12 ஜூலை 2010

செல்வராஜ் ஜெகதீசனின் இரு கவிதைத் தொகுதிகள் - மதிப்புரை - தேவகோட்டை வா.மூர்த்தி

செல்வராஜ் ஜெகதீசனின் இரு கவிதைத் தொகுதிகள்:

1.அந்தரங்கம் 2. இன்னபிறவும்

“…..பார்த், கவிதை என்ற வகைமையை ஒதுக்குகிறார். நவீன கவிதையானது மொழியைச் சீரழித்து, சொற்களை நிலைத்த பொருள்கொண்டவை என்ற நிலைக்குத் தாழ்த்தியிருக்கிறது என்று பார்த் குறிப்பிடுகிறார்” – என பின்நவீனத்துவ சிந்தனையாளர்களில் ஒருவரான ரொலாண் பார்த் பற்றிய அறிமுகம் போன்ற தனது சிறிய நூலில் குறிப்பிடுகிறார், திரு. எம்.ஜி.சுரேஷ். தொடர்ந்து, சார்த்தரும் “கவிதை என்பது, பூடகமான மொழியைக் கொண்டது என்று கூறிப் புறக்கணிக்கிறார்” என்று சொல்கிறார் சுரேஷ். பார்த், சார்த்தர் ஆகியோர் சொல்லிவிட்டார்களே என்பதற்காக (சொல்லப்போனால், யார் சொல்லிவிட்டாலுமே!) எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை என்கிறபோதும், கவிதை என்று மட்டுமல்ல, நிலைத்த பொருள் உள்ளடக்கியதாகத் துலங்கும் எந்தப் படைப்பையுமே தலையில் வைத்துக் கொண்டாட முடியாதுதான். அதேசமயத்தில் குறிப்பிட்ட சில படைப்புகள் அப்படி அமைவதால், அந்த வகைமையையே (genre) புறக்கணிப்பது என்பது சரியான அணுகுமுறை ஆகாது என்றே எனக்குப்படுகிறது. வேறு சொற்களில், செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் ஏற்புடையதா இல்லையா என்றுதான் கவனிக்க வேண்டுமேயன்றி கவிதைகளே ஏற்புடையதாகாது என்கிற நிலை அசலான இலக்கிய மாணவனுக்கு இழப்பைத்தான் ஏற்படுத்தும்.

டிசம்பர் 2008’ல் பிரசுரமான ஜெகதீசனின் முதல் கவிதைத்தொகுதியான “அந்தரங்கம்” நூலுக்கு மிக நீண்ட முன்னுரை போன்றதான கட்டுரையை எழுதியுள்ள விக்ரமாதித்யன் “இரண்டாயிரத்து இருபதில் செல்வராஜ் ஜெகதீசன் சுடர்விடும் கவிஞனாக ஜொலிக்க வாழ்த்துவோம்” என்று முடிக்கிறார். டிசம்பர் 2009’ல் பிரசுரமான இரண்டாது தொகுதியான “இன்ன பிறவும்” நூலுக்கு முன்னுரை போன்றதான கட்டுரையை எழுதியுள்ள சுகுமாரன் “இன்றைய அவரது கவிதைகளைப் பின்னுக்குத் தள்ளும் கவிதைகள் அவரிடம் இருக்கின்றன என்று நம்பச்செய்பவை” எனக் குறிப்பிடுகிறார். அதாவது விக்ரமாதித்யன், சுகுமாரன் இருவருமே செல்வராஜ் கவிஞராவதற்கான ‘உள்திறம்’ (potentiality) கொண்டவர் என்று ஒப்புக் கொள்கிறார்கள்; முன்னுரை எழுத நேர்ந்த கண்ணோட்டத்தால் (obligation) இன்றைய தொகுப்புகளிலிருந்தும் தமக்கு உவந்த சில வரிகளை (விக்ரமாதித்யன், பல முழுக்கவிதைகளையுமே!) மேற்கோள் காட்டுகிறார்கள். ‘நவீன விருட்சம்’ இதழில் திறனாய்வாகச் செய்ததால், ஐராவதம் சுவாமிநாதன் சில கவிதைகளைப் பழித்திருந்தார். இவற்றையெல்லாம் மீறி, ஜெகதீசனின் இரு கவிதைத் தொகுதிகளையுமே நான் படித்தேன்.

‘புதுக்கவிதை’க்கு வடிவ ஒழுங்கு உண்டா என்பதுதான் ஜெகதீசனின் இரு தொகுதிகளுமே என்மனதில் முதலில் எழுப்பிய கேள்வி. ஏனெனில், தொகுதிகள் உள்ளடக்கியிருக்கிற கிட்டத்தட்ட எல்லாக் கவிதைகளிலுமே மோனை முயங்கிக் கிடக்கிறது. எதுகையைத் தவிர்த்துவிட்டால் புதுக்கவிதை இயல்பாகிவிடும் என்பது ஜெகதீசனின் கருத்தா அல்லது இயல்பாகவே அப்படி அமைந்ததா என்பது தெரியவில்லை. “தானாய் விழும் அருவி” என்ற இவரது கவிதை ஒன்றின் தலைப்பு, இவரது மோனை மயக்கத்துக்குப் பொருந்துமோ என்று தோன்றுகிறது.

தன்னை எழுதத் தூண்டியவற்றில் கல்யாண்ஜி கவிதைகளும் உண்டு என ‘அந்தரங்கம்’ தொகுதியில் குறிப்பிடுகிறார் ஜெகதீசன். ஒருவேளை அதனால்தான் இவரது பல கவிதைகளில் பட்டியல்கள் விரிகின்றனவோ என்னவோ! ஆனால் கல்யாண்ஜியின் படைப்புகளில் வெறும் பட்டியல்களை மட்டும் பார்க்கிறவர்கள் இழப்பது ஏராளம். காண்பதற்கும் காணவேண்டியதற்கும் வாழ்வில் இவ்வளவா என்று நம்விழிகளை விரிய வைப்பவை கல்யாண்ஜி - கவிதைகள் உள்ளடக்கியிருக்கும் விவரணைகள்: கல்யாண்ஜியின் (கையறுநிலை?) வரியான “இந்த மரத்தை முழுதாகப்/ பார்த்ததில்லை என்றுபுரிய/ நேற்றுவரை ஆயிற்று” என்பதுபோல, ‘பட்டியலி’ன் முத்தாய்ப்பு அமையவில்லை என்றால் கவிதை உள்ளடக்கியிருக்கும் விவரணைகள் மளிகைச்சாமான் பட்டியல் போன்று காட்சியளிக்கும் விபத்து நிகழக்கூடும்.

அதே சமயத்தில் கவிஞர் துரை.சீனிச்சாமியின் கவிதைத்தொகுப்பான “அந்தி” நூலை திறனாய்வு செய்த சமயத்தில் (கணையாழி ஜூலை’74) ந.முத்துசாமி ஒரு நியதியை நிறுவுகிறார்: ‘காட்சிகளை விவரிப்பதே கவிதையாக முடிந்து விடும்; காட்சிகளைத் தொடர்ந்து கவிஞன் தனது வியாக்கியானத்தைத் தருவது தவிர்க்க வேண்டியதே’. கல்யாண்ஜியினது போன்றதான முத்தாய்ப்பு வரிகள் சாத்தியப்படவில்லை என்றால், காட்சிகளே கவிதைகளாக மாறி நிற்கும் ‘ரஸவாதம்’ கைகூட வேண்டும்.

நான் மேலே குறிப்பிடுகிற ரஸவாதம் ஜெகதீசனின் பல கவிதைகளில் நிறைவேறியிருக்கிறது. ‘நாற்காலி’களின் பட்டியலை விவரிக்கிற, ‘இன்ன பிறவும்’ தொகுதியிலுள்ள, ஓர் அபத்தமான கவிதையில்கூட ஓர் அபாரவரி தூரத்து நட்சத்திரமாய் மினுக்கிடுகிறது:” எவர் மனதிலும்/ நிழலாய் நடைபோடும்/ காதலியோடு அமர்ந்த கடற்கரையோர/ சிமென்ட் நாற்காலிகள்”. கவிதை சொல்பவனின் காதலி மற்றவர் மனதில் நிழலாடுகிறாளா? அல்லது பார்வையாளர்களுக்கு அவரவர் காதலிகளோடு அமர்ந்திருந்த ‘அந்த நாட்களின்’ நிழல் நினைவில் மீள்கிறதா? இதே ‘இன்ன பிறவும்’ தொகுதியின் மற்றொரு கவிதையில், தேநீர்க் கடையில் சந்தித்து அரட்டையடித்துக்கொண்டிருந்த நண்பர்கள் இப்போது கால வளர்ச்சியில் (அல்லது நண்பர்களின் வளர்ச்சியில்!) இன்னொரு சொகுசான இடத்தில் சந்தித்து அரட்டையைத் தொடர்வதை, பழைய தேநீர்க் கடைக்காரரிடம் ‘மறைத்து’ இப்போது நண்பர்கள் கூடுவதேயில்லை என்று கூறுகிறான் கவி சொல்லி. வளர்ச்சியில் ‘வசதி’யாகிவிட்ட தோழர்குழாத்தை நினைத்து மகிழ்வதா, அல்லது தேநீர்க்கடை இன்னும் ‘பழசாகி’விட்டதை நினைத்து வருந்துவதா? எதுவாயினும் முந்தைய கடைசிச்சந்திப்பில் ‘பேருண்மை’ பற்றிப் பேசிப் பிரிந்த நண்பர் குழாத்தைச் சேர்ந்த கவிசொல்லி இன்று ‘பொய்’ சொல்வது, தேநீர்க்கடைக்காரரின் நிம்மதியைக் கருத்தில் கொண்டு, ‘புரை தீர்த்த நன்மை’யாகவே மாறி நிற்கிறது! இந்த ரஸவாதம், கவிஞனின் எந்தவித வியாக்கியானமுமின்றி மேலிடுகிறது!!

‘இன்னொரு சைக்கிள் ஓட்டி’ என்ற கவிதையும் எனக்கு அபாரமாகவே படுகிறது (‘இன்ன பிறவும்’: பக். 47). இக்கவிதையிலும், ந.முத்துசாமி கூறிய, காட்சி விவரணையை மட்டும் செய்து அபாரமான கவிதையை உருவாக்கியிருக்கிறார் ஜெகதீசன்.

‘அம்மா’ என்ற கருதுகோள் (concept) தமிழ்ப்படைப்புலகில் (முக்கியமாகத் தமிழ்த்திரைப்படங்களில், திரைப்பாடல்களில்!) ‘உணர்ச்சிப்பசப்பலு’க்கு ( sentimentality) அடித்தளமாக ‘நினைவை மீறிய காலந்தொட்டு’ (time immemorial) துலங்கி வந்திருக்கிறது. இது இப்படியிருந்தபோதும், இந்த மையத்தை ‘அம்மாவின் அறிதல்’ ‘தவிர்க்க விரும்பும் தருணங்கள்’ எனும் (‘இன்ன பிறவும்’ தொகுதியிலுள்ள) இரு கவிதைகளில் துணிச்சலாகக் கையாண்டு அதே சமயம் தன்னைக் கோமாளியாகக் காட்டிக்கொள்ளாமல் கவிதைகள் படைத்திருக்கிற ஜெகதீசனைப் பாராட்டுவதற்குத் தயக்கமிருக்க முடியாது.

‘இன்ன பிறவும்’ தொகுதியிலுள்ள ‘இணங்குதல்’, ‘முதலில்’, ‘பெயரிலென்ன இருக்கிறது’, ‘உல்டா’, ‘பிறந்தநாள் வாழ்த்து’ ஆகிய கவிதைகள் மெல்லிய புன்முறுவலை சில வாசகர்கள் முகத்திலோ மனதிலோ கொண்டுவரக்கூடும். வாசகனிடம் நெகிழ்ச்சியை (poignancy) விளைவிப்பதுவா மகிழ்ச்சியைத் திணிப்பதுவா – எது கவிதையாகும் என்பதை ஜெகதீசன் இக்கணம் சிந்திக்கத் துவங்கலாம். கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதைகளான ‘அம்மாவின் பொய்கள்’, ‘தோழர் மோசி கீரனார்’,’சைக்கிள் கமலம்’, ‘ஸ்ரீலஸ்ரீ’ போன்றவற்றைப் படிக்கும்போது புன்னகைக்கத் துவங்குகிற வாசகன், கவிதைகளின் இறுதியில் புன்னகைத்தது மறந்துபோய் யோசனையில் ஆழ்கிற நிலை நிகழ்வது பற்றியும் ஜெகதீசன் யோசிக்கலாம்.

இப்படியெல்லாம் நான் சொல்வதால், வாழ்க்கைப் பற்றிய தீவிர சிந்தனைகள் ஜெகதீசனின் இன்றைய கவிதைகளில் இல்லை என்று யாரும் தீர்மானிக்கத் தேவையில்லை. ஏனெனில், ‘இன்ன பிறவும்’ தொகுதியிலுள்ள ‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘பதட்டம்’, ‘என்வரையில்’ ஆகிய கவிதைகள் வாசகனை நெடுநேரம் யோசிக்க வைக்கும். அதே போல, முதல் தொகுதி உள்ளடக்கியுள்ள கவிதைகளில்: ”மனிதனுக்குத்/ தெரியும்/ சேர்ந்து போவதில் உள்ள/ சிக்கல்கள்” என்கிற ஈற்றடிகளைக் கொண்ட ‘எதார்த்தம்’ என்ற கவிதையும்; “இயல்பின்றிப் போவதில்/ சம்மதமில்லை எனக்கும்” என்கிற ஈற்றடிகளைக் கொண்ட ‘இயல்பு’ என்ற கவிதையும்; ‘பேசிப்பேசி மாய்கிற’ நண்பர்களையும் ‘ஒன்றுமற்றதெற்கெல்லாம் பேச மறுத்துச் சாய்க்கிற இவளையும்’ விவரிக்கிற கவிதையும் (‘இவள்’ யார்: மனைவியா? காதலியா? தோழியா?) நெடுநேரம் வாசகனை யோசிக்க வைக்கும்.

இவையெல்லாம் இருந்தபோதும், ‘கவிதை’ என்ற வகைமையைத் தன் எல்லாக் கவிதைகளிலும் சரியாக உள்வாங்கி ஜெகதீசன் செயலாற்றியிருப்பதாக சொல்லமுடியவில்லைதான். ‘சொல்லுதல்’, ‘அவனவன் பாடு’, ‘எதிபாரா ஒரு தருணம்’, ‘ஒன்றன்றி’ – ஆகிய “படைப்புகள்” வெறும் வார்த்தை ஜாலங்களாகத் தோற்றமளிப்பது மட்டுமின்றித் தமிழ்த்திரையில் இதுபோன்ற விஷயங்களை வைத்தே கைத்தட்டல் வாங்கிவிட்ட இயக்குனர் விசுவை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. ஜெகதீசனின் இந்தத் தேர்வற்ற மனோபாவத்துக்குக் (indiscretion) காரணம், எழுதிய எல்லாவற்றையும் அச்சில் காணும் அவசரமும்; அச்சிலேறின (அல்லது இணையத்தில் வெளியான) எல்லாவற்றையும் தொகுதியில் சேர்க்கும் ஆர்வமுமே என்று தோன்றுகிறது. இந்த தேர்வற்ற மனோபாவம் போக, சில சிந்தனைக் குழப்பங்களும் இவ்விரு தொகுதிகளிலும் வெளிப்படுகின்றன. கைப்பேசியில் தொடர்பு எண்கள் இருப்பதாலும் தீவு ஒன்றில் தனியாய் இல்லாது நகரின் நெரிசலில் அடுக்குமாடிக் குடியிருப்புகளொன்றில் வசிப்பதாலும் ஒருவன் யாருமற்றவனாய் உணரமுடியாது என்ற கவிஞரின் பார்வை பௌதிகமானதாக இருக்கிறது. ஆனால் யாருமற்றவராய் உணர்வது வெறும் பௌதிக விஷயமா என்ன?.

இன்னொரு எடுத்துக்காட்டாக, ‘இருத்தலும் சுகம்/ இயக்கமும் சுகம்’ என்கிற வரிகளை உள்ளடக்கியிருக்கிற கவிதை கூறும் நியதி, (அந்தரங்கம்:பக்.54) ஒரு கவிஞனின் மனோதர்மமாக இருக்க முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது: இதில் இன்னும் மோசமான விஷயம், ‘அந்தந்த நேரங்களில் அங்கங்கே மனம் இருந்தால்’ என்று வழிவகையையும் சுட்டிக்காட்டி ‘இருத்தலும் சுகம் இயக்கமும் சுகம்’ என்று கவிதை கூறுகிறது; ஏதோ பி.சி.கணேசன் எழுதுகிற சுயமுன்னேற்றப் புத்தகம் ஒன்றைப் படிப்பது போன்ற உணர்வை எழுப்புகிற இவையெல்லாம் கவிதையாகாது என்றும் சொல்லத் தோன்றுகிறது. தனக்காகத்தான் எழுதுவதாய் ‘எழுதுதல்’ (அந்தரங்கம்:பக்.48) என்ற கவிதையில் கூறும் இவர், மற்றவர் கவனத்தை ஈர்ப்பதை முக்கியமாகக் கருதுவதால்தான் கவிதை எழுதுவதாய் ‘கவன ஈர்ப்பு’ கவிதையில் (அந்தரங்கம்:பக்.110) குறிப்பிடும்போது இவர்மீது சற்று சினம்கூட மேலிடுகிறது.

மாறாக, ‘நிரப்புதல்’ (இன்னபிறவும்:பக்.75) என்ற கவிதையில் இவர் கூறுகிறபடி மற்றவர்கள் தத்தம் விருப்பம்போல் இட்டு நிரப்புகிற ‘பெட்டி’யைச் சுமந்தபடி கவிஞனாக ஜெகதீசன் தன் பயணத்தைத் தொடர்ந்தால் கூடப் போதும்; இட்டுநிரப்ப ஏராளமான வெளி நிறைந்திருக்கிற இன்றைய தமிழ்க்கவிதை உலகில், ஜெகதீசன் தான் இன்று பிடித்து வைத்திருக்கிற இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்த நிச்சயத்தை – இவருடைய எதிர்காலக் கவிதைகளல்ல – இன்றைய இந்த இரு தொகுதிகளுமே கூட சுட்டுகின்றன.

O
(யுகமாயினி ஜூலை-2010 இதழில் வெளியானது)
நன்றி: திரு. தேவகோட்டை வா.மூர்த்தி & யுகமாயினி சித்தன்

2 கருத்துகள்: