சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 மார்ச் 2012

'கல்கி'யில் சிறுகதை

கல்கி (11-03-2012) இதழில் வெளியான என் சிறுகதை.
சிறுகதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)





நன்றி: கதிர்பாரதி.

20 அக்டோபர் 2010

சொந்த ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் – சுகுமாரன் - படித்ததில் பிடித்தது



பத்திரிகை, தொலைக்காட்சி, நூல் வெளியீடு ஆகிய துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இந்த அனுபவத்தின் பின்னணியில் நான் குறையாக உணரும் ஓர் அம்சம் - இந்தத் துறைகளில் தகுதியான எடிட்டர்கள் இல்லை என்பது. ஊடகங்களிலும் பதிப்பகங்களிலும் கூட எடிட்டர் என்பவர் பிழை திருத்துநர் என்றே கருதப்படுகிறார். அபாரமான எடிட்டர்கள் என்று பாராட்டப்பட்ட பல பத்திரிகையாளர்களும் தேர்ந்த பிழை திருத்துநர்கள். வெட்டி ஒட்டுபவர்கள். உண்மையில் எடிட்டர், பிழை திருத்துநர் அல்ல. வெட்டி ஒட்டுபவர் அல்ல. ஒரு பிரதியை வாசிப்பின் தேவைக்கும் மொழியின்
மேன்மைக்கும் இசையச் செம்மைப்படுத்துபவர். அப்படியான ஆளுமைகள் தமிழில் குறைவு. அந்தக் குறைவான ஆட்களில் நண்பர் நஞ்சுண்டன் ஒருவர். ( இந்த வாக்கியத்தை 'அந்தக் குறைவான ஆட்களில் நண்பர் நஞ்சுண்டனும்
ஒருவர்' என்று எழுதுவதுதான் பொருத்தம் என்று அவர் செம்மைப்படுத்தக் கூடும்).

கடந்த 2, 3 தேதிகளில் செம்மை என்ற தன்னுடைய அமைப்பின் சார்பில் நஞ்சுண்டன் “சிறுகதைச் செம்மையாக முகாம்” ஒன்றை தரங்கம்பாடியில் நடத்தினார். எழுதிப் பெயரெடுத்தவர்களும் எழுதத் தொடங்கியிருப்பவர்களுமாக பத்துக்கு மேற்பட்ட இளம் எழுத்தாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். தமிழில் முதல் அச்சாக்கத்தைச் செய்தவரான, பார்த்தலோமியோ சீகன்பால்கு வாழ்ந்து தமிழ்ப் பணியும் இறைப் பணியும் செய்த மண்ணில் நடந்த முகாமுக்கு
ஒரு வரலாற்றுக் கவர்ச்சியும் கூடியிருந்தது. முகாமில் நான் ஆற்றிய உரை இது. யாருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில் இங்கே இடம் பெறுகிறது.

சிறுகதை செம்மையாக்க முகாம்

நண்பர் நஞ்சுண்டனின் நோக்கம் என்னைக் குழப்பத்தில் தள்ளி விட்டிருக்கிறது. சிறுகதை செம்மையாக்க முகாமுக்கு என்னை ஏன் அழைத்தார் என்று புரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. கவிதை எழுதுபவனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் விருப்பமும் அப்படியே அறியப்பட்டிருக்கும் பாக்கியமும் கொண்ட நான், சிறுகதை முகாமில் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறார் என்று தெரியவில்லை.

எனக்கு இரண்டு யூகங்கள் இருக்கின்றன. ஒன்று: கவிதை எழுதுவது லேசு. அதைச் செம்மைப்படுத்துவது இன்னும் எளிது. ஆனால் செறிவாக ஒரு சிறுகதை எழுதப்படுவதும் அதைச் செம்மையாக்குவதும் கடினமான செயல் என்று செல்லமாக இடித்துக் காட்டுவது.

இரண்டாவது: செம்மையாக்கத்திற்குஒரு குழுவை உருவாக்கி வைத்திருப்பதுபோல இலக்கியப் புலனாய்வுக்கும் தனிக் குழுவை வைத்திருக்கிறாரோ என்று சந்தேகிக்கிறேன். இல்லையென்றால் என்னுடைய ரகசியங்களை அவரால் துப்புத் துலக்கியிருக்க முடியாது. நானும் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் என்பதை மேற்படி குழு கண்டுபிடித்து நஞ்சுண்டனிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்க வேண்டும்.

நண்பர்களே, நானும் கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு தொகுப்பாகவே வெளியிடும் அளவு எண்ணிக்கையுள்ள கதைகள். இருபத்தி நான்கு கதைகள். மௌனியின் மொத்தக் கதைகளுக்கு நிகரான எண்ணிக்கை. அண்மையில் வெளிவந்த சில சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க நேர்ந்தபோது, அவையடக்கத்துக்கு உட்பட்டே ஓர் இழப்புணர்வு தோன்றியது. நான் வாசித்த அந்தக் கதைகளை விட, எழுதி அச்சேறிய பின்பு கைவிட்ட என் கதைகள் பொருட்படுத்தப்பட வேண்டியவைதாம் என்று சின்னதாக ஒரு கர்வமும் எழுந்தது. என்னுடைய கதாசிரிய அவதார ரகசியம் பற்றி அறிந்துதான் நஞ்சுண்டன் முகாமுக்கு அழைத்திருக்கிறார் என்றால் மகிழ்ச்சி. சிறுகதைகளில் ஒரு கை பார்த்தவன் என்ற முறையில் நான் முகாமுக்குப் பொருத்தமானவன். அறியாமல்தான் அழைப்பு என்றால் மேலும் பொருத்தம். மேலும் மகிழ்ச்சி. எழுதிய கதைகளின் பக்குவமின்மையை உணர்ந்து, அவற்றை ஒதுக்க முடிந்தது சிறுகதைக் கலைக்கு நான் செய்த சேவை என்றே எண்ணுகிறேன்.

இதுபோன்ற ஒரு முகாமில் அந்தக் கதைகள் செப்பனிடப் பட்டிருந்தால் நானும் சிறுகதையாளனாக்கும் என்று சொல்லிக் கொள்ள முடிந்திருக்கலாம். ஆர்வத்துடன் கதைகள் எழுதப் பயின்று கொண்டிருந்த காலத்தில் ஆல்பெர் காம்யூவின் 'தலை மறைவும் அரசாங்கமும்' ( Exile and the kingdom) என்ற சிறுகதைத் தொகுப்பை ஒருவேளை வாசிக்காமல் இருந்திருந்தால் நானும் சிறுகதைக்காரனாகியிருக்கலாம். செறிவான சிறுகதைகளுக்கு எடுத்துக் காட்டாக நான் மதிக்கும் தொகுப்பு அது.

ஆல்பெர் காம்யூவின் மேற்சொன்ன தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இருக்கின்றன. தன்னுடைய மொத்த எழுத்து வாழ்க்கையில் சிறுகதைகளாக அவர் எழுதியவை இந்த ஆறு கதைகள் மட்டுமே. ஆறு கதைகளும் பொதுத் தன்மை
கொண்டவை. எல்லாருக்குள்ளும் ஓர் அரசாங்கம் இருக்கிறது. நாம் அதை ஆள்பவர்களாக இருக்கிறோம். அல்லது அவ்வாறு நினைத்துக் கொள்கிறோம். ஆனால் வாழ்வனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் நாம் அந்த அரசாங்கத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்பது தெரியும் என்ற மைய உணர்வுதான் இந்த ஆறு கதைகளின் பொதுத்தன்மை. எல்லாக் கதைகளிலும் வரும் மையப் பாத்திரங்கள் தங்களது சொந்த ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு கதையை எடுத்துக் காட்டாகப் பார்க்கலாம்.

ஆடுல்டெரொஉச் நொமன் (அடல்ட்ரஸ் உமன் - ஒழுக்கம் கெட்டவள்) கதையின் மையப் பாத்திரம் ஜெனைன். அவள் கணவன்
மார்ஸெல். பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் பிரான்சின் காலனி நாடான அல்ஜீரியாவில் வாழ்பவர்கள். உலகப் போரை ஒட்டி நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சியில் வியாபார நெருக்கடிக்குள்ளாகிறான் மார்ஸெல். கைவசம் இருக்கும் சரக்குகளை நகரத்தில் விற்பதற்காக மனைவியுடன் பேருந்துப் பயணம் மேற்கொள்கிறான். பேருந்து ஓட்டுநரின் இருக்கைக்கு முன்னால் உள்ள கண்ணாடியில் மோதும் மணற் பிரதேச ஈக்களைக் கவனிக்கும் ஜெனைனிடமிருந்து கதை தொடங்குகிறது. ஜெனைன் வியாபரத்தில் கணவனுக்கு உதவியாளர் கூட. அந்த வறண்ட பிரதேசத்தில் செல்லும் பயணத்தில் தன்னுடைய வாழ்க்கை பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறாள். மார்ஸெல் பற்றிய எதிர்மறையான சித்திரங்கள்தாம் அவளுக்குத் தோன்றுகின்றன. உற்சாகமில்லாதவன், வேலைப்பளுவால் சோர்ந்து போனவன், தன்னுடைய மென் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவன், இவனையா இளமையின் அடையாளம் என்று காதலித்தோம் என்று கசந்து கொள்கிறாள். பேருந்தில் அவளையே கவனித்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சு சிப்பாய் ஒருவன் புன்னகையுடன் நீட்டும் மிட்டாய்களை வாங்கிக் கொள்கிறாள். அதற்குக் காரணம், தான் இப்போதும் பார்வைக்கு உவப்பானவளாக இருக்கிறோம் என்ற சமிக்ஞை சிப்பாயின் செயலில் இருப்பது. அது தரும் மறு உறுதி. அன்று இரவு அவர்கள் ஒரு கோட்டைக்கு அருகிலுள்ள ஓட்டலில் தங்குகிறார்கள். கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் போகிறார்கள். அது ஜெனைனைப் பரவசப்படுத்துகிறது. ஓட்டலுக்குத் திரும்பி வந்த பிறகும் அதே பரவசத்தில் இருக்கிறாள். நள்ளிரவில் மார்ஸெல் தூங்கிய பிறகு ஓட்டல் அறையிலிருந்து வெளியேறி கோட்டைக்குள் சுற்றி அலைகிறாள். அவள் அனுபவிக்கும் பரவசம் இளமை ததும்பிய நாட்களில் மார்ஸெலுடன் கொண்ட உடலுறவை விட உன்னதமானது. கோட்டைக்குள் தரையில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களைப் பார்க்கிறாள். அந்தக் கணம் அவள் வாழ்க்கையின் பொற்கணம். திரும்ப அறைக்கு வருகிறாள். தூக்கம் முறிந்து எழும் மார்ஸெல் முன்னால் உடைந்து அழுகிறாள். என்னவென்று கேட்கிற அவனிடம் ஒன்றுமில்லை என்றுதான் பதில் சொல்கிறாள். ஆனால் ஒருபோதும் அவளுடைய மனமுறிவையோ, கோட்டைக்குப் போனதைப் பற்றியோ அவள் சொல்வதில்லை.

கதை இங்கே முடிந்து விடுகிறது. இப்படிக் கதைச் சுருக்கம் சொல்லும்போதே, சிறுகதை என்ற இலக்கிய வடிவம் வெறும் கதை சொல்லும் ஊடகம் அல்ல என்பதையும் உணர்கிறேன். அது ஒரு பார்வை. வாழ்வின் பல்வேறு சலனங்களை ஒரு மையத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் செயல். இந்த நோக்கிலான உரையாடல் இலக்கியத் திறனாய்வாக மாறக் கூடும். அது செம்மையாக்க முகாமின் குறிக்கோள் அல்ல. ஆனால் செம்மையாக்கத்தை மேற்கொள்ள ஒரு படைப்பின் இயல்பும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதன் கட்டுமானக் கூறுகள் கவனிக்கப்பட வேண்டும். அப்படியான கவனம் இல்லாமல் செய்யப்படும் செம்மையாக்கம், ஒரு புத்திசாலித் தனமான வித்தையாகுமே தவிர படைப்பைச் செழுமைப்படுத்தும் ஜீவனுள்ள நடவடிக்கையாகாது.

தமிழில் இந்த வித்தைகளுக்கு உதாரணங்கள் இருக்கின்றன. முதல் தமிழ் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திர'த்துக்கு ஒரு செம்பதிப்பு கொண்டு வரப்பட்டது. நாவல் பாத்திரங்கள் கொச்சை மொழியில் பேசுகின்றன, ஆசிரியரின் நடையில் வடமொழிச் சொற்கள் அதிகம் என்பன போன்ற குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஒருபடி மேலே போய் பாத்திரங்களின் வடமொழிப் பெயர்கள் தமிழாக்கப்பட்டன. இந்தச் செம்மையாக்கம் படைப்பு நோக்கத்துக்கு எதிரானது. ஓர் அரசியலை உள்ளடக்கியிருப்பது. ஒரு பிரதியைச் செப்பனிடும்போது நினைவிலிருக்க வேண்டிய விதி படைப்புக்குச் செறிவூட்டுதல் மட்டுமே. அதற்கே கூட படைப்பின் இயல்பைப் பற்றிய புரிந்துணர்வு இருக்க வேண்டும்.

இங்கே எடுத்துக் காட்டிய ஆல்பெர் காம்யூவின் கதை, பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
மொழியாக்கத்தின் போதே செம்மையாக்கமும் நடைபெற்றிருக்கிறது என்பதை இந்தக் கதை பற்றி விவாதிக்கும்
விமர்சன நூல்களிலும் ஆசிரியரின் குறிப்புகளிலும் இணையப் பக்கங்களிலும் காண முடிகிறது. கதையின் தலைப்பு கூட பிரதியின் இயல்பை ஒட்டியே செம்மையாக்கப்பட்டிருக்கிறது. மையப் பாத்திரமான ஜெனைன், கதை நிகழ்வில் எந்த இடத்திலும் ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. ஆனால் தலைப்பு - ஒழுக்கமற்றவள். இது ஒரு பைபிள் கதையின் சாரத்திலிருந்து உருவாக்கப்பட்டது. விபச்சாரி என்று குற்றம் சாட்டப்பட்ட பெண்ணைக் கல்லால் அடித்துத் தண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டபோது, யார் அதுபோன்ற குற்றத்தில் ஈடுபடவில்லையோ, அவர் முதல் கல்லை எறியலாம் என்கிறார் யேசு. இந்தக் கதைதான் காம்யூவின் தலைப்புக்கு ஆதாரம். இந்தத் தகவல் தெரிய வரும்போது கதைப்பிரதி மேலும் பொருளடர்ந்த புரிதலுக்கு இட்டுச் செல்லுகிறது. செம்மையாக்கத்தின் தேவையும் பணியும் இதுவாகத்தான் இருக்குமென்று கருதுகிறேன். இந்தமுகாமில் இறுதி செய்யப்படவிருக்கும்
கணேசகுமாரனின் கதை 'வண்ணமானவள்' எனக்கு வாசிக்கக் கிடைத்தது. ஒரு பெண்ணின் உள் உலகைச் சொல்லுகிற
படைப்பு. அதுதான் காம்யூவின் கதையை நினைவுக்குக் கொண்டு வந்தது. கணேசகுமாரனின் கதைத் தலைப்பு அதன் உள்ளடக்கத்துக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

பேச்சைத் தொடங்கியபோது முன்வைத்த முதலாவது யூகத்தை இங்கே நியாயப்படுத்த விரும்புகிறேன். கவிதையைச் செம்மையாக்குவது எளிது. ஏனெனில் கவிதை அதன் மையத்தை நோக்கி விரைகிற தன்மை கொண்டது. அதனால் பெரும்பான்மையான புறத்தகவல்களை தவிர்த்துக் கொள்கிறது. சிறுகதை மையத்தை நோக்கிச் செல்வதற்கே நிறைய புறத் தகவல்களைத் திரட்டிக் கொள்ளுகிறது. இடம், காலம், மொழி, பேச்சு, பண்பாட்டுக் கூறுகள் எனச் சிறுகதை தவிர்க்க முடியாத பல தகவல்களைத் திரட்டிக் கொள்கிறது. இரண்டுக்குமான ஒற்றுமை, இரண்டு இலக்கிய வடிவங்களும் ஒற்றைப் புள்ளியில் குவியவே முனைகின்றன என்பதுதான். இசை சார்ந்த தொழில்நுட்பச் சொற்களில் விளக்குவதானால் கவிதையும் சிறுகதையும் ஒரே சுருதியில் இயங்குபவை. அவற்றில் பல வித்தியாசங்களைக் கேட்க முடிந்தாலும் அவற்றின் குறிக்கோள் ஒரே மைய உணர்வை நெருங்குவது. பாரதியின் 'வரம் கேட்டல்' என்ற கவிதையையும் (தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி' என்ற வரிகள் இடம் பெறும் கவிதை) புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்' கதையையும் சான்றாக வைத்து, இதைப் பார்க்கலாம். பத்துக் கண்ணிகள் அல்லது பத்திகள் கொண்ட கவிதையின் ஒரே உணர்வு மேலான வாழ்க்கைக்கான இறைஞ்சுதல். கௌதமன், ராமன், அகலிகை, லட்சுமணன், காட்சிக்குள் வராத ராவணன், சலவைத் தொழிலாளி - இத்தனைக் குரல்கள் ஒலித்தும், கதை சென்றடைவது சீதையின் தனிமையை. மாறாக நாவல், வெவ்வேறு சுருதிகளில் பற்பல வித்தியாசங்களைக் கொண்டிருப்பது. அது பல உணர்வுகளைப் பகுத்துக் கொடுப்பது. தி. ஜானகிராமனின் 'மோகமுள்' முதல் சமீபத்திய நாவலான ஜோ. டி. குரூசின் 'கொற்கை' வரையிலான எந்தப் படைப்பை எடுத்துக் கொண்டாலும் இது விளங்கும். கவிதையிலும் சிறுகதையிலும் நாம் கேட்பது பல குரல்கள் இணைந்த ஒற்றை முழக்கத்தை. பெரும் கூட்டமாகத் திரண்டு எழுப்பப்படும் கோஷங்களைக் கற்பனை செய்து பாருங்கள். அவற்றின் குவி மையம் ஒன்றுதான். நாவலில் நாம் கேட்பது பல குரல்களின் பல தளங்கள். ஒரு பெரும்
சந்தையில் கேட்பதைப் போல.

ஆக, சிறுகதையுடன் நெருங்கிய உறவு கவிதைக்கு இருப்பதானால்தான், இந்த முகாமுக்கு அழைத்திருக்கிறார்கள் என்ற யூகத்தை நிஜமாக்கிக் கொள்கிறேன்.

@

எப்படி எழுதுவது என்று கற்பிக்க முடியாது என்று எண்ணுகிறேன். பிரபல வெகுஜனப் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன், சில ஆண்டுகளுக்கு முன்பு 'எப்படிக் கதை எழுதுவது?' என்று இளைஞர்களுக்கான வகுப்புகளை நடத்தினார். வெகுஜன இதழியலில் பெற்றிருந்த நீண்ட கால அனுபவம் அவரை அதற்குத் தூண்டி விட்டிருந்தது. பத்திரிகையாளனாகப் பணியாற்றிய காலத்தில் அவருடன் தொழில் நிமித்தமான உறவு ஏற்பட்டிருந்தது. அந்த நெருக்கத்தில் அவர் நடத்திய எ.க.எ. வகுப்புகள் மூலம் எத்தனை கதையாளர்கள் உருவானார்கள் என்று ஒருமுறை கேட்டேன். 'எங்கே, சுமாரா எழுதத் தெரிஞ்ச ஒண்ணோ ரெண்டோ பேர் வந்தாங்க. பாக்கியெல்லாம் ஹோப்லெஸ். நான் கடையை மூடிட்டேன்' என்றார்.

எப்படி எழுதுவது என்று கற்பிக்க முடியாது. ஆனால் எப்படி எழுதக் கூடாது என்று ஓரளவுக்குக் கற்றுக் கொடுப்பது
சாத்தியம் என்று நினைக்கிறேன். அதற்கு இது போன்ற முகாம்கள் உதவும். எது நல்ல படைப்பு அல்லது ஏற்கத்தகுந்த படைப்பு என்று பகுத்துணரும் திறனையாவது, முகாம்கள் உருவாக்கக் கூடும்.

அமெரிக்க எழுத்தாளரான ஜே பரினி, முன்னோடி எழுத்தாளர்களின் வாழ்க்கையை வரலாறாகவும் நாவல் வடிவத்திலும் எழுதுவதில் தேர்ந்தவர். கவிஞரான ராபர்ட் ஃப்ராஸ்ட், புனைகதையாளரான ஜான் ஸ்டீன்பெக் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளையும் தால்ஸ்தாயின் இறுதிக் காலத்தை மையமாக வைத்து 'கடைசி ஸ்டேஷன்' என்ற நாவலையும் எழுதியிருப்பவர். ஸ்டீன்பெக்கின் வாழ்க்கை வரலாற்றில் அவர் குறிப்பிடும் சில நிகழ்ச்சிகளை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ஸ்டீன்பெக்கின் வாழ்க்கை இலட்சியம் ஓர் எழுத்தாளனாவது. அதற்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் படைப்பெழுத்துப் பள்ளியில் சேர்ந்தார். பாடத் திட்டத்தின் பருவம் முழுமையடைவதற்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறவும் செய்தார். வெளியீட்டு வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். பிழைப்புக்காகக் கட்டடக் காவல்காரராகவும் சர்வேயரின் உதவியாளராகவும் பழப் பண்ணையில் தினக் கூலியாகவும் வேலை பார்த்தார். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய எழுத்துகளுக்கு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தது. முதல் நாவலான கப் ஆஃப் கோல்ட் ( Cup of Gold) வெளியானது. சுமாரான வசதியுள்ள வாழ்க்கைக்கு இலக்கியம் உதவியது. முதல் நாவல் வெளிவந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகத்தான நாவலான 'தி கிரேப்ஸ் ஆஃப் ராத்' (Grapes of raath) வெளியானது. 1962-ல் நோபெல் இலக்கியப் பரிசும் வழங்கப்பட்டது. அதற்குச் சற்று முன்னர் ஸ்டீன்பெக் தனக்குப் படைப்பெழுத்துப் பயிற்சியளித்த எடித் மிரியலீசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

'ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்தது போலிருக்கிறது, ஸ்டான்ஃபோர்டில் உங்கள் வகுப்புக்கு நான் வந்து
உட்கார்ந்த நாள். அது இப்போதும் தெளிவாக நினைவிலிருக்கிறது. புகையும் மண்டையும் பளபளக்கும் கண்களுமாக
மகத்தான கதைகளை எழுதுவதற்கான ஒற்றை மூலிகையை உங்களிடமிருந்து கைவசப்படுத்திக் கொள்ளும் ஆவேசத்துடன் இருந்தேன்' என்று எழுதினார் ஸ்டீன்பெக். தொடர்ந்து எடித் படைப்பெழுத்தின் முக்கியமான மூன்று பாடங்களாகச் சொன்னவற்றைக் குறிப்பிடுகிறார். முதல் பாடம்: நல்ல கதை எழுதுவதற்கான ஒரே சூத்திரம், நல்ல கதைகளை எழுதுவதுதான். இதைக் கேட்டதும் ஸ்டீன்பெக் சோர்ந்து விடுகிறார். எடித் தொடர்கிறார். 'எழுதி முழுமையாக்கப்பட்ட கதைகளை மட்டுமே திறனாய்வு செய்ய முடியும். மிக உன்னதமானவை என்று மதிக்கக்கூடிய கதைகள் உலகத்தில் எவ்வளவு இருக்கும்? மிகக் குறைவாகவே இருக்கும். அதனாலேயே கதை என்பது சீரிய இலக்கிய வடிவம் என்று புரிந்து கொள்'. இரண்டாவது பாடம்: கதைக்கான அடிப்படை விதி, ஒன்றே ஒன்றுதான். அது செறிவானதாக இருக்கவேண்டும். எழுதுகிறவனுக்குச் சொல்ல ஏதாவது இருக்க வேண்டும். அவனால் புதுமையாக ஏதாவது ஒன்றைக் கொடுக்க முடிய வேண்டும். அவை என்ன? எப்படி? எந்த அளவு? இந்த மூன்று கேள்விகளைச் சார்ந்ததுதான் கதையின் மேன்மை. மூன்றாவது பாடம்: கதை எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். எந்த உத்தியையும் எந்த நடையையும் உபயோகிக்கலாம். ஆனால் அது கதைக்கு கதாசிரியன் எதிர்பார்க்கும் விளைவை உருவாக்க முடிந்தால் மட்டுமே பொருத்தமானது.

இந்த மூன்று பாடங்களிலிருந்தும் தன்னுடையதான நான்காவது செய்முறையை ஸ்டீன்பெக் உருவாக்கிக் கொண்டார்.
கதாசிரியனுக்கு என்ன எழுதப் போகிறோம் என்பதைப் பற்றிய அடிப்படையான தெளிவு இருக்க வேண்டும். கதையின் மையம் எது என்ற தீர்மானம் இருக்க வேண்டும். ஒற்றை வாக்கியத்தில் கதை இதுவென்று சொல்லக் கூடிய திட்பம் வேண்டும். எல்லாவற்றையும் விடக் கதை வாழ்க்கையின் கணத்தைத் திறக்கிற சூட்சுமத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஜான் ஸ்டீன் பெக்கின் இந்தச் செய்முறை இன்றும் செல்லுபடியாகக் கூடியதுதான் என்று நம்புகிறேன்.

@

'சிறுகதையே படைப்புச்சக்தியின் கடைசிக் குழந்தை. படைப்புச்சக்தி அதற்குப் பின் இன்றுவரையிலும் கருத்தரிக்கவில்லை' என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருந்தார். தமிழில் மட்டுமல்ல, ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் எழுத்துக் கலையின் கடைசி அவதாரம் சிறுகதையாகவே இருக்கிறது. தமிழில் கவிதைக்கு அடுத்து, போஷாக்குப் பெற்று புஷ்டியாக வளர்ந்த வாரிசு சிறுகதைதான். இந்தியத் தரத்துக்கு அல்லது உலகத் தரத்துக்கு உயர்த்திப் பேசக் கூடிய கணிசமான கதைகள் நமது நவீன இலக்கியத்தில் இருக்கின்றன என்றே எண்ணுகிறேன். ஒரு கட்டத்தில் தமிழ்ச் சிறுகதை தேக்க நிலையை அடைந்து விட்டதாகக் கருதப்பட்டது. அது ஓரளவுக்கு உண்மை. எல்லாரும் நாவலாசிரியர்களாகப் பதவி உயர்வு பெற முண்டியடித்துக் கொண்டிருந்த வேளையில், தனக்கிழைக்கப்பட்ட புறக்கணிப்புக்கு
எதிராக சிறுகதை தன்னை செழுமைப் படுத்திக்கொண்டது என்று கருதலாம்.

உலக இலக்கியத்திலும் இந்தப் போக்கைக் காண முடிகிறது. ஆங்கிலத்திலோ, இதர ஐரோப்பிய மொழிகளிலோ இன்று மகத்தான நாவல்கள் எழுதப்படுவதில்லை. இன்றைய சிறந்த நாவல்கள் இதுவரை பொருட்படுத்தப்படாமலிருந்த மொழிகளில் எழுதப்படுகின்றன. அல்பேனியமொழியில் எழுதும் இஸ்மாயில் காதரே, துருக்கி மொழியில் எழுதும் ஓரான் பாமுக் ஆகியோரே புதிய நூற்றாண்டின் பெரும் நாவலாசிரியர்களாக மதிக்கப்படுகிறார்கள். இதன் எதிர்மறை விளைவாக ஆங்கில எழுத்துக்களில் சிறுகதைக்கான இடம் விரிவடைந்திருக்கிறது. அமெரிக்காவின் இன்றைய இலக்கிய அடையாளங்களாகக் கருதப்படும் ரேமண்ட் கார்வரும் டோபியாஸ் உல்ஃபும் சிறுகதைகளுக்காகவே பிரபலமடைந்தவர்கள் என்பது தற்செயலானதல்ல.

இந்தச் செம்மையாக்க முகாம் மூலம், புதிய திறன்கள் வெளிப்பட முடியுமானால், நமது சிறுகதை மேலும் செழுமை பெறும். வேறு எப்போதையும் விட எடிட்டிங் அல்லது செம்மையாக்கம் தேவைப்படும் காலம் இது. இலக்கியத்துடன் முன் அறிமுகம் இல்லாத புதியவர்கள் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள் என்பது ஓர் அம்சம். மற்றொரு அம்சம் தொழில் நுட்பம் சார்ந்தது. இன்று எழுத வருகிற பத்தில் நான்கு பேர் கணினியைப் பயன்படுத்துபவர்கள். இணையங்களில் எழுதப்படும் கதைகளை வாசித்தபோது, அவற்றின் நீளமும் செறிவின்மையும் என்னை ஆயாசப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே பத்திரிகைக் கதைகளும் மாறியிருக்கின்றன. இந்த இரு ஊடகங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெறும் கதைகள் வாசகனாக என்னை அச்சுறுத்துகின்றன. ஒன்று - இவை அந்த ஆசிரியராலேயே செம்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது படைப்பூக்கமுள்ள இன்னொருவரால் செப்பனிடப் பட்டிருக்க
வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நவீன எழுத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று, ஒரு பிரதி வாசிப்புக்கு இன்பமளிப்பதாக அமைய வேண்டும் என்பது. வாசிப்பில் இன்பம் என்பது ஒரு படைப்பு கொண்டிருக்கும் புது நோக்கிலிருந்தும் அது வெளிப்படும் பார்வையிலிருந்தும் எழுவது. வாசகனின் விலாவைச் சொறிந்து விடுவதால் வரும் கிளர்ச்சியல்ல. வாசிப்பனுபவமும் புத்துணர்வும் தரும் சிறுகதைகளைப் படைப்பவர்களுக்கு அவர்களது படைப்புச் செயல்பாட்டின் தூண்டுதலாக இந்தச் செம்மையாக்க முகாம் அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

- சுகுமாரன்

(நன்றி: அந்திமழை.காம்)

02 ஜூன் 2010

குழந்தையின் தாய்

கையில இருக்கிற கல்யாண அழைப்பிதழ பாக்கறச்ச, கண்ல ஜலம் முட்டிண்டு வர்றது. இப்பதான் ஜானு மாமி, தன் பொண்ணுக்கு கல்யாணம் கட்டாயம் வந்துடுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறா. அதைப் பார்த்ததும் ஏனோ எனக்கு அழுகை வந்துடுத்து. பசங்கல்லாம் ஒரு மாதிரிப் பார்க்கறதப் பார்த்துட்டு, கண்ணைத் தொடைச்சுட்டு பாடத்தை ஆரம்பிக்கிறேன்.

இந்த டீச்சர் உத்தியோகத்தை ஏத்துண்டு, இன்னியோட பதினஞ்சு வருசமாறது. அதே பாடத்தைத் திருப்பி திருப்பி சொல்லித் தரதுல ஆரம்பத்துல கொஞ்சம் வெறுப்பா கூடத் தோணித்து. பின் நானே ஒரு மாதிரி சமாளிச்சுண்டேன். சுறுசுறுப்பான பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறச்ச சந்தோசமா இருக்கும். ஏழாம் வகுப்புதான். இருந்தாலும் இந்த பசங்களுக்கு இண்டரஸ்ட் ஜாஸ்தி போலருக்கு. ஏதாவது சந்தேகம் கேட்டுண்டே இருப்பா. நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சுண்டு வர்றேன்.

ஸ்கூல் பெல் அடிக்கறது. நான் என் தோல் பைய எடுத்துண்டு கிளம்பறேன். ஒரு கிலோமீட்டர் நடந்தாதான் வீடு போய்ச் சேர முடியும். வேலைல சேர்ந்த புதுசில நடக்கறது கஷ்டமா தோணித்து. போகப்போக பழகிடுத்து. எதிரே ஒரு ஜோடி உரசிண்டே, சந்தோசமா பேசி சிரிச்சிண்டே போறா. எதிரே இருக்கிறவாள்ளாம் என்ன நினைப்பான்னு ஒரு நினைப்பே இல்லாம, எப்படித்தான் இவாளால இப்படி இருக்க முடியுதோ? ஒருவேளை கல்யாணம் ஆயிருந்தா நானும் இப்படித்தான் நடந்துண்டு இருப்போனோ?. அதெல்லாம் இனிமே எங்கே நடக்கப் போறது? பின்னே இந்த முப்பத்தெட்டு வயசுலே யாராவது கட்டிக்குவாளா என்ன? முப்பத்தெட்டு எல்லாம் ஒரு வயசே இல்லேங்கறேளா? அப்படீனா ஏன் வரவாள்ளாம் ஏதாவது சொல்லி நிராகரிச்சுண்டு இருக்கா?. ஒருவேளை நான் அழகாப் படலையோ அவாளுக்கு?

நான் அழகா இல்லைனா, ஏன் அந்த டீக்கடைக்காரர் அப்படி முறைச்சுப் பாக்கறார்?. ஒருவேளை அவருக்கு மாத்திரம் நான் அழகாப் படற னோ என்னெவோ?. வரவர இந்த பெண் பார்க்க வரவாள்ளாம் வேற வேலையே இல்லாம, இதே ஒரு வேலையா வச்சுண்டு இருப்பளோன்னு தோணுது. சந்தைல மாட்டைப் பாக்கறா மாதிரி பாத்துண்டு, சொஜ்ஜி பஜ்ஜில்லாம் திண்ணுண்டு, என்ன ஜென்மம் இவாள்ளாம்? இன்னக்கி கூட அக்கா யாரோ பெண் பார்க்க வர்றதா சொல்லி சீக்கிரம் வரச் சொல்லி இருக்கா. அஞ்சு மணிக்கு வர்றாளாம். வாட்ச்சை பார்க்கிறேன். மணி நாலரை. போய்ச் சேர்ந்திடலாம். இனிமே கல்யாணம்லாம் நடக்குமான்னு எனக்குள்ளே கேட்டுண்டாலும் மனசுல ஒரு மூலைல சின்னதா ஒரு நம்பிக்கை எட்டிப் பார்க்கத்தான் செய்யுது. இந்த வரனாச்சும் கனிஞ்சுதுன்னா அப்புறம் நானும் எல்லார் மாதிரி "அவரோட" இடிச்சுண்டே சினிமா போலாம். "அவர்" ஆபீஸ் போறச்சே, வாசல்ல நின்னு டாட்டா காட்டலாம். அவர் ஆபீஸ் விட்டு வரச்சே, சிரிச்ச முகத்தோட வரவேற்கலாம். ஹும்... நடக்குமா இதெல்லாம்? பார்க்கலாம்.

யோசிச்சிண்டே வந்ததுல வீடு வந்துடுத்து. வாசல்ல அக்கா பொண்ணு உஷா என்னைப் பார்த்து சிரிக்கிறா. ஆச்சு. இவளுக்கும் வயசு பதினெட்டு நடந்திண்டிருக்கு. இன்னும் மூணு நாலு வருசத்துல இவளும் என்னை மாதிரியே சிங்காரிச்சுண்டு, வர்றவா எதிர்ல நிக்கணும். ஆனா கடவுளே, இவளுக்கு என்னை மாதிரி நடக்கக்கூடாது. வயசுப் பொண்ணு வீட்ல இருக்கறப்போ, நான் இந்த மாதிரி பெண் பார்க்கற படலத்துல இருக்கறது, எனக்கே கஷ்டமாத்தான் தோன்றது. சில சமயம் விஷத்தைக் குடிச்சுட்டு செத்துரலாம்னு கூடத் தோணும். சே. அப்படி என்ன கோழைத்தனம்னு என்னை நானே சமாதானம் பண்ணிப்பேன். வாழ்க்கைனா கல்யாணம் ஒண்ணுதானா? வேற எதுவுமே இல்லையா? சின்ன குழந்தையோட சிரிப்பில்லையா? இயற்கைல இருக்கற அழகெல்லாம் ரசிக்கிறதுலேயே நம்ம வாழ்க்கைய கழிக்க முடியாதா? அப்படின்னு தோணும். ஆனா, அக்கம்பக்கத்தில இருக்கிறவா எல்லாம் நான் தெருவில நடந்து போறச்ச, ஒரு மாதிரியா பாக்கறச்ச, ஏன் என் காதுபடவே 'இவ பாவம்னு' பேசறச்ச மனசு உடைஞ்சிதான் போறது. இன்னக்கி வர்றவாளோட முடிவு சாதகமா இல்லன்னா இனிமே இந்தமாதிரி எதுவும் வேண்டாம்னு அக்காக்கிட்ட சொல்லிடணும். யோசிச்சுண்டே இருந்ததுலே நேரம் போனதே தெரியல. அவசர அவசரமா சிங்காரிச்சிக்கிறேன்.

ஆறு மணி போல அவாள்ளாம் வந்தா. நான் காபி எடுத்துண்டு போனேன். எல்லாம் முடிஞ்சு வழக்கம் போல 'போய் லெட்டர் போடறோம்னு' சொல்லிட்டு போனா. எனக்கு இதுவும் பழைய லிஸ்டுல சேர்ந்துடுமோனு ஏனோ தோணித்து. அப்படி எல்லாம் ஆகக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிண்டேன்.

இப்பெல்லாம் நான் ஸ்கூலுக்கு நடந்து போறச்ச, அக்கம் பக்கம் இருக்கறவா ஒரு மாதிரி பேசறது புரியறது. நான் யார் கூடவோ தொடர்பு வச்சுண்டிருக்கேனாம். அதான் எல்லா வரணும் தட்டிண்டே போறதாம். ஏன்தான் இவாள்ளாம் இப்படிப் பேசறாளோ, இந்த சமூகத்தில கல்யாணம் ஆகாதவா எல்லாரும் இப்படிப்பட்ட பேச்சுகளை எதிர்கொண்டுதான் ஆகணுமோ?

நான் இந்த புது ஆத்துக்கு குடி வந்து ரெண்டு மாசமாறது. அக்காகிட்ட கோவிச்சுண்டு எல்லாம் நான் தனியா வந்துடல. கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கிற வீட்ல கல்யாணமாகாத முதிர்கன்னியா நானுமிருந்தா என்னாகும்னு நினைச்சுப் பார்த்தேன். அப்புறம் என்னால உஷாவோட கல்யாணம் தள்ளிப்போச்சுன்னா, கடவுளே, வேண்டாமே. ஊராரெல்லாம் இப்படிப் பேச ஆரம்பிச்சது தெரிஞ்சதும்தான் நான் இப்படி முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல அக்கா அதிகமா கோவிச்சிண்டா. அப்புறம் எல்லாம் சரியாயிடுத்து. நான் சரியாக்கிட்டேன். நம்மால மத்தவாளுக்கு கெடுதி வரதுன்னா, அவாகிட்ட இருந்து தூர விலகி போறதுதானே நியாயம்…?

இப்பல்லாம் ஸ்கூல் முடிஞ்சதும், சாயந்திர நேரத்துல வயசான படிக்காதவாளுக்கு எல்லாம், நான் எழுதப் படிக்கச் சொல்லித் தரேன். நடுநடுவே, இந்த சுந்தர் பையன் வந்து குறுக்கிடுவான். ஆனா அதுவும் சந்தோசமாத்தான் இருக்கும். அட, சுந்தர் யாருன்னு சொல்லலியோ? சுந்தருக்கு ஒண்ணரை வயசாறது. குழந்தைகள் ஆசிரம் ஒண்ணுலேந்து தத்து எடுத்துண்டேன். சுந்தர் படு சுட்டி தெரியுமோ? சிரிக்கறச்ச கன்னத்துல விழற குழிய பார்த்துண்டே இருக்கலாம். இப்பல்லாம் ஸ்கூல் விட்டு நடந்து வர்றச்ச, எதிரே எந்த கல்யாண ஜோடி வந்தாலும் மனசு சஞ்சலப்படறதே இல்ல. ஏன்னா, இப்ப நான் ஒரு குழந்தையோட தாய் இல்லையா?

o
(வல்லினம்,மலேசியா - ஜூன் இணைய இதழில் வெளியானது)

19 மே 2010

அம்மா மாதிரி (சிறுகதை)

01

வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்?

பன்னிரண்டு வயது பையனால் என்ன செய்ய முடியும்? இவர் இப்படியெல்லாம் செய்வாரென்று தெரிந்துதான் அம்மா முன்னாடியே போய்விட்டாளா?

அம்மாவை நினைத்ததும் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அம்மாதான் எவ்வளவு அன்பாக இருந்தாள்? சாந்தமான அந்த முகம். எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் கனிவு.

"அம்மா தாயே" என்று யாராவது பிச்சைக்காரர்கள் வந்தால் அவர்களுக்கு அரிசியோ, காசோ ஏதாவது கொடுத்தனுப்பும் அந்த பரிவு. அம்மா நிஜமாகவே ரொம்ப நல்லவள்.

அப்பா அப்போதெல்லாம் நன்றாகத்தான் இருந்தார். அம்மாவிடமும் எங்களிடமும் அன்பாக இருப்பார். அடிக்கடி எதையாவது சொல்லி சிரிப்பு வரவழைத்தபடி இருப்பார். எனக்கும் தம்பி தங்கச்சிக்கும் வெளியே எங்காவது போனால் கண்டிப்பாக ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார். அம்மா அப்பாவோடு நான் தம்பி தங்கச்சி எல்லோரும் சினிமா போவோம்.

சாயங்காலம் ஆனால் அம்மா எல்லோரையும் உட்காரச் சொல்லி படிக்கச் சொல்லுவாள். தங்கச்சி பாப்பாவுக்கு ஏ பி சி டி சொல்லிக் கொடுக்கும்போது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

அம்மா எதையுமே சிரித்த முகத்தோடுதான் செய்வாள். அன்று வெள்ளிக்கிழமை. அப்பா வழக்கம் போல் கம்பெனி க்கு வேலைக்குப் போயிருந்தார். சயந்திரம் மூணு மணிக்குப் போனால் இரவு பனிரெண்டு மணிக்குத்தான் வருவார். நானும் தம்பி தங்கச்சியும் பள்ளிக்கூடம் விட்டு வந்தபின் விளையாடப் போய்விட்டோம். அப்போது கூட அம்மா நல்லாதான் இருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து, பக்கத்து வீட்டு ராஜூ ஓடி வந்து "உங்கம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கடா" என்றபோது அவசர அவசரமாய் வீட்டுக்கு ஓடிப் போனவன், அம்மாவைக் கட்டிலில் படுக்க வைத்து, அக்கம் பக்க ஆட்கள் எல்லாம் சுற்றி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அம்மாவின் கண்கள் மேல்நோக்கி பார்த்தவண்ணம் இருந்தன.

அப்பா வந்து சேர்ந்த சிறிது நேரம் கழித்து அம்மா செத்துப் போனாள். அப்பா வாய்விட்டு அழுதார். நான் தம்பி தங்கச்சி எல்லோரும் கேவிக் கேவி அழுதோம். அம்மா இனிமேல் வரமாட்டாள் என்று நினைத்த போது அழுகை இன்னும் அதிகமாய் வந்தது.

02

அம்மா போய் ஒரு வாரமாகி விட்டது. அப்பா சவரம் செய்யாத முகத்துடன் சோகமாய் வெளியே போவதும் வருவதுமாக இருந்தார்.

பின் ஒருவாறு சமாதானமடைந்து வேலைக்குப் போக ஆரம்பித்தார். முன்பைவிட எங்களிடம் நிரம்ப அன்பாக இருந்தார். ஒருநாள் அப்பா படித்துக் கொண்டிருந்த எங்களிடம் வந்து அமர்ந்து,

பாசத்தோடு என் தலையைக் கோதியபடி, "கண்ணா… அம்மா இல்லாம ஏதோ போல இருக்கு இல்ல" என்றார். “ஆமாம்பா” என்றபடி அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். “கவலைப்படாதே, இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு புது அம்மா வரப் போறாங்க” என்றார். அப்பா சொல்வது என்னவோ புரிவது போல் இருந்தது. அதற்கு சரியான அர்த்தம் புரிவதற்குள், வீடு கோலாகலப்பட்டு அப்பா புதிதாய் ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். “இன்னிலிருந்து இவங்க உங்க அம்மா மாதிரி” என்றார்.

அதற்கப்புறம் அப்பாவிடம் பழைய கலகலப்பு தோன்றியது. தம்பியும் தங்கச்சியும் ஒருமாதிரி, புதிதாய் வந்த அம்மாவிடம் ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தனர். எனக்கு மட்டும் என்னவோ அம்மா இருந்த இடத்தில் இந்த “அம்மா மாதிரியை” வைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை. இத்தனைக்கும் “அம்மா மாதிரி” என்னிடமும் அன்பாகத் தான் இருந்தார். அம்மா மாதிரியை “சித்தி” என்று அழைக்கத் தொடங்கியிருந்தோம்.

அப்பாவும் சித்தியும் அடிக்கடி வெளியே கிளம்பிப் போனார்கள். “கூட வர்றேன்” என்று அடம் பிடித்த தம்பியும் தங்கச்சியும் நீண்ட நாளைக்குப் பின் அப்பாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். அப்பா கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினார். அவரும் சித்தியும் தனி அறையில் தான் படுத்தார்கள்.

“நாங்களும் கூடத்தான் படுத்துக்குவோம்” என்று சொல்ல எண்ணிய தம்பியும் தங்கச்சியும் அப்பாவிடம் "வாங்கிக்" கட்டிக்கொள்ள பயந்து சும்மா இருந்தனர். அம்மா இருந்த இடத்தில் இன்னொருவரைக் கொண்டு நிறுத்தியதோடல்லாமல், இந்த அப்பாவால் எப்படி இவ்வளவு கலகலப்பாய், எதுவுமே தன்னை வருத்தாதது போல் இருக்க முடிகிறது என்று பலமுறை நான் எண்ணி வியந்ததுண்டு.

அம்மா போனபோது ஒருவாரம் தாடியும் சோகமுமாய் திரிந்த அப்பாவா, இப்படியெல்லாம் மாறிவிட்டார் என்று நினைத்தபோது மனசின் விம்மல் இன்னும் அதிகமானது. அதெல்லாம் வெறும் வெளி வேஷமோ என்றும் ஒரு யோசிப்பு உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அம்மா இருந்தபோது இருந்த முகம் சுளிக்காத அப்பா, கலகலப்பான அப்பா, பாசமான அப்பா கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பித்தார். நானோ, தம்பி தங்கச்சியோ எதைக் கேட்டாலும் சுள்ளென்று எரிந்து விழ ஆரம்பித்தார். அடிக்கவும் செய்தார். வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. எங்களோடு மட்டுமென்றில்லை. சித்தியிடமும் அதே மாதிரி ஆரம்பித்ததுதான் எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமான ஒன்று.

03

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. அப்பா வெளியே போனவர் இன்னும் திரும்பவில்லை. அன்று வேலைக்கு லீவு போட்டிருந்தார். நாங்கள் உள் அறையில் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தோம். சித்தி வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அப்பாவிற்காக வாசலைப் பார்த்தபடியே எங்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மணி பதினொன்றானது. தம்பியும் தங்கச்சியும் நன்றாகத் தூங்கி விட்டனர். நானும் படுத்திருந்தாலும் தூங்காமல் விழித்திருந்தேன். பன்னிரண்டு மணிபோல் அப்பா வந்தார். சித்தியின் தோளில் கை போட்டபடி நடந்தாலும், நிறைய தள்ளாடினார். நான் படுத்திருந்த இடத்தைத் தாண்டும்போது புதுவிதமான வாசனையொன்று மூக்கைத் துளைத்தது.

அப்பா குடிக்க ஆரம்பித்திருக்கிறாரா? பக்கத்து அறையிலிருந்து பேச்சு லேசாகக் கேட்டாலும் சற்று தெளிவாகவே கேட்டது. "ஏங்க.. இப்படிக் குடிச்சுட்டு வந்திருக்கீங்களே...உங்களுக்கே இது சரியாப் படுதா?" ஏய்..நான் அப்படிதாண்டி.. சும்மா வந்து படுறீ.. என்று ஆரம்பித்து அப்பாவின் வித்யாசமான பேச்சுக்களைஅன்றுதான் கேட்டேன்.

தொடர்ந்து சித்தி ஏதோ பேசவும், அப்பா சித்தியை அடிக்கும் சத்தமும் தெளிவாக கேட்டது. 04அப்பா அன்று சீனு மாமாவைப் பார்க்க போயிருந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் அங்கு போவதும் வருவதுமாக இருந்தார். சில நேரங்களில் இரவில் நேரங்கழித்து வருவார். அப்படி ஒன்றும் சீனு மாமா வீடு கிட்டத்தில் இல்லை. பஸ் பிடித்துப் போக வேண்டும். என்றாலும், அப்பா அடிக்கடி, சில நாட்களில் வேலைக்கு லீவு போட்டுவிட்டு, போய்வந்தபடி இருந்தார். தாமதமாக வரும் நாட்களில், சித்தி ஏதாவது கேட்டால் தயங்காமல் அடிப்பார்.

அவர் அடிப்பதும், அது அவருக்குள் போயுள்ள சரக்கு பண்ணும் வேலை என்று சித்தி சமாதானப்பட்டுக்கொள்வதும் வரவர வாடிக்கையாய்ப் போய்விட்டது.இப்போதெல்லாம் அப்பா குடிக்காத நாட்கள் குறைந்து கொண்டு வந்தன. ஆனால், அந்த மாமாவைப் பார்க்க போய்விட்டு வரும் நாட்களில் மட்டும் நிரம்ப சந்தோசமாய் இருப்பார்.

சித்தியை நிரம்ப கொஞ்சுவார். தனி அறையில் தான். எங்கள் மேல் பாசம் பொங்கும். அதற்காகவே, அவர் அடிக்கடி அந்த மாமா வீட்டுக்குப் போகக்கூடாதாவென்று இருந்தது எங்களுக்கு. அன்றும் மாமா வீடு போயிருந்த அப்பாவின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். இம்முறை போகும்போது சித்தியையும் கூட்டிக் கொண்டு போயிருந்தார்.

கேட்ட தம்பியிடம் "சித்திக்கு அவங்க அப்பா அம்மாவைப் பாக்கணுமாம்" என்று சொல்லிச் சென்றார். வீடு அன்று வெறிச்சென்று இருந்தது. தம்பியும் தங்கச்சியும் வெகு நேரம் விழித்திருந்து விட்டுப் பின் தூங்கி விட்டனர். நான் மட்டும் விழித்துக் கொண்டிருந்தேன். ரொம்பத் தாமதமாக அப்பா வந்தார். அப்பா அன்று தன்னுடன் யாரோ ஒரு புதுப் பெண்ணை அழைத்து வந்தார். பயந்த சுபாவத்துடன் அப்பாவை உரசியபடி நடந்து வந்தது.

நான் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன். அந்தப் பெண் அப்பாவிடம் "இதுதான் பெரிய பையனா" என்றது. "ஆமாம்" என்றவர் என்னருகில் வந்து லேசாக என் தலையை வருடினார். "இது யாருப்பா?" என்றேன். நம்ம சீனு மாமாவோடு பொண்ணு, இனி இவளும் உங்க அம்மா மாதிரிதான்" என்றார்.

o
(நன்றி: நவீன விருட்சம்)

06 ஏப்ரல் 2010

கியான்

கியான் செத்துப் போனாளாம்.

விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணத்தைப் பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்சனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர் ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக் கொண்டிருந்தான். தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோசமாய் குலைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாரையும் அந்த செய்தி பாதித்ததாய் தெரியவில்லை.

கியான் அப்படி ஒன்றும் அத்தனை பிரபலமான ஆளில்லை. சிறுபிள்ளைகளுக்கு அவள் ஒரு விளையாட்டுப் பொருள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவள் ஒரு பரிகாசப் பொருள். பெரியவர்களுக்கு அவளொரு பரிதாப ஜீவன். சுருங்கச் சொன்னால் கியான் ஒரு மனநிலை சரியில்லாதவள். ஊராரின் வார்த்தையில் 'பைத்தியம்'.

கியான் மற்றவர்களைப் போலில்லை. திடீர் திடீரென்று சிரிக்கின்ற ரகமோ, கையில் கிடைத்ததை எடுத்து வீசுகின்ற ரகமோ இல்லை. எப்போதும் எங்கேயாவது நடந்து கொண்டே இருப்பாள். அவள் எங்கிருந்து வருகிறாளென்று எவருக்கும் தெரியாது. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளென்றும், வரதட்சணைக் கொடுமையால் நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதால் இப்படி ஆனதாகவும், திருமணமானவளென்றும், யாரோ வைத்த சூனியத்தால் இப்படி ஆனதென்றும் பலவாறு கதைகள் உண்டு கியானைப் பற்றி. இவற்றில் எது உண்மையென்று யாருக்கும் தெரியாது. கியான் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியாது. ஆனால், கியான் என்று அழைக்கையில் அவள் திரும்பிப் பார்ப்பாள்.

கியான் எங்களூரில் பிரபலமானதே ஒரு சுவாரசியமான கதை. அது ஒரு நல்ல மழைக்காலம். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய் பெரிதாய்ப் பெய்த மழை, அன்று மெலிதாய் தூறிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் மழைத்தண்ணீரில் கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். கியான் வழக்கமான பேருந்து நிறுத்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். பஸ் நிறுத்தத்திற்கு எதிரே டீக்கடை ஒன்று உண்டு. டீக்கடை நாயரின் இரண்டு வயதுக் குழந்தையும் தெருவோரம் மழையில் விளையாடிக் கொண்டிருந்தது. வேகமாக வந்து கொண்டிருந்த லாரியொன்று அந்த இடத்தை நெருங்குகையில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, சாலையின் குறுக்காக ஓடி வர ஆரம்பித்தது. எந்தவித விபரீதமும் நிகழாமல், கியான் வேகமாய் ஓடிப் போய் குழந்தையை அணைத்தபடி காப்பாற்றி, மறுபுறம் கொண்டு வந்த அந்த தினத்திலிருந்துதான் கியான் எங்களூரில் நல்ல பிரபலம்.

…எடுப்பாய் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் முன் பற்கள் இரண்டும் அந்த முகத்திற்கு சற்று விகாரமான தோற்றத்தைத் தந்தாலும் இதுவரை எந்தக் குழந்தையும் அவளைப் பார்த்துப் பயந்ததாய் எந்தக் கதையும் இல்லை. ஆனால், கியானின் அட்டகாசமென்று சொல்லவேண்டுமென்றால், அதைப்பேருந்துகள் வந்து நிற்கும் நேரத்தில் காணலாம். அதுவரை அமைதியாய் தன் (!) இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள், ஏதாவது பேருந்து வரும் சமயம், வேகமாய் ஓடி வந்து பேருந்தின் பக்கவாட்டில் தடதடவென்று தட்டுவாள். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து, அது பெண்களாய் இருந்தாலும், "மாமா மாமா" என்று சத்தமிடுவாள். ஆனால் இதுவரை அவள் பேருந்துக்குள் ஏறவோ, கல்லால் அடிப்பது போன்ற செயல்களிலோ ஈடுபட்டதில்லை. ஒரு சில வேளைகளில், யாரையாவது சுட்டிக் காட்டி, "இந்த மாமாவைக் கட்டிக்கிறியா?" என்றால், அதற்கு "இக்கும், போ மாமா" என்றே பதில் சொல்வாள். அப்படிச் சொல்கையில் அவள் லேசாக வெட்கப்படுவதைப் போல் கூடத் தோன்றும்.

கியானுக்குக் கோபம் வரவழைக்கும் விஷயம் ஒன்று உண்டு. "டமுக்கு டப்பான்" என்ற வார்த்தையில் அப்படி என்ன இருக்கிறதோ தெரியாது. சிறுவர்கள் யாராவது விளையாட்டுக்காக அந்த வார்த்தையைச் சொன்னாலும், கண்களில் அக்னி ஜ்வாலை தெறிக்க, தெருவில் கிடைக்கும் கற்களை எடுத்து வீசத் தொடங்கி விடுவாள். கூடவே "அய்ய.. இக்கும்.. போ" என்று கத்திக்கொண்டே சிறுவர்களைத் துரத்திக்கொண்டு ஓடுவாள். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம், பழைய கியானாய் பேருந்து நிறுத்த பெஞ்சில் அவளைக் காணலாம். வந்து அமர்ந்த சிறிது நேரம் வரை, அவள் முகத்தில் சிறிய கோபம் ஒன்று இருக்கும். அதுபோன்ற நேரங்களில், வழக்கமான "மாமா மாமா" போன்ற கூச்சலோ, பேருந்துகளைத் தட்டுவது போன்ற செயல்களிலோ அவள் ஈடுபடுவதில்லை. ஆனால் எல்லாம் சிறிது நேரம்தான். பிறகு தன் வழக்கமான வேளைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவாள்.

அந்தக் கியான் செத்துப் போனாளாம்.

அது அங்கு யாரையும் பாதித்ததாய் தெரியவில்லை. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாவரும் தன் வேலையைப் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தன(ர்).

இரண்டு நாட்கள் போனது. பேருந்து நிறுத்தமே தன களையை இழந்தது போல் இருந்தது எங்களுக்கு. திடீரென்று "இக்கும்.. போ" என்ற குரல் கேட்க ஆரம்பித்தது. தலையில் ஒரு கட்டுடன் தன் இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள் கியான். தலைக் காயம் பற்றிக் கேட்டவருக்கெல்லாம் "இக்கும்.. போ" என்றே பதில் சொன்னாள். ஒருவேளை அவள் யாராவது குழந்தையைக் காப்பாற்றப் போய் அடிபட்டிருக்கும் என்று யாவரும் நினைத்துக்கொண்டோம். அந்த "இக்கும் போ" என்ற சத்தமும், "மாமா மாமா" என்ற அழைப்பும் மறுபடி ஒலிக்க ஆரம்பித்ததில், இழந்த தன் களையை மறுபடி பெற்றிருந்தது எங்களூர் பேருந்து நிலையம்.

(உயிரோசை 05-04-2010 மின்னிதழில் வெளியானது)

0