23 மார்ச் 2011

படித்ததில் பிடித்தது - சமயவேல் கவிதைகள்

நெற்றிக்கண் தொலைத்த கவிதை
சமயவேல்



சிறு தூறலாகப் பெய்யும் மழையால்
கரும் கழிவுகளில் எழும் குமட்டும் நாற்றம்
அசுர ஆட்டோக்கள் கக்கிய
கேஸோலின் வாசம்
நான் ஒரு காலைப் பொழுதில்
வைகைக் கரையில் நிற்கிறேன்.

கரை இருமருங்கிலும் தொடர்ச்சியாய்
ஒலிக்கும் பட்டறைச் சம்மட்டிகளின்
சப்தத்தில் என் செவிப்பறை அதிர்கிறது
ஆயில் சிந்திய கால் சராய்களுக்குள்
மஹால் தூண்களைவிட உறுதியாய் நிற்கும்
பதின்பருவ பையன்களின் கால்கள்;
உயரும் கைகளில் பிதுங்கும் புஜங்களில்
பாண்டிய நாட்டின் வியர்வை வழிகிறது

பன்றிகள் அலையும் கரும்புனல் மேல்
முச்சக்கர சைக்கிளிலிருந்து மருத்துவமனைக்
கழிவுகளைக் கொட்டுகிறான்
குழந்தைத் தொழிலாளி நெடுஞ்செழியன்

கள்ளத்தனமாய் கேஸ் ஏற்றும் வரிசையில்
ஒரு பள்ளிச் சிறுமியர் வண்டியும் நிற்கிறது
கழுத்தில் டைகள் ஆடும்
கருஞ்சிவப்புச் சீருடை மீனாட்சிகள்
ஸ்கேல் யுத்தம் நடத்துகிறார்கள்

மாநகராட்சியின் ஒற்றை மாட்டு வண்டியில்
மூக்கணாங் கயிற்றை சுழற்றியபடி வருகிறார்
குட்கா மெல்லும் கள்ளழகர்

புட்டு வாங்கக் காசில்லாத கந்தலாடைச் சிவனார்
கோப்பெருந்தேவியின் இட்லிக் கடையில் விழும்
எச்சில் இலைகளைக் கவனித்தபடி
தியானத்தில் இருக்கிறார்

நமக்கென்ன என்னும் பாவனையோடு
காறித் துப்புகிறான்
நெற்றிக்கண் தொலைத்த நவீனக் கவிஞன்.

o

பொட்டலம் பற்றிய யோசனைகள்

இரவின் அந்திமத்தில்
அதிகக் குளிரெடுத்து
போர்வையை மேலும்
இறுக்கிக் கொள்கிறபோது
உணர்கிறேன்
நான் ஒரு
துணிப்பொட்டலம் என்று.

மருத்துவச்சி ஏந்திக் காட்டிய
நிர்வாணப் பொட்டலம் கண்டு
வலியுடனும் குதூகலித்த
அம்மா
இன்றில்லை.

இது பற்றி மேலும்
யோசிக்க முடியாமல்
உருண்டு புரண்டு
தூங்கிப் போனேன்.

காலையில் எழுந்து குளித்து
ஷேவ் செய்து தலைவாரி
பவ்டர் பூசி
ஒரு சிறந்த உடைப் பொட்டலமாய்
தெருவில் நடந்தேன்.

o

15 மார்ச் 2011

சுப்ரமணியின் கேள்விகள்



ஒரு குளிர் மாலைப் பொழுதில்
அலுவலக சகா சுப்ரமணியிடமிருந்து
எதிர்கொள்ள நேர்ந்த கேள்விகள்.

இதைப் பற்றி என்றாவது
யோசித்திருக்கிறீர்களா?
எதையோ நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறோம் எப்போதும்.
அடுத்தடுத்த கமிட்மென்ட்
எப்போதும் வேலையில்.
பக்கத்தில் இருப்பவரோடு
பேசிச் சிரிக்கவும்
பெரும்பாலும் நேரமில்லை.
மனைவி மக்களுக்கான நேரம்
வாரக் கடைசியில்.
வாங்கிய நிலமோ
அடுக்கக குடியிருப்போ
வேறெவரோ ஒருவரிடம்
வாடகை என்ற பெயரில்.
வாரத்திற்கொருமுறை நிகழும்
பெற்றோருக்கான அழைப்பும்
வெறும் குசல விசாரிப்புகளோடு.
ஏதோ ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்
இந்த அயலக வாழ்வில்
என்னவென்றே தெரியாமல்.

எல்லாக் கேள்விகளிலும்
என்னைப் பொருத்தியபடி
கேட்டுக் கொண்டிருந்தேன்.

o
(14-03-2011 உயிரோசை மின்னிதழில் வெளியானது)

01 மார்ச் 2011

இரண்டு கவிதைகள் - நவீன விருட்சம்

01
கோலாகலம்

சுற்றிவிடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்தது
ஒவ்வொரு முறையும்
ஓரோர் மாதிரி.

குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.

O
02
கண்ணாமூச்சி

அதற்குள்ளாகவா என்று
அகல விரியும் விழிகளுக்கு
இதற்குள்தான் என்று
இதழ் விரியுமுன்னே
எதற்குள் என்றபடி
எட்டிப் போடும் கால்களுடன்

இப்படித்தானே இருந்து கொண்டிருக்கிறோம்

இரவைத் தொடும் கனவுடன்
இளித்துக் கொண்டிருக்கும் பகல் மாதிரி.

o

(நன்றி : நவீன விருட்சம்)

28 பிப்ரவரி 2011

இழை பிரிதல்

இழை பிரிதல்



நீலம் சிவப்பு மஞ்சள் சரி
நிச்சயமாய் பச்சை வேண்டாம்

அன்றைய கட்டளை
உடைந்துபோன ஹெலிகாப்டர் பொம்மைபோல்
இன்னொன்று வாங்கி வரவேண்டுமென்பது.

அலுவல் களைப்போடு நுழைந்த
மறதி முகத்தை நோக்கிய
எதிர்பார்ப்பின் கண்களிடம்
பச்சை மட்டுமே இருந்ததாய்
அன்போடு கட்டிப் பிடித்தேன்.

அவ்வளவு தூரம் போனதுக்கு
அதையே வாங்கி இருக்கலாமே
என்றவனின் சொல்லிலிருந்து
எது எதுவோ இழை பிரிந்தபடி.

o

எவ்வளவு தூரத்தையும்

அது நீங்கள்தானென
அறுதியிட முடிந்தது.

அழைத்துப் பேசும் தூரத்தை
அவ்வளவு நீளம் போல்
காட்டிக்கொண்டிருந்தது
அடுத்த ஐந்து நிமிடங்களில்
அப்பாயின்மென்ட்டோடு
காத்திருந்த மருத்துவரின் இருப்பு.

அதனாலென்ன?

இன்னுமதிக தூரத்தையும் கடக்கக்கூடிய
விஷயங்களோடு
இன்னோர் பொழுதில் சந்திப்போம்.

o

(28 -02 -2011 உயிரோசை மின்னிதழில் வெளியானது)

15 பிப்ரவரி 2011

இப்போது இந்தக் காதலர் தினத்தில்

இப்போது இந்தக் காதலர் தினத்தில்

நீ கேட்க வந்த
ஒரு ஆலோசனைக்கு நான் சொன்னது
இப்போதும் நன்றாக என் நினைவில்.
சொல்பவர் தன்னைப் பொருத்திப் பார்த்துச்
சொல்லும் எவ்வொரு ஆலோசனையும்
கேட்பவர்க்கு பொருந்துமா என்று.
இப்போது இந்த காதலர் தினத்தில்
நீ நினைத்துக்கொண்டிருப்பாயா
என்னை இல்லா விட்டாலும்
என் ஆலோசனையையாவது.

o

காத்திருந்த வேளை

இறுக்கமான உடைகளின் சிரமத்துடன்
திரும்பத் திரும்ப கோர்த்துக்கொண்டிருந்தாள்
தன் கால்களை அம்மா
ஒரு அதீத சுவாரசியத்துடன் அவைகளை
பிரித்துப் போட்டு விளையாடிக்கொண்டிருந்த
அவள் பையனை
எதிர்ப்புற பார்வையாளனாய்
பார்த்துக் கொண்டிருந்த
என் கால்களை
எவ்விதம் போட்டுக் கொண்டிருந்தேன்
என்பதுதான்
எவ்வளவு யோசித்தும்
நினைவுக்கு வரவில்லை.

o

தொடர்ச்சி

இன்று வந்து சேர்ந்த
மனங்கவர்ந்த கவியின்
புதுவெளியீட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
நேற்று படித்து பக்க அடையாளம் வைத்துவிட்டு
வந்த புத்தக வரிகளின் தொடர்ச்சியாய்
என்பதை எழுதும் இந்தக் கணத்தில்
இன்னொரு மனங்கவர்ந்த
புத்தகத்தை பிரித்துக் கொண்டிருக்கிறேன்.

o

05 பிப்ரவரி 2011

கவிதை என்பது - கா.நா.சு.

"பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லலாம். புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள் இவை.

வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒரு தரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி.

இரண்டாவதாக , எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்து கவிதை - நல்ல கவிதை - அந்த காலத்து சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி.

இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாதது போல இருந்து, படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி.

கடைசியாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரணகாரியமே இல்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா?

எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை நல்ல கவிதை - உயர் கவிதை என்று நாம் முடிவு கட்டி விடலாம்."

'சரஸ்வதி' ஆண்டுமலர் - 1959

["கா.நா.சு. கவிதைகள்" - சந்தியா பதிப்பகம், 176 பக்கங்கள், விலை ரூ 65/-]