06 டிசம்பர் 2010

செல்வராஜ் ஜெகதீசன் - கவிதைகளின் நேரடித்தன்மை - வா.மணிகண்டன்

கவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவையும் முன்வைக்கப்படுகின்றன என்று விமர்சிக்கும் போது எதிர்கொள்ளும் முக்கியமான எதிர்வினை “கவிதை என்ற பெயரில் கவிதைகள் இல்லாதவை முன்வைக்கப்படுவதைப் போலவே பிற இலக்கிய வடிவங்களிலும்(சிறுகதை,புதினம்) அவற்றிற்கு சம்பந்தமில்லாத வடிவங்களில் குப்பைகள் நிறைவது நிகழ்கின்றது” என்பது. இந்தக் கூற்றை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். என்றாலும் பிற இலக்கிய வடிவங்களைப் பற்றி பேசுவதற்கான திறனும் பயிற்சியும் இல்லாததால் அவற்றைப் பற்றி நான் விவாதிப்பதில்லை. அதே சமயம், கவிதையின் மீதான பிரியத்தினால் கவிதைகளில் நிரம்பும் குப்பைகளைப் பற்றி பேசாமல் இருப்பதில்லை.

கவிதைகளைக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகும் போது நவீனத்துவம், பின் நவீனத்துவம், யதார்த்தவாதம், மாய யதார்த்தவாதம் என்றெல்லாம் வகைப்படுத்தி விடமுடியும். ஆனால் ரசனையின் அடிப்படையில் கவிதைக்கு துல்லியமான வரைகோடுகளை வரைவது அசாத்தியமானது. ரசனை,கவிஞனையும் வாசகனையும் கவிதையியல் கோட்பாடுகளைத் தாண்டி - கவிதையில் அவர்கள் பெறும் அனுபவத்தின் ரீதியாக இணைக்கிறது.எனவே கவிஞனுக்கும், கவிதையின் வாசகனுக்கும் கோட்பாடுகள் பற்றிய எந்த அக்கறையும் தேவையில்லை என நான் உறுதியாக நம்புகிறேன்.

கோட்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு எழுதப்படும் கவிதை பத்தாம் வகுப்பு மாணவன் வானவியல் கேள்விகளுக்கு பதில் எழுதுவதைப் போல அனுபவ வறட்சியோடு அமைந்துவிடலாம். அதேபோல கோட்பாடுகளின் அடிப்படையில் கவிதையை நெருங்கும் வாசகன் கவிதையில் இருக்கும் கவித்துவத்தை இழந்துவிடலாம். இதனை அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான், இவர்கள் கவிதையியல் கோட்பாடுகள் பற்றி வருத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிறேன். ஆனால் கவிதையியலில் கோட்பாடுகளே அவசியம் இல்லை என்பதல்ல எனது நிலைப்பாடு.

கவிஞன் ‘விதிகள் அல்லது கோட்பாடுகள்’ பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி தனது கவிதையை எழுதி விடுகிறான். வாசகனால் கவிதை வாசிக்கப்படும் கணத்தில் கவிஞன் அக்கவிதையிலிருந்து வெளியேறிவிடுகிறான். கவிதைக்கும் வாசகனுக்குமான பிணைப்பு கவிஞன் கவிதையிலிருந்து வெளியேறும் இந்தப் புள்ளியில்தான் உருவாகிறது. கவிஞன் வெளியேறிய பின்பு, கவிதையை வகைமைப்படுத்துதலை கோட்பாட்டாளர்கள் செய்வார்கள். இந்த வகைமைப்படுத்துவதில் கவிஞனுக்கோ, ரசனை அடிப்படையிலான கவிதை வாசகனுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம், கவிதை தனது அடுத்த தளத்தை நோக்கி நகர்வதற்கான விவாதத்தை தொடங்க கோட்பாடுகள் உதவுகின்றன என நம்புகிறேன். இதுவே கவிதை வாசகனாக கோட்பாடுகள் பற்றி நான் கொண்டிருக்கும் மதிப்பீடு.

கவிதையியல் கோட்பாடுகள் பற்றிய அக்கறை கவிஞனுக்கு தேவையில்லை என்று சொல்லும் போது கவிதையின் வடிவம் பற்றிய வினா எழுகிறது. கவிஞனுக்கு கோட்பாடுகளைப் பற்றிய கவனம் தேவையில்லையென்றாலும், கவிதையின் வடிவம் பற்றிய சிந்தனை அவசியமாகப் படுகிறது. இந்த வடிவம் என்பது ஹைக்கூ, லிமெரிக் போன்று ‘வரையறுக்கப்பட்ட’ வடிவம் இல்லை- சொற்களையும், வரிகளையும் தகுந்த இடங்களில் பயன்படுத்தி கவிதையின் வடிவத்தை மாற்றியமைத்தல்.

கவிஞன் தனது வாழ்வியல் அனுபவத்தை கவிதையில் அடர்த்தியாக தர முயற்சிக்கிறான். அனுபவத்தை அதீத அடர்த்தியாக்குவதற்கு கவிதையின் வடிவத்தில் மேற்கொள்ளப்படும் சில மாறுதல்கள் உதவக் கூடும். வார்த்தைகளை நீக்குதல், மாற்றியமைத்தல், வரிகளை மடக்குதல் போன்ற யுக்திகளை கவிஞன் தனது கவிதையைச் செறிவாக்கும் பொருட்டே செய்கிறான். பயிற்சியுடைய கவிஞன் ஒருவனால் கவிதைக்குள்ளாக சில சொற்களை மாற்றியமைத்து கவிதை தரும் மொத்த அனுபவத்தையும் திசை திருப்ப முடியும்.

கவிதையின் வடிவம் பற்றி பேசுவதற்கு செல்வராஜ் ஜெகதீசனின் இந்த ஒரு கவிதை உதவக் கூடும்.

சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.

‘சிற்சில துரோகங்கள்’ என ஒரே வரியில் இருப்பதற்கும் ‘சிற்சில/துரோகங்கள்’ என்பதற்கும் இருக்கும் வேறுபாடு நுட்பமானது. ஒரு வரியிலிருந்து இன்னொரு வரிக்கு வரும் போது கிடைக்கும் இடைவெளியில் உள்ள வெறுமை அல்லது மெளனம் அந்தக் காட்சியை அழுத்தமாக்குகிறது. இந்த மெளனத்தை வெற்றிடம் என்றும் பொருட்படுத்தலாம்.

‘சிரிப்போடு விலகிய காதல்’ என்பதைவிடவும் ‘சிரிப்போடு விலகிய ஒரு காதல்’ என்பது வேறு பொருளைத் தருகிறது. அனைத்துக் காதல்களும் சிரிப்போடு விலகுவதில்லை. இந்த ஒரு காதல் மட்டும்தான் சிரிப்போடு விலகியது என்பதை ‘ஒரு’ என்ற சொல் சுட்டுகிறது.

‘எதுவும் அதுவாய்/கடந்து போனதில்லை’ - நம் வாழ்வில் எதிர்கொள்ளும் இயல்பான நிகழ்வுகளுக்கு முரணான வரி இது.

நேரம், மகிழ்ச்சி, தோல்வி,அழுகை என்ற எல்லாமும் அதுவாகவே நம்மை கடந்து போகின்றன என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த வரி சற்று யோசிக்க வைக்கிறது. சில நிகழ்வுகள் நம்மை விட்டு விலகுவதேயில்லை. ‘எதுவும் சில காலம்’ என்று தத்துவார்த்தமாகச் சொல்லி நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது நிதர்சனம் இல்லை. நம்மைச் சுற்றிலும் ஞாபகங்கள் கூடு கட்டிக் கொண்டே இருக்கின்றன. நவீன உலகத்தின் வேகமான இயங்குதலில் சிலவற்றை அவ்வப்போது நினைக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் மின்னல் வெட்டுவதைப் போல சில ஞாபகத் துணுக்குகள் நெஞ்சைக் குத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

சில துரோகங்களை மிகுந்த பிரையாசைப்பட்டே மறக்கிறோம் அல்லது மறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறோம். ஜெகதீசனுக்கு கதை சொல்லும் பாட்டியின் மரணத்தை மறக்க முடியவில்லை என்றால் இன்னொருவருக்கு முதன் முதலாய் பாலியல் கதைகளைச் சொன்ன பக்கத்துவீட்டு லலிதா அக்கா தூக்கிலிட்டுக் கொண்டதை மறக்க முடியாமல் இருக்கலாம். கவிதை சொல்லிக்கு நண்பனின் நயவஞ்சகம் பதிந்து இருப்பதைப் போல இன்னொருவருக்கு வேறு ஏதேனும் நினைவில் இருந்து அழிக்கமுடியாததாக இருக்கலாம்.

கவிதை வாசித்தல் செய்தி வாசித்தலும் இல்லை, கவிதை என்பது வரிகளை மடக்கிப் போட்டு ஒரே வரியை இரண்டு முறை வாசிப்பதுமில்லை என்பதால் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையுமே முக்கியமானதாகிறது. தேவையற்ற சொற்களை தயவுதாட்சண்யமில்லாமல் வெட்டிவிடுவதும், பொருத்தமான சொல் கிடைக்காத போது கவிஞன் ‘அந்தச்’ சொல்லுக்காக காத்திருத்தலும் பயனுடையதாகவே இருக்கிறது.

இந்த ‘கச்சிதம்’ மேற்சொன்ன கவிதையில் சரியாக வந்திருப்பதாகப் படுகிறது.

கவிஞன் இந்த நகரத்தின் தூசி அடர்ந்த தெருக்களிலும், நகரத்தின் அரிதாரத்தை மிக வேகமாக பூசிக் கொண்டிருக்கும் கிராமங்களின் மரங்களுக்க்கு அடியிலும் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சராசரி மனிதன். தன் சாதாரண அனுபவங்களை சாதாரண காட்சிகளாக கவிதையில் பதிவு செய்தும் கவிஞன் வெற்றி பெறுகிறான் அல்லது சாதாரணக் காட்சிகளை பூடகமான காட்சிகளாக கவிதையாக்கியும் வெற்றியடைகிறான். ஆனால் பதிவு செய்யப்படும் அந்த அனுபவத்தின் செறிவுதான் கவிதையின் இடத்தை நிர்மாணிக்கிறது.

கவிஞன் துருத்திக் கொண்டிருக்கும் பெரும்பாலான கவிதைகள் வலிமையிழந்துவிடுகிறது என்பது என் அபிப்பிராயம். கவிதை முடியும் புள்ளியில் கவிஞன் கவிதையிலிருந்து உதிர்ந்து விட வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்து கவிதையின் முழு உரிமையும் வாசகனுக்குத்தான். கவிஞன் விடாமல் தொற்றிக் கொண்டிருந்தால் அந்தக் கவிதையை வாசகன் உதிர்த்துவிடுவான். செல்வராஜ் ஜெகதீசனின் பின்வரும் கவிதை அந்த ரகம் தான்.



இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.

வருவோர் போவோர் தரும்
இரண்டிரண்டு பிஸ்கட்கள்

அவ்வப்போது யாராவது தரும் - ஒரு
அரை டம்ளர் தேநீர் சகிதம்

இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.

அந்த வங்கி வாசல் தேநீர் கடை
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.

இடது கையில் இரண்டாயிரம்
சொச்ச விலை ஷூவுடன்

இருந்தேன் நானும் அந்த
இடத்தில் ஒரு தேநீருடன்.

ஒன்றிரண்டு நிமிடங்கள்
ஒருவாறாய் சிந்தித்தவன்

பர்சில் பளபளத்த
பல வண்ண நோட்டுக்களில்

ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து
ஒரு வாரம் ஆன பின்னும்

குனிந்து அணியும்போதெல்லாம்
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
இந்த இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.

மிக நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டிய இந்தக் கவிதையில், கவிதையின் முக்கிய பாத்திரமான எழுபது வயதுக் கிழவியின் மீதாக குவிய வேண்டிய வாசக கவனத்தை தனது இரண்டாயிரம் ரூபாய் மீதான ஷூவின் மீது நிறுத்திவிடுகிறார் கவிஞர். இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகன் தன்னை கவிஞனின் இடத்தில் நிறுத்தி அந்தக் கிழவியைப் பற்றி யோசிப்பதற்கான இடத்தை கவிதையில் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்தக் கவிதையின் வாசகன் கிழவியை மறந்து கவிஞன் என்ன நினைக்கிறான் என்ற இடத்திற்கு வந்துவிடுகிறான். இதனை இன்னொரு விதமாகச் சொன்னால் கவிதையில் உருவாக்கிய காட்சியில் கவிஞன் நின்று கொண்டிருக்கிறார். தான் எடுக்கும் நிழற்படங்களில் தானும் இருக்க வேண்டும் என்று கேமராக்காரன் விரும்புவது எத்தனை அபத்தமாக அமைந்துவிடுமோ அதேபோலத்தான் கவிதைகளில் கவிஞன் நின்றுவிடுவதும்.

செல்வராஜ் ஜெகதீசன் தொடர்ந்து நேரடியான கவிதைகளையே முயன்றிருக்கிறார். கவிதையுலகுக்கு புதியவர்கள் கவிதையை வாசிப்பதில் இருக்கும் சிக்கல்களை இவரது கவிதைகளில் காண முடிவதில்லை. கவிதையின் நேரடித்தன்மை அல்லது எளிமைத்தன்மையை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; அவை கவிதைகளே அல்ல வெறும் காட்சிகள் மட்டுமே என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

கவிதை எளிமையை நோக்கி நகர்ந்து விட்டது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்படிச் சொல்பவர்கள் நேரடியான கவிதைகளை எதிர்பார்க்கிறார்கள். கவிதையில் நேரடித்தன்மையும் பூடகமும் சம அளவில் வரவேற்கப்பட வேண்டியதுதான். நேரடிக் காட்சிகளை கவிதையாக்கும் போது மிகுந்த கவனம் தேவை. கவிதைக் காட்சி வாசகனுள் என்ன தாக்கதை உண்டாக்குகிறது என்பதை வைத்தே அந்தக் கவிதை வெற்றியடைகிறது. வெறும் காட்சியை மட்டும் பதிவு செய்வதற்கு கவிஞன் அவசியமில்லை. ஜெகதீசன் நேரடிக் கவிதைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வெறும் சொல்லாடல்களாக்கி பல கவிதைகளில் தோல்வியும் அடைந்திருக்கிறார்.

நின்று சலித்த
நீள் பயணமொன்றில்
மென்று விழுங்கிய
பார்வையோடு நீ
விட்டுச் சென்ற
இருக்கையில்
இன்னமும்
உன் சூடு.

இந்தக் கவிதை எனக்கு விருப்பமானதாக இருக்கிறது. இடம்,காலம் என்ற எந்தக் குறிப்புகளும் இல்லாத இந்த எளிமையான கவிதையில் ஒருவன்/ஒருத்தி இருக்கையை விட்டு எழுந்து சென்றிருக்கிறான்/ள். அந்தச் சூட்டை கவிதை சொல்லி உணர்கிறான். இதுதான் காட்சி.



வெறும் பேருந்து/தொடர்வண்டிப்பயணமாக மட்டுமே இந்தக் கவிதை இருக்க வேண்டியதில்லை. ஒரு தோல்வியடைந்த காதல் கவிதையாக நான் வாசிக்கிறேன்.

நின்று சலித்த/நீள் பயணமொன்றில்- சலிப்படைந்து நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வில்
மென்று விழுங்கிய/பார்வையோடு நீ - பிரிவின் துக்கத்தோடு நீ பிரிந்து சென்றாய்
விட்டுச் சென்ற/இருக்கையில்/இன்னமும்/உன் சூடு - உன் நினைவுகள் எனக்குள்ளாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு நேரடிக் காட்சியை இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று பல்வேறு கோணங்களில் கவிதையை அணுகுவது நல்ல வாசிப்பனுபவத்தை தரும் என்றாலும் வாசகன் தனது மனதுக்கு நெருக்கமான அனுபவத்தோடு கவிதையை அணுகுவதே மிகச் சிறந்த கவிதானுபவமாக அமைகிறது.

செல்வராஜ் ஜெகதீசன் தனது கவிதைகளில் தேர்ந்தெடுத்தவற்றை தொகுப்பாக வெளியிடுவதில் ஆர்வமாக இருக்கிறார். தனது முந்தைய மூன்று தொகுப்புகளிலிருந்து எண்பத்தாறு கவிதைகளை அனுப்பி வைத்திருந்தார். மூன்று ஆண்டுகளில் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் ஒரு கவிஞர்- இத்தனை அவசரமாக தொகை நூலினை கொண்டுவருவதில் எனக்கு ஒப்புதலில்லை. இன்னும் தன் கவிதைகளை மேம்படுத்துவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் கவிஞன் சற்று பொறுத்திருக்கலாம் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

அதே சமயம் தனது கவிதை சார்ந்து செல்வராஜ் ஜெகதீசன் இயங்கும் வேகம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் தனது கவிதைகளை தொடர்ந்து பிரசுரிக்கச் செய்கிறார். கவிதை தன்னைச் சார்ந்து இருப்பவனை எல்லா நேரத்திலும் துடிப்புடன் இருக்க அனுமதிப்பதில்லை. ஒருவனை சமயங்களில் உச்சபட்ச வேகத்துடன் வைத்திருக்கும் கவிதை அவனை இன்னொரு கணத்தில் மந்தமானவனாக்கிவிடுகிறது. ஆனால் ஜெகதீசனை கவிதை வேகத்துடனயே வைத்திருக்கிறது. இந்த வேகத்துடன் இன்னமும் செறிவான கவிதைகளை செல்வராஜ் ஜெகதீசன் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

புகைப்பட உதவி : http://flowers.robjaffe.com/pages/The%20Beauty%20of%20Sadness%20B%26W.html

(நன்றி: சொல்வனம் & வா. மணிகண்டன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக