31 ஜனவரி 2011

சிலருக்காவது



சிதறிக் கிடந்த
தானியங்களை விடுத்து
சற்றுத் தள்ளி
கொத்திக் கொண்டிருந்த
புறாவிடம்
இதோ இதோவென்று
சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த
முதியவர் போல்
சிலருக்காவது வாய்க்க வேண்டும்
பறவைகள்
புரிந்து கொள்ளக்கூடிய
பாஷை.

o

24 ஜனவரி 2011

இன்றென் இருப்பென



அங்கு நீர்
வராமல் இருந்திருந்தால்
தச்சன் கவிதைகள்
சர் ரியலிசம்
படிமக் குறியீடுகள்
பற்றியெல்லாம் கதைக்காமல்
இருந்திருந்தால்
அக்குள் இடுக்கில்
அடுக்கியிருந்த
உங்கள் புத்தகமும்
இன்றென் இருப்பென
இருந்திருக்கும்.

o

அதை உங்களிடம்
சொல்லலாமா என்று
தெரியவில்லை.
அதுவரையான
பிம்பமொன்றை
அது எத்தனை தூரம்
கலைத்துப்போடுமென்று
கணிக்கவும் முடியவில்லை.
இத்தனைக்கும் அது
என் பிம்பமும் இல்லை.
இன்னொரு சமயம் கருதி
இன்றும் என்னோடு
எடுத்துப் போகிறேன்.
வேறோர் பொழுதில்
அதை நான் உங்களுக்கு
சொல்லக்கூடும்.
இப்போதைக்கு சுபம்.
பார்ப்போம்.
இன்றே அதை நான்
உங்களிடம்
சொல்லி விடுவதற்கு முன்.

o

பிறந்த நாள் கொண்டாட்டம்
தினமும் ரத்தாகி
திரும்பத் திரும்ப
அமலாக்கப்படுகிறது
மகனின்
அடம் பிடிக்கும் நடவடிக்கைகளை
அவ்வப்போது சரியாக்க.
சரியான பிறந்த நாளன்று
அவன் சமத்தாய்
இருந்து விடும் பொழுதில்
சவால்தான் எங்களுக்கு.
சரியான இன்னொரு
ஆயுதத்தை
சானேற்றும் வரை.

o

(நன்றி: உயிரோசை)

19 ஜனவரி 2011

இரண்டு கவிதைகள்



ஒரு மலர்
ஒரு மரம்
ஒரு பறவை
இன்னொரு சந்தர்ப்பம்
தரப்படுமெனில்
இப்போதைப் போலவே
இருக்கும்
இன்னொரு வாழ்வும்.

o

இவன் முறை வருவதற்கு
இன்னும் இரண்டு பேர் இருக்கையில்
வரிசையை விட்டு விலகி
நடக்கத் தொடங்கினான்
நின்று கொண்டிருப்பதைவிட
சென்று கொண்டிருக்கலாம்
கல்யாண்ஜியின் கவிதை வரிகளை
அசை போட்டவாறே.

o

(நன்றி: உயிரோசை.காம் & திண்ணை.காம்)

12 ஜனவரி 2011

நிலாரசிகனின் "வெயில் தின்ற மழை"

"தான் பிடித்த பட்டாம்பூச்சியை அதன் சந்தோசம் மாறாமல் இன்னொரு கைகளுக்கு மாற்ற முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்" - கல்யாண்ஜி.

சொல்லப் போனால், கவிதை என்றில்லை எந்தவொரு படைப்புமே, எதிர்ப்படும் நிகழ் கணங்களில் எழுத்தாளனை பாதித்த அல்லது சலனப்படுத்திய ஏதொன்றையும் அப்படியே இன்னொருவருக்கு கடத்தும் ஒரு முயற்சியே என்று தோன்றுகிறது. கதை, புதினம் போன்றவற்றை விட, கவிதைக்கென்று ஒரு சௌகர்யம் அதை உடனுக்குடன் பதிவு செய்வதன் சாத்தியம் அதிகம்.

நிலாரசிகனின் இந்த "வெயில் தின்ற மழை" தொகுப்பின் மொத்தக் கவிதைகளிலும் ஒரு மென்சோகம் தென்படுவதற்கு, இந்தக் கவிதைகள் எழுதிய காலகட்டத்தில் இருந்த நிலாரசிகனின் மனநிலை ஒரு காரணமாய் இருக்கலாம்.

வெகு நேர்த்தியான அச்சாக்கத்தில் உயிர்மை வெளியிட்டுள்ள இந்த தொகுப்பில் உள்ள அறுபது கவிதைகளில், ஏறத்தாழ 22கவிதைகளில் "மரணம்'' ''செத்து'' ''மறித்து'' "இறந்து" போன்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. வாசிப்பின் சுவாரஸ்யத்தை இது சற்றே மட்டுப்படுத்துகின்றது. கவிதைகளின் முதல் வரியையே தலைப்புகளாக கொடுத்திருப்பதும், ஒரு அசுவாரசியத்தை கொடுப்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

இரவுத்தெரு (புதிய சொற்றொடர்!) என்று முடியும் ஒரு கவிதையில், நிலா சொல்லிச் செல்லும் இந்தக் காட்சிகளைப் பாருங்கள்:


"தெருநாய்களின் நகக்கீறல்களால்
கதறிக்கொண்டிருந்தது
தகர குப்பைத்தொட்டி..
நைந்த புடவையொன்றில்
குளிர்தவிர்க்க இயலாமல்
முனகிக் கொண்டிருந்தாள்
பிச்சைக்காரி ஒருத்தி..
மரக்கிளையில்
சிருங்கார சப்தம் எழுப்பி
புணரத் துடித்தன
தேன்சிட்டுக்கள்..
விதவிதமான சப்தங்களுடன்
மௌனத்தால் உரையாடியபடி
நீண்டு செல்கிறது இரவுத்தெரு."


தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளில், இரண்டை, இங்கு தருகிறேன்.

1)

சிறுவனின் மணல்வீட்டை
அழித்துப்போனது அலை.
அவளது முதல் கோலத்தை
நனைத்துச் சிரித்தது மழை.
வேலியோர முள்ளில்
உடைபடுகிறது பலூன்காரனின்
வெண்ணிற பலூன்.
காரணம் அறியாமல்
அழுதுதீர்க்கிறார்கள் அவர்கள்.


2)

இந்தக் கவிதை
இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலந்திருக்கிறது
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்


"வாழ்க்கை வண்ணத்துப்பூச்சி மயமானது என்று யாரும் சொல்ல முடியாது. வண்ணத்துப் பூச்சியே அற்றது என்றும் யாரும் சொல்லிவிட முடியாது தானே".

கல்யாண்ஜியின் இந்த வரிகளையே நான் நிலாரசிகனுக்கு சொல்ல விழைகிறேன். நிலா தன் அடுத்த கவிதைத் தொகுப்பில், மகிழ்ச்சி நிறைந்த கவிதைகளையும் தர வேண்டும்.

(வெயில் தின்ற மழை - நிலாரசிகன் - உயிர்மை வெளியீடு, பக்கம் 72, விலை ரூ 50.)

o

10 ஜனவரி 2011

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - மதிப்புரை 2: சொல்லில் முடிவதில்லை என்ற ஒரு ஆதங்கம் - எச். முஜீப் ரஹ்மான்

(நன்றி: எச். முஜீப் ரஹ்மான்)

என்னைப் பொறுத்தவரை கவிதைகள் கவிஞர்களின் சிந்தனை வெளிப்பாடு. அந்த சிந்தனைகளோடு உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அந்த சிந்தனைகள் படிப்பவர்களின் எண்ணங்களில் கலந்து அவர்களை சிந்திக்க வைத்து அதன் மூலம் ஒரு செயல்திறனை உருவாக்க வைப்பதே கவிதையின் குறிக்கோளாக இருக்கமுடியும் எனத் தோன்றுகிறது. ஒரு கவிதையின் மையப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிஞர் காதலைப்பற்றியோ, காட்சியைப் பற்றியோ, வீரத்தைப்பற்றியோ, சமூக உணர்வுகள் பற்றியோ, நாட்டுப்பற்று பற்றியோ அல்லது நகைச்சுவையாகவோ கவிதைகளை வெளிப்படுத்தலாம். அப்படி தோற்றுவித்த கவிதைகளுக்கு ஜீவனாக ஒரு காரணம் இருக்கும். அந்த ஜீவன், கவிதை படிப்பவர்களின் உணர்வில், அனுபவத்தில், சிந்தனையில் காணாமல் போயிருக்கக்கூடிய ஒரு நூலிழையை பிரித்து 'இதுதான் ' என்று தெளியவைத்து, கலந்து ஒரு சிறிய தன்னுணர்வை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று : கவிதை உருவாக்கத்தின் புறச் சூழ்நிலைகளையும் அவை உண்டு பண்ணும் அகச் சூழ் நிலைகளையும் பற்றியது. கவிதை உருவாகும் நேரத்தை நாம் கவிஞனருகில் நின்று கவனிக்கிற மாதிரியான அந்தரங்கத் தொனியை இந்தக் கவிதைகள் வெளியிடுகின்றன. இன்னொன்று : இவை ஜெகதீசனின் வாழ்க்கையின் சில சிதறல்களை நமக்கு அளிக்கின்றன. இத்துடன் ஒட்டியே ஜெகதீசனின் வாழ்க்கையில் கடந்து போகும் நபர்கள் பற்றிய வாழ்க்கைச் சித்திரமும் நடைச் சித்திரமாய் வந்து போகின்றன. கவிதையின் மூலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது அந்தக் கவிதைக்கான நம் அனுபவம் இன்னமும் விரிவடைந்து ரசனை பெருக்கம் கொள்கிறது. எல்லாக் கவிதைகளுக்கும் எல்லாக் கவிஞர்களுக்கும் இப்படிச் செய்வது சாத்தியம் தானா என்று கேள்வி எழலாம். கவிதை தன்னுள் நிறைவு கொண்டிருப்பதெனில் விளக்கங்களும், கவி மூலங்களும் தேவையா என்று ஒரு கேள்வி எழலாம். இப்படியும் கவிதையை அணுக வழியுண்டு என்பது தான் என் பதில்.

இதுவும் கடந்து போகும்

சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை


ஜெகதீசனின் கவிதைக் குரல் தனித்த குரல். எளிமையும் கைத்துப் போன மனத்தின் வெளிப்பாடும் கொண்டவை. வாழ்வனுபவங்களின் குறுக்குவெட்டுத் தோற்றமாய் எழும் அவருடைய கவிதைகள். ஆனால் பல நேரங்களில் சட்டென்று நின்று விடுவதான முழுமையின்மையைக் கொண்டதாய்த் தோன்றுவதுண்டு. இட்டு நிரப்பிக் கொள்ள அவருடைய மற்ற கவிதைகளிலிருந்தும் சில விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமோ என்னவோ.

நின்று சலித்த
நீள் பயணமொன்றில்
மென்று விழுங்கிய
பார்வையோடு நீ
விட்டுச் சென்ற
இருக்கையில்
இன்னமும்
உன் சூடு


கவிதைகள் இரண்டு வகை. விண்ணிலிருந்து மண்ணில் பொழிபவை ஒரு வகை. ஆவேசமும், கூர்மையும் நிறைந்தவை அவை. அறிவுறுத்தும் உணர்த்தும் திறன் பெற்றவை. சமூக எழுச்சிக் காலங்களில் இடியுடன் புயலுடன் தரையிறங்கி மனிதத் திறளை தூண்டுபவை. ஆற்றல் கொள்ள வைப்பவை. ' பாரதியின் சாதி மதங்களை ப் பாரோம் போல....
இன்னொரு வகை கவிதைகள் மண்ணிலிருந்து விண் நோக்கி பாய்பவை. அழுத்தம் பெற்று இறுகிப் போன சுய அனுபவங்கள், உணர்வுகள், சிந்தனைகள், மேல் நோக்கி பீறிட்டு பாயும் போது இவ்வகைக் கவிதைகள் பிறக்கும். முன்னது பொது உணர்வைச் சமூகத்தினர் மீது பெய்து, தனிமனிதர்களின் உணர்வுகளைத் தழைக்கச் செய்யுமானால், பின்னது தனி மனித உணர்வு நிலையிலிருந்து பீறிட்டு சமூகத்தின் பொது உணர்வை தூண்டிக் கனியச் செய்யவை.
தனிவுணர்வும் பொது உணர்வும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவுபடாதவை. பிரிக்கவும் முடியாதவை.

இன்று மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் கவிதைப் போக்குப் பெருவழக்காகியுள்ளது. மண் பிளவு பட்டுள்ளது. வர்க்கம், சாதி, சமயம், இனம், மொழி, பால் என பிளவுபட்டுக் கிடக்கும் பூமியில் , எங்கோ ஒரு புள்ளியில் வேர் விட்டு மாட்டிக் கிடக்கிறது மனிதம். இந்த மாட்டுதலில் மூச்சு முட்டிப் போகும் மனிதத்தின் உணர்வுகள். விரிவு தேடி, எல்லைகள் அற்ற சுதந்திரம் தேடித் தாவும் இடம் வானமாகத் தான் இருக்க முடியும்.
வானத்துக்குத் தாவத் திராணியற்றுக் கீழ் நோக்கி மண்ணுக்குள் புதைந்து இருண்டு சுருண்டு போவோரும் உண்டு.

வானம் எல்லையற்றது. சுதந்திரமானது. இறக்கைகள் இழக்கும் வரை பறந்து திரிய இடம் தருவது. இந்த மண்ணுக்கும் விண்ணுக்குமான உணர்வின் தொப்புள் கொடியாக உயிர்ப் பாலமாக அமைவது தான் உயிர் உள்ள கவிதை.

தூக்கி எறியுங்கள்
உங்கள் தம்புராக்களை
தூளியில் உறங்கும்
சிசுவின்
உறக்கம் கலையும் முன்


ஜெகதீசன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி . அதன் அப்பட்டத்தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது. ஆனால் தமிழில் மிக மிக குறைவாக உள்வாங்கப்பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர். காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப்பட்டதோ பேசப்பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி அல்லது மனத்தெளிவு அவர் கவிதைகளின் சாரமாக உள்ளது. அது அனைவராலும் தொட்டுணரக்கூடிய ஒன்றல்ல. அபூர்வமாகவே சிலருக்கு அத்தகைய ஆழமான அமைதியின்மை உள்ளூர குடியேறி அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறது . அந்த அமைதியின்மை அங்கிருந்து அன்றாட வாழ்வின் அனைத்து தளங்களுக்கும் நகரவும் செய்கிறது.

முக்கியமான கவிஞர்களிடம் எப்போதுமே அடிப்படையான படிமங்கள் சில இருக்கும். அவற்றின் நீட்சியாகவே அவர்கள் தங்கள் உலகை கட்டியெழுப்பியிருக்கிறார்கள். ராபின் பறவை ஏன் எமிலி டிக்கன்ஸன் கவிதையில் மீண்டும் மீண்டும் வருகிறது என்ற கேள்விக்கு மிக மிக விரிவாகவே பதில் சொல்ல முடியும். வேர்ட்ஸ்வர்த்தின் நைட்டிங்கேல் புகழ் பெற்றது . அதைப்போன்றதே ஜெகதீசனின் முக்கியப் படிமங்கள் நடைபாதை, இடங்கள், பொருட்கள் என விரிகிறது.

“பிரிந்து கூடும்
கூடிப்பிரியும்
அநேகர் வரவை
கண்டிருந்தது அந்த இடம்”


“சற்று முன் நடந்த
சாலை விபத்தொன்றில்
பைக்கின் பின் அமர்த்தி
………………………….”


“அப்பா பொம்மைக்கு மத்தியில்
வரைந்த ஒரு வட்டத்தை
அப்பாவின் வயிரென்றான்”


கவிதைகள் வளமாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கவிதைக்கு வளம் எப்படிச் சேர்கிறது? கருத்துக்களாலா, வார்த்தை ஜாலங்களாலா, உருவ வடிவங்களாலா, புரியாதபடி எழுதுவதாலா, நிகழ்கால நிகழ்வுகளைப் பிரதிபதிப்பதாலா, எதிர்கால எதிர்பார்ப்புகளைக் கனவாகக் காண்பதாலா, இறந்த காலச் சீர்கேடுகளைச் சீறுவதாலா, புதிர்களைப் போடுவதலா அல்லது விடுவிப்பதாலா, யதார்த்தங்களைப் பேசுவதாலா, யதார்த்தங்கள் என்ற பெயரில் மன அழுக்குகளைப் பகிரங்கப்படுத்திக்கொள்வதாலா ? கொஞ்சம் கொஞ்சம் எல்லாவற்றிலும் தான். எப்படி? சில கவிதைகளைப் பார்த்தாலே விளங்கிவிடும்.

ஆத்மாநாம் ஒரு கவிதை இப்படி வருகிறது:

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆனாலும் மனதிலே ஒரு நிம்மதி


இரவில் பேய்கள்

குருட்டுக் கண்களைத் திறந்து பார்த்தால் இருட்டுதான் பிரகாசமாய்த் தெரிகிறது
செவிட்டுச் செவிகளைக் கூராக்கி முயற்சித்தால் நிசப்தம்தான் கூச்சலாய்க் கேட்கிறது
நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால் சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது
உருமாறிப் போனவன் உடல்மாறி மனம் மாறியபின்


உலகமகா யுத்தம்

ஒரு கூரைமேல் காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில் அணில் பறந்தது காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை


பொதுவாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால், கவிஞன் எழுதுவதும் வாசகன் படிப்பதும் ஒன்றல்ல. ஒவ்வொரு வாசகனின் கவித்துவ மனமும் தனக்குத்தானே வேறொரு கவிதையை எழுதிக்கொள்கிறது. கவிஞன் சொல்லக்கருதும் பொருளுக்கும் அதை வெளிப்படுத்தும் அவனுடைய சொற்களுக்கும் உள்ள உறுதியான, உண்மையான பிணைப்பு மட்டுமே வாசகனை ஈர்க்கமுடியும்.

புரிகின்ற கவிதைகளைக்காட்டிலும் புரியாத கவிதைகளே சிறந்தன என்ற கருத்துகூட நிலவுகிறது. பொருள் விளங்காமையின் காரணம் என்ன? ஞானக்கூத்தன் கூறுவார்: கவிதையில் பொருளைக் கவிதையிடம்தான் கேட்கவேண்டும். ஆசிரியனுக்குத் தெரிந்த பொருள் வாசகனுக்கு எட்டாமல் கவிதையிலேயே உறைந்துவிடுகிறது. இத்தகைய கவிதைகள் முதலில் புதிர் விடுவிக்கும் அறிவார்த்தமான முயற்சிகளையே அவாவுகின்றன. கவிதை நமக்கு எடுத்த எடுப்பிலேயே பரிச்சயமான முகத்தைக் காட்டிப் பேசுவது என்ற நிலைமையை இவை காலம் தாழ்ந்தே பெறக்கூடும்.

இன்றைய கவிதை தன் வளர்ச்சியில் புது உருவங்களைப் பெற்று வருகிறது. நீண்ட புதுக்கவிதைகள் இல்லை என்ற ஒரு காலகட்டம் இருந்தது. பேராசிரியர் அய்யப்ப பணிக்கர் தற்காலத் தமிழ்க் கவிதைகள் ஆட்டான் புழுக்கைகளைப்போல சின்னச் சின்னதாக இருக்கின்றன என்றபோது கவிஞர் ஷண்முகசுப்பையா மலையாளக் கவிதைகள் காளைமூத்திரம்போல நீண்டிருக்கின்றன என்றாராம். இன்றோ தமிழ்க் கவிதைகள் ஒருவரியிலிருந்து தொடர் காவியங்கள் வரை எழுதப்பட்டு வருகின்றன.

கார்லோஸ் காஸரெங் கூறுவார்:

கவிதையின் வரிகளுக்கிடையே
வெடிகுண்டொன்றை வையுங்கள்
வரிகளனைத்தும் சுக்கு நூறாகிச் சிதறட்டும்
பின்னர்
மேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள்
அதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்
அந்த இடிபாடுகளிலிருந்தே.


நம் கவிகள் இதைத்தான் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

முகங்கள் அவற்றின் பார்வைகள். பார்வைகள் வெளிப்படுத்தும் பயங்கள். முகங்கள் பார்வைகளில் மட்டுமல்ல, அவற்றின் பின்புலக் காட்சியின் நிர்மலமான வெற்றிடத்திலும் அச்சம் படிந்திருப்பதை உணரமுடிகின்றது. இருட்டைப் புரிந்து கொள்ளும் முயற்சி. பல நேரங்களில்:

'கருத்தை மருட்டியது கவலை
கிட்டாத கசப்பும்
நெஞ்சைக் குமட்டிவர
முகத்தின் முக்கால் பரப்பும்
இருள்மண்டி விளிம்புகட்ட
விழியை வெறுவெளியில்
குத்தி நின்றேன்.... (பொன் வேட்டை)


எனச் சொல்கின்ற கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைமுகம். அம்முகப்பிம்பங்கள் வெளிப்படுத்தும் அமைதியும் அபயக்குரலும் மனதில் மட்டுமல்ல உடலிலும் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டுத் தான் ஓய்கின்றன. அம்முகங்களில் ஏதோ ஒருவித இறுக்கம், நடுக்கத்துடன் விலக முயற்சிக்கும் விட்டில் பூச்சியின் இயல்பு. அச்சத்திற்கும் அமைதிக்குமிடையில் ஊசலாடும் தன்மை முகத்திரையிட்ட அனைத்து முகங்களிலும் வெளிப்படுகிறது. நடைமுறையோடு ஒட்டாத முகங்கள் அவை. உலகவாழ்விலிருந்து தப்பிக்க விழையும் சன்னியாசப் பார்வை அக்கண்களில். அம்மாதிரியான முகங்களில்தான் இவ்வுலகத்தின் இயக்கமும் முடக்கப்படுகிறது என்பதனை உணர்த்தும் புகைப்படங்கள். அனைத்துமே பதுங்கும் தன்மை கொண்ட, தப்பிக்க விழையும் முகங்கள். ஒளிவதற்கு உபகரணங்களாக முகத்திரைகள், துவாலைகள், கண்களை மறைத்த கண்ணாடிகள். அம்முகங்களுக்குள் வேற்றுமையின்றி வெளிப்படும் அபூர்வ அன்னியப் பார்வை. அப்பார்வைகளில் நிறைந்திருப்பது வெற்றிடம்- இருட்டு - சூன்யம். அப்பார்வையை பொருள் கொள்ள நமக்கு இயலாமை அல்லது விருப்பமில்லாமை. அப்பார்வைகளில் 'ஒரு தொலைநோக்கு ' இருந்திருக்கலாம். 'குறுகிய பார்வை தவிர்த்திருக்கலாமென்பதான 'திடீர்' அபிப்பிராயங்கள் பார்வையாளர்களுக்குத் தோன்றக்கூடும். நம் முகங்களை பற்றிய பிரக்ஞையற்று, அடுத்தவர் முகங்களில் மட்டுமே காண விழைகின்ற எதிர்பார்ப்புகள். சூன்யத்தில், இருட்டைச் சுமந்து எதிர்காலத்தின் அவநம்பிக்கையற்றிருக்கும் பார்வை. இந்த அவ நம்பிக்கை நம்மிடமும் இருக்கிறது. இந்த அவநம்பிக்கையில் நமக்கும் பங்கிருக்கிறது. நம்மைப்போலவே அவைகளும் காத்திருக்கின்றன. நாம் எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதையும் அவை அறிந்திருக்கின்றன. வெளிச்சத்திடமிருந்து திரையிட்டு மறைந்துகொள்ளும் இக்குணத்தின் மூலமென்ன? நெடுநாளாக கருப்பை இருட்டிற்குப் பழகிப்பழகி, திடுமென்று யோனியளித்த வெளிச்ச மிரட்சி நமது ஒளிசேர்ந்த வாழ்விற்குத் தடையாக வந்து சேர்ந்திருக்குமோ?

நமது பகுத்தறியும் வல்லமையை எப்போதேனும் இம்மாதிரியான முகங்களில், அவற்றின் பார்வைகளில் பிரயோகிப்பதுண்டா ? அம்மாதிரியான பார்வைகளில் வட்டமிடும் பயம் எவரிடம்? 'விளிம்பைத் தொட்டால் சூழலில் சிக்கிப் புதைந்து விடுவோம் ' என்கின்ற சமூக அச்சமா? எதற்காக அம்முகங்களுள் எட்டிப்பார்த்து ஒதுங்கும் பயம்?. எதற்காக இந்த விளிம்பு வாழ்க்கை? இவ்வச்சச் சூழலில் விடுபடும் எண்ணமேதும் அக்கண்களுக்கும் அவை சார்ந்த முகங்களுக்கும் இல்லையா? இவைகளுக்கான பதில் நம்மிடத்திலில்லை. மாறாக 'முடிந்தபோதெல்லாம அகழ்ந்தெடுத்து படுகுழியின் விளிம்பில் அவர்களை நிற்கவைத்து பயம் வேண்டாம் என்றால் எப்படி?' என்ற கேள்வியே பதிலாக நமக்குள்.

மீட்டாத வீணை
இங்கிருந்து போயிருந்த
என்னைப் போலவே
அங்கிருந்து
அவர்கள் வந்தார்கள்
அவரவர் இடங்களைக் குறித்தே
அதிகமும் பேசிக் கொண்டிருந்தோம்
அயர்ந்து திரும்பும் வரை
தன் பொருட்டும்
ஏகும் விரல்களுக்காக
மீட்டாத வீணையென
காத்திருக்கும்
மீளாத் துயரில் அந்த இடம்.


ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதைத் தொகுப்பு)
செல்வராஜ் ஜெகதீசன் - அகநாழிகை வெளியீடு
பக்கம் 64, விலை:ரூ.50.00

03 ஜனவரி 2011

மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் -- க.அம்சப்ரியா



கவிதையின் விரல்பிடித்து பயணிக்கத் துவங்கிவிட்ட ஒருவன், அவ்வளவு எளிதாக உதறிவிட்டுச் செல்லவியலாது. தொடர்ந்து கவிதையை ரசிக்கவும், கவிதையை உணரவும் நல்ல மனநிலையும் வேண்டும். கவிதைத்தளம் விரிவடைய கவிஞன் தன் சிறகுகளை விரிக்கத் துவங்குகிறான்.

தன் வானம்! தன் சிறகுகள்! சுதந்திர வெளிக்குள் பயணிக்கத் துவங்கிவிட்ட கவிஞன் எதைப் பார்க்கிறான்? எதைப் பார்த்து திகைக்கிறான்? எதைக் கண்டு கண்ணீர் சிந்துகிறான்? எக்காட்சி அவனை திகிலூட்டுகிறது? இவைகளே அவனின் கவிதை வெளிப்பாட்டுக்குக் கை கொடுக்கின்றன.

செல்வராஜ் ஜெகதீசன் ஏற்கனவே இரண்டு கவிதைத் தொகுப்புகளை கொடுத்திருக்கக் கூடியவர். தீவிர ஈடுபாட்டுடன் கவிதையில் இயங்கி வரும் இவர் தற்சமயம் அபுதாபியில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரக்கூடியவர். சிற்றிதழ்களோடும், முன்னணி இதழ்களின் கவிதைப்பக்கங்களிலும் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கக் கூடியவர்.

இவரது "ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்" தொகுப்புக்குள் அவரது அனுபவங்கள் கவிதைகளாக நம்மை வாசிக்கத் தூண்டுகின்றன. அவரது அனுபவ வெளி அன்னிய மண் சார்ந்தது. அதனால் நண்பர்களின் சந்திப்புக்களாலேயே அதிகபட்ச மகிழ்ச்சியை உணரக்கூடிய தருணங்கள் சூழ்ந்த வாழ்வியல் சூழ்நிலை. "மீட்டாத வீணை" கவிதையில் அந்த அனுபவம் மிகச்சிறந்த கவிதையாகியுள்ளது. எந்தச் சந்திப்பும், நாம் எதிர்பார்க்கிறது போலிருப்பதில்லை. அவரவர் வார்த்தைகளை கொட்டித்தீர்க்கவே ஆசைப்படுகிறோம்.

பிறரின் சொற்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மிகக் குறைந்தபட்சம் கூட இருப்பதில்லை. இந்த புரிதலிலிருந்து துவங்குகிறது இவருடைய கவிதை.

அண்மைக்கால கவிதையுலகில் குழந்தைகள் பற்றிய கவிதைகள் முக்கிய பதிவைப் பெற்று வருகிறது. செல்வராஜ் ஜெகதீசனின் குழந்தைகள் உலகமும் அபூர்வ கணங்களை அடையாளப்படுத்துகிறது.

இன்னொரு

வண்ணத்துப்பூச்சி வேடமணிந்து
வாங்கி வந்த பரிசுக்கோப்பையை
ஏந்தியபடி
முதல் மழலைப் பேச்சில்
'அப்பா' என்றழைத்த
இளையவனிடம்
'அப்பா' இல்லடா ';டாடி'
என்று சொல்லிக்கொண்டிருந்த
மூத்தவனிடம்
இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
'பட்டர்பிளை' என்பதற்கு
இன்னொரு பெயருண்டு
வண்ணத்துப்பூச்சியென்று.


கவிதையின் மொழி, அதன் அனுபவ எல்லையைக் கொண்டே உச்சத்தைப் பெறுகிறது. சாதாரண சொற்கள் அசாதாரண ஓசையையும் மெளனத்தையும் ஒரே சமயத்தில் கொண்டு இயங்குவது கலைப்படைப்பில் மட்டும்தான். அதுவும் கவிதையின் மையத்திற்குள் ஊடுருவிப் பாய்கின்ற ஒரு வாசகனுக்கு எப்போதும் புதுமையனுபவம் எதிர்பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

அப்படியான சில அனுபவங்களை நமக்கு இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கொடுக்கின்றன. குறிப்பாக 'வட்டம்' ‘முன் முடிவுகளற்று இருப்பது'இங்கு எல்லாம்' 'அடையாளங்களை அழித்தல்' ஆகிய கவிதைகளைச் சொல்லலாம்.

'அடையாளங்களை அழித்தல்' - நுட்பமான சொல்லாக வெளிப்பட்டிருக்கிறது. அவரவர்க்கான அடையாளங்கள் அவரவர் விருப்பம் போல் இல்லை. வேறு யாராவது ஒருவர் நமக்கான வீட்டின் வரைபடத்தினை, வாழ்வின் பாதையை என்று அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கவே செய்கிறார்கள்.

குறைந்த வரிகளில்,குறைந்த சொற்களில் நிறைவான செய்தியைச் சொல்ல கவிஞர் முனைந்திருப்பதற்கான அடையாளமான கவிதைகளாக 'ஆட்சேபனை' 'அனுகூலம்' கவிதைகளைக் கூறலாம்.

'ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்' கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்கிறபோது கவிதைத்தளத்தில் இடைவிடாமல் இயங்கவும், தன்னை கவிதைக்குள் கரைத்துக்கொள்ளவும் முனைந்திருக்கிறார் செல்வராஜ் ஜெகதீசன் என்பதையறிய முடிகிறது.

நான்காவது கவிதை தொகுப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் கவிஞர், தனக்கான கவிதை மொழியை வேறொரு தளத்திலிருந்து கண்டுணர்வார். அப்போது இன்னும் கூடுதலான அம்சத்தோடு நமக்கு ஒரு தொகுப்பு கிடைக்கும்.


ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (பக்.64 ரூ.50/-) - அகநாழிகை பதிப்பக வெளியீடு

(நன்றி : க. அம்சப்ரியா)

O