30 நவம்பர் 2009

சுருதி லயம்

பிரிந்து கூடும்
கூடிப் பிரியும்
அநேகர் வரவை
கண்டிருந்த
அந்த இடம்

கால தேச
எல்லைகள் கடந்து
பதினோரு
வருடங்களுக்குப்
பின்னிகழ்ந்த நம்
சந்திப்பின்
களமாய் இருந்தது
அன்றைக்கு.

கூடிப் பேசிக்
கழித்ததில்
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா.

ஆயினும்
அன்றைய நம்
முகங்களின்
அறிமுகத்தோடு நாம்
ஆரம்பித்திருந்தால்

சுருதி சற்று
கூடியிருக்கலாம்
நமதந்த
இசைக் கச்சேரியில்.

O

மீட்டாத வீணை

இங்கிருந்து
போயிருந்த
என்னைப் போலவே
அங்கிருந்து
அவர்கள்
வந்திருந்தார்கள்.
அவரவர்
இடங்களைக் குறித்தே
அதிகமும்
பேசிக்கொண்டிருந்தோம்
அயர்ந்து
திரும்பும் வரை.
தன் பொருட்டும்
ஏகும் விரல்களுக்காக
மீட்டாத வீணையென
காத்திருக்கும்
மீளாத் துயரில்
அந்த இடம்.

o

14 நவம்பர் 2009

வயிறு

இரவு கண்விழிக்கும்
இளங்காலைப் பொழுதொன்றில்
ஒல்லி தேகத்தின்
ஒட்டிய வயிறோடு
சாலையோரக் கால்வாயை
சுத்தப்படுத்திக்கொண்டிருந்த
சிலரோடு
கார்களைக் கழுவிக்கொண்டிருந்த
ஒருவனையும்
பார்த்தபடி
போய்க்கொண்டிருந்தேன் - அந்த
பூங்காவை சுற்றி
பெருத்த வயிற்றின்
சுற்றளவில் - ஒரு
இன்ச்சாவது குறைத்துவிடும்
உறுதியோடு.

o

08 நவம்பர் 2009

மிதந்தலையும் வெண்ணிறப் பறவை

01

தூக்கி எறியுங்கள்
உங்கள் தம்புராக்களை
தூளியில் உறங்கும்
சிசுவின்
தூக்கம் கலையும் முன்.

o

02

பறத்தல் என்பதைத் தவிர
வேறெந்த முகாந்திரம்
இருக்கப் போகிறது
வெளிர் நீல வானில்
மிதந்தலையும் அந்த
வெண்ணிறப் பறவைக்கு.

o

03

இங்கிருந்து
கொடுக்கப்பட்டவைகளே
எல்லாம் என்றிருக்க
எதைக் குறித்து
சொல்லிக் கொண்டலைகிறோம்
நான் நானென்று.

o

05 நவம்பர் 2009

கவிதை-பத்து

முதலாவது
எது குறித்தென்ற
தெளிவு வேண்டும்.

இரண்டாவது
இதுவரை இதுபோல்
இல்லாதிருக்க வேண்டும்.

மூன்றாவது
முந்தையவற்றிலிருந்து ஓரடி
முன்னே போக வேண்டும்.

நான்காவது
நாளை எங்காவது
பேசப்பட வேண்டும்.

ஐந்தாவது
அதுவாய் இறங்கி
வரவேண்டும்.

ஆறாவது
அடுத்தவரைக் கவர
ஆகிச் செய்ததாய்
இருக்கக் கூடாது.

ஏழாவது
ஏதாவது தொக்கி
நிற்றல் நலம்.

எட்டாவது
எதையாவது அதுவே
சொல்லவேண்டும்.

ஒன்பதாவது
ஓசை நயமிருத்தல்
ஒன்றும் குற்றமில்லை.

பத்தாவது
பிறந்த கவிதை
கொள்ள வேண்டும்
பொருத்தமான
தலைப்பொன்றும்.

o

[நன்றி: keetru.com]