கவிதை/திண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை/திண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 பிப்ரவரி 2012

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்



ஐயன்மீர்!
தொடக்கத்தில்
திரையில் காட்டப்பட்ட
பாதுகாப்பு அட்டைகள் பற்றி
எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு.
அடுத்து முன்வைக்கப்பட்ட
வரவு செலவு கணக்கு பற்றியோ
எதிர்கால திட்டங்கள் குறித்தோ
நாங்கள் சொல்ல விரும்புவதும்
ஏதுமில்லை.
விடைபெறுவதற்கு முன்
விருந்தோம்பல் சகிதம்
திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே
எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம்.
எங்களைப் போலவே உங்களின்
வாகனங்களின் வருகைக்கும்
காத்திருக்கும்
எதிர்பார்ப்பின் கண்களுக்கு
என்னவிதமான உத்திரவாதத்தை
தரப் போகிறோம்
நாம்.

o

21 நவம்பர் 2011

குறுங்கவிதைகள்

பேருந்தின் இரைச்சல் ஓசையில்
பேச்சு வராத தமையனைப் பற்றி
ஓயாமல் பேசிக்கொண்டு
வந்தாள் ஒருத்தி.
எனக்கென்னவோ அவளே
அவனுக்கும் சேர்த்து
பேசிக்கொண்டிருப்பது போல்
இருந்தது.

0

ஒன்றே போல்தான்
உன் குழந்தை
கைகளின் ஸ்பரிசமும்.

O

கண்கள் சொருகும்
அதிகாலைப் பொழுதில்
உதட்டுச் சாயத்தை
ஒத்தி ஒத்தி எடுத்து
உதடுகளால்
சப்பிக் கொண்டிருந்த
ஒருத்தியைக் காண
ஒரு மாதிரி
சந்தோசமாய்தான்
இருந்தது.

O

பின்னிருக்கையில் அமர்ந்தபடி
பயணம் போக நேர்ந்த
வண்டியோட்டியின் ஆச்சர்யம்
வழியெங்கும் காணும்
இத்தனையும்
இத்தனை நாளாய்
இங்கேதான்
இருந்ததா?

O

ஒன்று போலே இருந்த
எட்டாவது முகத்தை
பார்த்தேன் இன்றைக்கு.

O

21 ஆகஸ்ட் 2011

இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி

இன்னமும் சரியாய் பேச்சு வராத மூன்று வயது பையன்
சமீபத்திய திரைப்படப் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தான்.
அடுத்த மாதம் நர்சரி போக வேண்டியவனை
இழுத்துப் பிடித்து உட்கார வைத்து
புத்தகம் ஒன்றைக் காட்டி 'ஏ' 'பி' என்று சொல்லச் சொன்னாள் அம்மா.
நழுவித் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான் பையன்
இன்னொரு பாடலைப் பாடியபடி.

o

15 ஆகஸ்ட் 2011

சிறு கவிதைகள்

01

சாந்தியா அது?
சாந்திதான் அது.
சாந்தி என்பது எது?

o

02

படிப்பதா?
படைப்பதா?

O

03

எழுத இருக்கிறது
இன்னும் ஒரு பாதி.

போய்விடுமோ
ப்ரூப் ரீடிங்கிலேயே
மீதி வாழ்வு?

o

04

வெகு எளிதாக
போய்வருகிறான்
வெளிநாடுகளுக்கு
சக எழுத்தாளன்.

கடை பாக்கிக்காக
கவிதை எழுதிக்
கொண்டிருக்கிறான்
கவி சாம்ராட்.

o

18 ஜூன் 2011

இரண்டு கவிதைகள்

01

பள்ளிப் பேருந்துக்கு
வழியனுப்ப
யாரும் வராத
இன்னொருவனைக் காட்டி
எப்போதிருந்து நானும்
அப்படிப் போவேனென்று
கேட்ட மகனுக்கு
எப்படி சொல்ல
எனக்கு மட்டும் தெரியும்
அவன் கண்களின்
ஏக்கத்தை.

O

02

தவறுதலாய்
நான் அழுத்திய
தளத்தின் எண்
தனக்கானது என்று
புன்சிரிப்போடு
ஒருவருடன்
போக நேர்ந்த
லிப்ட் பயணம் போல
தானாய் இப்படி
எல்லாமே
தவறுகளின்றி
நேருமானால்...

o

15 பிப்ரவரி 2011

இப்போது இந்தக் காதலர் தினத்தில்

இப்போது இந்தக் காதலர் தினத்தில்

நீ கேட்க வந்த
ஒரு ஆலோசனைக்கு நான் சொன்னது
இப்போதும் நன்றாக என் நினைவில்.
சொல்பவர் தன்னைப் பொருத்திப் பார்த்துச்
சொல்லும் எவ்வொரு ஆலோசனையும்
கேட்பவர்க்கு பொருந்துமா என்று.
இப்போது இந்த காதலர் தினத்தில்
நீ நினைத்துக்கொண்டிருப்பாயா
என்னை இல்லா விட்டாலும்
என் ஆலோசனையையாவது.

o

காத்திருந்த வேளை

இறுக்கமான உடைகளின் சிரமத்துடன்
திரும்பத் திரும்ப கோர்த்துக்கொண்டிருந்தாள்
தன் கால்களை அம்மா
ஒரு அதீத சுவாரசியத்துடன் அவைகளை
பிரித்துப் போட்டு விளையாடிக்கொண்டிருந்த
அவள் பையனை
எதிர்ப்புற பார்வையாளனாய்
பார்த்துக் கொண்டிருந்த
என் கால்களை
எவ்விதம் போட்டுக் கொண்டிருந்தேன்
என்பதுதான்
எவ்வளவு யோசித்தும்
நினைவுக்கு வரவில்லை.

o

தொடர்ச்சி

இன்று வந்து சேர்ந்த
மனங்கவர்ந்த கவியின்
புதுவெளியீட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
நேற்று படித்து பக்க அடையாளம் வைத்துவிட்டு
வந்த புத்தக வரிகளின் தொடர்ச்சியாய்
என்பதை எழுதும் இந்தக் கணத்தில்
இன்னொரு மனங்கவர்ந்த
புத்தகத்தை பிரித்துக் கொண்டிருக்கிறேன்.

o

15 டிசம்பர் 2010

அம்மாவின் கேள்வி

எப்படி சாத்தியம்?
இத்தோடு எத்தனை?
என்ன தேவையோ?
இன்னபிற கேள்விகள்
அறுபத்து நான்கு வயதுப் பெண்
குழந்தை பெற்ற தகவல்
வந்து சேர்ந்த பொழுதில்.
அம்மாவின் கேள்வியோ
ஆனது சுகப் பிரசவமா
சிசேரியனா?

o

23 அக்டோபர் 2010

திண்ணையில் நூறாவது பதிவு

(19-06-2008 தேதியிட்ட திண்ணையில் என் முதல் பதிவு (கவிதைகள்) வெளியானது,
இந்த கவிதைப்பதிவு திண்ணையில் வெளியாகும் எனது நூறாவது பதிவு,
திண்ணை ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி)


01
பரிவு

எளிதில்
அணுக முடியாத
ஒருவருடன்
அலுவல் பேச்சு
அத்தனைப் பரிவோடு
அமைந்ததன் காரணம்
என் குழந்தைகள் குறித்த
விசாரிப்புகளோடு
பிள்ளையென்று
ஏதுமற்ற அவரின்
பத்தாண்டு தாம்பத்தியமும்.

O

02
ஓர் நாளில்

காலை நடைப்பயிற்சியில்
அப்பாவையும்
பின் நிகழ்ந்த
பேருந்துப் பயணத்தில்
மகளையும் கண்ட நாளொன்றில்
அவர்களைப் பிரிந்து வாழும்
அம்மாவையும் பார்க்க நேர்ந்தது
ஆலயமொன்றில்.

O

10 அக்டோபர் 2010

பாவனை

வந்து விழுந்த கேள்விகளுக்கு
விடையளித்தபடி
வண்டியோட்டிக் கொண்டிருந்தேன்
…இத்தனை தூரம் போய்வர
இவ்வளவு பெட்ரோல் போதுமா?
ஏன் இந்த அவசரம்
இந்த நடு இரவிலும்?...
இன்னும் பலவற்றிற்கு சரளமாய்
பதில் சொல்லி வந்தவன்
சட்டென்று சுதாரித்து
பக்கத்தில் பார்த்தேன்
இரு கைகளையும் நீட்டி
தானும் வண்டியோட்டும்
பாவனையுடன் பக்கத்து
இருக்கையிலிருந்த மகனை.

O