27 ஜூன் 2012

நான்காவது கவிதைத் தொகுதி.

காலச்சுவடு வெளியீடாக வெளிவர உள்ள என் நான்காவது கவிதைத் தொகுதி.

03 ஜூன் 2012

கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை.

கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை.
எதிர் விளையாட்டு செல்வராஜ் ஜெகதீசன் இடைவேளை நேரங்களில் பள்ளியில் விளையாடும் ஒரு விளையாட்டின் பெயர் ‘எதிர் விளையாட்டு’ என்றான் மகன். ‘சிரி என்றால் அழ வேண்டும் அழு என்றால் சிரிக்க வேண்டும் உட்கார் என்றால் எழ வேண்டும் எழுந்திரு என்றால் உட்கார வேண்டும்.’ அனேகமாய் எல்லா நேரங்களிலும் அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு. அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன் அடியோடு அதை மறந்தே போனேன். அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில் எழுதப்பட்டிருந்தது. 'பேசாதே என்றால் வகுப்பில் பேசிக் கொண்டே இருக்கிறான்’ என்று. o

21 ஏப்ரல் 2012

இந்த வார (25-04-2012) விகடனில் கவிதை

இந்த வார ஆனந்த விகடன் (25-04-2012) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)

31 மார்ச் 2012

பார்வைகள் (சிறுகதை)



நிறை மாத வயிறோடு அந்த பேருந்து நிறுத்தத்தில் டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தாள் பிரேமா. அபுதாபியில் காலை வெயிலோடு நல்ல தூசுக் காற்று வீசிக் கொண்டிருந்தது. கடந்து போன டாக்சி ஒன்றில் பயணிகள் நிறைந்து காணப்பட்டது. ஒன்பது மணிக்கு ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டும். செல்பேசியில் நேரம் பார்த்தாள். எட்டரை. வரும்போது கைகடியாரம் கட்ட மறந்து விட்டிருந்தாள். கடந்து போன ஒரு அபுதாபி அரசுப் பேருந்தும் அன்றைக்குப் பார்த்து இவள் ஏறமுடியாத அளவு கூட்டம் நிறைந்து வந்து இன்னும் அதிகம் பேரை ஏற்றியபடி போனது. பயணிகளுக்கு அரசாங்கம் செய்து கொடுத்திருக்கும் ஒரு நல்ல ஏற்பாடு இந்த பேருந்துகள். எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கும் இறங்கிக்கொள்ளலாம். கட்டணம் ஒரு திர்ஹாம். (13 ரூபாய்).

அயர்ச்சியில் சற்று தள்ளி பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் உடலை முட்டுக் கொடுத்தபடி சாய்ந்து நின்றவள் தன்னில் நிலைத்திருந்த அந்த பார்வையை அப்போதுதான் பார்த்தாள். வயது நாற்பத்தைந்து இருக்கலாம். முகத்தின் முக்கால் பகுதியில் தாடி. ஏதாவது டாக்சி வருகிறதா என்று பார்ப்பதும் பின் திரும்பி இவளைப் பார்ப்பதுமாக இருந்தது அந்தப் பார்வை.

அவளுக்கு சுரேஷின் மேல் கோபம் கோபமாக வந்தது. அலுவலகத்தில் காலை எட்டு மணிக்கு தன் மேலாளருடன் மீட்டிங் என்று போகாதிருந்தால், காரில் கொண்டு போய் ஆஸ்பத்தியில் விட்டுப் போயிருப்பான். இந்த மாதிரி பார்வைகளை அவள் எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்காது. வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தால் அம்மா வந்து இந்நேரம் நம் கூட இருந்திருப்பாள். இந்தியாவை நோக்கி ஓடிய எண்ணங்களை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தினாள். இன்னமும் அந்தப் பார்வை இவளில் நிலைத்திருந்தது.

ஒரு பத்து நிமிட காத்திருப்பிற்குப் பின் வந்த பேருந்தில் ஏறி, ஒரு திர்ஹாம் நாணயத்தை அதற்கான பெட்டியில் இட்டவள், எதேச்சையாய் அந்த பார்வை இருந்த திசையை நோக்கினாள்.

அதுவரைக்கும் அதற்காகவே காத்திருந்த மாதிரி, அவள் சாய்ந்திருந்த காரில் நுழைந்தவன், அதை இயக்கி பார்க்கிங்கில் இருந்து பின்னால் எடுத்துக் கொண்டிருந்தான்.

o

(உயிரோசை 19 -03 -2012 மின்னிதழில் வெளியானது)

06 மார்ச் 2012

'கல்கி'யில் சிறுகதை

கல்கி (11-03-2012) இதழில் வெளியான என் சிறுகதை.
சிறுகதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)





நன்றி: கதிர்பாரதி.

28 பிப்ரவரி 2012

அகத்தின் அழகு



இன்னொரு நாளின்
தொடக்கம்.

எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.

மகனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில்
அத்தனை இறுக்கம்.

உற்றுப் பார்க்கையில்
சற்று முன் இறக்கி வைத்த
என் முகம்.

o

20 பிப்ரவரி 2012

'கல்கி'யில் பத்தாவது கவிதை

இந்த வார கல்கி (26-02-2012) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)