28 பிப்ரவரி 2011

இழை பிரிதல்

இழை பிரிதல்



நீலம் சிவப்பு மஞ்சள் சரி
நிச்சயமாய் பச்சை வேண்டாம்

அன்றைய கட்டளை
உடைந்துபோன ஹெலிகாப்டர் பொம்மைபோல்
இன்னொன்று வாங்கி வரவேண்டுமென்பது.

அலுவல் களைப்போடு நுழைந்த
மறதி முகத்தை நோக்கிய
எதிர்பார்ப்பின் கண்களிடம்
பச்சை மட்டுமே இருந்ததாய்
அன்போடு கட்டிப் பிடித்தேன்.

அவ்வளவு தூரம் போனதுக்கு
அதையே வாங்கி இருக்கலாமே
என்றவனின் சொல்லிலிருந்து
எது எதுவோ இழை பிரிந்தபடி.

o

எவ்வளவு தூரத்தையும்

அது நீங்கள்தானென
அறுதியிட முடிந்தது.

அழைத்துப் பேசும் தூரத்தை
அவ்வளவு நீளம் போல்
காட்டிக்கொண்டிருந்தது
அடுத்த ஐந்து நிமிடங்களில்
அப்பாயின்மென்ட்டோடு
காத்திருந்த மருத்துவரின் இருப்பு.

அதனாலென்ன?

இன்னுமதிக தூரத்தையும் கடக்கக்கூடிய
விஷயங்களோடு
இன்னோர் பொழுதில் சந்திப்போம்.

o

(28 -02 -2011 உயிரோசை மின்னிதழில் வெளியானது)

15 பிப்ரவரி 2011

இப்போது இந்தக் காதலர் தினத்தில்

இப்போது இந்தக் காதலர் தினத்தில்

நீ கேட்க வந்த
ஒரு ஆலோசனைக்கு நான் சொன்னது
இப்போதும் நன்றாக என் நினைவில்.
சொல்பவர் தன்னைப் பொருத்திப் பார்த்துச்
சொல்லும் எவ்வொரு ஆலோசனையும்
கேட்பவர்க்கு பொருந்துமா என்று.
இப்போது இந்த காதலர் தினத்தில்
நீ நினைத்துக்கொண்டிருப்பாயா
என்னை இல்லா விட்டாலும்
என் ஆலோசனையையாவது.

o

காத்திருந்த வேளை

இறுக்கமான உடைகளின் சிரமத்துடன்
திரும்பத் திரும்ப கோர்த்துக்கொண்டிருந்தாள்
தன் கால்களை அம்மா
ஒரு அதீத சுவாரசியத்துடன் அவைகளை
பிரித்துப் போட்டு விளையாடிக்கொண்டிருந்த
அவள் பையனை
எதிர்ப்புற பார்வையாளனாய்
பார்த்துக் கொண்டிருந்த
என் கால்களை
எவ்விதம் போட்டுக் கொண்டிருந்தேன்
என்பதுதான்
எவ்வளவு யோசித்தும்
நினைவுக்கு வரவில்லை.

o

தொடர்ச்சி

இன்று வந்து சேர்ந்த
மனங்கவர்ந்த கவியின்
புதுவெளியீட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
நேற்று படித்து பக்க அடையாளம் வைத்துவிட்டு
வந்த புத்தக வரிகளின் தொடர்ச்சியாய்
என்பதை எழுதும் இந்தக் கணத்தில்
இன்னொரு மனங்கவர்ந்த
புத்தகத்தை பிரித்துக் கொண்டிருக்கிறேன்.

o

05 பிப்ரவரி 2011

கவிதை என்பது - கா.நா.சு.

"பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லலாம். புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள் இவை.

வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒரு தரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி.

இரண்டாவதாக , எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்து கவிதை - நல்ல கவிதை - அந்த காலத்து சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி.

இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாதது போல இருந்து, படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி.

கடைசியாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரணகாரியமே இல்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா?

எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை நல்ல கவிதை - உயர் கவிதை என்று நாம் முடிவு கட்டி விடலாம்."

'சரஸ்வதி' ஆண்டுமலர் - 1959

["கா.நா.சு. கவிதைகள்" - சந்தியா பதிப்பகம், 176 பக்கங்கள், விலை ரூ 65/-]

02 பிப்ரவரி 2011

வடக்குவாசலில் ஒரு கவிதை

வடக்குவாசல் ஜனவரி இதழில் வெளியான கவிதை.

இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
அன்போடு
இருந்திருக்கலாம்
இவள்.

இன்னும் கொஞ்சம்
இயல்போடு
இருந்திருக்கலாம்
இந்த உறவுகள்.

இன்னும் கொஞ்சம்
இசைவாய்
இருந்திருக்கலாம்
இந்த நண்பர்கள்.

இன்னும் கொஞ்சம்
இலவம்பஞ்சாய்
இருந்திருக்கலாம்
இந்த மனசு.

இதுபோல் இன்னும்
இன்னும் கொஞ்சங்களில்
இந்த வாழ்வு.

o