22 ஆகஸ்ட் 2011

தேவிகா சுப்ரமணியம்தேவிகா சுப்ரமணியத்தை
தெரியாதவர்கள் குறைவு எங்களூரில்.
தெரிந்தவர்களில் பலருக்கும்
தெரியாத ஒன்று அவரின் பெயர்க்காரணம்.
ஆண்டவன் கட்டளை திரைப்படத்தை
அறுபத்தேழு முறை பார்த்ததினால்
ஆகி வந்த பெயராம்.
சுப்பிரமணி என்னும் அழைப்புக்கு
செவி சாய்க்க மறக்கும் காதுகள்
தேவிகா என்னும் அழைப்புக்கு
திரும்பாமல் இருக்க மாட்டா.
தேவிகாவைப் பற்றிய பேச்சுக்களைத்
தெரிந்த சிலருடன் மட்டுமே பேசுவார்.
எத்தனை படங்கள் நடித்தார் தேவிகா
யார் யாருடன் எத்தனை அதில்
எல்லாமே எப்போதும் அவர் விரல் நுனியில்.
சிவாஜியை எப்போதும் கணேசன் என்றே அழைப்பார்
என்பது ஒரு கூடுதல் தகவல்.
நரை கூடி கிழப் பருவம் எய்தி எல்லோரையும் போலவே
தேவிகா சுப்ரமணியமும் இறந்து போன நாளொன்றில்
இத்தனையும் அசை போட்டுக்கொண்டிருந்த ஊரார் நடுவே
அடுத்த ஊரிலிருந்து வந்து அழுது புலம்பிப் போன
தெய்வானைப் பாட்டிக்கு தேவிகா என்றொரு பெயருண்டு
என்பது எவருக்கும் அங்கு தெரிந்திருக்கவில்லை.

o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக