03 செப்டம்பர் 2011

பாய்



“பாய்” என்றொரு புதிய வார்த்தையைக் கற்றுக்கொண்ட
மூன்று வயது மகனிடமிருந்து
“பாய்” தான் எல்லாவற்றுக்கும் இப்போது.
காலையில் கண்விழிக்கும்போது
கவனமாய் உயிர்பெறும் “பாய்”
நான் அலுவலகம் போய் வரும் பொழுதுகளில்
நண்பர்கள் பார்க்க வரும் விருந்தினர்
உடன் பயணிக்கும் பேருந்துப் பயணிகள்
கடைகளில் கடைத் தெருக்களில்
எங்கும் எவருக்கும் ஒரே “பாய்” மயம் தான்.
பெரும்பாலும் ஒலியளவு
ஒரேயளவுதான் இருக்கும் என்றாலும்
தனக்கு தடுப்பூசி போடப்பட்ட சமயம்
ஆஸ்பத்திரியில் ஒலித்த “பாயே”
அதுவரைக்கும்
மிக அதிக சத்தத்தோடு ஒலித்த “பாய்”.
அங்காடியொன்றில் காணாமல் போன தினம்
அவனது இருப்பிடத்தை அறிவித்ததும்
அந்த “பாய்” தான்.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக