17 ஆகஸ்ட் 2011

சூடாப் பூ

பள்ளி விட்டு வந்ததும்
தன் ஆஸ்தான இடத்தில்
அமர்ந்திருப்பாள் அம்மு.

எல்லோரும் வீட்டிற்குப் போக
தான் மட்டும்
அனுதினமும் அங்கு
வருவது பற்றிய
ஆரம்ப காலக் கேள்விகள்
அவளை விட்டுப் போய்விட்டன.

ஓலைக் குடிலின்
ஓர் மூலையில் அமர்ந்து
எல்.கே.ஜி பாடங்களை
படித்துக் கொண்டிருப்பதும்
அம்மாவிடமிருந்து
பூ வாங்கிப்போவோருக்கு
புன்னகை ஒன்றை
இனாமாய்க் கொடுப்பதும்
அவளின்
அன்றாடக் கடமைகள்.

மீதமிருக்கும் பூக்களுடன்
வீடு திரும்பிக் கொண்டிருக்கும்
அம்முவிற்கு
என்றைக்குமே புரிந்ததில்லை
அம்மா ஏன் சூடிக் கொள்வதில்லை
அவைகளில் ஏதொன்றையும் என்பது.

o

5 கருத்துகள்: