20 அக்டோபர் 2010
சொந்த ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் – சுகுமாரன் - படித்ததில் பிடித்தது
பத்திரிகை, தொலைக்காட்சி, நூல் வெளியீடு ஆகிய துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இந்த அனுபவத்தின் பின்னணியில் நான் குறையாக உணரும் ஓர் அம்சம் - இந்தத் துறைகளில் தகுதியான எடிட்டர்கள் இல்லை என்பது. ஊடகங்களிலும் பதிப்பகங்களிலும் கூட எடிட்டர் என்பவர் பிழை திருத்துநர் என்றே கருதப்படுகிறார். அபாரமான எடிட்டர்கள் என்று பாராட்டப்பட்ட பல பத்திரிகையாளர்களும் தேர்ந்த பிழை திருத்துநர்கள். வெட்டி ஒட்டுபவர்கள். உண்மையில் எடிட்டர், பிழை திருத்துநர் அல்ல. வெட்டி ஒட்டுபவர் அல்ல. ஒரு பிரதியை வாசிப்பின் தேவைக்கும் மொழியின்
மேன்மைக்கும் இசையச் செம்மைப்படுத்துபவர். அப்படியான ஆளுமைகள் தமிழில் குறைவு. அந்தக் குறைவான ஆட்களில் நண்பர் நஞ்சுண்டன் ஒருவர். ( இந்த வாக்கியத்தை 'அந்தக் குறைவான ஆட்களில் நண்பர் நஞ்சுண்டனும்
ஒருவர்' என்று எழுதுவதுதான் பொருத்தம் என்று அவர் செம்மைப்படுத்தக் கூடும்).
கடந்த 2, 3 தேதிகளில் செம்மை என்ற தன்னுடைய அமைப்பின் சார்பில் நஞ்சுண்டன் “சிறுகதைச் செம்மையாக முகாம்” ஒன்றை தரங்கம்பாடியில் நடத்தினார். எழுதிப் பெயரெடுத்தவர்களும் எழுதத் தொடங்கியிருப்பவர்களுமாக பத்துக்கு மேற்பட்ட இளம் எழுத்தாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். தமிழில் முதல் அச்சாக்கத்தைச் செய்தவரான, பார்த்தலோமியோ சீகன்பால்கு வாழ்ந்து தமிழ்ப் பணியும் இறைப் பணியும் செய்த மண்ணில் நடந்த முகாமுக்கு
ஒரு வரலாற்றுக் கவர்ச்சியும் கூடியிருந்தது. முகாமில் நான் ஆற்றிய உரை இது. யாருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில் இங்கே இடம் பெறுகிறது.
சிறுகதை செம்மையாக்க முகாம்
நண்பர் நஞ்சுண்டனின் நோக்கம் என்னைக் குழப்பத்தில் தள்ளி விட்டிருக்கிறது. சிறுகதை செம்மையாக்க முகாமுக்கு என்னை ஏன் அழைத்தார் என்று புரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. கவிதை எழுதுபவனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் விருப்பமும் அப்படியே அறியப்பட்டிருக்கும் பாக்கியமும் கொண்ட நான், சிறுகதை முகாமில் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறார் என்று தெரியவில்லை.
எனக்கு இரண்டு யூகங்கள் இருக்கின்றன. ஒன்று: கவிதை எழுதுவது லேசு. அதைச் செம்மைப்படுத்துவது இன்னும் எளிது. ஆனால் செறிவாக ஒரு சிறுகதை எழுதப்படுவதும் அதைச் செம்மையாக்குவதும் கடினமான செயல் என்று செல்லமாக இடித்துக் காட்டுவது.
இரண்டாவது: செம்மையாக்கத்திற்குஒரு குழுவை உருவாக்கி வைத்திருப்பதுபோல இலக்கியப் புலனாய்வுக்கும் தனிக் குழுவை வைத்திருக்கிறாரோ என்று சந்தேகிக்கிறேன். இல்லையென்றால் என்னுடைய ரகசியங்களை அவரால் துப்புத் துலக்கியிருக்க முடியாது. நானும் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் என்பதை மேற்படி குழு கண்டுபிடித்து நஞ்சுண்டனிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்க வேண்டும்.
நண்பர்களே, நானும் கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு தொகுப்பாகவே வெளியிடும் அளவு எண்ணிக்கையுள்ள கதைகள். இருபத்தி நான்கு கதைகள். மௌனியின் மொத்தக் கதைகளுக்கு நிகரான எண்ணிக்கை. அண்மையில் வெளிவந்த சில சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க நேர்ந்தபோது, அவையடக்கத்துக்கு உட்பட்டே ஓர் இழப்புணர்வு தோன்றியது. நான் வாசித்த அந்தக் கதைகளை விட, எழுதி அச்சேறிய பின்பு கைவிட்ட என் கதைகள் பொருட்படுத்தப்பட வேண்டியவைதாம் என்று சின்னதாக ஒரு கர்வமும் எழுந்தது. என்னுடைய கதாசிரிய அவதார ரகசியம் பற்றி அறிந்துதான் நஞ்சுண்டன் முகாமுக்கு அழைத்திருக்கிறார் என்றால் மகிழ்ச்சி. சிறுகதைகளில் ஒரு கை பார்த்தவன் என்ற முறையில் நான் முகாமுக்குப் பொருத்தமானவன். அறியாமல்தான் அழைப்பு என்றால் மேலும் பொருத்தம். மேலும் மகிழ்ச்சி. எழுதிய கதைகளின் பக்குவமின்மையை உணர்ந்து, அவற்றை ஒதுக்க முடிந்தது சிறுகதைக் கலைக்கு நான் செய்த சேவை என்றே எண்ணுகிறேன்.
இதுபோன்ற ஒரு முகாமில் அந்தக் கதைகள் செப்பனிடப் பட்டிருந்தால் நானும் சிறுகதையாளனாக்கும் என்று சொல்லிக் கொள்ள முடிந்திருக்கலாம். ஆர்வத்துடன் கதைகள் எழுதப் பயின்று கொண்டிருந்த காலத்தில் ஆல்பெர் காம்யூவின் 'தலை மறைவும் அரசாங்கமும்' ( Exile and the kingdom) என்ற சிறுகதைத் தொகுப்பை ஒருவேளை வாசிக்காமல் இருந்திருந்தால் நானும் சிறுகதைக்காரனாகியிருக்கலாம். செறிவான சிறுகதைகளுக்கு எடுத்துக் காட்டாக நான் மதிக்கும் தொகுப்பு அது.
ஆல்பெர் காம்யூவின் மேற்சொன்ன தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இருக்கின்றன. தன்னுடைய மொத்த எழுத்து வாழ்க்கையில் சிறுகதைகளாக அவர் எழுதியவை இந்த ஆறு கதைகள் மட்டுமே. ஆறு கதைகளும் பொதுத் தன்மை
கொண்டவை. எல்லாருக்குள்ளும் ஓர் அரசாங்கம் இருக்கிறது. நாம் அதை ஆள்பவர்களாக இருக்கிறோம். அல்லது அவ்வாறு நினைத்துக் கொள்கிறோம். ஆனால் வாழ்வனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் நாம் அந்த அரசாங்கத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்பது தெரியும் என்ற மைய உணர்வுதான் இந்த ஆறு கதைகளின் பொதுத்தன்மை. எல்லாக் கதைகளிலும் வரும் மையப் பாத்திரங்கள் தங்களது சொந்த ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு கதையை எடுத்துக் காட்டாகப் பார்க்கலாம்.
ஆடுல்டெரொஉச் நொமன் (அடல்ட்ரஸ் உமன் - ஒழுக்கம் கெட்டவள்) கதையின் மையப் பாத்திரம் ஜெனைன். அவள் கணவன்
மார்ஸெல். பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் பிரான்சின் காலனி நாடான அல்ஜீரியாவில் வாழ்பவர்கள். உலகப் போரை ஒட்டி நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சியில் வியாபார நெருக்கடிக்குள்ளாகிறான் மார்ஸெல். கைவசம் இருக்கும் சரக்குகளை நகரத்தில் விற்பதற்காக மனைவியுடன் பேருந்துப் பயணம் மேற்கொள்கிறான். பேருந்து ஓட்டுநரின் இருக்கைக்கு முன்னால் உள்ள கண்ணாடியில் மோதும் மணற் பிரதேச ஈக்களைக் கவனிக்கும் ஜெனைனிடமிருந்து கதை தொடங்குகிறது. ஜெனைன் வியாபரத்தில் கணவனுக்கு உதவியாளர் கூட. அந்த வறண்ட பிரதேசத்தில் செல்லும் பயணத்தில் தன்னுடைய வாழ்க்கை பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறாள். மார்ஸெல் பற்றிய எதிர்மறையான சித்திரங்கள்தாம் அவளுக்குத் தோன்றுகின்றன. உற்சாகமில்லாதவன், வேலைப்பளுவால் சோர்ந்து போனவன், தன்னுடைய மென் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவன், இவனையா இளமையின் அடையாளம் என்று காதலித்தோம் என்று கசந்து கொள்கிறாள். பேருந்தில் அவளையே கவனித்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சு சிப்பாய் ஒருவன் புன்னகையுடன் நீட்டும் மிட்டாய்களை வாங்கிக் கொள்கிறாள். அதற்குக் காரணம், தான் இப்போதும் பார்வைக்கு உவப்பானவளாக இருக்கிறோம் என்ற சமிக்ஞை சிப்பாயின் செயலில் இருப்பது. அது தரும் மறு உறுதி. அன்று இரவு அவர்கள் ஒரு கோட்டைக்கு அருகிலுள்ள ஓட்டலில் தங்குகிறார்கள். கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் போகிறார்கள். அது ஜெனைனைப் பரவசப்படுத்துகிறது. ஓட்டலுக்குத் திரும்பி வந்த பிறகும் அதே பரவசத்தில் இருக்கிறாள். நள்ளிரவில் மார்ஸெல் தூங்கிய பிறகு ஓட்டல் அறையிலிருந்து வெளியேறி கோட்டைக்குள் சுற்றி அலைகிறாள். அவள் அனுபவிக்கும் பரவசம் இளமை ததும்பிய நாட்களில் மார்ஸெலுடன் கொண்ட உடலுறவை விட உன்னதமானது. கோட்டைக்குள் தரையில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களைப் பார்க்கிறாள். அந்தக் கணம் அவள் வாழ்க்கையின் பொற்கணம். திரும்ப அறைக்கு வருகிறாள். தூக்கம் முறிந்து எழும் மார்ஸெல் முன்னால் உடைந்து அழுகிறாள். என்னவென்று கேட்கிற அவனிடம் ஒன்றுமில்லை என்றுதான் பதில் சொல்கிறாள். ஆனால் ஒருபோதும் அவளுடைய மனமுறிவையோ, கோட்டைக்குப் போனதைப் பற்றியோ அவள் சொல்வதில்லை.
கதை இங்கே முடிந்து விடுகிறது. இப்படிக் கதைச் சுருக்கம் சொல்லும்போதே, சிறுகதை என்ற இலக்கிய வடிவம் வெறும் கதை சொல்லும் ஊடகம் அல்ல என்பதையும் உணர்கிறேன். அது ஒரு பார்வை. வாழ்வின் பல்வேறு சலனங்களை ஒரு மையத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் செயல். இந்த நோக்கிலான உரையாடல் இலக்கியத் திறனாய்வாக மாறக் கூடும். அது செம்மையாக்க முகாமின் குறிக்கோள் அல்ல. ஆனால் செம்மையாக்கத்தை மேற்கொள்ள ஒரு படைப்பின் இயல்பும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதன் கட்டுமானக் கூறுகள் கவனிக்கப்பட வேண்டும். அப்படியான கவனம் இல்லாமல் செய்யப்படும் செம்மையாக்கம், ஒரு புத்திசாலித் தனமான வித்தையாகுமே தவிர படைப்பைச் செழுமைப்படுத்தும் ஜீவனுள்ள நடவடிக்கையாகாது.
தமிழில் இந்த வித்தைகளுக்கு உதாரணங்கள் இருக்கின்றன. முதல் தமிழ் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திர'த்துக்கு ஒரு செம்பதிப்பு கொண்டு வரப்பட்டது. நாவல் பாத்திரங்கள் கொச்சை மொழியில் பேசுகின்றன, ஆசிரியரின் நடையில் வடமொழிச் சொற்கள் அதிகம் என்பன போன்ற குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஒருபடி மேலே போய் பாத்திரங்களின் வடமொழிப் பெயர்கள் தமிழாக்கப்பட்டன. இந்தச் செம்மையாக்கம் படைப்பு நோக்கத்துக்கு எதிரானது. ஓர் அரசியலை உள்ளடக்கியிருப்பது. ஒரு பிரதியைச் செப்பனிடும்போது நினைவிலிருக்க வேண்டிய விதி படைப்புக்குச் செறிவூட்டுதல் மட்டுமே. அதற்கே கூட படைப்பின் இயல்பைப் பற்றிய புரிந்துணர்வு இருக்க வேண்டும்.
இங்கே எடுத்துக் காட்டிய ஆல்பெர் காம்யூவின் கதை, பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
மொழியாக்கத்தின் போதே செம்மையாக்கமும் நடைபெற்றிருக்கிறது என்பதை இந்தக் கதை பற்றி விவாதிக்கும்
விமர்சன நூல்களிலும் ஆசிரியரின் குறிப்புகளிலும் இணையப் பக்கங்களிலும் காண முடிகிறது. கதையின் தலைப்பு கூட பிரதியின் இயல்பை ஒட்டியே செம்மையாக்கப்பட்டிருக்கிறது. மையப் பாத்திரமான ஜெனைன், கதை நிகழ்வில் எந்த இடத்திலும் ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. ஆனால் தலைப்பு - ஒழுக்கமற்றவள். இது ஒரு பைபிள் கதையின் சாரத்திலிருந்து உருவாக்கப்பட்டது. விபச்சாரி என்று குற்றம் சாட்டப்பட்ட பெண்ணைக் கல்லால் அடித்துத் தண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டபோது, யார் அதுபோன்ற குற்றத்தில் ஈடுபடவில்லையோ, அவர் முதல் கல்லை எறியலாம் என்கிறார் யேசு. இந்தக் கதைதான் காம்யூவின் தலைப்புக்கு ஆதாரம். இந்தத் தகவல் தெரிய வரும்போது கதைப்பிரதி மேலும் பொருளடர்ந்த புரிதலுக்கு இட்டுச் செல்லுகிறது. செம்மையாக்கத்தின் தேவையும் பணியும் இதுவாகத்தான் இருக்குமென்று கருதுகிறேன். இந்தமுகாமில் இறுதி செய்யப்படவிருக்கும்
கணேசகுமாரனின் கதை 'வண்ணமானவள்' எனக்கு வாசிக்கக் கிடைத்தது. ஒரு பெண்ணின் உள் உலகைச் சொல்லுகிற
படைப்பு. அதுதான் காம்யூவின் கதையை நினைவுக்குக் கொண்டு வந்தது. கணேசகுமாரனின் கதைத் தலைப்பு அதன் உள்ளடக்கத்துக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
பேச்சைத் தொடங்கியபோது முன்வைத்த முதலாவது யூகத்தை இங்கே நியாயப்படுத்த விரும்புகிறேன். கவிதையைச் செம்மையாக்குவது எளிது. ஏனெனில் கவிதை அதன் மையத்தை நோக்கி விரைகிற தன்மை கொண்டது. அதனால் பெரும்பான்மையான புறத்தகவல்களை தவிர்த்துக் கொள்கிறது. சிறுகதை மையத்தை நோக்கிச் செல்வதற்கே நிறைய புறத் தகவல்களைத் திரட்டிக் கொள்ளுகிறது. இடம், காலம், மொழி, பேச்சு, பண்பாட்டுக் கூறுகள் எனச் சிறுகதை தவிர்க்க முடியாத பல தகவல்களைத் திரட்டிக் கொள்கிறது. இரண்டுக்குமான ஒற்றுமை, இரண்டு இலக்கிய வடிவங்களும் ஒற்றைப் புள்ளியில் குவியவே முனைகின்றன என்பதுதான். இசை சார்ந்த தொழில்நுட்பச் சொற்களில் விளக்குவதானால் கவிதையும் சிறுகதையும் ஒரே சுருதியில் இயங்குபவை. அவற்றில் பல வித்தியாசங்களைக் கேட்க முடிந்தாலும் அவற்றின் குறிக்கோள் ஒரே மைய உணர்வை நெருங்குவது. பாரதியின் 'வரம் கேட்டல்' என்ற கவிதையையும் (தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி' என்ற வரிகள் இடம் பெறும் கவிதை) புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்' கதையையும் சான்றாக வைத்து, இதைப் பார்க்கலாம். பத்துக் கண்ணிகள் அல்லது பத்திகள் கொண்ட கவிதையின் ஒரே உணர்வு மேலான வாழ்க்கைக்கான இறைஞ்சுதல். கௌதமன், ராமன், அகலிகை, லட்சுமணன், காட்சிக்குள் வராத ராவணன், சலவைத் தொழிலாளி - இத்தனைக் குரல்கள் ஒலித்தும், கதை சென்றடைவது சீதையின் தனிமையை. மாறாக நாவல், வெவ்வேறு சுருதிகளில் பற்பல வித்தியாசங்களைக் கொண்டிருப்பது. அது பல உணர்வுகளைப் பகுத்துக் கொடுப்பது. தி. ஜானகிராமனின் 'மோகமுள்' முதல் சமீபத்திய நாவலான ஜோ. டி. குரூசின் 'கொற்கை' வரையிலான எந்தப் படைப்பை எடுத்துக் கொண்டாலும் இது விளங்கும். கவிதையிலும் சிறுகதையிலும் நாம் கேட்பது பல குரல்கள் இணைந்த ஒற்றை முழக்கத்தை. பெரும் கூட்டமாகத் திரண்டு எழுப்பப்படும் கோஷங்களைக் கற்பனை செய்து பாருங்கள். அவற்றின் குவி மையம் ஒன்றுதான். நாவலில் நாம் கேட்பது பல குரல்களின் பல தளங்கள். ஒரு பெரும்
சந்தையில் கேட்பதைப் போல.
ஆக, சிறுகதையுடன் நெருங்கிய உறவு கவிதைக்கு இருப்பதானால்தான், இந்த முகாமுக்கு அழைத்திருக்கிறார்கள் என்ற யூகத்தை நிஜமாக்கிக் கொள்கிறேன்.
@
எப்படி எழுதுவது என்று கற்பிக்க முடியாது என்று எண்ணுகிறேன். பிரபல வெகுஜனப் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன், சில ஆண்டுகளுக்கு முன்பு 'எப்படிக் கதை எழுதுவது?' என்று இளைஞர்களுக்கான வகுப்புகளை நடத்தினார். வெகுஜன இதழியலில் பெற்றிருந்த நீண்ட கால அனுபவம் அவரை அதற்குத் தூண்டி விட்டிருந்தது. பத்திரிகையாளனாகப் பணியாற்றிய காலத்தில் அவருடன் தொழில் நிமித்தமான உறவு ஏற்பட்டிருந்தது. அந்த நெருக்கத்தில் அவர் நடத்திய எ.க.எ. வகுப்புகள் மூலம் எத்தனை கதையாளர்கள் உருவானார்கள் என்று ஒருமுறை கேட்டேன். 'எங்கே, சுமாரா எழுதத் தெரிஞ்ச ஒண்ணோ ரெண்டோ பேர் வந்தாங்க. பாக்கியெல்லாம் ஹோப்லெஸ். நான் கடையை மூடிட்டேன்' என்றார்.
எப்படி எழுதுவது என்று கற்பிக்க முடியாது. ஆனால் எப்படி எழுதக் கூடாது என்று ஓரளவுக்குக் கற்றுக் கொடுப்பது
சாத்தியம் என்று நினைக்கிறேன். அதற்கு இது போன்ற முகாம்கள் உதவும். எது நல்ல படைப்பு அல்லது ஏற்கத்தகுந்த படைப்பு என்று பகுத்துணரும் திறனையாவது, முகாம்கள் உருவாக்கக் கூடும்.
அமெரிக்க எழுத்தாளரான ஜே பரினி, முன்னோடி எழுத்தாளர்களின் வாழ்க்கையை வரலாறாகவும் நாவல் வடிவத்திலும் எழுதுவதில் தேர்ந்தவர். கவிஞரான ராபர்ட் ஃப்ராஸ்ட், புனைகதையாளரான ஜான் ஸ்டீன்பெக் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளையும் தால்ஸ்தாயின் இறுதிக் காலத்தை மையமாக வைத்து 'கடைசி ஸ்டேஷன்' என்ற நாவலையும் எழுதியிருப்பவர். ஸ்டீன்பெக்கின் வாழ்க்கை வரலாற்றில் அவர் குறிப்பிடும் சில நிகழ்ச்சிகளை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
ஸ்டீன்பெக்கின் வாழ்க்கை இலட்சியம் ஓர் எழுத்தாளனாவது. அதற்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் படைப்பெழுத்துப் பள்ளியில் சேர்ந்தார். பாடத் திட்டத்தின் பருவம் முழுமையடைவதற்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறவும் செய்தார். வெளியீட்டு வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். பிழைப்புக்காகக் கட்டடக் காவல்காரராகவும் சர்வேயரின் உதவியாளராகவும் பழப் பண்ணையில் தினக் கூலியாகவும் வேலை பார்த்தார். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய எழுத்துகளுக்கு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தது. முதல் நாவலான கப் ஆஃப் கோல்ட் ( Cup of Gold) வெளியானது. சுமாரான வசதியுள்ள வாழ்க்கைக்கு இலக்கியம் உதவியது. முதல் நாவல் வெளிவந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகத்தான நாவலான 'தி கிரேப்ஸ் ஆஃப் ராத்' (Grapes of raath) வெளியானது. 1962-ல் நோபெல் இலக்கியப் பரிசும் வழங்கப்பட்டது. அதற்குச் சற்று முன்னர் ஸ்டீன்பெக் தனக்குப் படைப்பெழுத்துப் பயிற்சியளித்த எடித் மிரியலீசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
'ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்தது போலிருக்கிறது, ஸ்டான்ஃபோர்டில் உங்கள் வகுப்புக்கு நான் வந்து
உட்கார்ந்த நாள். அது இப்போதும் தெளிவாக நினைவிலிருக்கிறது. புகையும் மண்டையும் பளபளக்கும் கண்களுமாக
மகத்தான கதைகளை எழுதுவதற்கான ஒற்றை மூலிகையை உங்களிடமிருந்து கைவசப்படுத்திக் கொள்ளும் ஆவேசத்துடன் இருந்தேன்' என்று எழுதினார் ஸ்டீன்பெக். தொடர்ந்து எடித் படைப்பெழுத்தின் முக்கியமான மூன்று பாடங்களாகச் சொன்னவற்றைக் குறிப்பிடுகிறார். முதல் பாடம்: நல்ல கதை எழுதுவதற்கான ஒரே சூத்திரம், நல்ல கதைகளை எழுதுவதுதான். இதைக் கேட்டதும் ஸ்டீன்பெக் சோர்ந்து விடுகிறார். எடித் தொடர்கிறார். 'எழுதி முழுமையாக்கப்பட்ட கதைகளை மட்டுமே திறனாய்வு செய்ய முடியும். மிக உன்னதமானவை என்று மதிக்கக்கூடிய கதைகள் உலகத்தில் எவ்வளவு இருக்கும்? மிகக் குறைவாகவே இருக்கும். அதனாலேயே கதை என்பது சீரிய இலக்கிய வடிவம் என்று புரிந்து கொள்'. இரண்டாவது பாடம்: கதைக்கான அடிப்படை விதி, ஒன்றே ஒன்றுதான். அது செறிவானதாக இருக்கவேண்டும். எழுதுகிறவனுக்குச் சொல்ல ஏதாவது இருக்க வேண்டும். அவனால் புதுமையாக ஏதாவது ஒன்றைக் கொடுக்க முடிய வேண்டும். அவை என்ன? எப்படி? எந்த அளவு? இந்த மூன்று கேள்விகளைச் சார்ந்ததுதான் கதையின் மேன்மை. மூன்றாவது பாடம்: கதை எதைப் பற்றியதாகவும் இருக்கலாம். எந்த உத்தியையும் எந்த நடையையும் உபயோகிக்கலாம். ஆனால் அது கதைக்கு கதாசிரியன் எதிர்பார்க்கும் விளைவை உருவாக்க முடிந்தால் மட்டுமே பொருத்தமானது.
இந்த மூன்று பாடங்களிலிருந்தும் தன்னுடையதான நான்காவது செய்முறையை ஸ்டீன்பெக் உருவாக்கிக் கொண்டார்.
கதாசிரியனுக்கு என்ன எழுதப் போகிறோம் என்பதைப் பற்றிய அடிப்படையான தெளிவு இருக்க வேண்டும். கதையின் மையம் எது என்ற தீர்மானம் இருக்க வேண்டும். ஒற்றை வாக்கியத்தில் கதை இதுவென்று சொல்லக் கூடிய திட்பம் வேண்டும். எல்லாவற்றையும் விடக் கதை வாழ்க்கையின் கணத்தைத் திறக்கிற சூட்சுமத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஜான் ஸ்டீன் பெக்கின் இந்தச் செய்முறை இன்றும் செல்லுபடியாகக் கூடியதுதான் என்று நம்புகிறேன்.
@
'சிறுகதையே படைப்புச்சக்தியின் கடைசிக் குழந்தை. படைப்புச்சக்தி அதற்குப் பின் இன்றுவரையிலும் கருத்தரிக்கவில்லை' என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருந்தார். தமிழில் மட்டுமல்ல, ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் எழுத்துக் கலையின் கடைசி அவதாரம் சிறுகதையாகவே இருக்கிறது. தமிழில் கவிதைக்கு அடுத்து, போஷாக்குப் பெற்று புஷ்டியாக வளர்ந்த வாரிசு சிறுகதைதான். இந்தியத் தரத்துக்கு அல்லது உலகத் தரத்துக்கு உயர்த்திப் பேசக் கூடிய கணிசமான கதைகள் நமது நவீன இலக்கியத்தில் இருக்கின்றன என்றே எண்ணுகிறேன். ஒரு கட்டத்தில் தமிழ்ச் சிறுகதை தேக்க நிலையை அடைந்து விட்டதாகக் கருதப்பட்டது. அது ஓரளவுக்கு உண்மை. எல்லாரும் நாவலாசிரியர்களாகப் பதவி உயர்வு பெற முண்டியடித்துக் கொண்டிருந்த வேளையில், தனக்கிழைக்கப்பட்ட புறக்கணிப்புக்கு
எதிராக சிறுகதை தன்னை செழுமைப் படுத்திக்கொண்டது என்று கருதலாம்.
உலக இலக்கியத்திலும் இந்தப் போக்கைக் காண முடிகிறது. ஆங்கிலத்திலோ, இதர ஐரோப்பிய மொழிகளிலோ இன்று மகத்தான நாவல்கள் எழுதப்படுவதில்லை. இன்றைய சிறந்த நாவல்கள் இதுவரை பொருட்படுத்தப்படாமலிருந்த மொழிகளில் எழுதப்படுகின்றன. அல்பேனியமொழியில் எழுதும் இஸ்மாயில் காதரே, துருக்கி மொழியில் எழுதும் ஓரான் பாமுக் ஆகியோரே புதிய நூற்றாண்டின் பெரும் நாவலாசிரியர்களாக மதிக்கப்படுகிறார்கள். இதன் எதிர்மறை விளைவாக ஆங்கில எழுத்துக்களில் சிறுகதைக்கான இடம் விரிவடைந்திருக்கிறது. அமெரிக்காவின் இன்றைய இலக்கிய அடையாளங்களாகக் கருதப்படும் ரேமண்ட் கார்வரும் டோபியாஸ் உல்ஃபும் சிறுகதைகளுக்காகவே பிரபலமடைந்தவர்கள் என்பது தற்செயலானதல்ல.
இந்தச் செம்மையாக்க முகாம் மூலம், புதிய திறன்கள் வெளிப்பட முடியுமானால், நமது சிறுகதை மேலும் செழுமை பெறும். வேறு எப்போதையும் விட எடிட்டிங் அல்லது செம்மையாக்கம் தேவைப்படும் காலம் இது. இலக்கியத்துடன் முன் அறிமுகம் இல்லாத புதியவர்கள் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள் என்பது ஓர் அம்சம். மற்றொரு அம்சம் தொழில் நுட்பம் சார்ந்தது. இன்று எழுத வருகிற பத்தில் நான்கு பேர் கணினியைப் பயன்படுத்துபவர்கள். இணையங்களில் எழுதப்படும் கதைகளை வாசித்தபோது, அவற்றின் நீளமும் செறிவின்மையும் என்னை ஆயாசப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே பத்திரிகைக் கதைகளும் மாறியிருக்கின்றன. இந்த இரு ஊடகங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெறும் கதைகள் வாசகனாக என்னை அச்சுறுத்துகின்றன. ஒன்று - இவை அந்த ஆசிரியராலேயே செம்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது படைப்பூக்கமுள்ள இன்னொருவரால் செப்பனிடப் பட்டிருக்க
வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நவீன எழுத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று, ஒரு பிரதி வாசிப்புக்கு இன்பமளிப்பதாக அமைய வேண்டும் என்பது. வாசிப்பில் இன்பம் என்பது ஒரு படைப்பு கொண்டிருக்கும் புது நோக்கிலிருந்தும் அது வெளிப்படும் பார்வையிலிருந்தும் எழுவது. வாசகனின் விலாவைச் சொறிந்து விடுவதால் வரும் கிளர்ச்சியல்ல. வாசிப்பனுபவமும் புத்துணர்வும் தரும் சிறுகதைகளைப் படைப்பவர்களுக்கு அவர்களது படைப்புச் செயல்பாட்டின் தூண்டுதலாக இந்தச் செம்மையாக்க முகாம் அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.
- சுகுமாரன்
(நன்றி: அந்திமழை.காம்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக