19 டிசம்பர் 2011

இரண்டு கவிதைகள்

(19-12 -2011) தேதியிட்ட உயிரோசையில் வெளியானது.இந்த நாள்

மூன்று முகங்களுமே எதிர்ப்படவில்லை.
இரண்டாவது வந்திருக்கலாம்.
ஒன்று கூட
இல்லாமல் போகுமளவுக்கு
என்னதான் செய்ததிந்த
ஒரு நாள்.

o

புகைப்படத்தில்

என்னையும் உன்னையும் அழைத்தவன்
அவனை அழைக்கவில்லை.
என்னையும் அவனையும் அழைத்த நீ
இவனை அழைக்கவில்லை.
உன்னையும் இவனையும் அழைத்த நான்
அவனை அழைக்கவில்லை.
நான் நீ அவன் இவன்
எல்லோரும் சேர்ந்திருக்கும்
இந்தப் புகைப்படத்தை
என்ன செய்வதிப்போது
என் இனிய நண்பனே.

o

17 டிசம்பர் 2011

தமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல்

01.05.10

1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், விக்கிரமாதித்தன், கலாப்பிரியா, தேவதேவன் என்று அன்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பயணித்த படைப்பாளிகள் வாழ்ந்த காலம். தமிழ் சிற்றிதழ்களின் பொற்காலம். கவிஞர் சமயவேல் இக்காலத்தின் கடைக்குட்டி. 1970கள், 1980களில் முக்கிய இலக்கியத் தலங்களாக மதுரை, சென்னை, நெல்லை, கோவில்பட்டி ஆகிய இடங்கள் இருந்தன. தனது வாழ்வின் மிக இளமையான காலத்தை இந்த இடங்களில் வாழ்ந்தவர் சமயவேல். கூர்மையான இலக்கியப் பார்வையும், புதிய தர்சனங்களைக் கண்டுணர்தலும் இவரது ஆகிருதியை அப்போது உயர்த்துகிறது. காற்றின் பாடல், அகாலம், தெற்கிலிருந்து சில கவிதைகள்(தொகுப்பு) ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.

தீராநதி: கடந்த மூன்று பத்தாண்டுகளின் தமிழ்ச் சூழல் இயக்கத்தில் தீவிர அரசியல், இலக்கிய விமர்சனம், கவிதை என்று பல்துறைகளில் தீவிர பங்கேற்பாளராகவும், கவனமான பார்வையாளராவும் இயங்கியுள்ளீர்கள். முதலில் கவிதையில் இருந்து தொடங்கலாம்.

சமயவேல்: எதிலிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். பேட்டி என்பதே தன்னைத் தீர்த்துக்கொள்வதுதான். நம்ம self. நாம என்னவாக இருந்தோம்; இருக்கிறோம் என்பதை revisit செய்வதுதான்.

தீராநதி: இன்றைக்குக் கவிதை என்பது (தலித்திய, பெண்ணிய, விளிம்புநிலை மக்கள் கவிதைகள் தவிர) அதிகம் வாசிக்கப்படாத, நீர்த்துப்போன வடிவமாகச் சுருங்கிவிட் டதாகத் தெரிகிறது. நகைச்சுவை குறித்து தாவோ கூறியது போல மூளையில் சிதறும் ஒரு பொறியாகவோ, அல்லது சித்தர்களின் வாழ்க்கை மற்றும் தத்துவ விசாரப் புலம்ப ல்களாகவோ கூட கவிதை இருப்பதில்லை.

சமயவேல்: கவிதை என்பது ஒரு நுட்பமான, ஆழமான ஒரு ஆளுமையைப் பாதிக்கிற ஒரு சிறு பொறி முதல் பெரும் காட்டுத் தீ வரையான ஒரு பெரிய விஷயம். நம்ம பாரதி, பாப்லோ நெருதா போல ஒரு தேசியத்தையே பாதிக்கிற காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை. புதுக்கவிதை ஒரு பிரவாகமாக பெருக்கெடுத்து ஓய்ந்தபின்னர், மூத்த கவிஞர்கள் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதினார்கள். (உதாரணம்: தேவதேவன்) இளைஞர்கள் மூத்த கவிஞர்களை நகல் எடுத்துக் கொண் டிருந்தார்கள். தற்போதுதான் ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகளாக இளைஞர்கள் கவிதையில் புதிய சாளரத்தைத் திறந்துவிட்டுள்ளார்கள். பெண்ணியக் கவிஞர்களின் வருகை இதில் முதல் திருப்பம். மாலதி மைத்ரி, சுகிர்த ராணி, குட்டி ரேவதி போன்றோரின் பெண்ணியச் சொல்லாடல்கள் மூலம் தங்கள் குரலை அவர்கள் மீட்டெடுத்துள்ளனர். தலித்துகளின் குரல் தமிழ் இலக்கியத்தில் எப்போதுமே இருந்தது கிடையாது. இப்போது கவிதை மூலம் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

தீராநதி: 1980-களின் இறுதிப்போக்கில் அல்லது 1990-களில் தேவதச்சன், சமயவேல் போன்றவர்கள் ஒருவித எளிமையுடன் கூடிய அற்புதமான அமைதி கவிந்த கவிதைகளை எழுதத்தொடங்கினர். அதன் உள்ளுலகம் விகசிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. இது இப்போது இருக்கிறதா?

சமயவேல்: நான் கூறுவதை ஆண் மையச் சிந்தனையாகக் கூட கூறலாம். Passage Into Darkness என்ற நாவல் என்று நினைக்கிறேன். அது ஐரிஷ் பெண் எழுத்தாளர் எழுதியது. பெண் உலகத்தை முழுமையாக முன்வைக்கும் வகையில் அந்தப் படைப்பின் பயணம் விகசித்துக் கொண்டே செல்கிறது. டென்னசி வில் லியம்ஸ் படைப்புகள் அளவுக்குக்கூட பெண் உலகப் பிரச்சனைகள் இங்கு பேசப்படவில்லை. அவர்கள் உடல் மொழி என்பதை மட்டும் சுற்றிவருகிறார்கள் இல்லையா? இதை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எழுப்பும் அருவருப்பான கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே இவர்கள் நேரம் சரியாகிவிடுகிறது. இவர்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளனர். அவர்கள் நாவல் உலகுக்குள் செல்கிறபோது நீங்கள் சொல்கிற விகசிப்பு சாத்தியப்படுகிற வாய்ப்புகள் உள்ளன. அப்புறம், ஆண்கள் ம ட்டுமல்ல மொத்த சமூகமே அப்படித்தான் உள்ளது.

தீராநதி: நீங்கள் கூறுகிற பெண்ணிய, தலித்தியக் குரல்களைத் தாண்டி முழுமையான கவிதைகள் என்று என்ன வந்துகொண்டிருக்கின்றன?

சமயவேல்: யவனிகா ஸ்ரீராம் அரசியல் பிரக்ஞை உள்ள கவிஞராக இருக்கிறார். ராணி திலக் வாழ்க்கை உள்ளீடுகள், சாயல்களை உள்வாங்கி எழுதுகிறார். ஸ்ரீநேசன் வாழ்வின் பல்வேறு வண்ணங்களைக் கண்டடைந்து எழுதுகிறார். அய்யப்ப மாதவன், ஸ்ரீசங்கர் போன்றவர்களிடம் புதிய மொழி உள்ளது. லீனா மணிமேகலை பெண் ணியம், உடல்மொழி தவிர பாலியல் சுதந்தரம் பற்றி எழுதுகிறார். தற்போதைய தமிழ்க்கவிதைகளை possitiveஆகவே பார்க்கிறேன். புதிய இளைஞர்கள் பழைய பாதிப்புகளிலிருந்து விடுபட்டு, விடுதலையாகி, புதிய கவிதா மொழியைக் கண்டடைந்துள்ளனர்.

தீராநதி: இதில் மரபான தமிழ்க்கவிதையில் இருந்து எடுத்துக்கொள்வது எப்படி இருக்கிறது?

சமயவேல்: 2000 வருடத் தமிழ்க்கவிதை மரபில் தற்காலக் கவிதை எங்கே நிற்கிறது என்று விக்கிரமாதித்தன் கேட்கிறார். அதுபோலவா?

தீராநதி: நான் கேட்க விரும்புவது சங்கம் முதல் பாரதி வரை தொடர்ந்த தமிழ்க் கவிதை கன்னி விடாமல் தொடர்கிறதா? தமிழ் வாழ்க்கை சங்கக் கவிதைகளில் உள்ளது. சங்கக் கவிதைகளை வாசிப்பதுகூட இன்று சில கவிஞர்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. அது தேவையில்லை என்கிறார்கள். உலகக்கவிதை வாசிப்புமட்டும் போதாதா என்கிறார்கள். நான் மலினப்படுத்தப்பட்ட சந்தம், யாப்புகளைக் கூறவில்லை. 1970, 1980-களின் முக்கியக் கவிதைகள் என்பது மேற்கத்தியத் தத்துவங்களின் நகல்களாகத் தானே இருந்தது? மில்ட்டன், ராபர்ட் ஃபுரோஸ்ட், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, பைரன் என்று யாரையாவது பின்பற்றித்தான் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தோம். இ ன்று அதுபோல உலகக் கவிஞர்கள் இல்லாததுதான் தேக்கத்துக்குக் காரணமா?

சமயவேல்: 1970-களில் ஏற்பட்ட நெருக்கடியே இதுதான். கவிதையில் எந்த அளவு தத்துவம் இருக்கலாம்; இருக்கக்கூடாது என்ற விவாதம் எழுந்தது. தேவதச்சன், ஆனந்த் போன்றோர் அப்போது தத்துவத்தை நேரடியாக எழுதிக்கொண்டிருந்தார்கள். தற்போது தேவதச்சனின் குருவி கவிதைகள் எளிமையையும், அமைதியையும் கொண்டுள்ளன. அற்புதமானவை அவை. இருந்தாலும் கவிதைக்கும் தத்துவத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. வாழ்க்கையின் நித்தியமான உண்மைகளைக் கவிதைகள்தாம் சிறப்பாகக் கவனத்தில் கொள்கின்றன. வாழ்க்கையில் உள்ள புரியாத பகுதிகளைக் கொள்வதைத்தான் கவிதையும், தத்துவமும் செய்கின்றன. தற்போதும் அரசியல் கவிதைகளை எழுதித்தான் தீரவேண்டும். யவனிகா ஸ்ரீராம் போன்றவர்கள் அதைத் தொடங்கியுள்ளனர்.

தீராநதி: தற்போது உலகக்கவிதை என்னவாக இருக்கிறது?

சமயவேல்: தாவோ, ஜென் பாதிப்பில் சிலர் எழுதுகிறார்கள். உலகக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடிய யாரும் இன்று இல்லை. துணை உலகக்கவிஞர்கள்தான் உள்ளனர்.

தீராநதி: இதற்கு, மேற்கத்திய தத்துவங்கள் தோல்வியடைந்து வருவதும் ஒரு காரணமா? தற்போது உலகளாவிய தத்துவ உள்ளொளி என்று ஒன்று இல்லை அல்லவா?

சமயவேல்: தற்போது எல்லாம் பொட்டலம் கட்டும் தன்மையாகிவிட்டது. உள்ளீடற்ற, சாராம்சமில்லாத கூடாக உலகம் ஆகிவிட்டது. ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத் தையும் பயன்படுத்தித் தூக்கியெறிந்து கொண்டிருக்கிறோம். இதனால் அரசியல், தத்துவம், இசை எல்லாம் பயனற்றதாகி விட்டது. அப்புறம் செவ்வியல் காலம் முடிந்து வி ட்டது. பின் நவீனத்துவத்தில் எல்லாம் தகர்க்கப்பட்டுள்ளது. கட்டுடைப்பு எங்கும் நிகழ்ந்துள்ளது. இதற்குமுன் உடைக்க முடியாத நுண் அலகுகள் எல்லாம் உடைந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து புதிய மரபுகள் தோன்றும். தற்போது உலகம் முழுவதுமே ஒரு திரவ நிலை நிலவுகிறது. தமிழும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதிலிருந்து solid ஆன ஒன்று உருவாகும்.

தீராநதி: ஆனால், இன்று தலித்தியம், பெண்ணியம் போன்ற அடையாள அரசியல் காலத்தில் இன்னும் ஓராயிரம் நல்ல கவிதைகள் முகிழ்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்ப துபோல் தோன்றுகிறதே? அப்புறம், பல ஆண்டுகள் முன் பிரமிள் புதிய கவிதை இயக்கத்தைத் தொடங்கினார். இன்று அது தொடரவில்லை. புதிய கவிஞர்கள் பிரமிளை எவ்வாறு வாசிக்கிறார்கள்?

சமயவேல்: இன்று நிறையபேர் அவரைக் கொண்டாடுகிறார்கள். தத்துவத்தையும், அறிவியலையும் அழகியல் பூர்வமாகக் கவிதையில் இணைக்கும் முயற்சியில் பிரமிள் ஈடு பட்டார். அவர் அதி கவி. மிக முக்கியமான அறிவியக்கத்தின் சுடர் தோன்றி மறைந்துவிட்டது. உலகக் கலாசாரங்களின் ஒருமித்த குரலாகக் கவிதையை மாற்றமுடியுமா என்று முயற்சித்தார். எகிப்து, ரோமானியக் கலாசாரங்களில் இருந்து தனது அழகியலை எடுத்துக்கொண்டார். அவரது ஓவியங்களில் இதை வெளிப்படையாக அவதானிக்கலாம். அவரது கவிதைகளிலும் இது உள்ளது. தமிழ்க்கவிதை மரபுக்கு இது புதுசு. ஆனால், தமிழின் குழுவாதம் அதை வீழ்த்திவிட்டது. அவரது தீவிர கவிதை இயக்கத்தை அது திசை திருப்பிவிட்டது. அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே காலத்தை விரயம் செய்துவிட்டார். எதிர்
விமர்சனங்களால் தனிமைப்படுத்தப்பட்டார்.

தீராநதி: இன்று அனைத்து கருத்தாக்கங்களுக்கும் அதிகார மையங்கள் உருவாகி விட்டன. தற்போது அப்படி ஒரு ஆளுமை தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதா?

சமயவேல்: பலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன. அரசியல் மட்டுமல்ல. அகடமிக் சைடிலும் அதிகார மையங்கள் உருவாகியுள்ளன.

தீராநதி: இன்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமைகள் இல்லையே. Nomfiction எழுதுபவர்கள்தான் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுமையான ஆளுமையாக உள்ளனர். படைப்பாளிகளில் இத்தகைய ஆளுமைகள் இல்லையே?

சமயவேல்: எனக்கு அப்படியும் தோன்றல. ஏன்னா, அதையும் யாரும் வாசிப்பதில்லை. அ. மார்க்ஸ். எஸ்.வி.ஆர் போன்றவர்களுக்கு பொது வாசகர்கள் இல்லையே. வே ண்டுமானால் ரசிக மனோநிலை இருக்கலாம். இதனால் குட்டி, குட்டி அதிகார மையங்கள் உருவாகி வருகின்றன. இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் உட்காரும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதைத்தான் தற்போதைய பலவீனமான நிலை என்று சொல்கிறேன். ஆனால். 1970-களில் இத்தகைய நிலை இல்லை. அப்போது முழு மையான ஆளுமைகள் இருந்தன. அது வசந்தகாலம் என்றே நினைக்கிறேன். அன்றைய படைப்பு ஆளுமைகளில் ஒரு ஒன்றிப்பு நிலவியது. அது சிறு பத்திரிகைகளின் காலம். அங்கு பரந்தாமன் போன்றவர்கள் சிற்றிதழ்களுக்காக உயிரைக் கொடுத்தார்கள். இடதுசாரி அரசியல் வீச்சு ஒரு பக்கமும், அதற்கு நிகரான தீவிர அழகியல் வீச்சும் நிலவியது. இரண்டுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவியது. அந்த 1970-களின் காலம் திரும்ப வராதா என்ற ஏக்கம் இருப்பதாக கல்யாணிஜிகூட அண் மையில் எழுதியிருந்தார்.

தீராநதி: நீங்கள் 1970-கள் காலத்தைச் சேர்ந்தவர் இல்லையா? அதன் நினைவுகள் ...

சமயவேல்: நான் அக்காலத்தின் கடைக்குட்டி. அப்போது பரஸ்பர புரிதல் நிலவியது. சுந்தர ராமசாமி, நகுலன் சண்டைகள்கூட மிகப் பூடகமாக நடந்தது. முருகேச பாண் டியன், நான் போன்றவர்கள் நாகர்கோயில் போய் சுந்தர ராமசாமியைப் பார்த்துவிட்டு, திருவனந்தபுரம் போய் நகுலனையும் பார்த்து வருவோம். எங்களுக்கு எந்த நெ ருக்கடியும் அப்போது இருந்தது இல்லை. இப்போது அப்படி நினைத்துப் பார்க்கமுடியுமா? நீல பதமநாபன், வண்ணநிலவன், கி. ராஜநாராயணன் போன்றவர்கள் பிரியமானவர்களாக இருந்தார்கள். அன்பு என்பது அப்போதைய முக்கியமான விழுமியமாக இருந்தது. அந்த பெருங்கலாசாரத்தில் இல்லாத அன்பு. அதற்கான நிரந்தர ஏக்கம் அப்போது அனைவரது மனசிலும் நிறைந்திருந்தது. அது பேரன்பு. அதை வேறு எப்படியும் சொல்லமுடியாததாக இருந்தது. அதைத்தான் அப்போது அனைத்து படைப்பாளிகளும் கொண்டுவர முயற்சி செய்தனர். இதற்காகத்தான் இதில் வெற்றி பெற்ற வண்ணநிலவன், வண்ணதாசன் போன்றோர் பின்னர் கிண்டல் செய்யப்பட்டனர். எனது சிறிய கவனிப்பு என்னவென்றால் வண்ணநிலவன், வண்ணதாசன் கதைமொழியை இன்றுவரை யாராலும் தாண்ட இயலவில்லை. அவர்களை எப்போதுமே நிராகரி த்துவிடமுடியாது, மிகப்பெரிய படைப்பான ஆழி சூழ் உலகுகூட வண்ணநிலவன் கதைமொழியைக் கடக்க முடியவில்லை. இன்று சரியான விமர்சனம் இல்லாததுதான் இதற்குக் காரணம். இதனால் சரியான படைப்புகளை அடையாளம் காட்ட யாரும் இல்லை. 1970-களைச் சேர்ந்தவர்களில் யாரும் யாரையும் நிராகரிக்காத தன்மை இருந் தது. ‘அவரும் 10 நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறாரய்யா’ என்ற கருத்து ஒவ்வொரு படைப்பாளிமீதும் இருந்தது. கருத்து வேறுபாடுகளைச் சேர்த்து அங்கீகரித்தனர். நானும் வண்ணநிலவனும் மிக நெருக்கமாகப் பழகினோம். ஒருவர் படைப்புகளை ஒருவர் என பரஸ்பரம் புகழ்ந்து கொண்டது கிடையாது. வண்ணதாசனும், கலாப்பிரியாவும் தங்களுக்குள் பரஸ்பரம் சொரிந்து கொண்டது இல்லை. துதிபாட மாட்டார்கள். படைப்புகள் பொதுவெளியில் இருந்தன. நாங்கள் படைப்புகளைப் பொது வெளியில் பார்த்தோம்.

தீராநதி: 1970-களின் கலையின் மையம் அன்பு என்று கூறுகிறீர்கள். தற்போது அப்படி ஒரு focus இருக்கிறதா?

சமயவேல்: தற்போது சூன்யம்தான் நிலவுகிறது. ஏதாவது குப்பையாகவாவது கரை ஒதுங்கவேண்டுமே? அப்படி ஒண்ணையும் காணோம். அன்பு என்பது நிலப்பிரபுத்வக் கூறாக இருந்தது. இன்று அத்தகைய சர்வதேச கூறு இல்லை. ஆனால், அரசியல் அப்படியேதான் இருக்கிறது. நான் கட்சி அரசியலைக் கூறவில்லை.

1. நுகர்வுக் கலாசாரம்
2. ஊடகத்தின் அசுர வளர்ச்சி
3. பண்பாட்டு இயக்கங்கள் இல்லாதது
4. தகவல் தொழிநுட்பம்
ஆகிய 4 புதிய கூறுகள் சூன்யத்தை உருவாக்கிவிட்டன. மீண்டும் 70-களின் காலத்துக்கே திரும்பலாம். அன்றைய செவ்வியல் இயக்கம் நியாயமானது. இன்று அதற்கான வாழ்க்கைத் தொடர்ச்சி இல்லை. பெரும் ஆளுமைகள், படைப்புகள் வெளிவருவதற்கான வாழ்க்கை இல்லை. வாழ்க்கை சிதறுண்டு கிடக்கிறது. முகம் இழந்து, விளிம்பு நிலையையும் தாண்டிய கேவலமான ஸ்திதி நிலவுகிறது. இந்த வாழ்க்கை வாழ்வதற்கும், எழுதுவதற்கும் உகந்ததாக இல்லை. கவிதை எப்போதும் வாழ்க்கையின் உள்பகுதி பற்றி ஆத்மார்த்தமாக எழுதுகிற அழகியலைக் கொண்டது. அது 1970-களுக்குப்பின் காணாமல் போய்விட்டது. 1990-கள் வரைகூட இது இருந்தது.

இன்று எல்லா இயக்கங்களும் சோரம் போய்விட்டன. இன்று தீவிரமான, மிதமான இயக்கம் எது என்று எதுவும் யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று 4 இயக்கங்கள் வருகின்றன. தலித் இயக்கம் என்கிறார்கள். எல்லாம் சில்லுண்டியாக இருக்கிறது. குறிப்பிட்டு எதையும் சொல்லமுடியவில்லை. எல்லாவற்றுக்கும் இது பொருத்தமாக இ ருக்கிறது. இச்சூழலில் பெரும் படைப்பை எதிர்பார்க்க முடியாது. எல்லாரும் ஒவ்வொரு நாளும் சோரம் போகிறோம். 1947 இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது. அதுதான் சிறந்தது என்று ஆழ்மனதில் பதிந்துவிட்டது. இன்று யாருமே தமது சொந்த வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயாராக இல்லை. பழைய வாழ்க்கையில் இத்தகைய தியாகிகள் இருந்தனர். ஆனால், ஒரு வீட்டுக்குள் வாழ்பவர்கள் மத்தியில் கூட இன்று விட்டுக்கொடுத்தல் இல்லை. அப்படியிருக்கும் போது பொதுச் சொல்லாடல்கள் மூலம் எல்லாப் பிரிவுகளையும் ஊடறுத்துப்போவது சாத்தியமில்லை. ஊடகத்தின் பெருவளர்ச்சி மொத்த நேரங்களையும் பிடுங்கிக்கொண்டு விட்டது. எப்போதும் ஏதோ ஒரு சேனல் நமது ஏதாவது ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு விடுகிறது. நகைச்சுவைக் காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து மொத்த சமூகமும் sணீபீவீst சமூகமாகிவிட்டோம் இல்லையா?. இல்லையென்றால் வடிவேலு அடி வாங்குவதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? இதனால்தான் மு ழுமையான ஆளுமைகளைவிட சிதறுண்ட சிறு ஆளுமைகள்தான் சாத்தியம் என்கிறேன். அதற்கு அடையாளமாக அவர்களின் புது மொழி உள்ளது. இது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தீராநதி: இந்தப் புது மொழி என்பது சில பெண்ணியக்கவிஞர்கள் தவிர வேறு யாரிடம் நம்பிக்கை ஏற்படுத்துகிறது? மொத்தச் சூழலுமே மிகச்சிறிய வரம்புக்குட்பட்டதாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகால சமூக வாழ்க்கை பெரும் மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. ஏராளமான கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. இருந்தாலும் சாதிய அடையாளம் சார்ந்த விழுமியங்கள்தான் (நான் இங்கு தலித் சாதிகளைக்கூறவில்லை) இன்று படைப்பாளிகளிடம் முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது.

சமயவேல்: தமிழ் வாழ்க்கையின் நுண் அலகுகள் சாதியால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் துவம்சம் செய்யவேண்டும். அத்தகைய நினைப்புகளும் இருக்கிறது. ஆனால், குடும்பம் என்ற கேவலமான யூனிட்டைப் புனிதமாக பேணிக்காக்கிறோம். இத்தகைய நுண் அலகுகளையும் அடித்து நொறுக்கவேண்டும். இதை இலக்கியம்தான் செய்யமுடியும். தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலில் சோரம் போகும் அம்மாவை இயல்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் எத்தகைய பெண்ணையும் புரியும் மனநிலையை நான் பெறுகிறேன். இத்தகைய soft எழுத்துகள் வரவேண்டும்.

தீராநதி: ஆண் எழுத்தாளர்கள் பெண்ணிய எழுத்துகளையும், பிற சாதிகளில் பிறந்த எழுத்தாளர்கள் தங்கள் சாதிகளைத் துறந்து தலித் எழுத்துகளையும் தோளில் சுமந் தால்தான் இது சாத்தியம். எழுத்தில் இத்தகைய intersections எப்போது சாத்தியம்?

சமயவேல்: அப்படியான காலம் நெருங்கிக் கொண்டுதான் உள்ளது. பெண்ணிய எழுத்தாளர்கள் மொத்த வாழ்க்கையைப் பதிவு செய்யத்தொடங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

தீராநதி: உரையாடலை இப்படி மாற்றலாம். ஒரு ஆண் தனது பாவத்துக்கு விமோசனம் தேடுவது போல தனது ‘புத்துயிர்ப்பு’ நாவலை டால்ஸ்டாய் ஆரம்பிக்கிறார். பாவவிமோசனம் தேடும் பயணம் 800 பக்கங்களுக்கு விகசிக்கிறது. இப்படி ஒரு தேடல், பயணம் தமிழில் இல்லாமல் போனது ஏன்?

சமயவேல்: அது இல்லாததால்தானே தமிழில் படைப்புகள் மொக்கையாக இருக்கின்றன. மொக்கை என்ற புதிய சொல்லையே தமிழ் நாவல்கள் உருவாக்கிவிட்டன. மொக்கை என்ற சொல் useless என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சரி, சமுதாயம் மொக்கையாக இருந்தால் அதைத்தானே எழுதுவார்கள். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அதைத்தான் எழுதுகிறார்கள். ஆனால் இது மிகப் பெரிய வாசக வன்முறை. 1000, 2000 பக்கங்கள் எழுதுகிறார்கள். அதை முழுதாகப் படித்து என்னதான் ஆகப்போகிறது. பிறகு, ஏன் வரலாற்று நாவல்களை எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் வரலாறு எனக்குச் சுமையாகத்தான் இருக்கிறது.இது மலத்தில் அரிசி தேடும் முயற்சிதான். நவீன வாழ்க்கை பெரும் படைப்புகளைத் தருவதற்கானதாக இல்லை. உலக அளவிலும் வரலாற்று நாவல்கள்தான் எழுதுகிறார்கள். இதை மீறுவதற்கு பெரும் வீரியம் வேண்டும். நாம் நமது பால்ய காலத்தில் வாசித்த பொன்னியின் செல்வன் ஒரு ரொமாண்டிசம். அப்போது வரலாற்று நாவலே எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். அரசு ஆவணக்காப்பகங்களில் கெசட்டியர்களைத் தேடிக்கண்டுபிடிக்கிறார்கள், மியூசியங்களில் எலும்புக்கூடுகளைத் தேடுவதைப்போல. பின் எலும்புக்கூடுகளுக்கு மேல்பூச்சு பூசி வரலாற்று நாவல்களாக உலவவிடுகிறார்கள். creativity கூடக்கூடப் பக்கம் குறையும். படைப்பூக்கத்தின் வறுமைதான் பக்கங்கள் அதிகரிப்பதன் காரணம். இன்றைய இளைஞர்கள் இந்த மொக்கைகளை வாசிக்கப்போவதில்லை. இப்போது you tube காலம். அவர்கள் கைகளில் அனைத்துத் தகவல்களும் உள்ளன. அவர்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பதுதான் இன்றைய படைப்பின் சவால். இன்றைய நவீன வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவல் எழுதினால் போதும் நவீன சிக்கல்கள் அனைத்தையும் கொண்டுவந்துவிடமுடியும்.

தீராநதி: 60 நொடி விளம்பரப்படத்தில் மனிதனின் பரிணாம வளர்ச்சி மலினப்படுத்தப்பட்ட வடிவில் காண்பிக்கப்படுகிறது. தகவல்கள் என்பது ஊடகச் சாயம் பூசப்பட்டு கு ழந்தைகளைச் சென்றடைந்து கொண்டே இருக்கின்றன. இன்று பூமியில் ஒரு பெரும் நிகழ்வு நிகழ்ந்தால் அடுத்த 5 நிமிடங்களில் அதன் பூர்வ காலத் தகவல்கள் முதல் அனைத்தையும் பெற்றுவிடமுடிகிறது. இவ்வாறு ஊடகங்கள் வளர்ந்துள்ள நிலையில் எழுத்தில் விவரணைகளுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இணையம் வந்த பிறகு வாசிப்பு scaning ஆகிவிட்டது. இதுதான் புதிய எழுத்தின் சவால் என்று நினைக்கிறேன்.

சமயவேல்: அவ்வாறு ஒரு நிமிடத்தில் ஸ்கேன் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆயிரம் பக்கத்தில் மொக்கை நாவல் எழுதுகிறார்கள் போல. டூமாஸ் கேலி செய்த வரலாற்றைத்தான் அவர் காலத்துக்கும் பின்னர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு தீவிரமாக மறுக்கிறேன் என்றால், வரலாறு என்பது எப்போதும் சார்பு நிலை கொண்டது. ஆளும் வர்க்கம் சார்ந்ததாகவே வரலாறு உள்ளது. புனைவுதான் இதைவிட மிகவும் சிறந்தது. சிலப்பதிகாரம் போன்ற பெருங்கதையாடல்கள் தன்னளவில் மிக வும் அற்புதமாக உள்ளது. அது மிகச் சிறந்த புனைவு. பிறகு இவர்கள் அதை ஏன் மீண்டும், மீண்டும் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. அகலிகையை கு.ப.ராவும், பு.பி.யும் எழுதினார்கள். அது அசலான கதைகள். அதில் ஒரு விஷயம் உள்ளது. அது வரலாற்றுப் புனைவு என்றும் சொல்லமுடியாது. அதில் வேறு ஒரு கேள்வி உள் ளது. ‘கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே..’ என்று பு.பி. பொன்னகரத்தில் எழுதியதை மீறி, சொல்ல என்ன இருக்கிறது.

தீராநதி: வரலாற்றுப் புதினம் என்பது recreation என்கிறார்கள். அப்படியானால் வால்மீகி ராமாயணம் குறித்த அக்காலத்திய சரியான விமர்சனம்தான் கம்பராமாயணம். அதனால்தான் ஜீவா போன்ற நாத்திகர்கள் அதற்குள் travel செய்ய முடிந்தது. அதுபோன்ற travel ஆக இன்றைய வரலாற்றுப் புதினங்கள் இருக்கிறதா?

சமயவேல்: நிச்சயமாக இல்லை. பொதுவாகவே 90-க்குப் பிந்தைய மொத்த இலக்கியப் போக்கில் திருப்தி இல்லை. நிறைய நல்ல படைப்புகள் இல்லை. மிகக் கொஞ்சமாக த்தான் உள்ளது. இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. 1970-களில் தொட்ட உச்சத்தை யாருமே தொடவில்லை. அவர்களுக்கு இருந்த பார்வை தர்சனம் இவர்களுக்கு இ ல்லை. எப்படியாவது நிறையபேர் வாசிக்கிற பண்டமாக மாற்ற வேண்டுமே என்ற மலினமான, வெகுஜனப் பத்திரிகைத் தன்மைதான் தெரிகிறது. இதையும், தனது சொந்த இருப்பு குறித்த சண்டைகள் மற்றும் தந்திரங்களைக் கைவிட்டால்தான் அதைக் கண்டடைய முடியும்.

தீராநதி: கட்டமைக்கப்பட்ட புனிதமாகவே வரலாறு உள்ளது. வரலாற்று அபத்தங்கள் என்ன என்றே நமக்குத் தெரியாது. வரலாற்றில் நடந்த அபத்தங்கள் தெரியாமல் வரலாற்றை எப்படி படைப்பாக்க முடியும்?

சமயவேல்: தமிழில் வரலாறு குறித்த புனைவில் ஈடுபடுபவர்களுக்கு அது தெரியாது. பொதுவாக, உள்ளீடற்ற சமூகத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப எதிர்பார்க்கப்படும் படைப்புகளும் உள்ளீடற்றதாகவே உள்ளன. இதை எதிர்க்க பெரும் வீரியம் வேண்டும். அவ்வாறு சமீபத்தில் வெளிவந்துள்ள ஆளுமைகளாக அ. முத்துலிங்கம், கோணங்கி, முருகபூபதி, ஹரிகிருஷ்ணன்(மணல்மகுடி), ஆதவன் தீட்சண்யா, திருச்செந்தாழை ஆகியோர் புதிய மொழியையும், புதிய உள்ளடக்கத்தையும் உருவாக்குகிற க ட்டாயத்தில் இருப்பவர்கள். கவிதை பற்றி ஏற்கெனவே கூறிவிட்டேன்.

தீராநதி: கோணங்கி மொழி குறித்த சர்ச்சை உள்ளதே?

சமயவேல்: ஆமாம். அவர் எங்களுக்காக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் communicativeஆக எழுத வேண்டும். அப்போது அவர் மொழி புதியதாக இருக்கும்.

தீராநதி: 1970-களில் இருந்து தமிழில் முக்கிய இலக்கியச் சூழலாகக் கருதப்பட்ட மதுரை, நெல்லை, சென்னை, கோவில்பட்டி ஆகியவற்றில் தொடர்ச்சியாக 1980-களின் இறுதிவரை வாழ்ந்துள்ளீர்கள். அச்சூழல்கள் உங்களிடம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தின?

சமயவேல்: நான் பிறந்தது கரிசல் பூமி. விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர். நான் வளர்ந்தது பெரும்பாலும் எனது அம்மா முனியம்மா பிறந்த வேம்பாரப்பட்டி. என் அம்மாவின் அப்பா சிறந்த சேவற்சண்டைக்காரர். சேவற்கட்டுக்காரர் என்று சொல்வார்கள். இருபது சேவல்களை ஜெயித்து தோலில் போட்டு வருவதை நான் பார்த்தி ருக்கிறேன். தினசரி கோழிக்கறிதான். பிள்ளைப்புதூர் பள்ளியில் படித்தேன். லீவு நாட்களில் வேம்பாரப்பட்டி தாத்தா வீடும், தோட்டமும் தான். தாத்தாவுடன் ஓடைக்குச் சென்று மீன் பிடிப்போம். அதனாலே பின்னாட்களில் எனக்கு தக்கையின் மீது நான்கு கண்கள் எனக்குப் பிடித்த கதையானது. அந்தத் தோட்டத்தில் தான் என் பால்ய சகியைச் சந்தித்தேன். திடீரென என் அம்மாவின் சாவு என்னை மிகவும் பாதித்தது. வேம்பாரப்பட்டியில் இருந்து பிரித்துவிட்டது. பள்ளியில் தையல் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். பிளாட்டோ, சாக்ரடீஸ் புத்தகங்களைக் கொடுத்தார். சாமிநாதசர்மா எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் பள்ளியில் படிக்கும்போதே வாசித்துவிட்டேன். எனக்கு சி.பி.எம் கட்சிக்காரர்கள் அறிமுகம் கிடைத்தது. எப்படியும் புரட்சிக்காரன் ஆகவேண்டும் என்று நினைத்தேன். எங்கள் ஊருக்கு அருகில் பந்தல்குடி என்ற ஊர் உண்டு. அங்குதான் அரசு நூலகம் இருந்தது. அங்கு சென்று புத்தகங்களின் பெயர்களை எழுதிக் கொண்டு வந்தேன். எங்கள் ஊருக்குவரும் போஸ்ட்மேனிடம் தினசரி ரெண்டு புத்தகங்களின் பெயர்களை எழுதிக்கொடுத்து பந்தல்குடி நூலகத்தில் இருந்து வாங்கிவருவார். அதை அன்றே வாசித்து விடுவேன். கம்மாய்க்கரை மரத்தடி, கமலைக்கல், பேய் நடமாடும் ஊர்க்கோடிக் கோயில், மறுநாள் அதைக்கொடுத்து விட்டு வேறு இரண்டு புத்தகங்களை வாங்கிவருவார்.

மதுரையில் கல்லூரிப் படிப்பு. முருகேசபாண்டியன் அதே கல்லூரியில் படித்தார். ஐ.சி. பாலசுந்தரம் என்ற அருமையான ஆசிரியர் கிடைத்தார். அவர்தான் எங்கள் ரசனைகளை வளர்த்தவர். காமு, காப்காவை அறிமுகப்படுத்தினார். நல்ல சினிமா என்றால் என்ன என்பதை உணர்த்தினார். அவர் அபி, மீரா, அப்துல்ரஹ்மான் ஆகியோரின் கல்லூரித்தோழர். அவர் மூலம் மதுரை இலக்கியத் தோழமை வட்டத்தின் பரிச்சயம் கிடைத்தது.

ஜி. நாகராஜன் தங்கியிருந்த சந்தானம் லாட்ஜுக்குச் செ ல்வேன். நான் சின்னப்பையன். விரட்டிவிடுவார். இடையில் கல்லூரிப்படிப்பு தடைப்பட்டது. மீண்டும் பாளையங்கோட்டையில் தொடர்ந்தது. அங்குதான் ஜோதிவிநாயகம் எ ன்ற என் அருமையான நண்பனைச் சந்தித்தேன். அவர் லெண்டிங் லைப்ரரி நடத்தினார். ரெண்டு பேரும் வீடுவீடாக புத்தகம் போடுவோம். பிறகு விடிய விடிய பேச்சு. நம்பிராஜன்(விக்கிரமாதித்தன்), வண்ணநிலவன், கலாப்பிரியா, கி.ரா, வண்ணதாசன் ஆகிய நண்பர்கள். நாகர்கோயில் சென்று சுந்தரராமசாமி, திருவனந்தபுரம் சென்று நகுலன் என்று 1970-களின் ஜாம்பவான்களோடு நட்பு வட்டம் விரிந்தது.

1976 இல் சென்னை வந்தேன். சென்னையின் முக்கிய காலகட்டம் அது. அங்குதான் தீவிர அரசியல் பரிச்சயம் கிடைத்தது. ராஜதுரை சோறும் போட்டு, சொல்லியும் கொடுத்தார். வண்ணநிலவன் துக்ளக்கில் சேர்ந்தார். பாதிநாள் அவரது வீடு. சந்திரா அன்பை மறக்கமுடியாது. இவர்கள்தான் என் parents. பிரமிள் பழக்கம் ஏற்பட்டது. எங்கு சென்றாலும் அவருடன் சுற்றுவேன். நவீன நாடகம், நல்ல சினிமாக்கள், இசை என்று மிக முக்கியமான கலைகளின் வசீகரத்தினை அப்போதுதான் உணர்ந்தேன். தீவிர அரசியலில் இருந்தேன். அரசு ஒடுக்குமுறை அதிகமாக இருந்தது. தாங்கமுடியவில்லை. இதனால் அரசு வேலையில் சேர முயற்சி செய்தேன். 1981இல் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளில் மாற்றல் வாங்கிக்கொண்டு கோவில்பட்டி வந்தேன். கோயில்பட்டியில் தீவிர காலத்தில் அவர்களோடு நானும் சுவாசித்தேன்.
1947இல் தொடங்கிய ஜனநாயகம் மந்தத்தன்மையை ஏற்படுத்திவிட்டது.
காட்டுத் தீ போன்ற ஒரு விஷயம்தான் கவிதை!

பலவீனங்கள் மலியும்போதுதான் அதிகார மையங்கள் உருவாகின்றன.

o

12 டிசம்பர் 2011

கண்களின் சிரிப்பு

சற்று முன் தட்டுப்பட்டு
கைவசமான
கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தில்
சிரித்துக் கொண்டிருந்த கண்களின்
முகத்தை என்
அலுவலக வளாகத்தின்
அடுத்தொரு மாடியில்
அவ்வப்போது பார்த்திருக்கிறேன்.

கச்சிதமான சிரிப்புடன் அமைந்த
புகைப்படத்தின்
கடைசி நகலாக அது இருக்கலாம்
இன்னொன்று அதே போல்
இயலுமா என்பது சந்தேகம்தான்.
எதிர்வரும் ஒரு சந்திப்பில்
கொடுக்கும்பொழுது
எப்படி எதிர்கொள்ளும்
இந்த முகம்?

இத்தனையும் யோசித்திருந்தவனை
பார்த்து
இன்னமும் மாறாதிருந்தது
அந்த கண்களின் சிரிப்பு.

o

05 டிசம்பர் 2011

வாழ்நிலம்

எத்தனை
பேருக்கு
வாய்க்கிறது
படித்து
வாழ்க்கையைத்
தொடங்கின
இடத்துக்கு
பக்கத்திலேயே
வீடொன்றில்
வாழ்க்கையை
படித்து
வாழும்படி.

o

22 நவம்பர் 2011

துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம் - கவிஞர் சுகுமாரன் - நேர்காணல் (படித்ததில் பிடித்தது)

சுகுமாரன் - நேர்காணல்

துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம்

சந்திப்பு: பெருமாள்முருகன்

[சுகுமாரன் (11.06.1957): நவீனத் தமிழ்க் கவிதை ஆளுமைகளுள் முக்கியமானவர். எளிமையும் செறிவும் கொண்ட இவர் கவிதைகள் படிமம், உவமை, சொற்சேர்க்கை ஆகியவற்றில் தனித்துவம் மிக்கவை. வடிவம், சொல்முறை ஆகியவற்றில் வெவ்வேறு விதங்களைக் கையாண்டு புதுமைசெய்தவர். அரசியல் சார்ந்த விஷயங்களையும் கவித்துவத்தோடும் சுயபார்வையோடும் கவிதைக்குள் கொண்டுவந்தவர். சுயவிமர்சனத்தைக் கறாராக வைத்துக்கொண்டிருப்பவர்.
இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை இவரது முப்பெரும் காதல்கள். சிறுகதைகளும் எழுதியுள்ளார். சமீப காலமாக இவர் எழுதிவரும் கட்டுரைகள் பல தளங்களைச் சார்ந்தவையாகவும் வாசிப்புத்தன்மை கூடியவையாகவும் உள்ளன. மொழிபெயர்ப்பில் கணிசமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து கவிதைகளையும் சிறுகதைகளையும் கட்டுரை நூல்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
‘கோடைகாலக் குறிப்புகள்’, ‘பயணியின் சங்கீதங்கள்’, ‘சிலைகளின் காலம்’, ‘வாழ்நிலம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவற்றில் உள்ள கவிதைகளும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பாகப் ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ 2006இல் வெளிவந்துள்ளது. ‘திசைகளும் தடங்களும்’, ‘தனிமையின் வழி’ ஆகியவை இவரது கட்டுரைத் தொகுப்புகள்.
‘மார்க்சிய அழகியல்: ஒரு முன்னுரை’ (சச்சிதானந்தன்), ‘சினிமா அனுபவம்’ (அடூர் கோபாலகிருஷ்ணன்), ‘மைலம்மா ஒரு போராட்ட வாழ்க்கை’ ஆகிய உரைநடை நூல்களும் ‘வெட்டவெளி வார்த்தைகள்’, ‘கவிதையின் திசைகள்’, ‘பாப்லோ நெரூதா கவிதைகள்’, ‘பெண் வழிகள்’ ஆகிய கவிதை நூல்களும் ‘இதுதான் என் பெயர்’ (சக்கரியா) என்னும் நாவலும் ‘காளி நாடகம்’ (உன்னி) என்னும் சிறுகதை நூலும் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளவை.
2008ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது பெற்றுள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார். இவர் மனைவி பிரேமா மணி. 15.05.2007 அன்று இரவு திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் கண்ட நேர்காணல் இது.]

கவிதைத் தொகுப்பு ஒன்றிற்கான முன்னுரையில் ‘கருத்தும் அனுபவமும் இணைந்த படிமம்தான் கவிதை’ என்று எழுதியுள்ளீர்கள். இதைப் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்.

கவிதை என்பது அடிப்படையில் அனுபவம் சார்ந்த விஷயம். அதில் வாசகன் தொகுத்து எடுத்துக்கொள்வது கருத்தைத்தான். அடிப்படையாக எந்த அனுபவமுமே உங்கள் மனத்தில் தங்கப்போவது ஒரு கருத்து என்கிற நிலையில்தான். ஆனால் அதை வெறும் கருத்தாகச் சொல்லும்போது வாசகனுக்கு உவப்பில்லாத ஒன்றாகவும் எழுதுகிறவனுக்குத் தன் மனத்தைப் பகிர்ந்துகொள்கிற ஒரு விஷயமாக இல்லாமலும் போகிறது. இது இரண்டும் எங்கே சமன்படுகின்றன என்பதுதான் கவிதையின் அடிப்படையான கேள்வி.
சில சமயம் கருத்து மட்டுமே சொல்லப்பட்டு அதனுடைய மறைபொருளாக இருக்கும் அனுபவம் வெளிப்படும் அல்லது அனுபவம் மட்டுமே சொல்லப்பட்டு அதனுடைய கருத்து வெளிப்படும். புதுக்கவிதை இவை இரண்டும் ஒன்று சேர்கிற புள்ளி.
கவிதையைக் கூறுபோட்டு வெளிப்படையாக இது கருத்து, இது அனுபவம் என்று பிரிக்க முடியாது. அனுபவம் அடிப்படையில் ஒரு கருத்து. கருத்து அடிப்படையில் ஓர் அனுபவம். இரண்டும் ஒன்றுசேர்கிறபோது தான் கவிதைக்கான படிமமாக வந்து நிற்கிறது.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
என்பது ஓர் அனுபவம். அதே நேரத்தில் ஒரு கருத்து. இதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.

‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுதான் கவிதை’ என்றும் ஓரிடத்தில் எழுதியிருக்கிறீர்கள். நேரடித்தன்மைதானே நமது கவிதை மரபில் மிகுதி?

நேரடித்தன்மை கவிதை அல்ல. நேராக ஒரு விஷயத்தைச் சொல்வதற்குக் கவிதை தேவையில்லை. பிற எந்த மொழியையும்விடச் சிந்தனையும் வெளிப்பாடும் கவிதையாக இருக்கின்ற மொழி தமிழ். இதில் வெறுமனே ஒரு plan கூற்றா அதாவது statement ஆக எந்த விஷயமும் சொல்லப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகின்றது.
காக்கை குருவி எங்கள் சாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
இதைப் பார்க்கும்போது வெறும் statement ஆகத்தான் இருக்கிறது. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு கவிதை மனம் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் இந்த மாதிரியான ஒரு கூற்று அமைகிறது என்பது என் முடிவு.
சங்க இலக்கியத்தில் உள்ள சித்திரங்களாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும் நேரடியாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும் அவற்றில் எல்லாம் ஓர் அனுபவம், அனுபவம் சார்ந்த ஒரு மனம், அந்த மனத்தில் இருந்து கிளர்ந்த உணர்ச்சிகள் ஆகியவைதான் முன்னால் வந்து நிற்கின்றன. எனக்கு உடனடியாக நினைவில் வருவது,
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்
என்று முடியும் கவிதை. அந்தக் கவிதை அங்கே முடியவில்லை. அது ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறது’.

உங்கள் முன்னுரை ஒன்றில் ‘சொந்த மரபை நோக்கித் திரும்புவது’ என்று பின்- நவீனத்துவத்திற்கு விளக்கம் கொடுக்கிறீர்கள். பின்-நவீனத்துவம் பற்றிக் கோட்பாட்டு அடிப்படையில் பேசும் போக்கிற்கு எதிரானதாக உங்கள் கருத்து இருக்கிறதே?

அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் சார்ந்து எழுத்தை மதிப்பிடும் ஆள் நான். கோட்பாடுகளின் பின்புலத்தில் நான் எந்த அபிப்ராயத்துக்கும் வரவில்லை. தமிழ்ப் புதுக்கவிதை என்பது ஒரு வடிவ மாற்றம் என்று எனக்கு எப்போதும் தோன்றியதே கிடையாது. அது உணர்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்தான் என இப்போதும் நம்புகிறேன்.
பாரதிக்குப் பின்னால் மிகப் பெரிய எழுச்சி என்பது பாரதிதாசன்தான். பாரதிதாசனுக்குப் பின்னால் வந்த கவிஞர்கள் எல்லாருமே அவருடைய நகல்களாக மட்டும்தான் இருந்திருக்கிறார்கள். இது தமிழ்க் கவிதையில் மிகப் பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரிய ஆரவாரத்தை, தேவையில்லாத இரைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு நேர் எதிரான ஒரு போக்குத்தான் புதுக்கவிதையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய யூகம்.
மௌன வாசிப்பும் கவிதை ஆகும். அதற்கு நம்மைத் தூண்டிவிட்டது மேற்கத்திய படிப்பு அனுபவம். கவிதையை அச்சடிக்கக்கூடிய வாய்ப்பு. இந்த இரண்டும் முக்கியம். ஆகப் புதுக்கவிதை என்பது மேற்கத்திய அனுபவங்களில் இருந்து, கருத்தாக்கத்தில் இருந்து நாம் தொகுத்துக்கொண்ட ஒரு விஷயம். இது தொடர்ந்து கொஞ்ச காலத்திற்கு இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் புதுக்கவிதை எழுதியவர்களுக்கு எல்லாம் படிமமும் உணர்வுநிலையும்தான் முக்கியமாக இருந்திருக்கின்றன. தங்களுக்கான விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். இது பின்னால் அதாவது எழுபத்தைந்து எண்பதுக்குப் பின்னால் முழுக்கவுமே மேற்கத்திய அல்லது ஐரோப்பியச் சாயலுக்கு மாற ஆரம்பித்தது. அதற்குச் சமூகரீதியான காரணங்கள் உண்டு. மார்க்சியத் தத்துவம் நமக்கு அறிமுகமாயிற்று.
அதுபோலப் பல்வேறு தத்துவங்கள் அறிமுகமாயின. அவை சார்ந்த இலக்கியங்கள், மற்ற விஷயங்கள் எல்லாமே அறிமுகமாயின. அதனால் அந்த வடிவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு இங்கே திரும்பப் பேசும் நிலை உருவானது. இதில் நம்முடைய உணர்வு, வாழ்நிலை, மனப் போக்கு ஆகியவற்றை எல்லாம் முன்வைக்கத் தவறிவிட்டோம்.
சிம்பனி என்கிற ஒரு விஷயத்தையே கேட்காத ஆள் அதைப் பற்றிக் கவிதை எழுத முடியும். வாழ்க்கையில் பியானோ என்பதைப் பக்கத்தில்கூடப் பார்க்காத ஆள் பியானோவைப் பற்றிக் கவிதை எழுத முடியும். இதுதான் மேற்கத்திய நவீனத்துவம் நம்மீது செலுத்திய மோசமான பாதிப்பு என்று நினைக்கிறேன். இப்படித் தமிழில் நிறையக் கவிதைகள் வந்திருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு.
இது அடுத்த கட்டத்தில் எங்கே போகும் என்னும் கேள்வி வந்தது. அப்போது நம்முடைய அனுபவங்கள்தான் நமக்கு முதன்மையானவை என்கிற தீர்மானத்திற்கு ஒவ்வொரு கவிஞனும் அல்லது மொத்தமான கவிதைச் சூழலும் வந்து சேர வேண்டியிருக்கும் என்னும்போது நம்முடைய மொழி, நம்முடைய வாழ்க்கை, நம்முடைய வாழ்க்கையில் தட்டுப்படும் உவமைகள், உருவகங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் புழங்கு மொழி ஆகிய எல்லாம் சேர்ந்துதான் புதிய நவீனத்துவம் என்று உருவாகும். இதை ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொற்சேர்க்கையில் சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தில் ‘ஆதுமிகா’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது நவீனத்துவத்திற்குப் பிறகான கவிதை. பெங்காலியில் ‘உத்ராதுமிக்’ என்கிறார்கள். இதனுடைய அடிப்படைகள் எல்லாமே நம்முடைய மரபு. மரபுன்னா வழக்கமான அர்த்தத்துல சொல்லவே இல்ல, நம்முடைய வாழ்நிலைகள் சார்ந்த ஒரு விஷயத்திற்குத் திரும்பிப் போறது என்னும் அர்த்தத்தில் சொல்கிறேன்.
நம்முடைய வாழ்க்கையில் பெறக்கூடிய கூறுகளைத் திரும்பக் கவிதையில் கொண்டுவருவதுதான் நவீனத்துவமாக, பின்-நவீனத்துவமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனுடைய வெளிப்படையான உதாரணமாக இன்னொன்றைச் சொல்லலாம். மார்க்சியம் மற்றும் சமூக மாற்றத்திற்கான இயக்கங்கள் எல்லாம் உருவாகி வந்தபோது அந்தக் கவிதைகள் எல்லாம் நமக்கு வந்தன. அந்தக் கவிதைகளை அப்படியே நாம் நகலெடுத்துக்கொண்டிருந்தோம். நம்முடைய அனுபவங்கள் கிடையாது. நாளைக்குப் புரட்சிவந்துவிடும் என்று இந்தக் கவிதைகள் கூறின. ஆனால் புரட்சி என்கிற விஷயமோ புரட்சிக்கான சூழ்நிலையோ கனியாத போது இவையெல்லாமே போலித்தனமாக இருந்தன.
ஆனால் இதற்கு எதிரான இன்னொரு அணி கவிதையில் அரசியல் பற்றியெல்லாம் பேச வேண்டாம் என்னும் தீர்மானத்தில் இருந்தது. அரசியல் பேசுவது கவிதைக்கு மாற்றுக் குறைவான விஷயம் என்று அவர்கள் நினைத்தபோது அதுவும் பேசப்படலாம் என்னும் எண்ணம் உருவாயிற்று. அரசியல்ரீதியாக நடக்கிற ஒரு விஷயம் தனிமனித வாழ்க்கையை மாற்றக்கூடும், தீர்மானிக்கக்கூடும் என்னும்போது அரசியலும் கவிதைக்குள்ளே வர ஆரம்பித்தது. இது இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் நடந்திருக்கிறது. அதை நான் தமிழ் மொழியில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்.
மரங்களைப் பற்றிப் பேசுவது குற்றமாகக்கூடிய காலம் வந்துவிட்டது என்று பெர்டோல்ட் பிரெக்ட்டுடைய ஒரு கவிதை இருக்கிறது. இதற்கு இணையாக வேறு வரிகளைத் தமிழில் நாம் பார்க்க முடியும். மரத்தைச் சகோதரியாகப் பாவித்துப் பேசுகிற ஒரு கவிதை தமிழில் இருக்கிறது. பெர்டோல்ட் பிரெக்ட்டுடைய இந்த வரியைக் குறிப்பாக வைத்துக்கொள்ளலாமே தவிர நம்முடைய அடிப்படையாக வைத்துக்கொள்ள முடியாது. நமக்கு அடிப்படையான விஷயம் மரத்தைச் சகோதரியாகப் பார்த்த அந்தக் கவிதை வரிதான். அது நமது மரபுக்குள்ளேயே இருக்கிறது. அதை நாம் மேலே கொண்டு வருவோம் என்பதுதான் இதனுடைய நோக்கம்.

ஒரு கவிஞனுக்கு மரபிலக்கியப் பயிற்சி எந்த அளவுக்கு இருக்கணும்னு நெனக்கறீங்க?

இருக்கணுமா வேண்டாமா என்ற கேள்விக்கு ‘ஆம்’, ‘இல்லை’ என்ற இரண்டு பதிலுமே சொல்லலாம். தமிழில் மிகப் பெரிய சாதனையாளர்கள் என்று சொல்லப்படுகிற சிலருக்கு மரபுரீதியான பயிற்சி கிடையாது. சிலருக்கு மரபுரீதியான பயிற்சி உண்டு. மரபுல வந்த பிறகுதான் அவுங்க மாறி இருக்காங்க. மரபுங்கறது செய்யுள் எழுதுவதா யாப்பிலக்கணம் புரிந்துகொண்டு எழுதுவதா? அப்படீன்னா அந்த மரபு தெரியாம கவிதை எழுத முடியும். கவிதைக்கான மனநிலைதான் முக்கியம்.
ஒரு மரபுங்கறது இந்த மொழிய நான் பேச ஆரம்பிக்கிறபோதே இந்த மொழியப் பயில, எழுத ஆரம்பிக்கிறபோதே எனக்குள்ள வந்துருது. என்னிடம் முன்னுரைக்காகவோ அபிப்ராயம் கேட்டோ வருகிற கவிதைப் புத்தகங்களில் நான் அடிப்படையா இரண்டு விஷயங்களைத் தேடுகிறேன். ஒன்னு இந்த மொழிக்கென்று ஒரு மரபுண்டு. இரண்டாவது கவிஞனுக்கென்று தனியாக ஒரு மரபுண்டு. இதை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் இந்த மொழியில் ஒரு ஜீஷீமீtவீநீ பீவீநீtவீஷீஸீ இருக்கு. அதுதான் கவிதையோட தொடர்ந்து உங்களைத் தொடர்புபடுத்துகிறது. அதுதான் கவிதையோட வாசல்களைத் தொடர்ந்து உங்களுக்குத் திறக்கிறது.
பாரதியார் கவிதையில் இருந்து சொல்லனும்னா சிட்டுக்குருவி என்று ஒரு படிமம் வருகிற போதே அது சுதந்திரத்தைப் பற்றிய கவிதை என்று தீர்மானிச்சிர்றீங்க. நதிங்கிற ஒரு படிமத்தக் கவிதையில் பார்க்கிறபோதே இது வெறுமனே ஒரு நதியைப் பற்றியது அல்ல வாழ்க்கையைப் பற்றிய வாழ்க்கை ஓட்டத்தைப் பற்றிய ஒரு கவிதை அப்படீன்னு தீர்மானிக்கிறோம். இது கவிதையின் பொது வீபீவீஷீனீ. இதப் புரிஞ்சி இதுக்குள்ள நான் என்னுடைய ஒரு இடியத்த உண்டு பண்றன். அப்படியான கவிதைகள்தான் நிற்கும் அப்படீங் கறது என்னுடைய நம்பிக்கை. எனக்குக் கிடைக்கிற கவிதைத் தொகுப்புகளிலெல்லாம் முதல்ல அடிப்படையா நான் தேடற விஷயம் இதுதான். இதை எழுதிய கவிஞருக்கு இந்த மொழியின் மரபு பிடிபட்டிருக்கா என்பதுதான். அந்த மரபு யாப்பிலக்கண மரபோ செய்யுள் மரபோ அல்ல.
ஒரு மனித அனுபவத்த இன்னொரு மனிதரிடம் தொடர்புபடுத்த என்னென்ன கருவிகளை உபயோகப்படுத்த முடியும், என்னென்ன வழிகளில் அதனை அடைய முடியும் என்பதையெல்லாம் தீர்மானிப்பதுதான் மரபுன்னு நான் யோசிக்கிறேன். அதனாலதான் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தைய சங்கக் கவிதையைப் புரிஞ்சிக்க முடியுது. இன்றைக்கு பிரான்சிஸ் கிருபாவினுடைய கவிதையைப் புரிஞ்சிக்க முடியுது. இதுதான் மரபு அப்படீங்கறது. ஒரு மொழியில் செயல்படுகிற ஒருவனுக்குப் பின்னால் அந்த மொழி சார்ந்த மரபு இயங்கிக்கொண்டேயிருக்கும். அதிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. தப்பியவன் கவிஞனும் ஆகமாட்டான்.

நீங்க எந்த அளவுக்கு மரபிலக்கியங்களைப் படிச்சிருக்கீங்க? அதில் எத்தகைய பயிற்சி இருக்கிறது?

தமிழை முறையாகப் படித்த மாணவன் என்று சொல்லும் வகையான பயிற்சியெல்லாம் எனக்கு இல்லை. ஆனால் என்னுடைய மனசு அல்லது சிந்தனை முழுக்க இருக்கிற ஒரு மொழி அப்படீங்கறது தமிழ். இதற்கு நான் பலருக்குக் கடன்பட்டிருக்கிறேன். என்னுடைய பள்ளிப் படிப்பு என்பது அறுபதுகளின் பிற்பகுதி. அப்போது எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் எல்லாருமே தமிழ் மேல் மாறாக் காதல் உள்ளவர்கள். இன்றைக்கு யோசிக்கும்போது அது ஓரளவு வெறி என்ற தீர்மானத்துக்கு வர முடியும். அவுங்க கத்துக் கொடுத்த தமிழ், முறையாகக் கத்துக்கொடுத்த தமிழ். அதுதான் என்னுடைய தமிழ்ப் பின்னணி.
இந்த ஆர்வத்தினால் பள்ளி இறுதி வகுப்பு முடிப்பதற்குள்ளாகத் தமிழின் முக்கியமான இலக்கியங்களை எல்லாம் படிப்பது என்னும் தீர்மானத்துக்கு வந்தேன். இதில் எல்லாருமே உதவி செய்திருக்கிறார்கள். ஆறாவது ஏழாவது படிக்கிறபோது எங்களுக்கு ஒரு தமிழாசிரியர் வந்தார். அவர் பேர் கலியபெருமாள். அவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் கற்றவர். அவர் எங்க வகுப்புக்கு வந்தார். ஆனா தமிழ் கற்பிக்கல. அப்போது நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருக்கும். அந்த வகுப்பை அவர்தான் பார்த்துக் கொள்வார்.
அவர் படித்த புத்தகங்கள் பற்றி, அவர் பார்த்த திரைப்படங்கள் பற்றி எல்லாம் ரொம்பவும் ருசியாச் சொல்வார். அந்த 45 நிமிசங்கள் முடிந்தவுடனே நமக்குப் பெரிய ஏக்கம் வந்துவிடும். ஏன் மணி அடிக்கறாங்கன்னு. அந்த அளவுக்கு அவர் சுவையாச் சொல்வார். பெருங்காவியங்களுடைய சாரத்தக் கதையாச் சொல்லியிருக்காரு. இதெல்லாம் தொடர்ந்து படிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது. இந்தக் காவியங்கள் எல்லாம் சொல்லும்போது பதவுரை, பொழிப்புரை சொல்றவரா இல்லாம அதில் இருக்கும் கவிதைக் கணங்களை நெருக்கமாப் பார்க்கிறவராகவும் நம்மைப் பார்க்கச் செய்கிறவருமான ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அது தமிழ்மேல என்னுடைய ஆசையை அதிகப்படுத்தியது. அதற்குப் பின்னால் அடுத்த வகுப்புக்குப் போகிறபோது தமிழ்தான் சகலமும் என்று நினைக்கிற ஆசிரியர்கள் வந்து சேர்ந்தாங்க. புலவர் ச. மருதவாணன் என்று ஒரு ஆசிரியர். புலவர் ந. சுந்தரராசன் என்பவர் இன்னொருவர்.
இவர்கள் எல்லாம் தமிழ் கற்றுக்கொடுக்கிறபோது பாரதியார் சொன்ன ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்னும் வரிகளைச் சொல்லலாம்னு அந்த வயதில் தோன்றியது. இன்றைக்கு மொழி பற்றிய அபிப்ராயங்கள் மாறியிருக்கிறது. இதெல்லாம்தான் தமிழை ஊட்டி வளர்க்க உதவின. இதில் குறிப்பாக மருதவாணனைச் சொல்லணும். நான் ஆர்வத்தோட ‘முத்தொள்ளாயிரம்னா என்ன’ என்று கேட்டதுதான். ‘சனிக்கிழம வீட்டுக்கு வா’ அப்படின்னிட்டாரு. சனிக்கிழமை காலையில் அவர் வீட்டுக்குப் போனால் மாலைவரைக்கும் அவர் வீட்டிலேயே உண்டு உறவாடிப் பாடம் கேட்கலாம். இது பின்னால வரைக்கும் தொடர்ந்தது. தமிழ் எனக்குள்ளே பெரிய சுடரா ஒளிர்வதற்கான கைகளாக அவர்கள் இருந்தார்கள்.
அத்தோடு கவிதை என்பது சின்ன வயதிலேயே மயக்கம் தரக்கூடிய விஷயமாக இருந்தது. நான் வளர்ந்த சூழ்நிலையில் ரொம்பத் தனியாக வளர்ந்தேன். பெற்றோரிடமிருந்து பிரிந்து. என்னுடைய அத்தை மாமா இரண்டு பேரும்தான் என்னை வளர்த்தார்கள். அதனால் சின்னதாக ஓர் அனாதைத்தனம், ஆதரவில்லா ஏக்கம் எப்போதுமே எனக்கு இருக்கும். ரொம்பவும் தனியா ஓரிடத்தில் உட்கார்ந்து யோசிக்கிற பழக்கம் உண்டு. அப்போது எனக்குப் பெரிய துணையாக இருந்தவை புத்தகங்கள்தான். புத்தகங்கள் படிக்கும்போது புத்தகங்களில் வரும் ஓர் உலகம். புத்தகங்களுக்கு அப்பால் ஓர் உலகம் வரும். அது கற்பனையா நான் உருவாக்கிக்கிட்ட உலகம். இந்தக் கதைகளை நம்மால் எழுத முடியுமா என்று யோசித்தபோது முடியாது என்கிற ஒரு நிலைமைக்குத்தான் நான் வந்தேன். ஏன்னா நாலு பக்கம் ஐந்து பக்கம் கதை இருக்கும். அதைவிட எளிமையாக எனக்குத் தெரிந்தது கவிதை எழுதுவதுதான். பத்து வரியில் நம்மால் கவிதை எழுதிவிட முடியும் என்பது ஒரு தெம்பைத் தந்தது.
அதனால் இரண்டு மூன்று விஷயங்கள் கிடைத்தன. மற்ற பையன்கள் முன்னால் ஒரு நட்சத்திரமாகும் வாய்ப்புக் கிடைத்தது. மொழியைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக்கொள்ள முடிந்தது. இப்படி எழுதின கவிதைகள் எல்லாமே என்னுடைய தமிழாசிரியர்கள்கிட்டக் காட்டியிருக்கிறேன். அவுங்க ஒவ்வொரு திருத்தங்களாச் சொல்லியிருக்காங்க. குறைந்தது ஆயிரம் கவிதையாவது எழுதியிருப்பேன். இதற்கு மறைமுகமாக எனக்கு உதவிய ஒரு நூலைச் சொல்லணும். புலவர் குழந்தை எழுதிய 'யாப்பதிகாரம்' என்னும் நூல் அது. எனக்குப் பத்தாவது பதினொன்றாவது படிக்கும்போது கிடைத்த இந்தப் புத்தகம் யாப்பைக் கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.
அந்தக் கட்டத்தில் தளை தட்டாம ஒரு வெண்பாவை என்னால் எழுத முடியும். அத்தோடு அந்தப் புத்தகம் தான் புதுக்கவிதைன்னு ஒரு விஷயம் இருக்கு என்னும் உணர்வை, அறிவைத் தந்தது. அந்த நூலின் ஒரு பகுதியில் புதுக்கவிதை பற்றி அவர் சில விமர்சனங்களை வைத்திருப்பார்.
ந. பிச்சமூர்த்தியின் ‘தாயும் குஞ்சும்’ என்னும் கவிதையை மேற்கோளாக எடுத்துப்போட்டு அவர் விமர்சனத்தைத் தொடர்ந்திருப்பார். அந்தக் கவிதை பிச்சமூர்த்தியால் வானொலியில் வாசிக்கப்பட்ட கவிதை. அதையும் குறிப்பிட்டுவிட்டு ‘இத்தகைய பாட்டல்லாப் பாட்டுக்களைத் தமிழ் மக்களுக்கு ஒலிபரப்பும் நிலையில் உள்ளது தமிழ்நாட்டு வானொலி நிலையம்’ அப்படீன்னு விமர்சனம் செய்திருந்தார் புலவர் குழந்தை. அவர் கொடுத்திருந்த அந்தக் கவிதைப் பகுதியைப் படித்தபோது அதுதான் கவிதைங்கிற மாதிரி எனக்குத் தோணுச்சு. ‘இருப்பிட மின்ப மென்றும் இனியசே றும்ப ரென்றும்’ என்று புலவர் குழந்தை அதற்கு ஒரு மரபு வடிவத்தைக் கொடுத்திருப்பார். பிச்சமூர்த்தியின் கவிதை ‘இருப்பிடம் இன்பமென்றும் சேறதே சொர்க்கமென்றும்’ அப்படீன்னு தொடங்கும்.
கவிதை மனசைச் சார்ந்தது என்று நான் நம்ப ஆரம்பிச்சதன் அறிகுறி அதுதான். ‘உம்பர்’ என்பது ஒரு புலவருக்குப் புரியக்கூடிய பாஷை. ஆனால் ‘சொர்க்கம்’ என்பது சாதாரணமாகத் தமிழ் தெரிஞ்ச ஒருவனுக்குப் புரியக்கூடியது. புரியக்கூடிய முறையில் எழுதப்படுவதுதான் கவிதை அப்படீங்கறது என்னுடைய நம்பிக்கை. அதுல இருந்துதான் புதுக்கவிதை பற்றிய ஒரு தோற்றம் எனக்குக் கிடைத்தது. அதுக்கு முன்னாலேயே ‘எழுத்து’ங்கிற அந்தப் பத்திரிகையை நான் பார்த்திருக்கிறேன்.
சோமசுந்தரம் என்று எங்களுடைய ஆசிரியர். அவர் தமிழ்ப் பண்டிதர் அல்ல. தமிழ் ஆர்வலர். அவர் கையில் அப்படி ஒரு பத்திரிகையைப் பார்த் திருக்கிறேன். பத்திரிகைன்னா ஒரு தலைப்பு இருக்கும். அதுக்கும் கீழ ஒரு படம் இருக்கும். உள்ளேயும் படங்கள் இருக்கக்கூடிய பத்திரிகைகளைத்தான் பார்த்திருப்போம். படமே இல்லாமல் நான் பார்த்த முதல் பத்திரிகை அது. என்ன பத்திரிகை சார் அப்படீன்னு கேட்டபோது ‘இலக்கியப் பத்திரிகை’ அப்படீன்னாரு. நான் பார்த்த முதல் இலக்கியப் பத்திரிகை அதுதான். அதற்குப் பின் எங்கள் ஊர் நூலகத்தில் ‘புதுக் குரல்கள்’ என்கிற தொகுப்பு எனக்குக் கிடைத்தது. அதன் உள்ளடக்கத்தில் பிச்சமூர்த்தின்னு பேர் இருந்தது. ஏற்கனவே அந்தப் பேர் எனக்கு அறிமுகம் ஆகியிருந்ததால் அவர் கவிதையைப் படிக்க ஆரம்பித்தேன். அவர் கவிதைகள், அதில் இருந்த மற்ற கவிதைகள் என எல்லாவற்றையும் படித்தபோது கவிதை என்பது வேறொரு முகத்தோடு இருக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை எனக்குள்ளே உண்டாயிற்று. இதுதான் நான் கவிதைக்கு வந்த வரலாறு.

உங்களுடைய தொடக்கக் கவிதைத் தொகுப்புகளான ‘கோடை காலக் குறிப்புகள்’, ‘பயணியின் சங்கீதங்கள்’ ஆகியவற்றில் இருந்த செறிவு அதற்கப்புறம் வந்த ‘வாழ்நிலம்’ தொகுப்பில் இல்லை. வாசகரை நோக்கி உங்கள் கவிதை எளிமைப்பட்டிருப்பதாகப்படுகிறது. இந்த மாற்றத்தை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

அது தானாக உருவான மாற்றம். மனநிலைகளில் ஏற்பட்ட மாற்றம். கோடைகாலக் குறிப்புகள் எழுதும் போதெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் பெரிய சிரமங்களை அனுபவித்தேன். அதனால் அதில் உள்ள கவிதைகள் கழிவிரக்கத்தோடானவையாகப் பெரும்பாலும் இருக்கும். அப்போதைய சூழலிலும் அதற்கான வாய்ப்பு இருந்தது. எல்லாம் மொத்தமாகச் சேர்ந்துதான் அப்படியான தொனி என் கவிதைகளில் வந்தது. ‘கோடைகாலக் குறிப்புகள்’ தொகுப்புக் கவிதைகள் என்னை முன்னால் வைத்து வருத்தங்களைச் சொல்பவை, ஆதங்கங்களைச் சொல்பவை, கோபங்களைச் சொல்பவை, தோல்வியைச் சொல்பவை, எரிச்சலைச் சொல்பவை எனப் பலவிதமாக இருக்கும்.
அதற்குப் பின்னால் வரும் கட்டத்தில் என்னை முன்னிறுத்தி என்னைச் சுற்றியிருக்கும் பல விஷயங்களையும் கேள்வி கேட்கிற சுபாவத்துக்கு வந்து சேர்ந்தேன். ‘பயணியின் சங்கீதங்கள்’ தொகுப்புக் கவிதைகளை அப்படிப் பார்க்கிறேன். ‘கோடைகாலக் குறிப்புகள்’ கவிதைகளில் ஒரு முடிவுக்கு நானே வந்திருப்பேன். இருப்பதா இழப்பதா அப்படீன்னு ஒரு தீவிரமான முடிவுக்கு வந்து அந்தக் கவிதைகளில் நின்னிருப்பேன். ‘பயணியின் சங்கீதங்கள்’ வருகிற போது முடிவுகளுக்கெல்லாம் நான் தயாராகவே இல்லை. கேள்விகளை மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ‘ஏன் நமது நிலைமை இப்படி இருக்கிறது?’ என்று கேள்விகளை மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
அதற்கப்புறம் வந்த கவிதைகளில் இந்தக் கேள்விகளுக்கு நானும் பொறுப்பு, நீயும் பொறுப்பு என்கிற ஒரு பெரிய தளத்தில் யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது அதுவரை நான் பயன்படுத்திவந்த மொழி வலுவானதாக எனக்குத் தோன்றவில்லை. அதை எளிமைப்படுத்துதல் என்று சொல்ல முடியுமான்னு தெரியவில்லை. இன்னும் புரிந்துகொள்வதற்குத் தோதான ஒருவகையில் பண்ணனும் என்னும் தேவை எனக்கு ஏற்பட்டது. நீங்க நல்லா யோசிச்சீங்கன்னா தமிழ்க் கவிதையில் அப்படியான ஒன்று தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கு. ஒரு கவிஞனும் ஆரம்பத்தில் எழுதிய அதே மொழியைப் பின்னால் எழுதவில்லை. உடனடியாகக் கிடைக்கக்கூடிய உதாரணம் பசுவய்யா. அவர் ஆரம்பத்தில் எழுதிய மொழிநடையில் பின்னால் எழுதவில்லை. அது அவருக்குள்ளே நிகழ்ந்த மாற்றம், அந்த மொழியில் நிகழ்ந்த மாற்றம், காலத்தில் நிகழ்ந்த மாற்றம் ஆகிய எல்லாம் சேர்ந்துதான் கவிதையுடைய தேவையை வெளிப்பாட்டைத் தீர்மானிக்கின்றன. அப்படி நிகழ்ந்த மாற்றங்கள் தான் எனக்கும்.

தொடக்கக் கவிதைகளில் கழிவிரக்கம் இருக்குன்னு சொன்னீங்க இல்லியா. அந்தக் கவிதைகளை எல்லாம் படித்தால் வாழ்க்கையே துக்கம்தானோ எனத் தோன்றும். அவ்வளவு துயரம், கழிவிரக்கம் கவிதைக்குத் தேவையா?

இந்த வாழ்க்கையில் சந்தோசத்துக்கான கணங்கள் ரொம்பக் கொஞ்சமாகவும் துக்கத்துக்கான கணங்கள் அதிகமாகவும் இருக்கின்றன. அப்படி இருப்பதுதான் இயல்பு. ஐம்பது வயது ஆகும் இந்தக் கட்டத்திலும் அந்த அபிப்ராயத்தில் இருந்து நான் மாற விரும்பவில்லை. மாறுவதற்கான பெரிய முகாந்திரங்கள் இல்லை. அன்றைக்கு என்னுடைய தனிப்பட்ட துயரம் பெரிதாக வருத்தப்படுத்தியது என்றால் இன்றைக்கு மொத்தமாக இருக்கிற வேறு துயரங்கள். சமூகத்தில் பார்க்கும் விஷயங்கள், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் என எல்லாமே வருத்தப்படுத்துது. அதைப் பற்றி உடனடியாக ஒரு கவிதை எழுதி முன்னணிப் போராளியாக வந்து நிக்கனும் என்று கேட்டால் அதற்கான திராணி எனக்கில்லை. அந்த விஷயங்கள் என்னையும் தொடுது. அதனால் நான் பாதிக்கப்படுகிறேன். அதனால் எங்கோ ஒரு மூலையில் நானும் கசிகிறேன்.
நந்திகிராமில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதில் எனக்கு ஒன்றும் சந்தோசம் இல்லை. உங்களுக்கும் சந்தோசம் இல்லை என்கிற போது வெறும் சந்தோசமான கணங்களைப் பற்றி என்ன பேச முடியும்?

உங்கள் கவிதை உருவாகும் முறைபாடு (process) எப்படியானது?

முப்பது வருசத்தில் நூற்றுக்கும் கொஞ்சம் அதிகமான கவிதைகள் எழுதியிருப்பவன் நான். நான் சரளமான எழுத்தாளன் அல்ல. சரளமான எழுத்தாளனாக இல்லாமல் போனதுக்குக் காரணம் நான்தான். என் கவிதைதான். ஒரு கவிதை மாதிரியே இன்னொரு கவிதை இருக்கும் என்கிறபோது அதை எழுத வேண்டாம் என்னும் கட்டாயத்தை நானே உருவாக்கிக்கிட்டு இருக்கிறேன். ஒருமுறை பயன்படுத்திய மொழி மாதிரி நான் இன்னொருமுறை பயன்படுத்தினால் அந்தக் கவிதையை எழுத வேண்டாம் என்ற தீர்மானத்துக்கு வந்தேன். ஒருவர் எழுதின அனுபவம் மாதிரியே நான் எழுத வேண்டி நேரும் அப்படின்னா அந்த மாதிரியான கவிதைகளை நான் தவிர்த்தேன். அதனால் கவிதை எண்ணிக்கையைக் குறைச்சுக்கிட்டே வந்திருக்கேன்.
அது பற்றியான வருத்தம் எல்லாம் இல்லை. இருபத்தைந்து வருசம் எழுதியுமே கவிதைமேல் இருக்கும் காதல் ஏன் குன்றாமல் இருக்கிறது என்னும் கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக்கிட்டிருக்கேன். தெரியவில்லை. ரொம்பச் சின்ன வயசிலேயே கவிதை உள்ள வந்துட்டதால் அதுமேல இருக்கிற நேசம் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கலாம். வேறு எதையும்விட என்னைச் சரியாக வெளிப்படுத்திக்கொண்டேன் எனத் தோன்றும் இடம் கவிதை தரும் இடமாக இருக்கலாம். இவை எல்லாமே கவிதையைத் தொடரக் காரணமாக இருக்கின்றன. கவிதை எப்படி உருவாகிறது என்பது தொடர்ந்து புதிராகத்தான் இருக்கிறது.
பலமுறை யோசித்துப் பார்த்தால் சிலசமயம் ஒரு வரி வந்து இந்தக் கவிதையைத் தொடர்ந்து கொண்டுபோயிருக்கும். சில சமயம் படிமம் கவிதையைக் கொண்டுபோயிருக்கும். சில சமயம் வெறுமனே ஒரு சந்தம் மட்டும் கொண்டு போயிருக்கும். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் சொல்ல முடியும். 'கையில் அள்ளிய நீர்' என்கிற கவிதையை முதலில் அறுபது வரிகள் எழுதியிருப்பேன். ஆனால் எதுவுமே நிறைவாகத் தோன்றாததால் கிடப்பில் போட்டுவிட்டேன். வேறொரு நாள் அந்தப் படிமம் திரும்பத் தோன்றியபோது இப்போது இருக்கிற ஆறேழு வரிகள் மட்டும்தான் மிஞ்சின. அந்தக் கவிதையை அதே வடிவத்தில் தக்கவச்சுக்கிட்டேன். இது கவிதை வந்த ஒரு வழி.
சிலது சித்திரங்களாக வரும். போபால் பற்றிய விஷயத்தில் அந்த ஆட்கள் ஓடிவரக்கூடிய ஒரு விஷயம். அது எனக்குக் கிடைத்த ஒரு காட்சி. அதேபோலக் கொஞ்ச காலம் ரொம்பப் பயணம் செய்யக்கூடிய தொழிலில் நான் இருந்தேன். அப்போது நான் பார்த்த ஒரு காட்சி. நீலகிரி மலையில் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு அடுக்கிக் கிடந்தன. எனக்கு இந்த இரண்டு காட்சிகளுக்கும் ஏதோதொடர்பு இருப்பதாகத் தோன்றியது. அதுதான் ‘இந்த நூற்றாண்டில் மூன்று காட்சிகள்’ என்னும் கவிதை. யார்கிட்டேயோ ஏதோ கேள்வி கேட்கும்போது சும்மா ‘ச்சோ’ அப்படீன்னு ஒலிக்குறிப்ப மட்டுமே பதிலாத் தந்தாங்க. அது ஒரு கவிதையை முழுக்கவுமே கொடுத்திருக்கு. ‘பெயர்களின் கவிதை’ என்பது. எழுதி முடித்ததும் கவிதை என்னை விட்டுப் போயிடுது. அது வாசகனுடையதாக ஆயிருது. இருந்தாலும் இது எப்படி வந்தது என்ற கேள்வி தொடர்ந்து இருந்துக்கிட்டேதான் இருக்குது. அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காதவரைக்கும் நான் கவிதை எழுதிக்கிட்டேதான் இருப்பேன். அந்தக் கேள்விக்குப் பதில் கிடைச்சிருச்சின்னா கவிதை எழுதுவதை நிறுத்திக்குவேன்.

உங்கள் கவிதையில் வரும் கிளிக்குக் காரணம் வைத்தீஸ்வரன் என்று சொல்லியிருக்கிறீர்கள்? சச்சிதானந்தனின் சில வரிகளை அப்படியே பயன்படுத்தியிருப்பீங்க. இது மாதிரி வேறு கவிஞர்களின் தாக்கம் உங்களிடம் இருக்கிறதா?

இருக்கு. நான் பிறக்கும் போதே கவிதையாகக் கத்திக் கொண்டு பிறந்த ஆள் கிடையாது. நான் ஒரு மாதிரிப் படிக்க ஆரம்பிச்சேன். படிப்பு ருசியைத் தந்தது. அந்த ருசி வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்தது. அப்போது நாமும் எழுதலாம் என்னும் துணிவு வந்தது. அப்படித் தொடர்ந்து வந்த ஆள் நான். என்னை எல்லாரும் பாதித்திருக்கிறார்கள். பாதிப்பே இல்லாமல் ஒரு கவிஞன், ஒரு எழுத்தாளன் செயல்பட முடியுமா என்று என்னிடம் கேட்டால் என் பதில் முடியாது என்பதுதான். என்னைப் பெரிதாகப் பாதித்த கவிஞர் சுப்பிரமணிய பாரதிதான்.
அதாவது பள்ளிப் புத்தகத்தில் பாரதியைப் படித்தபோது யாரோ பாட்டு எழுதியிருக்கான் என்று தோன்றிய ஒரு ஆள்தான். ஆனால் வயது ஏற ஏற அந்தக் கவிதைகள் வேறு வேறு அர்த்தங்களாக மனசுக்குள் வந்துக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு கட்டத்தில் படிக்கும் போதும் அந்தக் கவிதைகளுக்கு வேறு வேறு பொருள், வேறு வேறு வண்ணம், வேறு வேறு தொனி பார்க்க முடிந்தது. எனக்குப் பெரும் பாதிப்பு பாரதியிடம் இருந்து வந்தது. உதாரணமாக ஒரு கவிதை சொல்கிறேன். இருளும் ஒளியும் என்னும் கவிதை. ‘வானமெங்கும் பரிதியின் சோதி’ என்று தொடங்கும் அது. அதனுடைய ஈற்றடி ‘மான வன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருளிது வென்னே’ என்பது. அந்த வரி இல்லாமல் இருக்கலாம். அது கவிதையாக இருக்கக்கூடும். ஆனால் அந்த வரியைச் சொல்வதற்காகத்தான் அந்தக் கவிதையை எழுதினார் என்று நான் யூகிக்கிறேன். இந்தத் தந்திரத்தை நான் என்னுடைய பல கவிதைகளில் பயன்படுத்தி யிருப்பேன். ‘நெடுங்காலம் புகைந்துகொண்டிருப் பதைவிடப் பற்றி எரிவது மேல்’ என்று முடியும் என்னுடைய கவிதையில் அந்த வரி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த வரி இல்லாமல் அந்தக் கவிதையை என்னால் எழுத முடியாது.
வைத்தீஸ்வரன் ஒரு நகரம் சார்ந்த கவிஞர் என்கிற முறையில் என்னைப் பாதித்தார். அவர் நகரம் சார்ந்தவர். நான் நகரம் சார்ந்தவன்னு சொல்றது எவ்வளவு தூரம் பொருந்தும் என்று தெரியவில்லை. கோயம்புத்தூர் மாதிரியான ஒரு நகரத்தைச் சென்னை மாதிரியான அல்லது இன்னும் பெரிய நகரத்தோடு ஒப்பிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. பெரிய கிராமத்தின் சாயல்களைக் கொண்ட நகரம் கோயம்புத்தூர். நகரம் என்று சொல்கிற வகையில் வைத்தீஸ்வரனின் சாயல்கள் என்னிடம் உண்டு. பேருந்து போன்ற சில படிமங்களைக் கொண்டுவருவது போன்றவற்றில் அப்படிச் சொல்லலாம்.
ஆனால் என்னை ரொம்பவுமே பாதித்த கவிஞரா இருந்திருக்க வேண்டியவர் பிரமிள் என்கிற தருமு சிவராமு. ஆரம்ப காலத்தில் படிமங்கள் கவிதைக்கு இன்றியமையாதவை என்று நான் நம்பிக்கொண்டிருந்த போது என்னை பெரிய வீஸீயீறீuமீஸீநீமீ பண்ணியவர் தருமு சிவராமு. அதனுடைய சில சாயல்கள் அங்கங்கே என்னுடைய கவிதையில் இன்றைக்கும் இருக்கின்றன. ‘இருளின் நிறமுகக் கதுப்பில் தணல்கள் சிரித்தன’ என்று ஒரு வரி. அது படிமமாகவோ உவமையாகவோ எதுவுமாகவும் இல்லை. அந்த வரி மட்டுமே ஒரு மொத்தமான கவிதையாக இருக்கும். அந்த மாதிரியான வரிகள் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. அந்த அளவுல அவருடைய பாதிப்பு இருக்கு.
என்னுடைய வாசிப்பு சார்ந்து செசார் வயெஹோ என்கிற பெரு நாட்டுக் கவிஞர் தற்செயலா எனக்குத் தெரியவந்த ஒரு பெயர். எழுபதுகளில் எனக்குப் படிப்பதில் தீவிரமான ஆர்வம் இருந்தது. அப்படிப் படித்ததில் இந்த சோசலிசக் கவிதைகள் அல்லது இடதுசாரிக் கவிதைகள் எல்லாமே என்னை ரொம்பவும் பாதித்தன. அந்தப் பாதிப்பில் நான் பல கவிஞர்கள் பக்கத்துல நின்னு தொட்டு உரசிப் போயிருப்பேன். கையப் புடிச்சிக் குலுக்கிக்கிட்டு அவர் கைக்குள்ள என்னை அடக்கிக்கமாட்டாரான்னு ரொம்பவுமே ஆசைப்பட்ட கவிஞர் செசார் வயெஹோ. அவருடைய கவிதைகள் என்னை ரொம்பவுமே பாதித்திருக்கின்றன. ஒரு பெரிய துக்கம், தனிமனிதத் துக்கம், அது சார்ந்த சமூகத் துக்கம் என்பதுதான் அவருடைய கவிதைகளின் அடிநாதம். அந்தச் சமூகத் துக்கம் தனிமனிதனைப் பாதிக்கும் விதத்தையும் தனிமனிதத் துக்கம் சமூகத்தைப் பாதிக்கும் பொதுத் துக்கமாகிற விதத்தையும் செசார்கிட்டத்தான் நான் கத்துக்கிட்டேன். அவர் கவிதையினுடைய பாதிப்பு இருக்கு. ஆனால் அவர் எழுதிய மாதிரி ஒரு வரிகூட நான் எழுதினதில்லை. அந்த உணர்வை நான் உறிஞ்சி என் நரம்பில், கிளையில் இலையில் எல்லாம் பரவவிட்டதுதான்.
அதேபோலத்தான் பாரதி. பாரதியின் நிறைய வரிகள். வரிகள் என்று சொல்வது அவற்றைக் குறைவுபடுத்துகிற மாதிரியாக இருக்கிறது. படிமமாகவோ பதப்பிரயோகமாகவோ இருக்கலாம். இவை எல்லாம் பாரதியிடம் இருந்து கற்றுக்கொண்டவைதான். அவர்தான் என்னைப் பாதித்த பெரும் ஆளுமை. பாப்லோ நெரூடா எனக்குப் பிடித்த கவிஞர். பெரிசா வீஸீயீuறீமீஸீநீமீ பண்ணினவர் அல்ல. சச்சிதானந்தன் வரிகளை ஒரு க்ஷீமீயீமீக்ஷீமீஸீநீமீக்காக எடுத்தது. அவர்கிட்ட நான் கத்துக்கிட்ட ஒரு விசயம் வரிகளை நீட்டிவிடுவது. அதை ஒரு பாதிப்புன்னு சொன்னா பிரெக்ட்கிட்ட அது நிறையவே இருக்கிறது. வரிகள் நீளமா வரும்.

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்துப் ‘பெண்வழிகள்’ என்று ஒரு தொகுப்பு வெளியிட்டிருக்கிறீர்கள். தமிழில் பெண் கவிதைகள் பற்றிய பேச்சு தொடங்கிய காலத்திலேயே பெண்மொழி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். இப்போது தமிழில் வரும் பெண் கவிதைகளுக்கும் மலையாளப் பெண் கவிதைகளுக்குமான இயைபு என்னன்னு பார்க்கறீங்க?

பெண்களுக்குத் தனியான ஒரு உலகம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய அனுபவம் என்னுடையது அல்ல. அந்த அனுபவத்தை என்னாலும் சுவீகரிக்க முடியுமானால் இன்னும் கொஞ்சம் மேன்மைப்பட்ட கவிஞனாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். பெண்களின் அனுபவம் எழுத்தில் வரணும். எழுத்தில் எதற்கும் விலக்கோ தடையோ இருப்பதாக எனக்கு அபிப்ராயம் இல்லை. எழுத்தில் எல்லாமும் சாத்தியம். பெண்ணுடைய உலகமும் அதில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் கொஞ்சம் விரிவான வாசகன். தமிழ் அல்லாத வேறு இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து படிக்கிற ஆள் நான். அந்த மொழிகளில் நடக்கும் முயற்சிகளை எல்லாம் பார்க்கும்போது நான் இயங்கும் மொழியில் அப்படியான முயற்சிகள் இல்லை என்கிற குறையை உணர்கிறேன். வாசகனாகவும் கவிதை ஆர்வலனாகவும் உணர்கிற குறை இது. அதைச் சொல்வதற்காக எழுதிய கட்டுரைதான் பெண் மொழி. அதில் பெண்மொழி நம் கவிதையில் இல்லை என்று சொல்லியிருப்பேன். பின்னால் லீனா மணிமேகலையுடைய தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரையில் என்னுடைய கருத்தைத் திருத்திக்கொண்டேன். ஏன்னா இந்தப் பத்து வருசத்துக்குள் நிறையப் பெண்குரல்கள் வந்திருக்கு.
நான் அந்தக் கட்டுரையை எழுதியபோது அன்றைக்கு இருந்த பெண் குரல்கள் என்பவை இரா. மீனாட்சி, திரிசடை, சுகந்தி சுப்பிரமணியன் போன்றவைதான். கவிதை என்று தைரியமாகச் சொல்லக்கூடிய குரல்கள் இவைதான். அந்த ஆதங்கத்தில் எழுதின கட்டுரை அது. அதற்குப் பின்னால் வந்த கவிதைகளையும் தொடர்ந்து படித்துக்கொண்டு வருகிறேன். சில பெண் கவிஞர்களுடைய தொகுப்புக்கு நான்தான் முன்னுரையும் எழுதியிருக்கிறேன். இந்த மொழியில் இது தவிர்க்க முடியாதது, வரவேற்கப்பட வேண்டியது, தொடர்ந்து போக வேண்டிய ஒரு போக்கு என்று எனக்குத் தோன்றுகின்றது. பெண்ணுடைய உலகம், உணர்வு, வரலாறு எல்லாவற்றையும் அவர்களுடைய மொழியில் பதிவுசெய்வதற்கான எல்லா உரிமையும் அவர்களுக்கு உண்டு. அதை எந்த வகையிலும் மறுக்க முடியாது. அதை ஏற்றாகனும். அப்போதுதான் இலக்கிய வாசகன் அல்லது இலக்கியவாதி என்னும் முறையில் உங்களுடைய உலகத்தை விரிவுபடுத்த அது உதவும். இந்த நோக்கில்தான் நான் பெண் கவிஞர்களுடைய தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதி இருக்கிறேன்.
தமிழில் பெரிய வெள்ளமாக வந்திருக்கிறது. இது ஒரு ஆற்றொழுக்கான ஓட்டமாக மாறுவதற்கு இன்னும் கொஞ்சம் காலமாகும். இதற்குள் சரியும் சரியில்லாததும் தேவையும் தேவையில்லாததுமான பல போக்குகள் இந்த ஓட்டத்தில் இருக்கின்றன. இதில் பிரதானமாக எனக்குத் தோன்றுவது பெண்கள் உடலை மையப்படுத்திக் கவிதை எழுதுபவர்கள் என்று சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு. அது சரியானதாக எனக்குப் படலை. பெண் உடலைப் பற்றிப் பெண்தான் எழுத முடியும் என்று நான் நினைக்கிறேன். கமலாதாஸ் ஒரு கவிதையில் கர்ப்பத்திலிருந்து குழந்தை இறங்கின ஒரு வலியைச் சொல்லியிருப்பாங்க. இந்த வரியைச் சுகுமாரனோ பெருமாள்முருகனோ உணர்ந்து எழுத முடியாது. ஊகித்துத்தான் எழுத முடியும். அப்படியான உண்மையான இயல்புகள் கவிதைக்கு வருவது என்பது நம் கவிதையை இன்னொரு கட்டத்துக்குக் கொண்டுபோவதற்கும் நம்ம கவிதையை மேன்மைப்படுத்துவதற்கும் உதவும் என்று நினைக்கிறேன். அதனால் அதைப் பற்றிய குறைகள் எனக்கு இல்லை. ஆகவே அந்தக் குற்றச் சாட்டுகளை நான் பொருட்படுத்த விரும்பவில்லை.
ஆனா இதில் நான் பார்க்கக்கூடிய குறை என்பது கவிதை மொழி சார்ந்தது. இதுவரைக்கும் ஆண்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த மொழியைத்தான் பெண்களும் பயன்படுத்துகிறார்கள். பெண்களுடைய மொழியாக இதை மாற்றுவதற்குப் பெரிய முயற்சி எதுவும் இல்லை. ரொம்பக் குறைவான முயற்சிதான் நடந்திருக்கு. இதில் மாற்றுக் கருத்துக்கும் இடம் உண்டு. அப்படியான முயற்சியைத் தொடங்கிவைத்தவர் சுகந்தி சுப்பிரமணியன் என்பது என் அபிப்ராயம். அதற்குப் பின்னால் பெரிய இடைவெளி விட்டு இன்றைக்கு சல்மாவிடம் அப்படி ஒரு மொழி செயல்படுது என நான் ஊகிக்கிறேன். மாலதி மைத்ரி, சுகிர்தராணியிடம் அப்படியான மொழி செயல்படுகிறது. பெண்ணுடைய உலகத்தின் ஒரு மென்மையான மொழி உமா மகேஸ்வரியிடம் செயல்படுகிறது. இதையெல்லாம் நான் பார்க்கிறேன்.
ஆனால் இவர்களுடைய மொழியாக, சுயம்புவாக முழுவதும் பெண் உலகம் சார்ந்த, பெண் உணர்வு சார்ந்த மொழியாக இது இல்லை. அடுத்து, இவர்கள் எல்லாருமே பெண் உடல், உறுப்பு ஆகிய இரண்டு நிலைகளில் இருந்துதான் இந்தக் கவிதைகளை எழுதுகிறார்கள். பெண்கள் இந்தச் சமூகத்தினுடைய ஒரு பகுதி, இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்று சொல்லப்படுமானால் பெண்ணுக்கும் வரலாற்றில் இடம் உண்டு, பண்பாட்டில் இடம் உண்டு, மதத்தில் இடம் உண்டு, மொழியில் இடம் உண்டு, இலக்கியத்தில் இடம் உண்டு. இத்தனை இடங்களிலும் இவர்கள் யாருமே பிரவேசிக்கவில்லை. எனக்குச் சுலபமாகத் தெரிஞ்ச இன்னொரு மொழி என்பதால் மலையாளத்தில் அப்படியான இடத்தை, வரலாற்றை மையப்படுத்துகிற ஒரு போக்கை மலையாளப் பெண் கவிதைகளில் பார்த்தேன். அதனால்தான் அந்தக் கவிதைகளை மொழிபெயர்த்தேன். தமிழ்க் கவிதைகளையும் மலையாளக் கவிதைகளையும் ஒப்பிடுவதற்கான விஷயம் இல்லை. இது அதை நிறைவுசெய்யவும் அது இதை நிறைவு செய்யவுமான பங்களிக்கும் முயற்சியாகத்தான் பார்த்தேன்.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.

என் அப்பா, அம்மா இரண்டு பேரும் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் கேரளாவிலிருந்து பிழைப்புத் தேடித் தமிழ்நாட்டுக்கு வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்க அப்பாவுக்கு ஒரு சகோதரி. என் அப்பாவின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். அதில் இன்னொரு சகோதரனும் சகோதரியும் உண்டு. எங்க அம்மா ஏழு ஆண்களுக்குப் பின் கடைசியாகப் பிறந்த ஒரே பெண். அம்மாவுக்கு அவங்க அப்பாவைப் பார்த்த ஞாபகமெல்லாம் இல்லைன்னு சொல்லிக் கேட்டிருக்கேன். எங்க பாட்டி கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் நெடும்பரா என்னும் கிராமத்தில் கோவில் தொடர்பான வேலைகள் செய்துகொண்டிருந்தார்கள். பிழைப்புத் தேடித் தன்னுடைய ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு கோயம்புத்தூருக்கு வந்து குடியேறினார்கள்.
எங்க அப்பா ஆரம்பத்தில் கோயம்புத்தூரிலிருந்து நேவல் போர்ஸ் அலுவலகத்தில் சின்ன வேலைகள் செய்துகொண்டிருந்தார். அதற்கப்புறம் பதினாறு பதினேழு வயதில் கோயம்புத்தூர் நகராட்சியில் மின்கம்பியாளராக வேலையில் சேர்ந்தார். எங்க அப்பா நேவல் இதிலெல்லாம் வேலைசெய்துகொண்டிருந்தபோது கோயம்புத்தூரில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு எடுபிடி வேலைக்கெல்லாம் போவார். அங்க இருந்த ஒருவர் சி. பி. கண்ணன். அவர் ஸ்டுடியோவில் நீர்ப் பராமரிப்பு மாதிரியான வேலைகள் எல்லாம் செய்துகொண்டிருந்தார். கருணாநிதி வசனம் எழுதி எம்ஜிஆர் நடித்த காட்சிகளை எல்லாம் பார்த்த பாக்கியம் செய்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். என் அப்பாவுடைய சகோதரி, என்னுடைய அத்தையின் கணவர், அப்போது இறந்துபோய்விட்டார். என் அத்தைக்கு ஒரு துணை வேண்டும் என்பதால் சி.பி.கண்ணன் அவர்களைக் கல்யாணம் செய்துகொண்டார். இந்தக் கல்யாணம் அதிகாரப்பூர்வமாக நடந்ததா இல்லையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். அதற்கு அப்புறம் மெட்ராஸ் இன்ஜினியரிங் சர்வீஸ் என்கிற கம்பெனியில் வேலை கிடைத்தது என்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் என்னும் இடத்துக்குப் போனார்கள். எங்கப்பாவுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எங்க அம்மா பேரு தங்கமணி. அப்பா பேரு நாராயணன். எங்க அத்தைக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் நான் பிறந்த ஒன்பதாவது மாசமே என்னை அங்க கொண்டு போய்விட்டார்கள்.
என்னுடைய பன்னிரண்டு வயதுவரைக்கும் அந்தப் பகுதியில்தான் இருந்தேன். அங்கேதான் வளர்ந்தேன். என் கவிதையில் எங்கேயாவது மரம், செடி, மலை, நதி இதெல்லாம் தென்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த இளமைக்காலக் காட்சிகள்தான். அப்புறம் என் மாமா, அதாவது சி. பி. கண்ணன், நான் பார்த்த மனிதர்களில் மிகவும் பிரமாதமான மனிதர். அவருக்கு இன்னொரு குடும்பம் மனைவியெல்லாம் இருந்தார்கள். ஆனால் அதைப் பற்றி அவர் அதிகம் பேசியதில்லை. எங்க அத்தைகூடத்தான் கடைசிவரைக்கும் இருந்தார். ஓய்வுபெற்ற பின்னால் கோயம்புத்தூருக்கு வந்து இருந்தார். அப்புறம் இறந்துபோயிட்டார். இப்ப எங்க அத்தை பாலக்காட்டில் இருக்கிறார்கள்.
எங்க அம்மாவுக்குக் கூடப் பிறந்த ஏழு பேரில் முதல் இரண்டு பேர் கோயம்புத்தூரில் வேலையெல்லாம் பார்த்தார்கள். மூன்றாவது ஒருவர் சின்ன வயதிலேயே பூனாவுக்கு ஓடிப்போயிட்டார். அவருக்கு என்னுடைய சாயல் என்று இன்றைக்குவரைக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த சகோதரர்கள் இரண்டு பேரும் ஊமைகள். அதில் ஒருவர் ஊனமானவரும்கூட. இன்னொரு சகோதரர் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இவர்கள் எல்லாரும் சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள். கோயம்புத்தூரில் இருந்த ரப்பர் கம்பெனி ஒன்றில் சின்னச் சின்ன வேலை எல்லாம் செய்துகொண்டிருந்தார்கள்.
எங்க அப்பா கோயம்புத்தூர் நகராட்சி மின்துறையில் கொஞ்சம் பதவி உயர்வுகள் எல்லாம் பெற்று இருந்தார். அந்தக் கட்டத்தில் அவருக்கு ஓரளவு மார்க்சியச் சாயல் இருந்தது. வாழ்க்கையில் அவர் வெளிப்படையாக அரசியல் என்று வைத்துக்கொண்டது அது மட்டுமாகத் தான் இருக்கும். கோயம்புத்தூர் நகராட்சியில் முதன்முறையாக நடந்த தேர்தலில் வென்று நகராட்சி ஊழியர் மின் சம்மேளனத்தின் முதல் செயலாளர் ஆனவர். அவர்கள் முதலில் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள். என் அப்பா மூன்று நாள் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்திருந்தார். அந்தக் காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது. கருப்புத் துணியெல்லாம் கட்டிக்கிட்டு இருந்தார். நான் போய் அப்பான்னு கூப்பிட்டபோது பேச மாட்டேன் அப்படீன்னு கைகாட்டினார். அந்தக் காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.
நான் ஊட்டியில் இருந்ததால் அப்பாகூடப் பெரிய நெருக்கம் எல்லாம் கிடையாது. நான் அப்பா அம்மா யாரும் இல்லாமல் தனியா அத்தையோட பராமரிப்பில் இருந்தேன். என் அத்தைக்குச் சின்ன அளவில் இலக்கிய ஈடுபாடெல்லாம் உண்டு. அவர்களுக்கு மலையாளம் நன்றாகப் படிக்க, எழுத, பேசவெல்லாம் தெரியும். கேரளத்தில் இருந்த மலையாளக் குடும்பங்களில் எல்லாம் வழக்கமாகப் பாராயணம் செய்கிற பக்தி நூல்கள் எல்லாத்தையும் அத்தை படிப்பார்கள். அதற்கு நேரெதிரானவர் மாமா. அவர் கோவிலுக்குப் போய் நான் பார்த்ததே இல்லை. அவர்களோடு இருந்தபோது வசதியான இளமைப் பருவம் இருந்தாலும் எனக்குச் சின்ன ஏக்கம் இருந்தது. தனியா இருக்கோம் அப்படீன்னு. அப்புறம் நாலாவதோ அஞ்சாவதோ படிக்கும்போது முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்குக் கோயம்புத்தூர் வந்தவன் அப்புறம் திரும்பி அங்கே போகவில்லை. என்னுடைய அத்தை ரொம்பவுமே வருத்தப்பட்டுக்கிட்டு அங்க இருந்த என்னுடைய சொத்தை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்தாங்க. பழைய பெட்டி பம்பரம், தூண்டில் முள், தீப்பெட்டிப் படம் இந்த மாதிரி நிறையச் சொத்து இருந்தது. அதற்குப் பின்னால அங்க இருக்கலயே தவிர இப்பவும் என்னோட ஊர் அப்படின்னா ஞாபகம் வருவது வெல்லிங்டன்தான். அது மாதிரியான வாழ்க்கை இருக்கும் என்றால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று இப்பவும் தோன்றுகின்றது.
அந்தத் தெரு முழுக்கவுமே ராணுவத்தில் இருந்தவர்கள், அது சார்பான தொழிலில் ஈடுபட்டு இருந்தவர்கள் எல்லாம் இருந்த இடம். தெருமுனையில் நின்னா எங்க வீடு நடுவில் இருந்தது. அந்த வீட்டுக்கு வர்றதுக்குக் கொறஞ்சது அரைமணி நேரம் ஆகும். ஏன்னா ஒவ்வொரு வீட்டு மேலயும் ஏறித்தான் வரணும். அப்படியான ஒரு பெரிய பிணைப்பு இருந்த ஊர். அது மனசுக்குள்ள பதிந்திருக்கிறது. அதனால் அந்த ஊர்மேல் இருக்கும் பிரியம் இன்னும் களையவில்லை. எனக்கு அடுத்தது தங்கை. அதுக்கப்புறம் ரொம்ப இடைவெளிவிட்டு இன்னும் இரண்டு பெண்களும் ஒரு பையனும். எல்லாப் பெண்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. தம்பியும் அம்மாவும் இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறார்கள்.
என்னுடைய ஆரம்பப் படிப்பு வெல்லிங்டன்ல. செயின்ட் ஜோசப் ஸ்கூல். கோயம்புத்தூருக்கு வந்தப்புறம் செயின்ட் ஜான்ஸ் ஸ்கூல் என்று சொல்லப்படுகிற செயின்ட் மைக்கல்ஸ் ஹைஸ்கூலின் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தேன். பள்ளிக் கல்வி முழுக்கவும் அங்கேதான். எஸ்எஸ்எல்சியில் எனக்குக் கிடைத்த பெரிய சந்தோசம் மாவட்டத்தில் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவன் நான் என்கிற பெருமை. அப்போது எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் பற்றி முதலிலேயே சொன்னேன். அப்புறம் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பியுசி படித்தேன். நல்ல மதிப்பெண். டாக்டர் ஆகணும் அல்லது அக்ரி யுனிவர்சிடிக்குப் போகணும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. டாக்டர் ஆகறதுக்கு வசதியெல்லாம் இல்லை. அதனால் அக்ரி யுனிவர்சிடியில் சீட்டுக் கேட்டேன். அதற்குக் காரணம் விவசாயம் பற்றிப் படிப்பது அல்ல. அப்போது அங்கே நல்ல இலக்கியச் சூழ்நிலை இருந்தது. கங்கை கொண்டான் என்ற கவிஞர் அங்கே இருந்தார். அவர் வெளியிட்ட ஆண்டு மலர்கள் எல்லாமே மாபெரும் இலக்கியப் பொக்கிஷங்களாகத் தோன்றின. இன்றைக்கும் அப்படித்தான் தோன்றும். அதற்காகவே அங்கே போனேன்.
வேளாண் பல்கலையிலிருந்து சேர்க்கை அட்டை வரும்னு காத்துக்கிட்டு இருந்ததில் எல்லா இடங்களிலும் கடையை மூடிவிட்டார்கள். அதனால் அந்த வருசம் எங்கேயும் சேர முடியவில்லை. அரசு கல்லூரியில் பொருளியல் படிக்கலாம் என்று மாலைக் கல்லூரியில் சேர்ந்தேன். நமக்கும் பொருளாதாரத்திற்கும் ஒத்துவராது என்பது தெரிந்தது. அது இன்றுவரைக்கும் தொடர்கிறது. அடுத்த வருசம் பிஎஸ்ஜி கல்லூரியில் பிஎஸ்ஸி வேதியியல் சேர்ந்தேன். ஆனால் அதில் ரொம்பப் பிரமாதமான மாணவனாக நானில்லை. தமிழில் பெரிய ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூடத்திலேயே எனக்குக் கிடைத்த ஆசிரியர்களின் தூண்டுதல் அதற்குக் காரணம். நான் முந்தியே சொன்ன மாதிரி கலியபெருமாள் என்னும் ஆசிரியர் இருந்தார். அவர் கதையாச் சொன்ன இரண்டு விசயங்கள் என்னை ரொம்பவுமே பாதித்தது. முதலாவது கோமல் சுவாமிநாதன் எழுதிய ‘புதிய பாதை’ நாடகக் கதையைச் சொன்னார். இரண்டாவது ஜெயகாந்தன் எழுதிய ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்னும் கதை. அவை இரண்டுமே எனக்குப் பெரிய பாதிப்பாக இருந்தன. அவரிடம் கேட்டு ஜெயகாந்தன் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
அந்த வயதில் அக்கதைகள் எனக்குப் புரிந்தன என்பதுதான் ஆச்சர்யம். சோமசுந்தரம் என்னும் இன்னொரு ஆசிரியரிடம் அந்தக் கதைகளை விமர்சித்தேன். ‘மிருகம்’ என்று ஜெயகாந்தன் எழுதிய கதை. சொந்த சகோதரனும் சகோதரியும் உறவு கொள்கிறார்கள். அதை அவரிடம் சொன்னபோது ‘பிஞ்சுலயே பழுத்துட்ட’ என்றார். நான் கதைகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதற்குச் சந்தோசப்பட்டு ‘இனிப்பும் கரிப்பும்’ என்னும் தொகுப்பைக் கொடுத்தார். நான் தெரிந்துகொண்ட முதல் எழுத்தாளன் ஜெயகாந்தன். அந்தக் கட்டத்தில் ‘ஞானரதம்’ பத்திரிகை வந்துகொண்டிருந்தது. அதில் ஜெயகாந்தன் எழுதுகிறார், முன்னோட்டம் என்னும் பகுதி முக்கியமானது என்பதை எல்லாம் என்னுடைய ஆசிரியர் சொன்னார். அவர் சிபாரிசால் அவற்றைப் படித்தேன். அதில் தென்பட்ட ஒரு பெயர் புதுமைப்பித்தன்.
கோவை மத்திய நூலகத்துக்குப் போய்ப் புதுமைப்பித்தன் பெயருள்ள புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்தேன். ‘காஞ்சனை’ தொகுப்பைப் படித்தபோது ரொம்பவுமே பரவசமாக, சந்தோசமாக, பயமுறுத்தக் கூடியதா, அதுவரைக்கும் இருந்த அபிப்ராயங்களை எல்லாம் மாத்தறதா இருந்தது. ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ படித்தேன். அதைப் படித்தபோது தீர்மானித்த ஒரு விஷயம் ஒரு காலத்திலும் எழுத்தை நம்பி வாழக் கூடாது என்பது. இந்தச் சமயத்திலும் எனக்குள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தவர் பாரதி. பாரதிமேல் இருந்த ரசனை, வாசக மதிப்பு எல்லாம் கடந்துபோய் அவர்மேல் பெரிய பக்தியே ஏற்பட்டிருந்தது. இன்றும் அந்த பக்தியில் இருந்து விடுபடலை. கல்லூரியில் படித்தபோது பூசாகோ (றிஷிநி) கல்லூரி நூலகம் பெரிய பொக்கிஷமாக இருந்தது.
கல்லூரியில் ‘புது வெள்ளம்’ என்று ஒரு பத்திரிகை மாணவர்களுக்காக வந்தது. மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும் பத்திரிகைன்னாலும் அதற்கு ஆசிரியராக இருந்தவர் முத்துராமலிங்கம் என்று ஒரு ஆசிரியர். என்னுடைய கதை, கவிதை எல்லாம் அந்த இதழில்தான் வந்தன. நான் முன்பே சொன்ன மாதிரி மரபு சார்ந்த கவிதைகள் பள்ளி ஆண்டு மலரில் எழுதியிருக்கிறேன். எஸ்எஸ்எல்சி படிக்கும்போது தாமரை இதழில் கதைகள் எழுதினேன். தொடர்ந்து இரண்டு இதழ்களில் என் கதைகள் வந்தன. ஒரு கதை பேர் ‘நியாயங்கள்’. இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. இந்தச் சமயத்தில் அபூர்வப் பசி கொண்ட ஆள் மாதிரி நிறையக் கதைகள் வாசித்தேன். சீக்கிரமே ஜெயகாந்தன் எனக்குச் சலிப்பு தட்டினார். அன்றைக்கு வந்திருந்த ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ நாவல் வரைக்கும் ஏகதேசமா எல்லாமே வாசித்திருந்தேன். படித்தபோது ஈர்ப்பைத் தரக்கூடியதாக இருந்த அவை பின்னால் ஒரு மாதிரி அலுப்பைத் தந்தன. 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலைத் தவிர.
அப்புறம் என் கவனம் தி. ஜானகிராமன் பக்கம் திரும்பியது. நான் அதிகம் பேசாத ஆள். சங்கோஜி. மென்மையான சுபாவம் இருப்பதாகச் சொல்லப்படுபவன். அதனால் எனக்குப் பொருத்தமான எழுத்தாளர் ஜானகிராமன் என்பது மாதிரி பட்டது. இது மட்டும் போதாது என்று தோன்றியபோது மெல்ல மெல்ல ஆங்கிலத்தில் படிக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் நான் படிக்க நேர்ந்தது ஆங்கில மீடியம் சார்ந்த பள்ளி. அதனால் ஆங்கிலத்தில் படிப்பதும் எனக்கு எளிதாக இருந்தது. அன்றைக்குக் கிடைத்த சார்லஸ் டிக்கன்ஸ் மாதிரியான புத்தகங்கள் தாண்டி டி. ஹெச். லாரன்ஸ் மாதிரியான புத்தகங்களுக்கு வந்தேன்.
நடுவில் கம்யூனிஸ்ட் கட்சியோடு சின்ன உறவு. என்னுடைய ஆசிரியர் சோமசுந்தரம் சிபிஐ கட்சியோட உறுப்பினர். அவர் என்னைக் கட்சி அலுவலகத்திற்குக் கூட்டிக்கொண்டு போவார். முதன்முதலாக ஜெயகாந்தன் என்கிற எழுத்தாளரைப் பார்த்தது அங்கேதான். ‘இவன் கவிதையெல்லாம் எழுதுவான்’ என்று என் ஆசிரியர் சொன்னார். ‘ஆங் அப்படியா. சபாஷ்’ அப்படீன்னு சொல்லிட்டுப் போனார் ஜெயகாந்தன். அதனால் அங்கே கிடைத்த சில புத்தகங்கள் எல்லாம் என் கவனத்தை மாற்றின. ரஷ்ய இலக்கியங்கள் மாதிரியான விஷயங்கள். அவற்றைப் படித்தபோது என்னுடைய எழுத்தாளர் என்று தோன்றியவர் ஆன்டன் செகாவும் தாஸ்தாவ்ஸ்கியும்தான்.
ஆங்கிலத்தில் படிக்கிறேன், தமிழில் கவிதைகள் எழுதுகிறேன், கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன என்றபோது என்னுடைய ஆசிரியர் கமலேசுவரன் என்பவர் எனக்கு நிறையப் புத்தகங்கள் கொடுத்து உதவினார். அப்போது எஸ்.வி.ஆரின் ‘எக்ஸிஸ்டென்சியலிசம் ஓர் அறிமுகம்’ என்ற புத்தகம் வந்திருந்தது. அது என்னை உலுக்கிப் போட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தின் மூல வடிவமான Irrational Man என்ற புத்தகத்தையும் நான் தேடிப் படித்தேன். இதையெல்லாம் நான் படிப்பதைப் பார்த்த கமலேசுவரன், சார்த்தர் எழுதிய Being and Nothingness என்ற ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். அது கிட்டத்தட்ட எழுநூறு எண்ணூறு பக்கம் வரும். கரடு முரடான நடையில் எழுதப் பட்டிருக்கும். அவர் எல்லா மாணவர்களையும் ‘குஞ்சு’ அப்படீன்னுதான் கூப்பிடுவார். ‘ஏ குஞ்சு உனக்கு இது மண்டையில ஏறுதா பாரு’ என்றார். ஆனால் முந்நூறு பக்கம்தான் மண்டையில் ஏறியது. மீதி ஏறலை. ஆனால் முந்நூறு பக்கம் படிக்க முடிந்தது அன்றைக்குப் பெரிய சாதனையா இருந்தது. தொடர்ந்து அது சார்ந்த எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு என்னை ரொம்பக் கவர்ந்தவர் ஆல்பெர் காம்யுதான். அந்தக் கவர்ச்சி இன்றைக்குவரைக்கும் மாறவில்லை.
இப்படி வாசிப்பும் ஆசிரியர்களும் கொடுத்த தூண்டுதலாலேதான் எழுத ஆரம்பித்தேன். இந்தச் சமயத்தில் கோயம்புத்தூர் இலக்கிய வட்டங்களோடு எல்லாம் தொடர்பு ஏற்பட்டது. ‘புது வெள்ளம்’ என்று கல்லூரியில் நடத்தப்பட்ட அந்தப் பத்திரிகையில்தான் பாதசாரி என்று இன்று அறியப்படுகிற என்னுடைய நண்பர், எனக்கு மூன்று வருடம் சீனியரான விஸ்வநாதன் ஒரு கட்டுரை, கவிதை எல்லாம் எழுதியிருந்தார். அவர் கட்டுரையின் நடை என்னை ரொம்பவும் பிரம்மிக்கவைத்தது. தமிழில் இவ்வளவு வலுவான நடையை உருவாக்க முடியுமா அப்படீன்னு. நாங்க இரண்டு பேரும் கல்லூரி நாட்களில் பழக்கமாக இருந்தோம். பின்னால் எனக்கு ஒரு வருடம் இடைவெளி வந்த சமயத்தில் நான் எழுதின ஒரு கதை உள்ளூர்ப் பத்திரிகையில் வந்தது. அதை விஸ்வநாதன் படித்துவிட்டு என்னைத் தேடி எங்கள் வீட்டுக்கு வந்தார். அது ஒரு நல்ல நட்பின் தொடக்கம். இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்தோம். சே. ப. நரசிம்மலு நாயுடு பள்ளியில் ஒரு இலக்கியக் கூட்டம் நடக்கிறது என்று இரண்டு பேரும் போனோம். அந்தக் கூட்டத்தின் இடைவேளையில் ‘எதுக்கு ரண்டு பேரும் வாங்க போங்கன்னு பேசிக்கிட்டிருக்கணும். என்ன சொல்றீங்க?’ என்று விஸ்வநாதன் கேட்டதாக ஞாபகம். ‘சரி நீ சொல்லுடா’ என்றேன் நான். அதிலிருந்து எங்கள் இரண்டு பேரின் நட்பும் கொஞ்ச காலம் இரட்டையராகத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது.
நாங்கள் போய்ச் சேர்ந்த இடம், நிறுத்தம் ஞானியுடைய வீடு. கோவை ஞானி படிப்பு ஆர்வமுள்ள எங்களை ரொம்பவும் ஊக்குவித்தார். எங்களுக்குத் தெரியாமல் இருந்த பல திசைக் கதவுகளைத் திறந்து வைத்தவர் ஞானிதான். மார்க்சியம், தத்துவம், தமிழ், தமிழ்ப் பண்பாடு என்கிற பல விஷயங்களை அவர்தான் அறிமுகப்படுத்தினார். ஞானி மாதிரியான அறிவுசார்ந்த ருசிகரமான பேச்சாளர் தமிழில் இல்லை என்று எனக்குத் தோன்றியது. பலநாள் சாயங்காலம் ஆறு மணிக்குக் கோவைச் சிதம்பரம் பூங்காத் திடலில் பேச ஆரம்பித்து இராத்திரி ஒன்பது மணிவரைக்கும் அவர் பேச்சைக் கேட்டு விட்டுப் பேச்சின் பரவசத்திலேயே நடந்து போயிருக்கிறேன். அந்த அளவு மாபெரும் மேதமை அவர் பேச்சில் வெளிப்படும். அதில் குறைந்த பட்சம்கூட அவருடைய எழுத்தில் வெளிப்படவில்லை என்பது என் அபிப்ராயம். ஞானியின் பார்வை என்பது அடிப்படையில் ஒரு மார்க்சியப் பார்வை. ஆனால் அந்த மார்க்சியப் பார்வை பல பின்னல்கள் கொண்டது என்று எனக்குத் தோன்றியது. அந்தப் பின்னல்களை எல்லாம் சகித்துக்கொள்கிற அளவு எனக்கு மன வலு இல்லை. அதனால் அவரிடம் இருந்து மெல்ல விலக ஆரம்பித்தேன்.
பரிட்சை எழுதி முடித்ததும் எனக்குக் கிடைத்த முதல் வேலை சின்னக் கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரதிநிதி வேலை. வெல்டிங் ராடு, வெல்டிங் அக்ஸசரி எல்லாம் விற்கிற வேலை. அதில் ஆறுமாதம் வேலை செய்தேன். அப்போது நிப்போ பேக்டரியின் விற்பனைப் பிரதிநிதியா எனக்கு வேலை கிடைத்தது. அதற்கு ஊர் ஊராகச் சுற்றும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு அந்த வேலையைவிடவும் ஊர் சுற்றும் வாய்ப்புத்தான் ரொம்பவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அப்போது பிரம்மராஜன் ஊட்டியில் வேலை பார்த்தார். அந்தச் சமயத்தில் நானும் விஸ்வநாதனும் ஒன்றாக இருந்து இலக்கிய விஷயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். என் கவிதைகள் சில முக்கியமான இலக்கியப் பத்திரிகைகளாகிய ‘கவனம்’, ‘ழ’ ஆகியவற்றில் வந்திருந்தன. அதனால் அதிலெல்லாம் எழுதிக் கொண்டிருந்த பிரம்மராஜனைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசையோடு ஊட்டிக்குப் போய் அவரைப் பார்த்தேன்.
அவருடனான தொடர்பு இலக்கியரீதியாகவும் நட்புரீதியாகவும் ரொம்பவும் வலுவானதாக இருந்தது. அவர் மூலமாகக் கிடைத்த பல விஷயங்கள் என்னை இன்றைக்கு ஆளாக்கி இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய இலக்கியம் பற்றிய அறிமுகம். இன்னொன்று சங்கீதம் சம்பந்தமான நுட்பமான அறிவு. இதற்குப் பிரம்மராஜனுக்கும் அவர் மனைவி மீனாவுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். அப்புறம் பல புத்தகங்களைப் பிரம்மராஜன் சிபாரிசு பண்ணியிருக்கிறார். வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவருடைய முதல் தொகுப்பு முன்னாலேயே வந்திருந்தது. இரண்டாவது தொகுப்பு ஊட்டியில் இருக்கிற போதுதான் வந்தது. அது ‘வலி உணரும் மனிதர்கள்’ என்பது. அதனுடைய பின்னட்டைக் குறிப்பு எழுதியது நான்தான்.
அந்தக் கட்டத்தில் ‘ஸ்வரம்’ என்னும் பத்திரிகையை டி.எம்.நந்தலாலா என்கிற மருந்தாளுநர் கல்லூரி மாணவர் நடத்திக்கொண்டிருந்தார். அது Inland formatஇல் வந்து கொண்டிருந்தது. பிரம்மராஜன் ஊட்டிக்கு வந்தபோது ஒரு இலக்கிய வட்டம் உருவாக ஆரம்பித்தது. ‘ஸ்வரம்’ பழைய வடிவத்தை விட்டுவிட்டு ஒரு பத்திரிகையின் வடிவத்துக்கு வந்தது. பதினாறு பக்கம் உள்ள கவிதைப் பத்திரிகை. சில இதழ்கள் வந்து நின்றுவிட்டது. அந்த இடைவெளியைப் பூர்த்திசெய்வதற்காக ‘மீட்சி’ என்ற பத்திரிகையை பிரம்மராஜன், அவருடைய நண்பரான ஆர். சிவக்குமார், எத்திராஜ் அகிலன், ராஜாராம் எல்லாரும் சேர்ந்து தொடங்கினார்கள். அந்த இதழின் இருபது இருபத்தைந்தாவது இதழ்வரைக்கும் தொடர்ந்து அதற்குள் செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். பிறகு என்ன காரணத்தினால் அந்த நட்பு போச்சு என்பது வாழ்க்கையில் நான் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள விரும்புகிற ஒரு ரகசியம்.
இதற்கிடையில் இந்தச் சமயத்தில்தான் எண்பது அல்லது எண்பத்தொன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன், தமிழ்ச் சிறுபத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தன. அதன் முதல் கூட்டத் திற்கு நான் போயிருந்தேன். நாமக்கல் பக்கம் சேந்தமங் கலத்தின் காந்திநகர் என்ற இடத்தில் அந்தக் கூட்டம் நடந்தது. பெங்களூரில் இருக்கும் ஜி.கே.ராமசாமி யின் சொந்த ஊர் அது என்பதால் கூட்டம் அங்கே நடந்தது. அங்கே பல இலக்கியவாதிகளைப் பார்த்தேன். பு.வ.மணிக்கண்ணன், தமிழவன் எனப் பலரை அங்கே பார்த்தேன். அதன் இரண்டாவது கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் ஆத்மாநாமை முதன்முதலில் பார்த்தேன். அதற்கு முன்னால் ஒரு போஸ்ட் கார்டில் ஒரு கவிதையைப் பாராட்டி எழுதியிருந்தார், ‘ழ’ பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில். அந்தக் கவிதைதான் ‘வரலாறு’ என்று அவரால் தலைப்புவைத்து வெளியான ‘கையில் அள்ளிய நீர்’.
‘ஸ்வரம்’ நின்று ‘மீட்சி’ தொடங்கற அந்த இடைவெளியில கோவையிலிருந்து ஒரு பத்திரிகையைக் கொண்டுவரலாம் என்கிற தீர்மானத்துக்கு வந்தோம். ஞானி, அவருடைய நண்பர்களான ரத்தினம், அமரநாதன், அறிவன், ஆறுமுகம் எல்லாரும் சேர்ந்து ஒரு பத்திரிகையைக் கொண்டுவரலாம் என்று முடிவுசெய்தோம். அதற்கு முன்னாலேயே ‘பரிமாணம்’ என்று ஒரு பத்திரிகை வந்துகொண்டு இருந்தது. அதுவும் நின்றுபோனதுக்கு அப்புறம் நாங்கள் யோசிச்சு எடுத்த முடிவுதான் இன்னொரு பத்திரிகை கொண்டு வருவது. ‘நிகழ்’ அப்படீங்கற பேரை நான்தான் வைத்தேன். அதன் முதல் இரண்டு இதழ்களுக்கு நான்தான் ஆசிரியர். எனக்கு ஊர் ஊராகச் சுற்றுகிற தொழில் கிடைத்து அந்த வேலையை மேற்கொண்டதாலும் அந்தப் பத்திரிகையை அவர்கள் விரும்பினபடி கொண்டு வர முடியாது என்பதாலும் அந்தப் பத்திரிகை நான் விரும்பினபடி இல்லை என்பதாலும் விலகிக் கொண்டேன்.

உங்கள் கவிதைகளில் அப்பாவைப் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. அவர் கொஞ்ச காலம் மார்க்சியச் சார்போடு இருந்ததாகச் சொன்னீர்கள்.

அதெல்லாமே அவருடைய வாழ்க்கையின் சின்னப் பகுதியில் ஒரு மின்னல் மாதிரி வந்து போனவைதான். அவருடைய பிரச்சினைகள் என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள முற்படவில்லை என்பது இப்போது எனக்கு ஐம்பது வயது ஆகும் இந்தச் சமயத்தில் பெரிய வருத்தமாக இருக்கிறது. அவர் நல்ல உழைப்பாளி. அவர் ஏதோ ஒரு கட்டத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இது வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகளை உண்டாக்கியது. நாங்கள் நான்கு பேர். அப்புறம் நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் என் தம்பி பிறந்தான். இது வீட்டில் எப்போதும் ஒரு நிம்மதியற்ற சூழலை உண்டாக்கியது. வசதியானதல்ல என்றாலும் பட்டினி கிடந்த குடும்பம் அல்ல. ஆனால் அவருடைய இந்தப் பழக்கத்துக்குப் பிறகு அந்த நிலைக்கும் போக வேண்டி வந்தது.
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. சனிக்கிழமை ஸ்கூல் வச்சிட்டாங்கன்னா எனக்குப் பெரிய பதற்றம் வந்துவிடும். யூனிபார்முக்குப் பதிலா எல்லாப் பசங்களும் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வருவாங்க. என்கிட்ட இருந்தது இரண்டு செட் யூனிபார்ம் மட்டும்தான். சனிக்கிழமையும் அதையே போட்டுக்கிட்டுப் போவதற்கு வருத்தமாக இருக்கும். அதனால் நான் ஒரு தந்திரம் செய்தேன். அப்பாவுக்கு யாரோ கொடுத்த ஒரு வேட்டியக் கட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்தில் தொடர்ந்து மழை பெய்து அதிகமாக லீவுவிட்டதால் எல்லாச் சனிக்கிழமையும் தொடர்ந்து ஸ்கூல் வச்சிட்டாங்க. எல்லா வாரமும் வேட்டியோட வருவதைப் பார்த்த என் ஆசிரியர் சோமசுந்தரம் என்னை விசாரித்தார். அவருடைய ஸ்கூட்டர்ல என்னை ஏத்திக்கிட்டுப் போய் பாம்பே டையிங் கடையில ஒரு சட்டையும் பேண்டும் வாங்கிக் கொடுத்தார். அந்த அளவுக்கு வறுமை இருந்தது. எனக்குப் பின்னால் இருந்த பெண்கள் எல்லாரும் பள்ளிப் பருவம் தாண்டிக் கல்லூரிப் பருவம் வந்தாங்க. வயசுக்கு வந்திருந்தாங்க. இது பெரிய சிக்கலா இருந்தது. இதனால் அன்னைக்கு எனக்கு மாபெரும் எதிரின்னு தோன்றியது எங்க அப்பாதான். அந்தக் கோபத்தைப் பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் அவருகிட்ட ஒருமுறையும் கோபத்தைக் காட்டியதே இல்லை. ஒரு தடவைகூட அவரை எதிர்த்துப் பேசியதில்லை. திட்டியது இல்லை. அவர் வந்தாருன்னா நான் இறங்கிப் போயிருவேன். அவர்கூட எனக்கு உறவே இல்லை. ‘பகை இல்லை அன்பைப் போலவே’.
இந்தப் பிரச்சினைகள் முற்றியபோது எங்க குடும்பத்தில் எல்லாரையும் அழச்சிட்டுக்கிட்டுத் தர்மபுரிக்குக் குடிபோனோம். ஒரு வருசம் அங்கே குடியிருந்தோம். என்னுடைய நண்பர்களான சிவக்குமார், பார்த்திபன் இவர்கள் எல்லாம் அங்கே இருந்தார்கள், ஆதரவு இருந்தது என்பதால் அங்கே போனோம். அந்த ஒரு வருசத்தில் அவர் மனம் திருந்தியோ குடும்பத்தின் மேல் பாசம் வந்தோ திரும்பவும் கூப்பிட்டார். அதனால் கோவை வந்தோம். கொஞ்சநாள் நல்லா இருந்தது. பிறகு மறுபடியும் அதே பழக்கங்கள். அதனால் அப்போது அயோக்கியத்தனமா குடும்பத்திலிருந்து விலக ஆரம்பித்தேன். அதிகமா வீட்டுக்குப் போவதோ காசு கொடுப்பதோ மாதிரியான காரியங்கள் எதுவும் செய்யவில்லை. அந்த வீட்டில் இருப்பதே நரகத்தின் நடுவில் இருப்பது மாதிரியான ஒரு உணர்வு.
அப்போது எல்லாம் என்னைக் காப்பாற்றியது என்னுடைய இலக்கிய ஆசைகள், சங்கீதம் போன்ற விசயங்கள்தான். அது என்னுடைய மனத்தில் மாறாத காயமாக இருந்தது. இன்றைக்கு எனக்கும் வயதாகி இந்த விசயங்களை எல்லாம் பகுத்துப் புரிஞ்சுக்கறதுக்கான பக்குவம் வந்த பிறகும்கூட அந்த வருத்தமும் வலியும் மாறல. இப்ப அவர் மேல கோபம் இல்லை, வருத்தம் இருக்கு. அவர் இறந்து போறதுக்குக் கொஞ்சம் கடைசியாப் பார்த்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்தான் அவரை வேறு ஒரு கோணத்தில் யோசிக்க வைத்தவை. ‘நான் ஏதாவது தப்புப் பண்ணியிருந்தா மன்னிச்சிருடா.’ அது என்னை ரொம்பவும் தொந்தரவு செய்த வாசகம்.

விற்பனைப் பிரதிநிதியா எவ்வளவு நாள் வேலை செய்தீர்கள்?

நிப்போ வேலைக்குப் பின்னால் மைசூருக்குப் போனேன். அதற்கப்புறம் பொள்ளாச்சியிலுள்ள குவாலிட்டி ஸ்பின்னிங் மில்ஸின் விற்பனைப் பிரதிநிதியாத் திரிந்தேன். இப்படி ஒரு பத்து வருட காலம் சுற்றியிருக்கிறேன். இதில் கிடைத்த சம்பளத்தைவிடவும் தென்னிந்தியா முழுக்கப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது என்பதுதான் இந்த வேலையில் இருக்க வைத்தது. அப்படித்தான் தமிழ், மலையாள மொழி எழுத்தாளர்கள் எல்லாரையும் பார்த்தது. பெரும்பாலான எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். அது இந்தப் பயணங்களால்தான். என்னை இன்னும் கூரானவனா ஆக்கியது இந்தப் பயணம் தான். அப்புறம் சென்னைக்கு வந்து ஒரு ரெடிமேட் பேக்டரி தொடங் கினோம். அது நஷ்டமாச்சு. அந்தச் சமயத்தில்தான் என் கல்யாணமும் நடந்தது. வேற ஏதாவது பண்ணனும் அப்படீன்னு கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பத்திரிகை வேலைக்குப் போக ஆரம்பித்தேன். நான் சின்னப் பையனா இருக்கும்போது எழுத்தை நம்பிப் பிழைக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனால் இப்போது நான் பிழைப்பது எழுத்தை நம்பித்தான்.

உங்க இயல்புக்கு வெகுஜனப் பத்திரிகை வேலை பொருந்தி வந்ததா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

பத்திரிகைத் தொழில் மேல இருக்கும் காதல்னால அந்த வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன்னு சொல்லமாட்டேன். எழுதத் தெரியும் என்கிற தன்னம் பிக்கை எனக்கு இருந்தது. நான் எழுதியிருக்கேன் என்பதற்கு அத்தாட்சிகள் இருந்தன. கட்டாயம் ஒரு வேலை வேண்டும் என்ற போது இயல்பாக என்னுடைய தேர்வு விற்பனைப் பிரதிநிதி என்பதாகத்தான் இருந்தது. என்னுடைய மனைவிதான் ‘உனக்குத்தான் எழுதத் தெரியுமே ஏதாவது பத்திரிகைக்கு முயற்சி செஞ்சு பாரு’ன்னு சொன்னாங்க. முதன் முறையா எனக்கு அந்த எண்ணம் வந்ததே அப்பத்தான். அதுக்கு முன்னால் வெகுஜனப் பத்திரிகையில் சின்னதாக் கட்டுரை மாதிரியான சில எழுதியிருக்கிறேன். வேறு எந்தத் தொடர்பும் இல்லை. அப்போது ‘குங்குமம்’ பத்திரிகை வளாகத்தில் ச. ம. பன்னீர்செல்வம் என்கிற நண்பர் இருந்தார். அவருகிட்ட ஒரு வேலை வேண்டும் அப்படீன்னு கேட்டபோது ‘குங்குமம்’ வளாகத்தில் விசாரிக் கிறேன்னு சொன்னார்.
அப்போது ‘தமிழன்’ என்ற நாளிதழ் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. அதற்கான விண்ணப்பம் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு என்னைத் தேர்ந்தெடுத்தவர் சின்னக் குத்தூசி என்கிற தியாகராஜன். அதற்குக் காரணம் தமிழினி வசந்தகுமார். அவர்கள் நடத்திய ‘புதுயுகம் பிறக்கிறது’ என்னும் பத்திரிகையின் முதல் இதழில் என்னுடைய கவிதைகள் வெளியாயின. அது பிரம்மாண்டமான தயாரிப்பாக இருந்தது. அதனால் எல்லா இடத்திலும் என்னுடைய பெயர் ஓரளவுக்குத் தெரிஞ்சது. சின்னக் குத்தூசிக்கும் என் பேர் தெரிஞ்சிருந்தது. அந்தக் கவிதைகள் பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. அதுதான் எனக்கு வேலை வாங்கித்தந்தது. இலக்கியந்தான் அன்னைக்குச் சோறு போடறதுக்குத் தயாரா இருந்தது.
பத்திரிகைக்கு வந்த பிறகுதான் எனக்குள்ள ஒரு பத்திரிகையாளன் இருக்கிறான் என்பதை நான் கண்டுபிடித்தேன். மூணாவது நாளில் இருந்தே அந்தப் பத்திரிகையின் எடிட் பேஜ் எழுத ஆரம்பிச்சிட்டன். இது கொஞ்சம் மெல்ல மெல்ல என்னை ஒரு பொருட் படுத்தக்கூடிய ஆளா அந்த வளாகத்துக்குள்ளேயும் அப்புறம் பத்திரிகை உலகத்திலும் மாற்றியது. அந்த நாளிதழ் நிர்வாகக் காரணங்களால் ஒன்பது மாதத்தோடு நிறுத்தப்பட்டபோது என்னைக் குங்குமத்துக்கு மாற்றினார்கள். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானதும் இனிமையானதுமான வேலை அமைந்தது. நிறையக் கதைகள் படிக்கலாம், வேற வேற விசயங்கள் தெரிஞ்சிக்கலாம். அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் ஒரு கட்டத்தில் வெளியேற நேர்ந்த போது பத்திரிகைப் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது.
அந்தப் பத்திரிகையில் பெரிசாச் சாதித்தேன்னு சொல்ல முடியாது. எனக்குத் தெரிஞ்ச சில விசயங்களை வைப்பது அப்படிங்கிற மாதிரி சில செஞ்சேன். அது கீழான தரத்தில் இல்லாமல் கொஞ்சம் இலக்கியரீதியாகப் பண்ணலாம்னு நினைத்தேன். ஏன்னா, க. நா. சுப்பிரமணியமும் தியடோர் பாஸ்கரனும் சா. கந்தசாமியும் எழுதக் கூடிய ஒரு பத்திரிகையில் அதற்கான வாய்ப்பு இருந்தது. அதை நான் பயன்படுத்திக்கொண்டேன். அதற்கு அவர்கள் அனுமதித்தார்கள் என்பது முக்கியம். அப்படியான சுதந்திரத்தை எனக்குத் தந்தார்கள். அதைப் பயன் படுத்திக்கொண்டு சின்னச் சின்னத் தந்திரங்கள் எல்லாம் செய்து இரண்டு லட்சம் விற்கிற அளவுக்கு அந்தப் பத்திரிகையைக் கொண்டு போனேன். அப்போது எனக்கான ஒரு பாராட்டு விழாவும்கூட நடத்தினார்கள். அது தான் அந்தப் பத்திரிகை காலகட்டத் தோட சந்தோசமான விசயம்.
அதைவிட்டு வந்து ஒரு மூன்று மாதம் ‘குமுதம்’ பத்திரிகைக்குப் போனேன். வெளிப்படையான காரணம் எதுவுமே கிடையாது. குமுதத்தில் சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பது மட்டும்தான். முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவன் நான். என்னுடைய பணிக்குத் தகுதியான ஊதியம் இருக்கிறது என்னும் இரண்டு விசயங்கள் குமுதம் அழைத்ததில் எனக்குத் தெரிய வந்தவை. குமுதத்தில் கைகால் கட்டப்பட்ட ஒரு ஆள் மாதிரிதான் இருந்தேன். குங்குமம் வளாகத்தில் ஓரளவு சுதந்திரத்தோடு நான் இருந்திருக்கேன். எந்த மேட்டரையும் நான் தீர்மானித்த பிறகு வேண்டாம் என்று சொன்னது இல்லை. நான் எடுக்கும் முடிவை அவர்கள் பெரிதாகத் தடை செய்ததும் இல்லை. ஆனால் குமுதத்தில் அப்படியான ஒரு சுதந்திரம் எல்லாம் கிடைக்கவில்லை. அங்கே நாலு பேரில் ஒருவன் என்று இருப்பது எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. ஏதோ ஒரு தத்தளிப்பில் இருந்தபோதுதான் என்னுடைய பூர்வாசிரமம் பற்றிய ரகசியம் வெளிவந்தது. நான் ஒரு மலையாளி என்பது தெரியவந்தது. ‘மலையாளம் சேனல் தொடங்குகிறோம். நீ வந்து பொறுப்பேத்துக்கணும்’ என்று அழைப்பு. அப்படி 1998 ஏப்ரல் மாதம் சூர்யா டிவியின் செய்தி ஆசிரியராகப் பொறுப் பேற்றுக்கொண்டேன்.

குங்குமத்தில் நீங்கள் செய்தவை என்ன மாதிரியான மாற்றங்கள்?

ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு புதிய பகுதி தொடங்குவது. அப்புறம் நிறையப் புதிய ஆட்களைக் கொண்டு வருவது. இதெல்லாம் வந்தபோது இலவச விநியோகத்தின் ஆரம்ப கட்டமும் அன்றைக்குத் தொடங்கியது. ஆனால் இவ்வளவு மோசமாக நடக்கவில்லை. புத்தகம் வாங்குபவனுக்குக் கூடுதல் அலவன்சா ஏதாவது ஒரு பொருள் கொடுக்கப்பட்டதே தவிர அது பத்திரிகையின் உள்ளடக்கத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பல விசயங்களைத் தொடர்ந்து எழுத முடிந்தது. புதிய எழுத்தாளர்களைக் கொண்டுவர முடிந்தது. யுவன் சந்திரசேகரோட கவிதையைப் போட முடிந்தது. ஒரு தீபாவளி மலருக்கு இந்தியப் பெண் கவிஞர்கள் என்ற ஒரு தொகுப்பைக் கொண்டுவர முடிந்தது. ரொம்ப நாள் எழுதாமல் இருந்த விமலாதித்த மாமல்லனுடைய கதையைப் போட்டு அவரைத் திரும்பவும் வெளியே கொண்டுவர முடிந்தது. இப்படிச் சில விஷயங்கள். ‘குங்கும’த்துடைய சுபாவம் கதையைப் போடுவது, யாருக்கும் சுவாரஸ்யம் இல்லாத நடையில் சில கட்டுரைகளை வெளியிடுவது என்பதுதான். நான் பண்ணின அரவாணிகள் பற்றிய கட்டுரை, பாலியல் தொழிலாளிகள் பற்றிய கட்டுரை ஆகியவை எல்லாம் வாசகனுக்கு ருசிகரமாகவும் சில புதிய தகவல்களைச் சொல்வதாகவும் இருந்தன. அன்றைக்கு எனக்கும் சாதித்துப் பார்க்கணும் என்ற குறுகுறுப்பு இருந்ததனால நானும் வேற வேற விசயங்கள் பண்ணியிருக்கிறேன்.
என்னுடைய கட்டுரைத் தொகுப்புல மூன்று கட்டுரைகளைத்தான் அதிலிருந்து எடுத்துப்போட முடிந்தது. இன்னும் முக்கியமாக அதில் செய்த சில பேட்டிகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் என்னால் தேடி எடுக்க முடியவில்லை. குறிப்பா இளையராஜா, கமலஹாசன், எல்லிஸ் ஆர். டங்கன் இவர்களிடம் எடுத்த பேட்டிகள் ரொம்ப முக்கியமானவை. பத்திரிகையைப் பத்திரப்படுத்துகிற பழக்கம் இல்லாததால் அவற்றைத் தேடி எடுக்க முடியவில்லை. ‘குங்கும’த்திற்காக நான் செய்த இன்னொரு நல்ல விஷயம், நம்ம கண் முன்னால் தென்படுகிற சில பெண்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதுவது என்பது. அதற்கு எனக்கு முன் உதாரணம் Savoy என்கிற பத்திரிகையில் வந்த I believe என்ற ஒரு பகுதி.
இதற்காக நான்கு இண்டர்வியூக்கள் பண்ணினேன். சில்க் ஸ்மிதா, ஸ்ரீவித்யா, உன்னிமேரி என்கிற தீபா, காஞ்சனா ஆகிய நடிகைகள். சில்க் ஸ்மிதாவும் ஸ்ரீவித்யாவும் பல விஷயங்களை ரொம்பவும் வெளிப்படையாப் பேசியிருந்தாங்க. ஆனால் இவற்றை எல்லாம் வெளியிட முடியல. வெளியிட்டாப் பிரச்சினை ஆகும் அப்படீன்னு வெளியிட வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அது ஒரு பத்திரிகையாளனா எனக்கு வருத்தம் தருகிற விஷயம். அதேபோல ஒரு நல்ல பேட்டி நடிகை காஞ்சனாவுடையது. அவங்க பெங்களூர் தாண்டி ஒரு கிராமத்தில் கோயில் சுத்தம் செய்கிற வேலைசெய்து வாழ்ந்துக் கிட்டிருந்தாங்க. அதையும் வெளியிட முடியல.
அந்தப் பத்திரிகை வேலையினால் எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. பத்திரிகையாளன் என்கிற முறையில் நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது. நிறைய இசைக் கச்சேரிகள் கேட்க முடிந்தது. இசை பற்றி நான் எழுதிய சில நல்ல கட்டுரைகள் அதில் வந்திருக்கு. மகாராஜாபுரம் சந்தானம் பற்றியும் பீம்சேன் ஜோஷி பற்றியும் எழுதிய கட்டுரைகள் எல்லாம் முக்கியமானவைன்னு தோணுது. இப்பவும் அந்த உணர்வு மாறவில்லை.

குங்குமம் பத்திரிகை வளாகத்தில் சில வருசங்கள் இருந்திருக்கீங்க. கலைஞர் அதில் எழுதுபவர். அவரோடான அனுபவம் ஏதும் உங்களுக்கு உண்டா?

நான் அடிப்படையில் திமுக சார்பான ஆள் இல்லை. திமுகவின் அரசியலோடோ பண்பாட்டினோடோ பெரிய அனுபவ நிலைப்பாடெல்லாம் எனக்கு இல்லை. அப்படியான கட்டத்துக்கு என்னைக் கொண்டு வந்த பெருமை ஜெயகாந்தனைச் சாரும். அது ஒரு பொக்கான இயக்கம் என்று அவர் போட்டு உடைச்சது மண்டையில் ஏறி இருந்தது. அவங்க இலக்கியம் பற்றியும் எனக்கு நல்ல அபிப்ராயம் எதுவும் கிடையாது. ஒரு இயக்கம் என்கிற போது அதனுடைய பங்கைக் குறைச்சுச் சொல்லவே மாட்டேன். இந்த மொழி பேசுவதனால் நமக்கு ஒரு மதிப்பு இருக்கு. இந்தப் பண்பாட்டைச் சார்ந்தவன் என்பதால் நமக்கு ஒரு கௌரவம் இருக்கு என்பதைத் தெரிவிச்சது இந்த இயக்கம்தான். இந்த இயக்கம் ஒரு சீர்திருத்த இயக்கம், சமுதாய இயக்கம் என்கிற கோணங்களில் தான் பார்க்க வேண்டும். அந்தக் கோணங்களில் பார்க்கும்போது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.
இலக்கியம், திரைப்படம், நாடகம் ஆகிய ஊடகங்களை எல்லாம் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றபடி அவற்றில் மாபெரும் விற்பன்னர்கள் கிடையாது. சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகளுக்காகவும் அரசியல் பிரச்சாரத்திற்காகவும் இவற்றை இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்தத் தேவை தீர்ந்ததும் அவற்றின் மேல் அவர்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு யாராவது கலைஞர் வசனத்திற்குச் சிலிர்ப்படைவார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஏன்னா காலம் மாறிவிட்டது. தேவைகள் மாறிடுச்சு. அதுக்குப் பிறகும் இது தொடர்வது ஏன்? ஆதாரமான கொள்கைகள் எல்லாவற்றையும் இந்த இயக்கம் இழந்திருச்சி என்கிற போது இந்த இயக்கத்தினுடைய இன்றைய பங்கு என்ன? இந்த இயக்கத்தின்மீது மதிப்பு மரியாதை உள்ள எல்லாருமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.

இசையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

நான் ஊட்டியில் படித்தபோது பரமேஸ்வரின்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவுங்க வீட்டுக்கு நான் ட்யூசன் போனேன். அவுங்க வீட்டில் எப்போதும் பாட்டுச் சத்தமாக் கேட்டுக்கிட்டே இருக்கும். எல்லாம் பஜனைப் பாட்டா இருக்கும். சின்னப் பையனா இருந்ததால என்னைக் கூட்டிக்கொண்டுபோய்க் கோயில் பஜனையில் பாடவைப்பாங்க. அப்படிப் பாடிப் பாடிச் சங்கீதத்தில் ஒரு ருசி வந்தது. அப்புறம் கோயம்புத்தூரில் கல்லூரியில் படித்தபோது சங்கீதம் கத்துக்கலாமுன்னு போக ஆரம்பிச்சேன். அது நடக்கல. அப்ப எனக்குச் சீனிவாசன்னு ஒரு நண்பன் இருந்தான். அவன் நல்லாப்பாடுவான். அதனால் நான் ஒழுங்கா லேபுக்குப் போனதவிடவும் ரெக்கார்ட் நோட் எழுதினதைவிடவும் எங்காவது பாட்டுக் கச்சேரி நடக்குதா, பாட்டுப் போட்டி நடக்குதான்னு தேடிப் போன நாட்கள்தான் அதிகம் இருக்கும். ஆனால் அதைக் கூர்மைப்படுத்திவிட்டவர் பிரம்மராஜன். லேசாக் கேட்டுப் பழகி இருந்த இந்துஸ்தானி இசையைப் பற்றிய பெரிய உலகத்தைத் திறந்துவிட்டது பிரம்மராஜன் தான். ஒரு தடவை தொத்திக்கிடுச்சின்னா மாறாத விஷயம் இசை என்பதால் அது தொடர்ந்து இருந்துக்கிட்டே இருக்கு.

நம்ம கர்நாடக சங்கீதத்தில் வளர்ச்சி, மாற்றம் என்று சொல்கிற மாதிரி விஷயங்கள் இருக்கிறதா?

நம்ம கலைகளில் ரொம்பவுமே பூரணமான கலைங்கிறது சங்கீதம்தான். அது முழுமை அடைஞ்சிருக்கு. அதற்கான வடிவம் எல்லாமே வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய சங்கீதத்தில் மிகப் பெரிய விஷயம் என்பது கீர்த்தனை பாடுவதுதான். மேற்கத்திய இசையில் சிம்பனி அப்படிங்கறதுக்கு இணையா இதை வச்சிக்கலாம். சிம்பனி வாத்தியங்களால் இசைக்கப் படுகிறது. கீர்த்தனை வாத்தியங்களாலோ வாய்ப்பாட்டினாலோ இசைக்கப்படுகிறது. அதனுடைய பெரிய வடிவத்தை அது அடைந்திருக்கிறது. ஏற்கனவே இருக்கிற அந்த வடிவத்தை நெருங்குகிற முயற்சியைத்தான் திரும்பத் திரும்ப எல்லாக் கலைஞர்களும் பண்ணிக்கிட்டிருக்காங்க. பல சமயம் நெருங்க முடியறதில்லை. அவுங்கவுங்களுடைய பாணியில் பண்ணிப் பார்க்கிறாங்க. அதனால ஒருபோதும் அது பழசு மாதிரி இருப்பதேயில்லை. ஒருதடவை மணி ஐயர் பாடிய மணிரங்கு ராகத்தை அடுத்த தடவை அவரே பாடும்போது அதே மணிரங்கு ராகம் அல்ல. ஒருதடவை எம்.டி.ராமநாதன் பாடின இந்தோளம் இன்னொரு தடவ அவர் பாடும்போது அதில் வேற வந்து சேர்ந்திருது. அந்த அம்சம்தான் தொடர்ந்து இந்தச் சங்கீதத்தை நிற்க வச்சுக்கிட்டு இருக்கு.
கீர்த்தனைகளில் பக்தி என்ற ஒரு அம்சம் மட்டுமேதானே மையமா இருக்கு?
அது இங்கு நிலவும் ஒரு கட்டுப்பெட்டித்தனம். கண்மூடித்தனமான ஒரு மரபு சார்ந்து நிலவுகிற ஒரு நடைமுறை. இந்துஸ்தானி இதைவிட மிகவும் நெகிழ்வான ஒரு இசை. அதில் பக்திக்கெல்லாம் பெரிய இடம் கிடையாது. சங்கீதத்துக்குத்தான் பெரிய இடம். நமக்கு நேர்ந்தது என்னன்னா பக்தி இலக்கியம் பரவலாக வந்துக்கிட்டு இருந்தபோது அதைப் பரப்புவதற்கு இசை ஒரு வாகனமாகப் பயன்பட்டது. பக்தி இலக்கியத்தின் அடிப்படையான கூறு நெகிழ்வுதான். தெய்வத்தின் முன்னால் தன்னை இழக்கும் நெகிழ்வு. சங்கீதத்தின் அடிப்படையான கூறும் இந்த நெகிழ்வுதான். இரண்டும் ஒன்று சேர்ந்தபோது பிரிக்க முடியாத மாதிரி ஆயிருச்சு. அதனால் பக்தி இருந்தால் சங்கீதம், சங்கீதம்னா பக்தி இருக்கணும் அப்படீன்னு எல்லாம் எதுவும் கிடையாது. தேஷ் ராகத்தில் பாடப்பட்ட எந்த தெய்வத் தோத்திரத்தைவிடவும் அந்த ராகத்தில் பாடப்பட்ட பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’ என்ற பாட்டு உருக்கமானதுதான். சங்கீதத்தின் லட்சணம் முழுமையாக உள்ளதுதான்.
இன்றைக்குப் பழைய மனோபாவம் மாறிக்கிட்டு இருக்கு. புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுக்க ஆரம்பிச்சிருக்கிறாங்க. கீதம் என்பது சங்கீதம்தான். அது பக்தியின் வாகனம் அல்ல. சங்கீதம் அதனளவில் முழுமையான விஷயம். பக்தி இருந்தாத்தான் சங்கீதம் இருக்க முடியும் என்பது திணிக்கப்பட்ட ஒரு விஷயம். அது இயல்பானது அல்ல. இன்றைக்கு சஞ்சய் சுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் எல்லாம் வெறும் பக்திக்காக மட்டும் பாடவில்லை. மானுட அனுபவத்தை வெளிப்படுத்தப் பாடறாங்க. நான் சங்கீதத்தைக் கேட்பதும் அந்த அனுபவத்துக்காகத்தான்.

தமிழில் இப்போது நிறைய இணைய இதழ்கள் வருகின்றன. அதில் நீங்களும் பங்கேற்கக் கூடியவராக இருக்கிறீர்கள். அவற்றின் போக்கு எப்படியிருக்கிறது?

நான் ஒரு எழுத்துச் சோம்பேறி. அதனால் எழுதுவதற்கான ஒரு நிர்ப்பந்தத்தைத் தரும் என்பதற்காக அதில் எழுதுகிறேன். நம்ம பார்வைக்கு அகப்படாத பல வாசகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்கள். அவர்களை எல்லாம் எட்டுவதற்கு இதுதான் எளிய சரியான மார்க்கம் என்பதாலும் நான் அதில் எழுதுகிறேன். அதோடு என் இணைய உறவு முடிகிறது. இணையம் என்பது இப்போதைக்கு ஒரு சைபர் சண்டைதான். அதில் பெரும்பாலும் வம்புகளும் வழக்குகளும்தான். எழுபது, எண்பதுகளில் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் நடந்துகொண்டிருந்த சண்டைகள் எல்லாம் இன்று இணையத்தில் நடக்கின்றன.
இன்னொன்று இணையத்தில் எழுதும் பலரும் ஒரு மாதிரி ரொம்பவும் பிற்போக்கான, கண்டனத்துக்குரிய அரசியலைச் சேர்ந்தவர்கள். பெரிய ஆக்கப்பூர்வமான ஒரு ஊடகம் அது. ஆனால் அதை நாம் மிகவும் மோசமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் என் அபிப்ராயம். அதில் ஒழுங்கான விவாதங்களுக்கோ சர்ச்சைகளுக்கோ இடமில்லை. நான் ஒரு கட்டுரை எழுதறன்னா கட்டுரையின் அடிப்படை, நோக்கம் என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதில் ஏதோ ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு முரசு கொட்டி முழக்கிப் போரைத் தொடுக்கிறாங்க. அது இலக்கிய வளர்ச்சிக்கோ சிந்தனை வளர்ச்சிக்கோ உதவக்கூடிய விஷயம் இல்லைன்னு தோணுது.
இன்னொன்று இணையம் பெரிய சௌகரியங்களை நமக்குத் தருது. இதனால் நம்முடைய எழுத்து மாற்றங்களைச் சந்திக்கிறது. இப்பப் பென்சில்ல எழுதறதுக்கும் பேனாவில் எழுதறதுக்கும் கையெழுத்து வித்தியாசம் ஆகிற மாதிரியே நீங்க பேனாவில் எழுதும் ஒரு கதைக்கும் இணையத்தில் எழுதும் ஒரு கதைக்கும் சின்ன வித்தியாசங்கள் இருக்கு. வாக்கிய அமைப்புகள் போன்றவற்றில் எல்லாம். இது எழுத்தை இன்னும் கொஞ்சம் நீக்ஷீமீணீtவீஸ்மீ ஆன ஜீக்ஷீஷீநீமீss ஆ மாற்றும் என்று நான் நினைக்கிறேன். இதெல்லாம்தான் நமக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்.
ஆனால் இப்ப நான் பார்ப்பது என்னன்னா இணையத்தில் நடக்கும் பல விஷயங்களை அப்படியே காப்பி அடித்து நம்ம மொழியில் எழுதிவிடுகிறார்கள். இந்தத் தலைமுறை வாசகர்கள் பலருக்கும் இணையத்தோடு தொடர்பு உண்டு என்பதைக்கூட கவனத்தில் கொள்வதில்லை. தமிழில் வந்திருக்கும் பல கட்டுரைகளின் ஆதாரத்தை ஏதாவது இணையத்துக்குள்ள போனால் துருவி எடுத்துவிட முடியும். இது நல்லது அல்ல. சமீபத்தில் ஒரு கட்டுரையில், குறிப்பிட்ட பாடகி பாடும்போது சிறகு விரித்துப் பறப்பதுபோல் மனமே சிறகு விரித்து எழும்புகிறது என்று ஒருவர் எழுதுகிறார். இது அப்படியே இணையத்தில் வந்த இன்னொருவர் கட்டுரையில் இருந்து எடுத்த வரிகள். இணையத்தில் இருந்து தகவல்களை எடுப்பது சரி. இது ஒரு மனம் சார்ந்த படிமம். இதை ஒருத்தன் யோசிச்சுத்தான் எழுதியிருக்கிறான். அதனுடைய உரிமை அவனுக்குத் தான். அவனுடைய பேரையே சொல்லாமல் பயன்படுத்துவது இலக்கியத் திருட்டுதான். இந்த மாதிரியான இலக்கியத் திருட்டு தமிழில் நிறைய வருது. இணையம் மூலமா நிறைய வரவும் வாய்ப்பிருக்கு.

தமிழில் சிறுபத்திரிகைகள் எல்லாமே இடைநிலை இதழ்களாகிவிட்டன என்று ஒரு கருத்து உள்ளது. கோட்பாட்டு விவாதங்கள் போன்றவை இல்லாமலாகிவிட்டன. சிறுபத்திரிகைச் சூழல் பற்றிய உங்க பார்வை என்ன?

கொஞ்ச நாளுக்கு முன்னால் எனக்கு ஒரு அபிப்ராயம் ரொம்ப அழுத்தமா இருந்தது. தமிழில் இரண்டு இயக்கங்கள் தோத்து போச்சி. ஒன்று சிறுபத்திரிகை இயக்கம். இன்னொன்று திரைப்படச் சங்கங்கள். திரைப்படச் சங்கங்கள் கணிசமான பார்வையாளர்களை உருவாக்கல என்பது என்னுடைய குற்றச்சாட்டா இருந்தது. அப்படி உருவாகாது என்பது எனக்குப் பின்னால் தெரிஞ்ச விஷயம். அதே மாதிரி சிறுபத்திரிகைக்கு நூறு வாசகர்தான் இருப்பாங்கன்னா அவுங்க அத்தனை பேரும் தரமான வாசகர்களா இருப்பாங்க. இன்னும் பத்துத் தலைமுறை கடந்தாலும் இப்படி நூறு வாசகர்கள் இருப்பாங்க. ஆனா இந்த நூறு வாசகர்களிடமிருந்து தொடங்குகிற விவாதம், இந்த நூறு வாசகர்களின் பங்களிப்பாக விரியும். அது விரிகிறபோது உங்களுக்கு இடைநிலையாவும் இதழ்கள் தேவைப்படும். ஆனால் சிறுபத்திரிகைக்கான தேவையும் இருந்துக்கிட்டே இருக்கும். இடைநிலைப் பத்திரிகைக்கான தேவையும் தொடரும். தமிழில் ஆரம்ப காலச் சிறுபத்திரிகைகள் எல்லாமே இலக்கியம் சார்ந்தவைதான்.
ஆனால் எண்பது தொண்ணூறுகளில் பண்பாடு, அரசியல் சார்ந்த விஷயங்கள் எல்லாமே சிறுபத்திரிகைக்குள்ள வருது. இப்ப இந்த விஷயங்கள் சிறுபத்திரிகைக்குள்ள மட்டுமே ஒதுங்கிவிடுவது அவ்வளவு பொருத்தமா எனக்குத் தோணல. ஒரு தலித் பிரச்சினைன்னா அது சிறுபத்திரிகைக்குள்ள மட்டும் விவாதித்து முடிக்கக்கூடியதா எனக்குப் படல. அது விரிவான தளத்தில் விவாதிக்கப்படணும். அதற்கு இடைநிலைப் பத்திரிகைகள்தான் பொருத்தம். அதனால இரண்டுமே இருக்கும். அதேபோலத்தான் திரைப்படம். முதலில் திரைப்பட விழாக்கள் மூலமாத்தான் நல்ல படங்களைப் பார்க்க முடிந்தது. இன்னைக்குத் தொழில்நுட்ப வசதிகள் வந்திட்டதால எந்தப் படத்தையும் எப்பவும் பார்க்கலாம். இந்தக் கட்டத்தில் ஒரு நூறு பேர் சேர்ந்து பார்க்கக்கூடிய திரைப்படச் சங்கங்கள் ஒரு மாற்றா இருக்கும். இது திரைப்படம் என்கிற கலையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவதற்கு உதவும். அதனால் இவை எல்லாமே இருக்க வேண்டியவைதான் என்பது இப்போதைய என் கருத்து.

திரைப்படமும் உங்களுக்கு ஆர்வமான துறை. உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்த அனுபவம் இருக்கிறது. தமிழ்ப் படங்கள் பற்றிய உங்கள் அபிப்ராயம்?

எனக்கு மூன்று காதல் இருக்கிறது. முதல் காதல் இலக்கியம். இரண்டாவது இசை. மூன்றாவது திரைப்படம். இந்த மூன்றுக்கும் ஆலாய்ப் பறந்த காலங்கள் உண்டு. ஒரு திரைப்படச் சங்கத்தைக் கோயம்புத்தூரில் தொடங்கி நடத்த ஆரம்பிச்சேன். அதற்கெல்லாம் கோயம்புத்தூரைச் சேர்ந்த என் நண்பர் அமரநாதன் என்பவர் பெரிய உதவியாக இருந்தார்.
திரைப்படச் சங்கம் நடத்திக்கிட்டிருந்தபோது சென்னையில் நடந்த Film appreciation course தான் எனக்குப் பெரிய திருப்பம். ராண்டர்கை, வி. கே. நாயர், சத்தீஸ் பகதூர் இவர்கள் எல்லாம் வகுப்பெடுத்தார்கள். அது ஒரு பெரிய உலகத்தைக் காட்டியது. தமிழில் இதுவரை சினிமாவே வரல அப்படீன்னு அப்ப எனக்குத் தோணுச்சு. இங்கே சினிமா என்பது ஆரம்பத்திலேயே பெரும் தோல்வி. இன்னைக்கும் சினிமா இண்டஸ்ட்ரி அப்படீன்னுதான் சொல்றாங்க. சினிமாவை ஆர்ட்ன்னு சொல்றதில்லை. அதனாலதான் இங்க சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர்னு ஒரே நட்சத்திர ஆதிக்கம். சினிமா என்பது இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு முழுமையான கலை. அப்படியான ஒரு பெரிய இயக்குநர் தமிழ் சினிமாவில் வரவில்லை. அப்படி வருவதற்கான வாய்ப்பு இனிமேல் வரலாம்.
நான் பார்த்த எந்தச் சினிமாவிலும் தமிழ் வாழ்க்கை இதுவரைக்கும் காண்பிக்கப்படவில்லை என்பது தமிழ் சினிமாவின் மாபெரும் குறை. ஒரு மாதிரி நடுத்தரமான அல்லது பெரிய, கலை என்கிற உரிமை பாராட்டுதல் இல்லாத மலையாளப் படங்கள் எல்லாவற்றிலுமே அடிப்படையான சில விஷயங்கள் இருக்கும். அவனுடைய வீடு எங்க இருக்கு, எந்த நிலத்தில் நிகழுது, அவன் என்ன மொழி பேசறான், அவனுடைய தொழில் என்ன என்கிற எல்லாமே இருக்கும். தமிழ் சினிமாவில் இதெல்லாம் வருவதே இல்லை. இதெல்லாம் ஒரு கலையின் அடிப்படை விஷயங்கள். கண்முன் காட்டி நம்ப வைக்கிற காட்சிக் கலைக்கு இதெல்லாம் அவசியம் தேவை. இதைப் பற்றிய பொதுஅறிவுகூடப் பார்வையாளனுக்கு வழங்கப்படவேயில்லை. அப்படியான ஒரு அறிவு அவனுக்கு வந்திருக்குமானால் இப்படியான படங்கள் ஓடியிருக்காது. இப்பக் கொஞ்சம் கேள்விகள் கேட்கிற சூழல் வருது. எங்க நடக்குது, ஏன் நடக்குது, எந்தச் சாதிக்காரன், என்ன தொழில் செய்யறான், இவன் வயசு என்ன, நிறம் என்ன இத்தனை கேள்விகளும் இருக்கு. ஒரு நாவல் எழுதும்போது இத்தனை கேள்விகளுக்கும் ஒரு நாவலாசிரியன் பதில் சொல்றானே. இரண்டரை மணி நேரம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு படத்துக்கு அந்த நியாயமே கொடுக்கப்படல என்பது ஜனநாயகக் கலையின் ஜனநாயக விரோதப் போக்குதான்.

உங்கள் அத்தை மலையாளம் எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்கன்னு சொன்னீங்க. நீங்க எப்ப மலையாளம் கத்துக்கிட்டிங்க?

எனக்கு மலையாளம் பேசத் தெரியும். பேசினாப் புரிஞ்சிக்கத் தெரியும். எஸ்எஸ்எல்சி முடிக்கிற வரைக்கும் ஒரு வரிகூட எழுதப் படிக்கத் தெரியாது. நான் அன்றைக்குப் பேசின மலையாளத்தில் தமிழ் இருக்கும். அதைத் தமிழாளம் என்று சொல்லலாம். எஸ்எஸ்எல்சி முடிச்சபோது இரண்டு தீர்மானங்களுக்கு வந்தேன். ஒன்று கோயம்புத்தூரில் எனக்குத் தெரியாத தெருக்களே இருக்கக் கூடாது. அப்பத்தான் நான் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டு இருந்தேன். கோயம்புத்தூர் முழுக்கச் சுத்தி என்னுடைய புவியியல் அறிவை விருத்திசெய்துகொண்டேன். இரண்டாவது ஏதாவது மொழி கற்றுக்கொள்வது என்பது. அதுக்காக இஸ்கஸ் நடத்திய ரஷ்ய, இந்தி மொழி வகுப்புகளுக்கெல்லாம் போய்ச் சேர்ந்தேன். இந்தியில் முதல் கட்டப் பரிட்சை வரைக்கும் போனேன். அப்புறம் விருப்பம் குறைஞ்சிடுச்சி. ரஷ்ய மொழிய மூணாவது நாளே நிறுத்திட்டேன். ஏன்னா அதில் மக்கிப்போன பைன் மரக் காடுகளை உடைய ஸ்டெப்பிப் புல்வெளியின் வாசனை இருந்துக்கிட்டே இருந்தது. அந்த மாதிரியான வாசகங்கள் ரஷ்யப் புத்தகங்களிலிருந்து வரும். எனக்கு இந்த மொழி சரிவராது அப்படீன்னு தோணிருச்சு.
என்னால் பேச முடிகிற, எனக்குப் புரிகிற மொழியக் கத்துக்கிட்டா என்னன்னு எனக்குத் தோணுச்சு. அப்படித்தான் மலையாளத்தைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக் கத்துக்கிட்டேன். சொற்கள் எனக்குத் தெரியும். வாக்கியங்களின் அமைப்பு முறை எனக்குத் தெரியும். அதனால் பெரிய சிக்கல் இல்லாமல் கத்துக்க முடிந்தது. அப்பவும் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. மெல்ல மெல்ல மலையாள இலக்கியங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதில் என்னுடைய மொழி அறிவு கொஞ்சம் வளர்ச்சி அடைந்தது. கொஞ்சம் தைரியம் வந்ததற்கப்புறம் மொழி பெயர்ப்புகளில் ஈடுபட ஆரம்பித்தேன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு. அப்புறம் சூர்யா டிவியின் செய்தி ஆசிரியர் பொறுப்புக்கு வந்த பின்னால் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தேன். இதுவரைக்கும் ஒரு பத்துப் பதினைந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒரு ஐம்பது அறுபது கூட்டங்கள் மலையாளத்தில் பிரசங்கிச்சிருக்கேன்.

மொழிபெயர்ப்புக்கான விஷயங்களை எப்படித் தேர்ந்தெடுக்கறீங்க? மொழிபெயர்ப்புக்கென்று என்ன மாதிரி கொள்கைகள் வச்சிருக்கீங்க?

மொழிபெயர்ப்பு என்பது என்னுடைய ஆர்வம் சார்ந்த விஷயம். பின்னால் சில கட்டங்களில் தேவை சார்ந்தும் செய்திருக்கிறேன். என்னுடைய ரசனை சார்ந்தவை, என் மனப்போக்குக்கு உகந்தவை என்றுதான் செய்திருக்கிறேன். நான் சொல்லணும் என்று நினைத்துத் தேவையில்லாத தயக்கத்தினாலும் பயத்தாலும் சொல்லாமல் விட்ட விஷயங்களை வேறு யாராவது அழுத்தமாகவும் செறிவாகவும் சொல்லியிருந்தாங்கன்னா அவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன். மற்றபடி மொழி பெயர்ப்பு என்னுடைய தொழில் அல்ல.
இந்த மொழிபெயர்ப்பு படிப்பவனுக்கு அதனுடைய சரியான அர்த்தத்தில் புரியணும் என்பதைத்தான் பிரதானத் தேவையாக நான் நினைக்கிறேன். மலையாளத்தில் இருக்கும் ஒரு புத்தகத்தைத் தமிழ் வாசகன் ஒருவன் படிக்கிறான். அதனால் தமிழில் அவனுக்குத் தெளிவாப் போய்ச் சேரணும் என்பதுதான் என் முதல் நோக்கம்.
அடுத்து மொழிபெயர்க்கும்போது எந்த அம்சத்துக்கு நியாயமாக இருக்கணும் என்பது முக்கியம். கவிஞனுக்கு நியாயமா இருப்பதா கவிதையின் உள்ளடக்கத்துக்கு நியாயமா இருப்பதா? இது அவ்வப்போது தீர்மானிக்க வேண்டிய விஷயம். சில சமயம் கவிதைகளில் கவிஞனுக்கு நியாயமாக இருக்க வேண்டி வரும். சச்சிதானந்தன் மாதிரியான கவிஞருடைய கவிதையை நான் மொழிபெயர்க்கும்போது கவிதைக்கு நியாயமாக இருப்பதைவிடவும் கவிஞனுக்கு நியாயமாக இருப்பதுதான் நல்லது. ஏன்னா அவருடைய அரசியல், பண்பாடு எல்லாம் அவர் கவிதைக்குள்ள இருக்கு. சில சமயம் கவிதைக்கு நியாயமாக இருக்க வேண்டி வரும். மலையாளத்தின் முக்கியப் பக்திக் கவியாகிய பூந்தானத்துடைய கவிதையை நான் தமிழில் மொழிபெயர்க்கும்போது அதில் கவிதைக்குத்தான் நியாயமாக இருக்க முடியும். ஏன்னா கவிஞரைப் பற்றிய எந்த விவரமும் எனக்கு இல்லை. இது எல்லாவற்றையும்விடப் பிரதானமாக நான் நினைப்பது அது என்ன தொனியில் இருக்கிறதோ அந்தத் தொனியை என் மொழிக்குக் கொண்டுவருவது என்பது. அது நான் என் மொழிக்குச் செய்யும் ஒரு பங்களிப்பு. இன்னொரு புதிய குரலை என் மொழியில் ஒலிக்கவிடுகிறேன் என்பது.

மலையாள இலக்கியம் ஓரளவு தமிழில் வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் எந்த அளவு மலையாளத்தில் வந்திருக்கின்றன?

நாம் கொள்முதலில் நியாயமாக இருக்கிறோம். விற்பனையில் அநியாயமாக இருக்கிறோம். அதற்குக் காரணங்கள் உண்டு. மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது எளிது. மலையாளம் இலக்கணச் சுத்தமாகத் தெரியாமல் மலையாளம் படிக்க மட்டும் தெரிந்த ஒருவர் தமிழுக்கு மொழிபெயர்த்துவிட முடியும். பெரும்பாலும் இப்போது நடப்பது அதுதான்.
நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்காங்க. அதிலும் நம்பகமான மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய பெயர்கள் மிகக் குறைவு. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கிற பலதையும் கதைகள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர இலக்கியப் படைப்பு என்று சொல்ல முடியாது. சுரா என்று ஒருவர் பஷீர் எழுத்துக்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். அந்த மொழிபெயர்ப்பைப் படிச்சீங்கன்னா தமிழில் ஒரு பத்தாந்தர எழுத்தாளனுக்குக் கீழதான் பஷீர வெப்பீங்க.
மலையாள இலக்கியம் பற்றிய என்னுடைய அபிப்ராயத்தில் மலையாள மொழியை மாற்றி அமைத்தது மூன்று பேர். மார்த்தாண்ட வர்மா, ராமராஜ பகதூர் என்ற நாவல்களை எல்லாம் எழுதிய சி.வி.ராமன்பிள்ளை முதலாமவர். இரண்டாவது வைக்கம் முகமது பஷீர். மலையாளத்துக்குள்ள ஒரு மலையாளத்தை உருவாக்கியவர் அவர். மூன்றாவது ஓ. வி. விஜயன். ஆனால் பஷீரை ஒரு கதைக்காரனாகக் காட்டுகிற மொழிபெயர்ப்புகள்தான் தமிழில் வந்திருக்கு. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வருகிற கவிதைகள் மாதிரியானவை ஏற்கனவே தமிழில் நிறைய இருக்கு. நம்மகிட்டக் குப்பை இருக்கு. அப்புறம் எதற்கு வெளியிலிருந்து காசு கொடுத்துக் குப்பையை வாங்கணும்?
இதில் மலையாளிங்க ரொம்பக் கவனமா இருக்காங்க. ரொம்ப முக்கியமான புத்தகமாத் தேர்ந்தெடுத்துப் பண்றாங்க. இன்றைக்குக் கொஞ்சம் நிலைமை மாறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு ரொம்பவும் குறைவுதான். எனக்குத் தெரிஞ்சு தமிழில் இருந்து ‘சித்திரப்பாவை’ என்ற நாவல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஞானபீடப் பரிசு பெற்ற எல்லா நாவல்களையும் மலையாளத்தில் கொண்டுவரும் திட்டத்தில் டி. சி. புக்ஸ் அதை மொழிபெயர்த்தாங்க. அது ஒரு பதிப்பைத் தாண்டிப் போகவே இல்லை. ஏன்னா அதற்கு மிக மோசமான விமர்சனங்கள் வந்தன. இந்தப் புத்தகத்தினுடைய நூறு மடங்கு எடையுள்ள புத்தகங்கள் மலையாளத்தில் இருக்கின்றன என்று கிருஷ்ணராயர் என்பவர் விமர்சனம் எழுதினார். அதனால் மொழிபெயர்ப்பு என்பது அங்கே தேர்வு சார்ந்தது. விற்பனை வாய்ப்பு இருக்கிறது என்பதற்காகவே ஒரு புத்தகத்தை வாசகன் தலையில் திணிப்பது என்பது இலக்கிய சர்வாதிகாரம்தான்.
பிறந்ததில் இருந்து நாற்பது வருசங்களுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் வசித்த நீங்கள் தற்போது திருவனந்தபுரம் வாசியாக இருக்கிறீர்கள். இரண்டு நில வாழ்க்கை அனுபவங்கள் எப்படி இருக்கின்றன? பொருந்திப்போவது சுலபமாக இருக்கிறதா?
நான் இப்ப ரண்டும்கெட்டான் நிலைமையில் இருக்கிறேன். தமிழ்நாட்டை விட்டுப் போனா நான் மலையாள எழுத்தாளனாக ஆகிறேன். கேரளாவில் இருக்கும்போது தமிழ் எழுத்தாளன் ஆகிறேன். அந்த மாதிரியான ஒரு கட்டம் எனக்கு. அப்புறம் திருவனந்தபுரம் என்பது மலையாளக் கலாச்சாரத்தினுடைய பிடிவாதக் கூறுகள் உள்ள ஒரு இடம் கிடையாது. இது ஒரு தளர்வான தலைநகரம். இங்கே இருக்கும் கலாச்சாரக் கூறுகள் பலவும் தமிழைச் சார்ந்தவை. அதனால் எனக்குப் பெரிய வித்தியாசம் எல்லாம் தெரியவில்லை. பிறந்து நாற்பது வருசங்களுக்கு மேல் வாழ்ந்தது தமிழின் நீரும் நிலமும் சார்ந்த வாழ்க்கை. அது மாறிடாது. சாப்பாட்டு முறையில் சின்ன மாற்றங்கள் இருக்கலாமே தவிர வேற ஒன்னும் மாறல.
****
நன்றி: காலச்சுவடு - இதழ் 108, டிசம்பர் 2008