ஆட வந்தவன்
குதூகலத்தைக் குலைத்தவை உங்கள் விதிகள்.

விளையாட்டு வினையாகும் வித்தை படித்தவனை - உங்கள்
வினையான விளையாட்டால் விலகச் செய்தவர்கள் நீங்கள்.

மேலும்

விளையாட்டை விளையாட்டாய்
விளையாடத் தெரியவில்லை உங்களுக்கு.

o

முன்வைக்கப்படும் கேள்விகளை...

எதிர்ப்படும் கேள்விகளுக்கான நம்
எதிர்வினைகள் என்னென்ன?

மற்றொரு கேள்வியை
மறுமொழியாய் தருவது.

கேள்விகளின் தரம் பற்றிய
கேள்விகளை முன்வைப்பது.

கிண்டல்கள் கேலிகள் என்று
கேள்விகளையே கேள்விக்கு உள்ளாக்குவது.

மௌனமான முகங்களால் கேள்விகளை
முற்றிலும் நிராகரிக்க முயல்வது.

வேறுவழியின்றி வெளிப்படும் நம்
விடைகளிலும் விளங்கத் தெரிவது

முன்வைக்கப்படும் கேள்விகளைப் பலரும்
முழுதாய் வாங்கிக்கொள்ளாததும்.

o

எத்தனை நாட்கள்...!

பிறந்த நாள்

பேர் வைத்த நாள்

கண்ட நாள்

கல்யாணம் கொண்ட நாள்

பிரிந்த நாள்

சேர்ந்த நாள்

சோக நாள்

சொர்க்கம் போன நாள்

நினைவு நாள்



சோற்றுக்கலையும் வாழ்க்கையில்

சொல்லிக்கொள்ளத்தான்

எத்தனை நாட்கள்.



சாஸ்வதம்...

அன்பு
பெரும்வம்பு

ஆசை
அலைக்கழிப்பு

சிற்றின்பம்
சில்லறை அவஸ்தை

பேரின்பம்
பெருங்கனவு

பெண்மனம்
புதைகுழி

பிறவி
பேரவஸ்தை

கலைகள்
காலவிரயம்

மரணம்
சாஸ்வதம்.

o

தருணங்கள்..

முன் எப்போதோ நான்
முன்வைத்த யோசனையாம்.
முற்றிலும் நினைவிலில்லை.
வாங்கிய இடமொன்று நல்ல
விலை இப்போதென்று
கண்களில் ஒளிகொண்டு
கைகளைப் பிடித்தபடி
கடைத்தெருவில் ஒரு நண்பன்.

மகனுக்கு வாங்கிவந்த
மாநிற உடைகுறித்து
மற்றெப்போதும் போலன்றி
மனம்குளிர்ந்த வாழ்த்துக்கள்
மனைவியிடம் வீட்டில்.

இயல்பாய் நிகழும்
இதுபோன்ற தருணங்களில்
இளைப்பாறி களைப்பாறும்
இல்வாழ்வின் நிகழ்கணங்கள்.


o

இன்முகம்...!

எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்

இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்.

0

என்ன செய்ய..?

இன்ன பிற விஷயங்களென்றால்
இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க

பெண் காதல் காமம் என்றால்
பெருக்கெடுத்து ஓடி வரும்

இந்த கவிதை வரிகளை
என்ன செய்ய?


o

கவன ஈர்ப்பு...

மற்றவர் கவனத்தை
ஈர்ப்பதுதான் முக்கியம்.

இன்னபிற
ஆயிரம் வழிகளில்
நீங்கள்

என் வரைக்கும்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதைகளை.

o

நீர்க்கோல வாழ்வு...

எனக்குப் பிடிப்பதெல்லாம்
உனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
உன்னை எனக்கு .

உனக்குப் பிடிப்பதெல்லாம்
எனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
என்னை உனக்கு.

அவரவர்க்கு பிடித்தவற்றோடு
அனுதினமும் சதிராடி
நீர்க்கோல வாழ்வில் நிலைத்து
நெடும்பயணம் விழையும் மனது.

0

மாயமான் விளையாட்டு...

மகன் பிறப்பு குறித்து
நண்பன் ஒருவன்
உதிர்த்த வாசகம்:

"எப்படி இருக்கிறது
நீ படைத்த
கவிதை?"

வாகாய்க் கவிதை செய்ய
வார்த்தைகளோடு
வதைபடும்
மாயமான்
விளையாட்டுகளின்றி

இருக்கவேண்டுமே
இவன் வாழ்வாவது
என்றிருந்தது
எனக்கு.

o

சக்திக்குள்ளே சிவம்...

நாடெதுவென்றபோதும்
நாணம்கொள்ளும்
பெண்கள் அழகு
என்றெல்லாம்
எழுதி வந்தவன்
ஹரிகதா காலாட்சேபம்
சீதாக் கல்யாணம் என்று
தம்பதி சமேதராய்
தரிசனம் தருவதும்

ஒன்பது மணி நேரமும்
அலுவலகத்தில்
ஓயாமல் பேசும் நண்பனை
மனையாள் குழந்தையோடு
மார்க்கெட் ஒன்றில்
மௌனமூர்த்தியாய்
காண நேர்வதும்

தொலைதூரக் கட்டண
தொலைபேசி அழைப்புகளில்
மாதந்தோறும் அரைமணிநேரம்
மறக்காமல் பேசும் நண்பன்
இருவரி பதில்களாய்
ஈமெயில் அனுப்பத்தொடங்குவதும்

ஆகக்கூடி

சக்திக்குள்ளே சிவமென்பது
சாத்தியம்தான் போல.

0

நாற்காலிகள்...

நாற்காலிகளைப் பற்றி சொல்ல
என்ன இருக்கிறது? அவை
நாற்காலிகள் என்பதைத் தவிர.

முக்காலிகளின் இடத்தை அவை
முழுதாய் தேர்ந்துகொண்டாலும்
காலொன்று கூடுதலென்ற
கர்வமற்றவை நாற்காலிகள்

கால் உடைந்த நாற்காலிகளால்
விழுந்தெழுந்த ஓன்றிரண்டு
சம்பவங்களோடும்
நாற்காலிகளுடனான நம்
பிணைப்புகள் பெரிதும்
நம்பிக்கை சார்ந்தவை

இரண்டு கால்களால்
இயங்கி கடக்கும்
நம் காலங்களுக்கு
எப்படியும் இணையானவை.
நாற்காலிகளுடனான
நம் பொழுதுகள்

ஒன்றுக்குள் ஒன்றாய்
பிம்பங்கள் காட்டும்
சலூன் நாற்காலிகள்

அமைதியைக் குலைத்து
ஒலியெழுப்பும்
ஆஸ்பத்திரி நாற்காலிகள்

ஆட்சி அதிகாரமென்று
அமர்க்களங்களில் அடிபட்டு
உடைபடும் நாற்காலிகள்

எவர் மனதிலும்
நிழலாய் நடைபோடும்
காதலியோடு அமர்ந்த
கடற்கரை ஓர
சிமெண்ட் நாற்காலிகள்

உறவின் பிரிவுகளை
உறுத்தலின்றி பறைசாற்றும்
புகைவண்டி நிலையத்தின்
பிளாட்பார நாற்காலிகள்

எங்கும் நிறைந்து இதுபோல்
இயல்பாய் நம்மில் கலந்த
இன்னபிற நாற்காலிகள்

இருந்து இளைப்பாற
எதையெதையோ தேடி
இன்னலுறும் இவ்வாழ்வில்

இருக்கும் இடத்தினில்
இதம் தரும் - இந்த

நாற்காலிகளைப் பற்றி
நாம் என்ன சொல்கிறோம்?
அவைகளை
நாற்காலிகள் என்பதைத் தவிர.

o

பூனைகள்...

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை.

பூனைகள் பொதுவில் வாழும்.
பூனைகள் கூட்டமாய் திரிதல்
பொதுவினில் காண்பதரிது.

பூனைகள் தனித்தும் வாழும்.

வசிக்குமிடம் பற்றியெதுவும்
வரையறைகள் பூனைகளுக்கில்லை.

தகிக்கும் சூழலில் தனித்து
தாழ்தள இடங்களில் நிற்கும்
கார்களுக்கிடையே வாழும்

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை.

நிலை குத்தும் பார்வை கொண்டு
நெருங்கும் வரை நின்று வெறிக்கும்.

நேரெதிரே குதித்துக் கடக்கும்
நெடுஞ்சாலை வாகனங்களுக்கிடையில்

இருத்தல் இறத்தல் குறித்தெந்த
முகாந்திரமின்றி முடிந்து போகும்

பூனைகளின் எளிய வாழ்வு.

0

உறுத்தல்...!

இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.

வருவோர் போவோர் தரும்
இரண்டிரண்டு பிஸ்கட்கள்

அவ்வப்போது யாராவது தரும் - ஒரு
அரை டம்ளர் தேநீர் சகிதம்

அந்த வங்கி வாசல் தேநீர் கடை
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.

இடது கையில் இரண்டாயிரம்
சொச்ச விலை ஷூவுடன்

இருந்தேன் நானும் அந்த
இடத்தில் ஒரு தேநீருடன்.

ஒன்றிரண்டு நிமிடங்கள்
ஒருவாறாய் சிந்தித்தவன்

பர்சில் பளபளத்த
பல வண்ண நோட்டுக்களில்

ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து
ஒரு வாரம் ஆன பின்னும்

குனிந்து அணியும்போதெல்லாம்
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
இந்த
இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.

o

உதவும் பொருட்டு...

லிப்டில்
ஏறிய ஒருவனுக்கு
உதவும் பொருட்டு
விரைவாய் மூடும்
பொத்தானை அழுத்தினேன்.
அதுவரை பேசிக்கொண்டிருந்த
அவன் அலைபேசியின்
தொடர்பு விட்டுப் போனது.

o

சாயல்...

இரு தளங்களுக்கிடைப்பட்ட
படிக்கட்டுகளில் வைத்து
காதலைச் சொன்ன கணம்
விழிகள் உருட்டி
மருண்ட உன் முகத்தின்
சாயலேதுமின்றி
இருந்தது
பிரிவதற்காய் நாம்
தேர்ந்து கொண்ட ஒரு
பிற்பகல் வேளையில்
மூடிய லிப்டின் கதவுகள்
உள் வாங்கிப்போன
உன் முகம்.

0

எதைச் சொல்வீர்கள்?...

ஆசையே துன்பத்துக்கு
காரணம் என்று புத்தன்

ஆசைப்படாதவற்றால் ஆகிவராது
துன்பம் என்பது வள்ளுவன்

பலனை எதிர்பார்க்காதே
பகவான் கீதையில்

இங்கேயே இப்பொழுது
இரு என்று ஓஷோ

பற்றற்று இரு என்று
பலப்பல ஞானிகள்

எதைத் தின்றால்
பித்தம் தெளியும்

என்றிருப்பவனுக்கு
எதைச் சொல்வீர்கள்?

0

நீளும் விரல்கள்...

அவன்
அப்படித்தான்

என்றபடி
இல்லாமல்

எதையும்
எதிர்ப்பான்

என்பதும்
இன்றி

எதுவும்
செய்யக்கூடும்

என்பதாய்
இருக்கும்

பிம்பத்தை நோக்கி
நீள்வதில்லை

பிறிதொரு கையின்
விரல்கள்.

புறங்கூறுதல்
பொருட்டோ

எடுத்து
ஆண்டபின்

எளிதாய் ஏய்ப்பதின்
பொருட்டோ.

o

என் கவிதைகள்...!

பெரும் மமதைக்காரனென்று சொல்.
பித்தலாட்டக்காரன் என்று சொல்.

சிற்றின்பப்பிரியன் என்று சொல்.
சின்னபுத்திக்காரன் என்று சொல்.

சீதாராமன் இல்லை என்று சொல்.
சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.

மதுபுகைக்கு அடிமை என்று சொல்.
மனிதனே இல்லை என்று சொல்.

என்னை
என்ன வேண்டுமானாலும்
சொல்.

என் கவிதைகளும்
என் போல்தானா?
சொல்.

o

பேச்சுத்துணை...

கடிமணம் வாழ்வில்
கட்டாயத் தேவையா
யென்றெல்லாம்
கடிவாளமிட்ட மனதோடு
ஒத்தையில் இருந்தவனை
ஒருவாறு பேசிச் சரிகட்ட
நான் உட்பட
நண்பர்கள் பலரும்

எடுத்துச்சொன்ன பலவற்றில்
ஏகோபித்த ஒன்று
பின்பகுதி வாழ்க்கையில்
பேச்சுத்துணைக்கென்றாவது
பெண்ணொருத்தி வேண்டுமென்பது.

மணமாகிச் சில
மாதங்கள் கழித்து
எதேச்சையாய் எதிர்ப்பட்டவனிடம்
எப்படிப் பேச்சுத்துணை என்றேன்.


எரிக்கும் பார்வையொன்றை வீசி
எதுகை மோனையாய் சொல்லிப்போனான்:

எப்போதும் பேசிக்கொண்டே அவள்.
எதிர்ப்பேச்சின்றி துணையாய் நான்.

0

'போல்'களின்றி...

முதல் மகன்
பிறந்ததும்
மூக்கும் முழியும்
என்போல்
என்றார்கள்.
மூன்று வருடங்களில்
முகம் காட்டிக்கொடுத்தது
முழுவதும் மகன் ஜாடை
மனைவியின் ஜாடை
என்பது.
இப்போது
இரண்டாமவன் பிறந்ததும்
இவனும் என்போல்
என்றே பேச்சுக்கள்
எதிர்வந்து
விழுந்தவண்ணம்.

'போல்'களின்றி
பார்ப்பதில்லை போல
எதையும் எவரும்.

o

29 ஏப்ரல் 2009

குழந்தைக் கேள்விகள்..!

ஏன்
வீடு திரும்ப வேண்டும்?

ஏன்
சக்கரங்கள் சுழல்கின்றன?

ஏன்
அம்மா வேலைக்கு போவதில்லை?

எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும் இத்தனை வாகனங்களில்?

வளர்ந்த பின் தான்
வேலைக்கு போகணுமா?

சாலையோர பூனைகளுக்கு
யார் சாதம் தருவா?

குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை
எப்போதும்
குழந்தைகளின் கேள்விகள்.

o

இசைவாய்...!

அனேக நேரங்களில்
அடித்துப் பிடித்து ஓடி வரும்
ஒருவனுக்கோ ஒருத்திக்கோ
காத்திருக்க முடியாமல்
விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில்
வெறுமனே இருக்க நேர்கிறது.

யாசிக்கும் கைகளுக்கு
யோசித்துக் கொடுப்பதற்குள்
பெரும்பாலும் நகர்ந்துவிடும்
பேருந்துகளிலும்
இருக்க நேர்கிறது.

முன்பைவிட விரைவாய் நகரும்
இவன் விட்டு நகர்ந்த
வரிசைகளையும்
எப்போதும் காண நேர்கிறது.

வேண்டாத நேரங்களில்
வெறுமனே இருக்கும்
சலூன் நாற்காலிகளையும்
காண நேர்கிறது
கணக்கற்ற பொழுதுகளில்.

எதிர்பாராப் பொழுதொன்றில்
இசைவாய் நிகழும் ஒன்றும்
இவளது வருகையைப் போல.

o

வேறு ஒன்றும்...

இன்னொரு முறை
பத்திரமாய்
தரையிறக்கித்
தரப்பட்டிருக்கிறது
இந்த வாழ்வு
என்பதைத் தவிர

வேறு ஒன்றும்
விசேசமாய்
சொல்வதற்க்கில்லை
இந்த இன்னொரு
விமானப் பயணம்.

o

கண்டதும் காணாததும்...

சிக்னலில் கடந்து போன
பெண்ணின்
முகம் உருவம் எல்லாம்
மறந்துபோய்
சாலையைத் துடைத்தபடியே போன
அவளின்
சிவப்பு நிற துப்பட்டா மட்டும்
துல்லியமாய் கண்முன் இன்னமும்.



எப்படிக் கொண்டு சேர்க்க?
காலையில் வீதியில் கண்ட
அந்த ஒற்றைச்சாவியை
அதற்கு உரியவனிடம்.

o

சிதறும் பிம்பங்கள்..

எனக்கான பிம்பத்தை நீ
எது எதற்கோ உடைப்பதுவும்

உனக்கான பிம்பத்தை நான்
உள்வைத்தே உறைவதுவும்

இழுத்துப் பிடித்திருந்தால்
இன்னும் கூட வாழ்ந்திருக்கும்

பிம்பங்களில் நிலைப்பதில்லை
பேரன்பும் பெருவாழ்வும்.

o

இன்னும் கொஞ்சம்...!

இன்னும் கொஞ்சம்

அன்போடு

இருந்திருக்கலாம்

இவள்.



இன்னும் கொஞ்சம்

இயல்போடு

இருந்திருக்கலாம்

இந்த உறவுகள்.



இன்னும் கொஞ்சம்

இசைவாய்

இருந்திருக்கலாம்

இந்த நண்பர்கள்.



இன்னும் கொஞ்சம்

இலவம்பஞ்சாய்

இருந்திருக்கலாம்

இந்த மனசு.



இதுபோல் இன்னும்

இன்னும் கொஞ்சங்களில்

இந்த வாழ்வு.



இன்று...

இன்று
சமையல் கியாஸ்
தீர்ந்து விட்டது.
இன்று
மார்கழி மாதக் குளிர்
சில்லிட்டு இருந்தது.
இன்று
சாலையில் பார்த்த
ஒருவன் இடதுகண் மூடிக்
கட்டுப்போட்டிருந்தது.
இன்று
(இதுவரை சிரிக்காத)
நண்பன் ஒருவனின்
இடைவிடாத சிரிப்பைக்
காண நேர்ந்தது.
இன்று
வந்த கடிதமொன்றில்
நண்பன் தன்
முதல் மனைவியின்
நினைவு நாள்
நாளை என்று
எழுதியிருந்தான்.
இன்று
எழுத முயன்ற
கவிதையில்
பெரிதும் சோகம்
கவிழ்ந்தது.
இன்று
இந்தக் கவிதை
தானே தன்னை
எழுதிக் கொண்டது.

o

வன்கொடுமையில் வாழும் மனது...

பூமலரும் பொழுதுகளில்
புல்லாங்குழல் இன்னிசையில்
பனித்துளியின் புதுப்பொலிவில்
பேரின்பப் பெருவெளியில்
வெண்ணிலவின் தண்ணொளியில்
பெண்ணவளின் கண்ணசைவில்
கொடியிடையின் நடையழகில்
இடைதாண்டும் ஜடையழகில்
மின்மினியின் கண்சிமிட்டலில்

வந்து விழும் வரிகள் அறியா(து)
வன்கொடுமையில் வாழும் மனது.

o

தானாய் விழும் அருவி...

கண்கூசும் வண்ண ஒளி மேடையில்
களைகட்டத் தொடங்கி இருந்தது கச்சேரி.

நெடுநாள் கழித்துப் பார்க்கும்
நண்பர்களின் நலம் விசாரிப்புகள்.

புடவை நகை பற்றிப் பேசவென்றே
புறப்பட்டு வந்திருந்த பெண்கள்.

நாற்காலிகளுக்கு இடைப்பட்ட
நடைபாதைப் பாய்விரிப்பில்
உறங்கிப்போன மகனை கிடத்திவிட்டு
உள்வரிசை நாற்காலி ஒன்றிலிருந்து
மகன்மேல் ஒரு கண்ணோடு
மடிமேல் தாளமிட்ட மங்கை.

குளிர்சாதனங்களின் அளவை குறைத்தபடி
அரங்கெங்கும் நடந்தபடி இருந்த
அவனது இசைகேட்டல் எப்படி இருக்கும்?

ஆரம்பமுதலே அடிக்கடி கைபேசியில்
கைதட்டல் சத்தத்தை யாருக்கோ
கேட்கச் செய்துகொண்டிருந்தவனின்
இசையார்வத்தை எதில் சேர்க்க?

எப்பொழுதும் நிகழக்கூடும்
இவளின் அழைப்பை எண்ணி
கைப்பேசியைப் பார்த்தபடி இவனும்.

தன்னளவில் எதற்கும் பொதுவாய்
தானாய் விழும் அருவியென
ததும்பிக்கொண்டிருந்தது இசையெங்கும்.


o

எப்படி இருந்திருக்கக்கூடும்?...

ஜன்னலோரப் புறாக்களின்
சிறகடிப்போடு
புலர்ந்ததந்த காலைப் பொழுது.

முதல் அழைப்பிலேயே
கண்விழித்து
முகம் பார்த்து சிரித்த மகன்.

பையனை ஏற்றிவிட்டுவந்த
பள்ளிக்கூடப் பேருந்தில்
சிரித்த முகங்களோடு
சீருடைச் செல்லங்கள்.

எப்போதும் போலன்றி
இவளும்
இன்முகம் கொண்டொரு சிரிப்புடன்.

வழியெங்கும் நெரிசலின்றி
வரவேற்ற வழக்கமான சாலை.

அவனது அலுவலக
அடுக்குமாடி கட்டிடத்தின்
அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த
இவன்வயது இளைஞன் ஒருவனின்
மாரடைப்பு பற்றிய செய்தி
வந்து சேர்ந்ததும்
அந்த ஒரு காலைப் பொழுதில்தான்.

எப்படி இருந்திருக்கக்கூடும்
அவனின் காலைப்பொழுது?

o

சொல்லுதல்.....!

சிலதை
சொல்லத் தெரியவில்லை.
சிலதை
சொல்வதா தெரியவில்லை.

சிலதை
சொல்வதற்கில்லை.
சிலதை
சொல்லித் தெரிவதில்லை.

சிலதை
சொல்லாமல் இருக்க முடிவதில்லை.
சிலதை
சொல்லி ஒன்றும் ஆவதில்லை.

சிலதை
சொல்வதால் பெரும் தொல்லை.

இப்படிப் போகும்
சிலதை
எப்படி முடிக்க
என்றும் தெரியவில்லை.

0

அந்தரங்கம்...

இருவர் பேசிக்கொண்டிருந்த
இடத்தருகே
எதேச்சையாய் போய் நின்றேன்.
அப்படியே பேச்சு நின்று
அமல்படுத்தப்பட்டது அமைதி.

இன்னொருவனுக்கு
அனுமதியில்லாத
இருவரின் அந்தரங்கத்தின்
இடையே புகுந்ததறிந்து
வெறுமே சிரித்துவைத்தேன்
வேறெதுவும் தோன்றாமல்.

0

உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க

அச்சில் வந்த
கவிதைகளைப் பற்றி
அதிகமாய்
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

காதல் தவிர்த்து
எழுதலாமே என்கிறீர்கள்.
கவிதையைப் பற்றி
எழுதுவதை தவிர் என்கிறீர்கள்.

இத்தனை கவிதைகளா
இதற்குள் என்கிறீர்கள்.
இத்தனைக்கும் எப்படி
நேரம் என்கிறீர்கள்.

இன்ஸ்பிரேசன் இதற்கெல்லாம்
எது என்கிறீர்கள்?
உணர்வுதளம் தாண்டி
ஒன்றும் வரவில்லை என்கிறீர்கள்.

அச்சுநேர்த்தி பற்றியும்
அதிகம் சொல்கிறீர்கள்.
அடர்த்தி இன்னமும்
வேண்டும் என்கிறீர்கள்.

செய்த கவிதைகளே
நிறைய என்கிறீர்கள்.
அதிகமும் படித்தல்
ஆகச் சிறந்தது என்கிறீர்கள்.

எதையும் வாய்மொழியாய்
சொல்வதற்கில்லை நான்.

என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்
கவிதை ஒன்றை
எழுதிவிட்டு வந்து உங்களை
எதிர்கொள்ளவே ஆசை.

o

பிரிவின் சாசனம்...

ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்?
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.

o

இருப்பு...

எப்படி இருக்கிறாய் என்றாய்.
அப்படியேதான் இருக்கிறேன்
என்றேன்.

இப்படி உன் விழிகள் விரிய
அப்படியே இருத்தலென்பது
அத்தனை சிரமமா என்ன?

o

28 ஏப்ரல் 2009

இயல்பு..

என்னாயிற்று என்றேன்.
எதுவுமில்லை என்றாய்.
பின் எதையும்
கேட்கவில்லை நான்.

இயல்பின்றி போவதில்
சம்மதமில்லை எனக்கும்.

0

நினைவடுக்கில்...

நினைவடுக்கிலிருந்து
நிகர் சாயலொன்றை
வெளிக்கொணரும்
எதிர்ப்படும் ஏதோ
ஓர் முகம்.

எங்கேனும் இருக்கக்கூடும்
எனக்கான சாயலொன்றும்
எவரோ ஒருவரின்
நினைவடுக்கில்.

o

கவிதையை முன்வைத்து...

நர்சரி படிக்கும் மகன்
இன்று விளையாட தேர்ந்து கொண்டது
நான் வாசிக்க வைத்திருந்த
கவிதைப் புத்தகங்களில் ஒன்றை.

தொலைதூர பயணமொன்றில்
டேப் ரெகார்டரில் ஒலித்த
பாடலின் வரிகள்
எங்கோ படித்த கவிதை வரிகளின்
இன்னொரு வடிவம்.

முதல் முதல் பார்த்த
தோழியின் கணவரிடம்
சகஜமாக உரையாட முடிந்தது
என் முதல் கவிதைத் தொகுதியை
முன்வைத்து.

மகன் பிறந்த நாள்
கொண்டாண்டத்தின் இடையில்
நண்பனின் மனைவி ஒருவர்
நான் எழுதிய கவிதை ஒன்றை
வரி மாறாமல் சொல்லி
வாழ்த்தியது பாராட்டுமுகமாய்.

நிகழ் கணங்கள் யாவிலும்
நிறைந்து நடை பயிலும்
கவிதையின் கால்தடங்கள்

o

பிறப்பு...

அந்த
மகப்பேறு மருத்துவமனையில்
மாதாந்திரப் பரிசோதனைக்காக
மனைவியோடு போய்வருகையில்
பார்த்த முகங்களில்
ஒன்று
இன்று எதிர்ப்பட்டது லிப்டில்
கணவன் சகிதமாய்
கைகளில் ஏந்திய சிசுவோடு.
சுகப்பிரசவம் நேற்று என்று
யாரிடிடமோ
சொல்லிக்கொண்டிருந்தவனின்
தோள்களைப் பற்றியபடி
இருந்தவளின் முகத்தில்
சுமையொன்று இறங்கிய
சோர்வும் களைப்பும்.
பேச்சின் தொடர்ச்சியாய்
வந்து விழுந்தது
ஏழு வருடங்களுக்குப் பின்
பிறந்த முதல் பிள்ளை என்பது.
அதுவரை வாடியிருந்த
அவளின் முகமும் கண்களும்
அங்கிருந்த அனைவருக்கும்
பொதுவாய்
வெளிப்படுத்திய ஒரு மலர்ச்சி.
இந்த கவிதை பிறந்து
புறப்பட்டது அந்த ஒரு
மலர்ச்சிப் பிரகாசத்தில்தான்.

o

களவு...

௧ளவு போனது.

கரையோரம் இருந்த
கடிகாரத்தோடு

அருவிக்குளியல்
தந்த ஆனந்தமும்.

0

கொஞ்சமும்...

கொஞ்சமும்
எதிர்பார்த்திருக்கவில்லை
தேநீர்க் குவளையை
வைக்கும் ஸ்டாண்டாக
ஒரு கவிதை புத்தகத்தை
வைத்திருப்பார்
அந்த புத்தகக் கடைக்காரர்
என்று.

o

இன்னபிறவும்....

அநேகமாய்
முடிவதில்லை.

அழகைப் பற்றிய
அவதானிப்பை

அப்படியே
கைமாற்றிவிட.

அதிகபட்சம்
முடிவதெல்லாம்

அதைப்போல
இது என்பதாய்

இன்னொன்றை
இணையாய்ச் சொல்லி

இப்படித்தான்
இருக்கிறது

இன்னபிறவும்
இவ்வாழ்வில்.