19 ஜூலை 2010

அகம் களித்த நாழிகைகள்

தலைப்பிலிருந்தே நீங்கள் யூகித்திருக்கலாம். அகநாழிகை பதிப்பக வெளியீடுகளான, ஒரு நான்கு கவிதைத் தொகுதிகளின் வாயிலாக நான் ரசித்த (அகம் களித்த) நாழிகைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. சென்ற முறை சென்னை சென்று திரும்பியபோது, இந்தக் கவிதைத் தொகுதிகளை (தொகுதியா/தொகுப்பா எது சரி!) வாங்கி வந்தேன்.

இன்றைக்கு, நிறைய கவிதைகள் எழுதப்படுகின்றன. தொகுதிகளாக வருபவையும் நிறையவே. ஆனால், எங்கே போகின்றன

அத்தனை கவிதைத் தொகுதிகளும்/கவிதைகளும். நண்பர்கள்/தெரிந்தவர் மத்தியில் பகிரப்பட்டு, ஓரிரு வலைப்பூக்களில்/ சிற்றதழ்களில் விமர்சனமாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின் எங்கு போகின்றன அத்தனையும்? நூலகங்களை அடையும் பேறு பெற்றவை/பெறுபவை எத்தனை சதவீதம்?

நான் பார்த்த வகையில், பழைய மற்றும் புதிதாய் எழுத வரும் ப்ளாகர்கள் கூட (என்னையும் சேர்த்து), 'படித்ததில் பிடித்தது' என்று தன் வலைப்பூவில் இடுவது, பெரும்பாலும் எல்லோரும் அறிந்த ஆத்மாநாம், கல்யாண்ஜி, தேவதச்சன், தேவதேவன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன் போன்றோரின் கவிதைகளையே. தற்போதைய சூழ்நிலையில், புதிதாய் எழுதி வரும்/எழுத வரும் நிறைய கவிஞர்களின் கவிதைகளுக்கான குறைந்தபட்ச அங்கீகாரத்தையாவது அவர்கள் பெறுகிறார்களா? அதற்குத் தேவையான தளம்/களம் என்ன?/எது?.

இப்படியான எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதிலில்லை.

என் வரைக்கும், இந்த நான்கு தொகுதிகளில், எனக்குப் பிடித்த கவிதைகளை (இட வசதிக்காக, தலா இரண்டு), ஒரு அறிமுகமாக இங்கு தர விழைகிறேன். (இன்னும் சிலரிடம், இந்த கவிதைகள், சென்று சேருமென்ற ஒரே எதிர்பார்ப்பில்).

I. நூல் பெயர்: கோவில் மிருகம்
ஆசிரியர்: என். விநாயகமுருகன்




1) கோவில் மிருகம்

என்னதான் அடித்தாலும்
அங்குசத்தால் காதில்
குத்தினாலும்
வாலை முறுக்கி
வலியேற்றினாலும்,
வற்புறுத்தி பிச்சையெடுக்க
வைத்தாலும்
காட்டுப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்.

2) திருமணமொன்றில்

நான் சென்ற
திருமணமொன்றில்
மண்டப வாசலில்
அழகான நீண்ட
கூந்தலுடன்
இரண்டு கைகளை கூப்பி
தலையை லேசாக குனிந்து
புன்னகையோடு வரவேற்ற
பெண்ணொருத்தி
பொம்மையென்று
சற்று தாமதித்தே
உணர முடிந்தது.

பக்கத்தில்
பன்னீர் தெளிக்கும்
ஆண் உருவமும்
மின்சார பொம்மையென்று
யாரோ சொன்னார்கள்

அட்சதை போடுமுன்
ஏனோ மேடையை
ஒருமுறை
உற்றுப் பார்த்தேன்.

O

II. நூல் பெயர்: கருவேல நிழல்
ஆசிரியர்: பா. ராஜாராம்




1) மண்டபம்

கோட்டை பெத்தார் அப்பத்தா
வாசலிலேயே
கடை வைத்திருப்பாள்

தண்டட்டி, கடுக்கண்
பயல்கள் சீமையில் என்பாள்

கம்பி கிராதி
கிராதிக்குள்ள பாட்டில் நாலு
தொங்குற பிளாஸ்டிக் பை

மார்பு திறந்து கிடக்கும்
வீசிக்கொண்டிருப்பாள்
பொழுதன்னைக்கும்

உள்ளதிலேயே
பெரிய வீடு

அப்பத்தா செத்தபோது
எடுத்துப் போட்டோம்

சும்மா
எடுத்துப் போட்டோம்.


2) சொல்லிட்டேன்... ஆமா

ஓட நடக்க
பேசிச் சிரிக்க
குழந்தைகளை
குளிப்பாட்ட
சோறூட்ட

உனக்குப் போலவே
எனக்கும் வாய்த்தது அப்பா

புகைக்க
குடிக்க
கடன் வாங்க
ஆட்டைத் தூக்கி
குட்டியில் போட
குட்டியைத் தூக்கி
ஆட்டில் போட

உனக்குப் போலவே
எனக்கும் வாய்த்தது அப்பா

கீரை
வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்து
சிரித்துக்கொண்டே
செத்துப் போக...

உனக்குப் போலவே
எனக்கும் வாய்க்கணும் அப்பா.

O

III. நூல் பெயர்: கூர்தலறம்
ஆசிரியர்: TKB காந்தி




1) கடவுள்கள் கறாரானவர்கள்

அவசரமாய் ஆம்புலன்சில் வந்து
எமர்ஜன்சி வார்டில் சேர்த்தபின்
உயிரை மீட்க வந்த உறவுகள்
மருத்துவமனையை பார்த்து அமர்ந்திருந்த
வினை தீர்க்கும் விநாயகரிடம்
கதறி அழுது காலில் விழுந்து கெஞ்சினாலும்
அவர் சட்டை செய்வதே இல்லை.
அருகிலிருக்கும் எஸ்.டீ.டி பூத்தில் ரிசீவரில்
அவரின் காதுபட
கதறல்களையும் அழுகுரல்களையும்
அனுப்பிக்கொண்டே இருந்தாலும்
அவர் கொஞ்சமும் வருத்தப்படுவதில்லை.
உறவுகளின் உடல் நோவு தீர்க்கச் சொல்லி
கியூவில் நின்று மன்றாடும்போது
அவர் பார்ப்பதுகூட இல்லை
மாலை போட்டு படையல் வைத்து
உண்டியலில் காசு போட்டாலும்
அவரை மாற்ற முடிவதில்லை
பக்கத்து தெரு அருள்மிகு மீனாட்சி அம்மனும்
அப்படித்தான்
கடவுள்கள் கறாரானவர்கள்
கடவுள்கள் நாத்திகர்கள்
மனிதர்களை விட
கொள்கைகள் மட்டும்தான்
முக்கியம் அவர்களுக்கு.

2) இடுக்கண் களைவதாம்

எல்லாவற்றின் நடுவிலும்
அவனுக்கேற்பட்ட விபத்தே
அரைநாளாய் கவனம் கலைத்தது

அவசரமாய் கிளம்பி
பார்த்துவிட்டு வருகிறேன்
வெள்ளை பேண்டேஜுடன் தடித்திருந்தது
அவன் வலக்கை,
நெற்றியில் நான்கு தையல்
ஒன்றும் பெரியதாய் ஆகிவிடவில்லை
கொஞ்சம் நிம்மதி
உடம்பைப் பார்த்துக்கொள்ளுமாறு வருந்திவிட்டு
ஒருவாய் காபி குடித்து
டிஞ்சர் வாசத்துடன் வந்துவிட்டேன்

இப்போதெல்லாம்
அடிக்கடி கனவு காட்டிக் கொண்டிருக்கிறது
அவனையும்
கைமாத்தாய் வாங்கிய
முன்னூற்றி சொச்சம் ரூபாயையும்,
அவன் சொல்லவேண்டிய
ஒரு நன்றியையும்.

O

IV. நூல் பெயர்: நீர்க்கோல வாழ்வை நாச்சி
ஆசிரியர்: லாவண்யா சுந்தரராஜன்




1) எல்லாம் இருந்தும்

சற்றுச் சுவரோடு
வாசல் இரும்புக்கதவில்
அஞ்சல் இட ஒரு பெட்டி

அன்றாடம் ஓடும்
தண்ணீர் மின்னியக்கிக்கு
தகரத்தால் ஆன சிறு வீடு

பிரிய ரங்கனின் விதவிதமான
புகைப்படங்களுடன்
ஏனைய கடவுளர்க்கும்
மணி கதவம் கொண்ட
பெருமாள்படியுள்

அலங்கார பொம்மைகளுக்கு
வரவேற்பறையில் ஒரு ஓரிடம்

செல்ல நாய்க்கு
மாடிப்படிக்கட்டுக்கடியில்

சிறு குடியிருப்பு
குப்பைத்தொட்டிக்கு கூட

சமையலுள்ளில்
கதவோடு இடம் ஒன்று

தாளிக்கும் கடுகுக்கும்
அஞ்சறைப் பெட்டியில் இடம்

காலணிகளை வைக்கவோ
ஷூ ராக்

எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது
வயதேறி குழந்தையான
பெற்றோர் தவிர.

O

2) நான்காம் பிறை நிலா

இருளின் மனத்தை
நுகர்ந்தபடி விரைந்திருந்தது
என் பயணம்

தனிமையின் நீல நிற
நீரூற்று சுழன்றாடியபடி
கூடவே வந்தபடியிருந்தது

அணில் கடித்திருந்த
கொய்யாப்பழமாக
நான்காம் பிறை நிலவொன்று
இருள் அழிக்கும் அழிப்பானாக
சுடர்ந்து ஒளிர்ந்திருந்தது.

பார்க்கவே கூடாதென்று
கைவிரல்களால் கடிவாளமிட்டு
யன்னல் பக்கம் திரும்பாதிருந்தேன்

சாலையில் யாரோ விழுந்தெழுந்த
சப்த பயங்கொண்ட
சடுக்கிடும் நேரத்தில்
விழி விழுந்து நிறைந்து
சிரித்திருந்தது பிறை நிலா.

o

12 கருத்துகள்:

  1. அருமையான கவிதைகள்.. ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் :)

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் வாசு.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஆறுமுகம் முருகேசன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பகிர்வு. அகநாழிகைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு செயலுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி உங்கள் பாராட்டுக்கு முத்துவேல்.

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

    பதிலளிநீக்கு
  8. தொடருங்கள் உங்கள் பயணத்தை உயிரோடை.

    பதிலளிநீக்கு
  9. மிக நல்ல பகிர்வு தோழரே...
    தேர்ந்தெடுத்த கவிதைகளும் மிக அழகாகவும், ஆழமாகவும் உள்ளது.
    உங்களின் தளத்தை இன்றுதான் சந்திக்கிறேன்.
    உங்களின் எல்லா கவிதைகளுமே மிகவும் அழாகாக உள்ளது.
    உங்களின் எழுத்துப் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. நன்றி கமலேஷ் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    பதிலளிநீக்கு