07 செப்டம்பர் 2010

நீர்க்கோல வாழ்வில்

நிறைய கேள்விகள்
இருந்தன அவனிடம்
பதிலில்லா அல்லது
பதில் வேண்டாக் கேள்விகள்
‘நல்லவனுக்கு கிடைக்கும் எல்லாமும்
கெட்டவனுக்கும் கிடைப்பதெப்படி?
சட்டம் ஏன் சரியான ஆளையும்
சகல விதிகளை மீறுபவனையும்
சரிநிகர் சமானமாய் வைத்துப் பேசுகிறது?’
நாளது வரையிலான சிரமங்களை
பார்க்கும் எவரிடமும்
அப்படியே இறக்கிவிடும்
எத்தனிப்புடன்
பேசிக்கொண்டே இருந்தான் அவன்.
சற்று முன் நடந்த
சாலை விபத்தொன்றில்
பைக்கின் பின் அமர்த்தி
கூட்டிப் போன தன் தந்தை
லாரியொன்றின் பின் சக்கரத்தில்
தலை நசுங்கி செத்துப்போனதை
கண்ணெதிரே கண்ட
மகனைப் பற்றிய
தகவல்களோடு வந்து சேர்ந்த
இன்னொருவனின் வருகை
எல்லாக் கேள்விகளையும்
கலைத்துப் போடும் வரை.

o

4 கருத்துகள்: