அக்கா கொடுக்கச் சொன்னதாய்
தம்பி கொடுத்துப் போன
புத்தகத்தின் அட்டைப் பகுதியில்
வைக்கப்பட்டிருந்தது
எட்டாவது படிக்கும் பெண்
ஹெட்மாஸ்டருக்கு
எழுதிய காதல் கடிதம்.
ஆறேழு வருடங்களுக்குப் பின்
அவர்கள் இருவரையும்
அவரவர் துணைகளோடு
வைத்துப் பார்க்க நேர்ந்தது
வேறு வேறு ஊர்களில்.
காதலியின் பெயரைக்
இடதுகை மணிக்கட்டில்
தீக்கம்பி கொண்டு
திரும்பத் திரும்ப எழுதி
தீவிரமாய் காதலித்தவன்
திருச்சி பக்கம் எங்கேயோ
டிக்கெட் கிழிக்கும் பணிசெய்ய
புதுக்கருக்கு மாறாத
பொன்மஞ்சள் தாலியுடன்
இன்னொருவன் மனைவியாக
பெண்ணவளைப் பார்க்க நேர்ந்தது
பேருந்துப் பயணமொன்றில்.
மாதொருத்தியின்
மனசைத் தெரிந்து கொள்ள
மாத்திரைகள் உட்கொண்டு
மரணத்தோடு போராடி
உருத்தெரியாமல் இளைத்து
உலவிக் கொண்டிருந்தவன்
அனைவரும் வியக்கும்படி
ஆகிப் பெருகி வந்தது
அயல் தேசமொன்றில்.
நாலைந்து வருடங்கள்
நங்கை ஒருத்தியின் பால்
ஒருதலை காதல் கொண்டு
ஒருவாறு சலித்து தெளிந்து
மற்றொரு பெண்ணோடு
மணவாழ்க்கை மேற்கொள்ளும்
நண்பன் இருப்ப தந்த
நங்கையின் எதிர் வீடொன்றில்.
இன்னொரு கரை என்பதுண்டு
எல்லா ஓடங்களுக்கும்..
o
(யூத்புல் விகடன் - ஏப்ரல்)
(தமிழ் முரசு, சிங்கப்பூர் : 12-04-2009)
பிரமாதம்... interesting sir
பதிலளிநீக்கு