31 மார்ச் 2012

பார்வைகள் (சிறுகதை)



நிறை மாத வயிறோடு அந்த பேருந்து நிறுத்தத்தில் டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தாள் பிரேமா. அபுதாபியில் காலை வெயிலோடு நல்ல தூசுக் காற்று வீசிக் கொண்டிருந்தது. கடந்து போன டாக்சி ஒன்றில் பயணிகள் நிறைந்து காணப்பட்டது. ஒன்பது மணிக்கு ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டும். செல்பேசியில் நேரம் பார்த்தாள். எட்டரை. வரும்போது கைகடியாரம் கட்ட மறந்து விட்டிருந்தாள். கடந்து போன ஒரு அபுதாபி அரசுப் பேருந்தும் அன்றைக்குப் பார்த்து இவள் ஏறமுடியாத அளவு கூட்டம் நிறைந்து வந்து இன்னும் அதிகம் பேரை ஏற்றியபடி போனது. பயணிகளுக்கு அரசாங்கம் செய்து கொடுத்திருக்கும் ஒரு நல்ல ஏற்பாடு இந்த பேருந்துகள். எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கும் இறங்கிக்கொள்ளலாம். கட்டணம் ஒரு திர்ஹாம். (13 ரூபாய்).

அயர்ச்சியில் சற்று தள்ளி பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் உடலை முட்டுக் கொடுத்தபடி சாய்ந்து நின்றவள் தன்னில் நிலைத்திருந்த அந்த பார்வையை அப்போதுதான் பார்த்தாள். வயது நாற்பத்தைந்து இருக்கலாம். முகத்தின் முக்கால் பகுதியில் தாடி. ஏதாவது டாக்சி வருகிறதா என்று பார்ப்பதும் பின் திரும்பி இவளைப் பார்ப்பதுமாக இருந்தது அந்தப் பார்வை.

அவளுக்கு சுரேஷின் மேல் கோபம் கோபமாக வந்தது. அலுவலகத்தில் காலை எட்டு மணிக்கு தன் மேலாளருடன் மீட்டிங் என்று போகாதிருந்தால், காரில் கொண்டு போய் ஆஸ்பத்தியில் விட்டுப் போயிருப்பான். இந்த மாதிரி பார்வைகளை அவள் எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்காது. வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தால் அம்மா வந்து இந்நேரம் நம் கூட இருந்திருப்பாள். இந்தியாவை நோக்கி ஓடிய எண்ணங்களை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தினாள். இன்னமும் அந்தப் பார்வை இவளில் நிலைத்திருந்தது.

ஒரு பத்து நிமிட காத்திருப்பிற்குப் பின் வந்த பேருந்தில் ஏறி, ஒரு திர்ஹாம் நாணயத்தை அதற்கான பெட்டியில் இட்டவள், எதேச்சையாய் அந்த பார்வை இருந்த திசையை நோக்கினாள்.

அதுவரைக்கும் அதற்காகவே காத்திருந்த மாதிரி, அவள் சாய்ந்திருந்த காரில் நுழைந்தவன், அதை இயக்கி பார்க்கிங்கில் இருந்து பின்னால் எடுத்துக் கொண்டிருந்தான்.

o

(உயிரோசை 19 -03 -2012 மின்னிதழில் வெளியானது)

4 கருத்துகள்: