09 நவம்பர் 2010

ஆத்மாநாம் கவிதைகள் - படித்ததில் பிடித்தது

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதினிலே ஒரு நிம்மதி.

O
சுற்றி

அரச மரத்தைச் சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
வேப்ப மரத்தைச் சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
எந்த மரத்தைச் சுற்றி
பிறந்த பிள்ளை இவன்
ஏதாவது தறுதலை மரமாக இருக்குமோ?

o

உலக மகா யுத்தம்

ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

o

ஐயோ

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்.

o

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்.

o

9 கருத்துகள்:

  1. எல்லாமே எனக்குப் பிடித்த கவிதைகள். வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ராமலக்ஷ்மி & ஜ்யோவ்ராம் சுந்தர்.

    பதிலளிநீக்கு