23 மார்ச் 2011

படித்ததில் பிடித்தது - சமயவேல் கவிதைகள்

நெற்றிக்கண் தொலைத்த கவிதை
சமயவேல்



சிறு தூறலாகப் பெய்யும் மழையால்
கரும் கழிவுகளில் எழும் குமட்டும் நாற்றம்
அசுர ஆட்டோக்கள் கக்கிய
கேஸோலின் வாசம்
நான் ஒரு காலைப் பொழுதில்
வைகைக் கரையில் நிற்கிறேன்.

கரை இருமருங்கிலும் தொடர்ச்சியாய்
ஒலிக்கும் பட்டறைச் சம்மட்டிகளின்
சப்தத்தில் என் செவிப்பறை அதிர்கிறது
ஆயில் சிந்திய கால் சராய்களுக்குள்
மஹால் தூண்களைவிட உறுதியாய் நிற்கும்
பதின்பருவ பையன்களின் கால்கள்;
உயரும் கைகளில் பிதுங்கும் புஜங்களில்
பாண்டிய நாட்டின் வியர்வை வழிகிறது

பன்றிகள் அலையும் கரும்புனல் மேல்
முச்சக்கர சைக்கிளிலிருந்து மருத்துவமனைக்
கழிவுகளைக் கொட்டுகிறான்
குழந்தைத் தொழிலாளி நெடுஞ்செழியன்

கள்ளத்தனமாய் கேஸ் ஏற்றும் வரிசையில்
ஒரு பள்ளிச் சிறுமியர் வண்டியும் நிற்கிறது
கழுத்தில் டைகள் ஆடும்
கருஞ்சிவப்புச் சீருடை மீனாட்சிகள்
ஸ்கேல் யுத்தம் நடத்துகிறார்கள்

மாநகராட்சியின் ஒற்றை மாட்டு வண்டியில்
மூக்கணாங் கயிற்றை சுழற்றியபடி வருகிறார்
குட்கா மெல்லும் கள்ளழகர்

புட்டு வாங்கக் காசில்லாத கந்தலாடைச் சிவனார்
கோப்பெருந்தேவியின் இட்லிக் கடையில் விழும்
எச்சில் இலைகளைக் கவனித்தபடி
தியானத்தில் இருக்கிறார்

நமக்கென்ன என்னும் பாவனையோடு
காறித் துப்புகிறான்
நெற்றிக்கண் தொலைத்த நவீனக் கவிஞன்.

o

பொட்டலம் பற்றிய யோசனைகள்

இரவின் அந்திமத்தில்
அதிகக் குளிரெடுத்து
போர்வையை மேலும்
இறுக்கிக் கொள்கிறபோது
உணர்கிறேன்
நான் ஒரு
துணிப்பொட்டலம் என்று.

மருத்துவச்சி ஏந்திக் காட்டிய
நிர்வாணப் பொட்டலம் கண்டு
வலியுடனும் குதூகலித்த
அம்மா
இன்றில்லை.

இது பற்றி மேலும்
யோசிக்க முடியாமல்
உருண்டு புரண்டு
தூங்கிப் போனேன்.

காலையில் எழுந்து குளித்து
ஷேவ் செய்து தலைவாரி
பவ்டர் பூசி
ஒரு சிறந்த உடைப் பொட்டலமாய்
தெருவில் நடந்தேன்.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக