14 மார்ச் 2010

செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் (அந்தரங்கம் & இன்ன பிறவும்) மனக் குறிப்புகளின் புத்தகம் எச்.முஜீப் ரஹ்மான்

நண்பர் செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகளை திண்ணையில் படித்து விட்டு மின்னஞ்சலில் தொடர்பு கொண்டேன். அப்போது தான் தெரிந்தது அவர் அபுதாபியில் நானிருக்கும் ஹம்தான் தெருவில் உள்ள அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார் என்று. அடுத்த முறை அவரை பார்த்த போது அந்தரங்கம் என்ற அவரது தொகுப்போடு நின்றிருந்தார். அசகாய தூரம் இது. கடும் முயற்சி. உழைப்பு. மேலும் இலக்கியத்தில் இருபதுவருட தீவிரவாசகன். கவிஞரின் பெயரை சொன்னாலே போதும், ஏதாவது தொகுப்பில் இருந்து சரளமாக மனப்பாடம் செய்து வைத்தாற் போல கவிதை சொல்லுகிறார். புத்தகங்களுடனான அதீதமான உறவு, இன்று ஒரு தொகுப்பாய் அவரை பேசவைத்திருக்கிறது. அவரது பணியோ எஞ்ஞினியரிங். பி.ஈ.முடித்திருக்கும் இவர், தமிழில் கவிதை பாடுவது நமது மரபில் இல்லாத ஒன்று. சமூக போராளிக்கு சற்றும் தோய்வில்லாத அனுசரணை கொண்ட சமூக நோக்கும், அவதானமும் அவரை கவிஞராக்கியிருக்கிறது. அடுத்த வருடமே வேறு ஒரு தொகுப்பு. பொறாமை பட வைக்கும் பாய்ச்சல். அதுவே அவரை பேசவைத்திருக்கிறது.

ஒன்று

பரஸ்பர பிரதியுறவு அல்லது தற்சுட்டு என்பது இருப்பதை இன்னொரு முறை எழுதிப்பார்ப்பது என்று பேசப்படுகிறது. இலக்கியமும்,தத்துவமும் காலம்காலமாக இருந்து வருகிறது. ஆனால் புதிய விஷயங்கள், மறுபடியும் எழுதிப்பார்ப்பது என்ற நிலை தாண்டி, அவை இயங்கியது கிடையாது. படைப்புகள் பிற படைப்புகளில் இருந்து உருவாகின்றன என்பது அண்மைகாலத்திய கோட்பாட்டாளர்களின் முடிவாகும். அவை தாங்கள் பயன்படுத்த எடுத்துக் கொள்ளும் மறுபடியும் உருவாக்கும், சவாலுக்கு இழுக்கும், உருமாறும் முந்தைய படைப்புகளால் சாத்தியப்பட்டிருக்கின்றன. இதையே இண்டர் டெக்ஸ் என்கின்றனர். ஒரு படைப்பு மற்ற பிரதிகளுக்கிடையே மற்றும் அவற்றால் சூழப்பட்டு அவற்றுடன் அதற்குள்ள உறவுகளின் வழியே இருத்தல் கொள்கிறது என்கிறார் ஜோனாதன் கல்லர்.

தற்போது ஒரு கவிதையை இலக்கியமாக வாசிப்பது என்பது அதை மற்ற கவிதைகளோடு தொடர்பு படுத்துவதாக இருக்கிறது. அது அர்த்தத்தை நிகழ்விக்கும் விதத்தை, மற்ற கவிதைகள் அர்த்தத்தை நிகழ்விக்கும் விதங்களோடு ஒப்பிடுவதும் வேறுபடுத்துவதாகும். அதனால் ஒரு தளத்தில் கவிதையை வாசிப்பது என்பது கவிதையை பற்றி வாசிப்பது தான் என்பது சாத்தியமாகிறது. கவிதை கற்பனை மற்றும் செயல்விளக்க செயல்முறைகளுடன் தொடர்புடையதாக கவிதைகள் உள்ளன. அண்மை காலத்திய கோட்பாட்டின்படி, தற்சுட்டும் தன்மை முக்கியமாகிறது. செல்வராஜ் ஜெகதீசனின் கவிதை ஒன்று சொல்லுவதை பாருங்கள்.

எழுதுதல்

யாரும் எழுதாத ஒன்றை
நான் எழுத போவதில்லை
யாரும் எழுதமுடியாத ஒன்றையும்
நான் எழுதிவிட போவதுமில்லை
ஆயினும்
எழுதிதான் தீரவேண்டியிருக்கிறது
எவருக்காக இல்லையென்றாலும்
எனக்காகவேணும்.


எழுதுவதின் தற்சுட்டு தன்மை என்பது தான் முக்கிய பாடுபொருளாக, இந்த கவிதை சொல்லுகிறது. சிக்னேச்சர் ஈவெண்ட் காண்டெக்ஸ்ட் என்ற கட்டுரையில் தெரிதா எழுத்தின் மூன்று இயல்புகளை கூறுகிறார்.

ஒன்று, எழுத்து: தன்னை இரு குறிப்பிட்ட தன்னிலையின் இயலாமையில் மட்டுமின்றி யாருக்காக எழுதப்பட்டதோ அந்த வாசகனின் இல்லாமையிலும் உச்சரிக்கப்படுவது.

இரண்டு, எழுதப்பட்ட குறி: அதன் எழுத்தாளன் எந்த சூழலை உள்நோக்கமாக கொண்டு எழுதினானோ, அந்த சூழலிருந்து விடுதலையாகிவிட முடியும். குறிகளின் எந்த தொடரும் எந்த ஒரு புது சூழலிலும் வைத்து வாசிக்கப்பட இயலும்.

மூன்று, எழுதப்பட்ட குறி: இன்னொருவிதமான இடைவெளிவிடுதலுக்கு உள்ளானது. அதாவது சொற்கள் மற்றும் வாக்கியங்களுக்கு நடுவே இடைவெளி விடும் விதிகள் நிச்சயிக்கப்பட்டவை. அவை அவசியமும் கூட. பிறகு எந்த நோக்கத்துடன் எழுத்து எழுதப்படுகிறதோ அந்த சந்தர்ப்பத்தில் இருந்து விலகி இருக்கிறது.

எது கவிதை? எப்படி இருக்கும் கவிதை? என்ற கேள்விகளுக்கு எத்தனையோ பதில்கள் இருக்கின்றன. கவிதையை இனங்காணுவது இன்றைக்கு எளிதாக இல்லை. ஏனெனில், வடிவத்தை வைத்தோ, கற்பனையை வைத்தோ, உணர்ச்சி வெளிப்பாட்டை வைத்தோ முடிவுசெய்ய முடியாது. ஒரு காலத்தில் செய்யுளாக இருந்து, பின் நகர்ந்து செய்யுள் கவிதையாகிப் பின், அதையும் இழந்து வடிவற்ற நிலைக்கு வந்துவிட்டது கவிதை.
ஒடித்துப்போட்டால்தான் கவிதை என்ற நிலையில் தேங்கித் திணறிக்கொண்டிருந்த கவிதை, இப்பொழுது அதையும் இழந்து தட்டையாகிவிட்டது.தட்டையாகிவிட்டதினாலேயே அது கவிதை இல்லை என்று சொல்லமுடியாது. தட்டையாக எழுதினாலும் உயிருள்ள சொல்லாலும், சொல்லும் அழகாலும், அது கவிதையென்று தன்னை இனங்காட்டும்.

" விளைந்த நன்செய் நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள். என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்...பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள்காண். பழமையினால் சாகாத இளையவள்காண்...நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள். நல்லழகு வசப்பட்டால்துன்பமில்லை" என்று தட்டையாக எழுதிச்சென்றாலும்" நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்" என்ற சொற்றொடரிலும் "பழைமையினால் சாகாத இளையவள்காண்" என்ற சொற்றொடரிலும் கவிதை கண்சிமிட்டுவதை உணர்கிறோம்.
இந்தச்சொற்றொடர்களைச் சொல்லும்போதும்; சொல்லிப்பார்க்கும்போதும் தட்டையான அதாவது சமநிலை உணர்வை மனத்தளவில் பெறமுடியாது. ஓர் உணர்வும் சுவையும் வியப்பும் சேர்ந்துவிடுகிறது. உச்சரிக்கும்போதே அதன் ஓசை உரைநடையிலிருந்து ஓங்கி ஒலிக்கிறது. உணர்வும் சுவையும் வியப்பும் கலந்து, இவை வெறும் தட்டை வாக்கியமல்ல, உரைநடை அல்ல, ஏதோ ஒரு வித்தியாசமானது என்பதை உணர்த்துகிறது. அந்த வித்தியாசம்தான்; அந்த உணர்ச்சி இடைவெளியைத்தான் உரைநடையிலிருந்து உயர்ந்தது என்கிறோம். இது உரைநடையுமில்லை வசனமுமில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். ஆம் இது கவிதை என்று முடிவெடுக்கிறோம்.

ஒடித்துப்போட்டாலும், வளைத்துப்போட்டாலும், தட்டையாக்கினாலும் கவிதையின் வண்ணம்; லட்சணம் தெரிந்துவிடும். தன்மையோடும் உணர்வோடும் இடம்பெறும் சொற்கள் சொல்லிவிடும். தட்டையாய் எழுதவேண்டியதை கவிதை வடிவத்தில் எழுதிக்காட்டுவதால் கவிதையாகிவிடாது. கவிதையைத் தட்டையாக எழுதினாலும் அது உரைநடையாகிவிடாது. எது கவிதை? எங்கே மறைந்திருக்கிறது கவிதை? என்று தேடத்தொடங்குகிறோம். தேடித்தேடிச் சலித்துவிடுகிறோம். கவிதை நிச்சயமாக உரைநடையில்லை.உரைநடை வடிவத்தில் கவிதையை எழுதினாலும் உரைநடையை கவிதை வடிவத்தில் எழுதினாலும் கவிதை தன்னை தன்சொற்களால் அடையாளம் காட்டும். கவிதை எப்படியும் நம்மைப்பார்த்து கண்சிமிட்டிவிடும்.

இயல்பூக்கம் இயல்பாகப்பெற்றவர்கள் எழுதுவது கவிதையாகிவிடுகிறது. ஊக்கம்,உணர்வு இன்னும் எதுவும் இல்லாதவர்கள் கவிதை என்று எழுதினாலும் அது சவலையாகிவிடுகிறது. ஏன்? அது கவலையாகவும் ஆகிவிடுகிறது. இறுதியாக எழுதி எழுதித் தன்னைக் கரைத்துக்கொள்ளும் ஜெயமோகன் சொன்னதைப் பார்வைக்கு வைக்கிறேன்: "கவிதையின் அடிப்படை அழகு சொல். மற்ற மொழிவடிவங்கள் சொற்றொடராக எழுதப்படுகின்றன. வாசிக்கப்படுகின்றன. கவிதை சொற்களாக கழ்வது.சொற்களுக்கு நடுவேதான் அதன் வாசக் இடைவெளிகள் உள்ளன.நவீன கவிதை மட்டுமல்ல சங்கக்கவிதையில் கூட."

இரண்டு

எப்பொழுதுமே பின்னோக்கும் நிழலுக்கு தனித்தன்மை உண்டு. எல்லாவித வாழ்வனுபவங்களும் ஒரே புள்ளியில் ஒன்று சேர வைத்து அடையாளத்தை நிறுவும் தன்மை அதற்குண்டு. வளைந்து நெளிந்து செல்லும் கடல். அதன் ஆர்ப்பரிக்கும் ஓசை தொடர்ச்சியாக/ முடிவற்றதாக ஒலித்து கொண்டிருக்கிறது. பறவையின் கண் மாதிரி காட்சி வெளிக்குள் அது சிறு துண்டாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு தீவுக்குள்ளும் ஒவ்வொரு தனித்த / தனித்தன்மையற்ற அடையாளங்கள் சிதறி கிடக்கின்றன. அதன் விளிம்பிற்குள் நிற்கும் போது நமக்குள்ளிருந்து அரூப ஒலி எழுகிறது. கவிதையின் வெளிப்பாடு/ அதன் இயங்கு தளம் குறித்து பல மாதிரியான கருத்துக்கள் ஒவ்வொரு இடங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றன. எல்லாவித வெளியும் வெளிப்படுத்தும் வாழ்வனுபவங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சலனங்களின் வெளிப்பாடாக கவிதை உருவாகும்போது கவிஞன் தனக்கான அடையாளத்தை பெறுகிறான். ஒவ்வொரு சூழலுமே ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நம்மை அழைத்து செல்கின்றன. அதன் புரியாத மர்மங்கள்/ ரகசியங்கள்/ உள் வாய்ப்புகள் கலாச்சாரம் தாண்டிய பிரதியை அர்த்தம் கொள்ள செய்கின்றன. இதன் காரணமாகவே வெவ்வேறு பிரதிகளை மாறுபட்ட சூழலில் ஒருவித ஊடாட்டத்தோடு கவனிக்க வேண்டியதிருக்கிறது.

'என் ஆடைகள் கிழிக்கப்படுகின்றன
உன் நாயின் நகங்களால்
கிழிப்பதற்கு அனுமதித்தார்கள்.
உன் உளவாளிகள்
ஒவ்வொரு நாளும் தட்டினார்கள்
உன் படையாட்கள் என்னை
தின்றார்கள் காலணியை கூட
நீ இருதடவை
உன்னை இழந்தாய்.'


கவிதையை புரிந்து கொள்ள மொழி ஒரு தடையாக இருப்பதில்லை. அரபுலகில் செல்வாக்கு செலுத்திய சிரிய கவிஞர் ஹப்பானியின் கவிதை மொழி அசாதாரணமானது.

சர்வாதிகாரத்தின் வலிப்பு ஹப்பானியிடத்தில் கலக்குரலாக அமைந்தது. எவ்வித துயரங்களும் கலைஞனிடத்தில் ஏதாவதொரு விதத்தில் பாதிக்கதான் செய்கின்றன. காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்ட ஹப்பானியின் நிழல் நம்மை மேற்காசிய இலக்கிய உலகுக்கு அழைத்து செல்கிறது. எல்லா நிழல்களும் தன் காலத்தை தாண்ட முடிவதில்லை. வெவ்வேறு விதமான வாசிப்பிற்குள்ளிருந்து நாம் நமக்கான பிரதியை தேர்ந்தெடுத்து கொள்வது அவசியம். அந்த வகையில் செல்வராஜின் கவிதை பிரதிகளுக்குள் வாசகனை வியப்பில் ஆழ்த்தும் சாராம்தான் என்ன என பார்ப்போம்.

வேறு ஒன்றும்

இன்னொரு முறை
பத்திரமாய்
தரையிறக்கித்
தரப்பட்டிருக்கிறது
இந்த வாழ்வு
என்பதைத் தவிர
வேறு ஒன்றும்
விசேசமாய்
சொல்வதற்கில்லை
இந்த இன்னொரு
விமான பயணம்
(இன்ன பிறவும்-கவிதை தொகுதி)


எப்போதும் கவிதை, நிகழ்காலத்தின் எதிர்வினை மட்டுமே. வரலாற்றின் விசாரணையும் நிமித்திகத்தின் எதிர்பார்ப்பும் கவிதையின் பரப்பில் சமகாலச் சார்புடனேயே மேற்கொள்ளப் படுகின்றன. புதிய அனுபவ உலகை முன்னிருத்தவும் புதிய உணர்வோட்டத்தை அடையாளப்படுத்தவும் எத்தனிக்கும் இளங்கவிஞர்களுக்கு கவிதையை சமகாலத்தன்மை கொண்டதாக நிலைநிறுத்துவது சவாலான நடவடிக்கை. முன்னுதாரணங்களை அதேபடித் தொடர்வதோ, வழக்கிலிருக்கும் மொழியை அதேபடி எதிரொலிப்பதோ படைப்பாகாது; நகலெடுப்புமட்டுமே என்பதால் இந்தஅறைகூவலை எதிர்கொள்வது தவிர்க்கவியலாததாகிறது. மனித இருப்பு, அதன் காரணமாக உருவாகும் மனப்பெயர்வுகள், இயற்கைமீதான கரிசனம், வாழ்வின் தற்செயலான தருணங்களின் ஆச்சரியம் என நவீன கவிதையில் தொடர்ந்து புழங்கும் அம்சங்களையே மூலப்பொருட்களாகத் திரட்டிக் கொண்டிருந்தாலும், அதன் விளைவுகள் புத்துயிர்க் கவிச்சையுடன் திகழ்கின்றன. கவிதையின் பிறவிக்குணம் இது. ஆனால் செல்வராஜிடம் மேலோட்டமான பார்வையில் எளிமையும் சிக்கலுமில்லாததாகத் தோன்றுகிறது.

மூன்று

இன்று தமிழ்க் கவிதை கிட்டத்தட்ட வெகுசன ஊடகமாகிவிட்டது. அதன் குறையும் நிறையும் கவிதைகளிலும் காணப்படுகின்றன. இந்த வார்த்தைச் சந்தையில் தனி அடையாளத்துடன் தெரிய கவிஞன் அரும்பாடு படவேண்டியிருக்கிறது. தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தேவையும் கூடிக்கொண்டே வருகிறது. கவிஞன் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது என்பது தான் வாழும் காலத்தையும் சூழலையும் நுட்பமான அறிந்து கொள்வதன் மூலமே நிகழ்கிறது என்று கருதுகிறேன். புதிய தலைமுறை கவிஞர்களுடன் இணைந்து நிற்கவும் இந்த நடவடிக்கை அவசியம்.

என்னுடையதல்லாத கவிதைகளைப் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி உண்டு. கொஞ்சம் சுயநலம் கலந்த மகிழ்ச்சி. காரணம் பிறருடைய கவிதைகளை வாசிக்கிற சந்தர்ப்பங்களில் நான் எங்கே இருக்கிறேன் என்று சோதனை செய்துகொள்ள முடிகிறது. தவிர நான் இயங்கும் மொழியின் நிகழ்கால அடையாளங்களை இனங்காண்பது எனக்கு எளிதாகவும் இருக்கிறது.
இந்தமகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருகிற சில கவிஞர்களில் செல்வராஜ் ஜெகதீசனும் ஒருவர்.

நவீனக்கவிதைகள் மிக இறுக்கமானதொரு மொழிக் கட்டமைப்பில் எழுதப்படும் வேளையில் ஜெகதீசனின் கவிமொழி மிக எளிதாய், புதியதாய் இருக்கிறது. அழகியல் தொனி சற்று தூக்கலாகவே தெரியும் இத்தொகுதியில் கவிதைக்கூறுகள் சற்றே இளக்கமாகிக் கதையம்சம் மிக்கதாகவோ அல்லது கவிதைநடையில் எழுதப்பட்ட நட்சத்திரங்களாகவோ ஆகிவிட்டிருக்கிறது. புதுக்கவிதையின் பிதாமகனான எஸ்ரா பவுண்ட் வார்த்தைகளை நாம் சற்றெ பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

>எழுதும்பொருள் எதுவாயினும் நேர்முகமாய் அணுக வேண்டும்.
>கவிதையின் வெளிப்பாட்டுக்கும் பயன்படாத எந்த ஒரு சொல்லையும் சேர்க்கக்கூடாது.
>சொற்றொடர்களில் இசை தழுவிய தொடர்ச்சி அமைய வேண்டும்
.

கவிதை பிரக்ஞையுடன் கூடியது. புதுக் கவிதையில் உரைநடையின் முதிர்ச்சியிருக்கிறது. எல்லாம் சரி. அப்போது அது உரைநடை போலத் தானே ? அது தானில்லை. உரைநடை கூட்டல் கணக்கு , கவிதை பெருக்கல் கணக்கு. ஏன் அப்படி? கவிதை என்று பெயர் வைத்து விட்டதாலா? அது அப்படித் தான். கவிதையின் ஈவு பல்லாயிரங்கோடி. கவிதை உரைநடை போல் தட்டை யில்லை. தகட்டுப் புழு இல்லை. நாடாப்புழு இல்லை. உரைநடை அசைவு வேறு. கவிதையின் இயங்கு தளம் வேறு. உரை நடை கூட்டுகிறது. கவிதை பெருக்குகிறது என்று அதனால் தான் சொன்னார்கள்.

எங்கோ படித்ததாக ஞாபகம்.

இந்தக் கடலில்
எந்தக்குபேர மூலையிலும்
கிடைக்காத புழுக்கள்
வேளை தவறாமல்
தானாய் வருகிறது.
தெய்வக் கிருபையால்
புயல்களும் இல்லை.
திமிங்கிலங்களை
அவதாரக்கடவுள்
காணாமல் செய்துவிட்டார்.
ஆனால் இன்னும்
ஒன்றுமட்டும்
புரியாத புதிராய் இருக்கிறது
உலகத்தை உதடு குவியப்புணர்கையில்
இஃதென்ன இடையில்
அப்புறம் ஒன்று
எங்கே எங்கள்
முள்ளுச்சூரியன்களும் கள்ளுப்பிறைகளும்.


முற்றிலும் புதிதாக,எளிதாகக் கருவை அமைத்து, யாரும் அதிகம் கையாண்டிராத வார்த்தைகளைக் கொண்டு வடிவமைத்து நடப்பியலுக்கு மிக அணுக்கமான விவரங்களைத் துணைக் கருவில் நீட்டித்து கவிதையாக்கம் உருப்பெறுகிறது. அதை போல செல்வராஜும் ஒரு கவிதை செய்திருக்கிறார்:

நாற்காலிகள்.

நெரிசல் மிகுந்த நகரச் சூழ்நிலையில் தாக்குதல் மறந்து போனோம். பகைவர் யார் நண்பர் யார் என்று தெரியாத நெரிசல் இங்கு. போர்க்குணம் உறைந்து கையாலாகாத்தனம் வலுத்த நடைமுறை யுகத்தில்தான் மிருகத்தைக் கட்டிப் போட ஆரம்பித்தோம். கட்டிப்போட்டுப் போஷிக்கும் மிருகத்தைக் கருவாக்கி 'நன்றி ' சொல்கிற சீமைப்பழக்கம், பஸ் பிடிக்கும், சோடா உடைக்கும், டாக்ஸி பிடிக்கும், காட்சிசாலைக்கு விடுக்கும், நகர்ப்புறச்சூழலை உள்ளடக்கி தன்னிடமிருந்து எப்போதும் விலகாமல் கூடவே இருக்கிற, தன்னை நெருக்கடிக்குள்ளாக்குகிற ஏதோ ஒன்றைப் படிமமாக்கினார் பிரம்மராஜன்.

'சொல்லில் கிடைத்த
சங்கிலியைக்
கழுத்தில் கட்டி
இழுத்துக் கொண்டலைந்தேன்
அம்மிருகத்தை.'


பற்றாக்குறைகளும் தடைகளும் நவீன யுகத்தின் தவிர்க்க இயலாத துண்டுகள். எனவே நம் உடமைகளை அணுக்கங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்கிற பொறுப்பு நமக்கு ஏற்படுகிறது. அவ்வகையில் சங்கிலி போடுவதே நாகரிக உலகத்தின் அதி நவீன அம்ஸம்.

இன்னொரு சைக்கிள் ஓட்டியும்
பின்னொரு சிறுவனும்


கவிதை தானாகவே முக்கியப்படும். அதனால் தான் அதிகப் படி கவனத்தை ஒரு சார்புக்குத் தருவது கேலிக்கிடமாகிறது. யாருக்கும் அங்கி நுனியைப் பின்னாலிருந்து தூக்கிக் கொடுத்தோ குடை பிடித்தோ சுயலாபம் பெற விரும்புபவர்கள் கவிஞர்களையும் கவிதையையும் ஒருங்கே அழிக்கிறார்கள். அவரவருக்கான வாசிப்பை உகந்து தருவது தான் கவிஞர்களைக் கெளரவிக்கும் ஒரே வழி.

எளிமையான வார்த்தைகளைத் தனக்கே உரிய ஆளுமையுடன் இவர் கையாள்கிறார். சொல்வளம் அப்படியே சௌகரியமாக உட்கார்ந்திருக்கிறது. கவிதையின் அழகு எங்கிருந்து வருகிறது எனப் பார்க்கும்போது உள்ளடக்கத்திலிருந்து வருகிறதா? உத்திமுறையில் இருந்து வருகிறதா? உருவகமாக வருகிறதா? படிமம் குறியீடு ஓசைநயம் வார்த்தைப்பின்னல் இவற்றிலிருந்துமா? உண்மைநிலை யாதெனில் கவிஞனின் அடிமனதின் அனுபவச் செழுமையின் சத்திய வெளிப்பாடாகவே செல்வராஜின் கவிதைகள் வெளிவருகின்றன. அவரின் இலட்சிய வேட்கை தென்படுகிறது. இவரது கவிதைகள் அகன்று விழிக்கின்றன. இவரது ஆன்மா துடிப்பதைப் பார்க்கலாம். இலட்சியத் துடிப்போடு வாழ்கின்ற இவரது கவிதைகளை வரலாற்று ஆசிரியர்கள் தேடி எடுப்பது உறுதி. இவரது கவிதையில் பழைய இலக்கண காவலாளிகள் இல்லை. சம்பிரதாயங்கள் என்னும் சுற்றுவேலிகள் இல்லை. புதிய நோக்குக் கொண்டவையாக இருக்கின்றன. மக்களின் சிந்தனையில் கலந்து எம் தற்கால வாழ்வுப் போக்கைப் பதிவு செய்வனவாக அமைந்துள்ளன.

இந்த இரண்டு தொகுதிகளின் பிரதிகளுக்குமிடையில் ஜெகதீசனின் கவிதைமொழியில் நிறைய மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. சொல்முறை, உணர்முறை, அவருடைய பார்வை, கருத்து, மொழி எல்லாவற்றிலும் மாற்றங்களும் முதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தொடர் பயணத்தை நிகழ்த்தும் படைப்பாளிகளிடத்தில் எப்போதும் இத்தகைய படிமலர்ச்சியையும் முதிர்ச்சியையும் காணலாம். முதல் தொகுதியில் அவர் செய்கிற பிரகடனங்களை இரண்டாவது தொகுதியில் செய்யவில்லை. பதிலாக அவர் அருகிருந்தும் உள்ளிருந்தும் பேசுவதைப்போல தோன்றும் கவியாக்க முறைமையைக் கையாள்கிறார்.

எல்லாருக்கும் தெரியும் என்னை.
மின்னல் தேவனின் மகன் நான்.
இடித் தேவியின் மருமகன்.
மேலான சொர்க்கத்தில்
வசிப்பவன்தான் நான்.
கயிறு அறுந்த காரணத்தால்
மனிதனாக இருக்கிறேன்
*
வியட்நாமிய நாடோடிப் பாடல்

அந்தரங்கம் –முதல் தொகுதி
இன்னபிறவும்-இரண்டாம் தொகுதி
அகரம் வெளியீடுகள்


நன்றி: திரு. எச்.முஜீப் ரஹ்மான் & திண்ணை.காம்

8 கருத்துகள்:

 1. Hello Friend,  Hope everything is fine.
  I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

   
  Meharunnisha
  Doctoral Candidate
  Dept of Psychology
  Bharathiar University
  Coimbatore - 641046
  Tamil Nadu, India
  meharun@gmail.com
   
   
  (Pls ignore if you get this mail already)

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் அபுதாபியில் எங்கு? நானும் அபுதாபிதான்.


  நல்ல இடுகை. என் வலைப்பூ வந்து பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி குமார்.
  நான் ஹம்தானில் இருக்கிறேன்.
  பேசுங்களேன்.
  050-7510692

  பதிலளிநீக்கு
 4. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் jeen.

  பதிலளிநீக்கு